புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியரின் தபேதாராக பணியாற்றியவர் அன்பழகன். சிறந்த தபேதாராக பணியாற்றிய அன்பழகன், கடந்த 29-ம் தேதியுடன் வயது மூப்பு காரணமாக பணி ஓய்வு பெற்றார். பணி ஓய்வு பெற்ற தபேதாரை கவுரவிக்க முடிவு செய்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, தனது வாகனத்தின் கதவுகளை தபேதாருக்காக திறந்துவிட்டு, தான் அமரும் இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்தார்.
தொடர்ந்து, முகாம் அலுவலகத்திலிருந்து தபேதார் வீடு வரையிலும் தன்னுடைய காரில் அவரை அழைத்துச் செல்ல வைத்து, தபேதார் அன்பழகனின் குடும்பத்தை நெகிழ வைத்திருக்கிறார். தொடர்ந்து, அவர் வீட்டிக்கு தன் கணவருடன் சென்ற ஆட்சியர் கவிதா ராமு, அவரின் சிறப்பான பணியைப் பாராட்டி, சிறப்பு பரிசினையும் வழங்கி கவுரவித்து நெகிழ வைத்திருக்கிறார்.

மாவட்ட ஆட்சியரின் செயலால், இன்ப அதிர்ச்சியில் இருந்த தபேதார் அன்பழகனிடம் பேசினோம்... ``மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தபேதாராக 5 வருடங்களாகப் பணியாற்றினேன். ஏற்கெனவே கலெக்டரா இருந்த உமா மகேஸ்வரி மேடம், இப்ப இருக்கிற கவிதா ராமு மேடம் ரெண்டு பேருக்கும் தபேதாரா வேலை செஞ்சிருக்கேன். அரசு அலுவலகங்களில் எத்தனையோ வருஷம் வேலை செஞ்சிருந்தாலும், இந்த 5 வருஷம் என் வாழ்க்கையில் பொன்னான காலம்னு தான் சொல்லுவேன்.
இன்னைக்கு மட்டும் இல்லை, கலெக்டர் கவிதா ராமு மேடம் என்னைக்குமே பணியாளர்களை அன்பாதான் நடத்துவாங்க. அதே நேரத்துல பணியில, ரொம்பவே கண்டிப்பாகவும் இருப்பாங்க. இந்த மாதிரி எல்லாம் தபேதார் யாருக்கும் பணி ஓய்வு கிடைச்சதான்னு தெரியலை. எனக்கு கிடைச்சது. மேடம் அவங்க கையால, கார் கதவை திறந்துவிட்டு, அவங்க கார்ல வீட்டுக்கு என்னை அனுப்பி வைப்பாங்கன்னு நெனச்சுக் கூட பார்க்கலை. ஆனா, நிஜத்தில் அது நடந்திருக்கு. மேடம் கணவரோட வந்து, கிட்டத்தட்ட 3 மணி நேரம் எங்க வீட்டுல தங்கியிருந்து, எனக்கு நினைவுப் பரிசு கொடுத்து நெகிழ வச்சிட்டாங்க. இந்த நிகழ்வுகள் எல்லாம் என் வாழ்க்கையில் என்னைக்கும் மறக்க முடியாதது" என்கிறார் நெகிழ்ச்சியுடன்.