தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

ஆக்கபூர்வமாக செயலாற்றுவோம்!

தலையங்கம்
News
தலையங்கம்

தலையங்கம்

உங்கள் கைகளில் தவழ்ந்துகொண்டிருக்கும் நாணயம் விகடன், இந்த வாரம் முதல் 18-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதற்கு சிறப்பு சேர்க்கும் விதமாக புதிய பகுதிகளையும், நிபுணர்கள் ஆராய்ந்து தந்த பல கட்டுரைகளையும் இந்த இதழில் தந்திருக்கிறோம்.

பணம் குறித்த தங்கள் அனுபவங்களை வாசகர்கள் பகிர்ந்துகொள்வதற்காக ‘மணி’த் துளிகள் என்கிற தலைப்பில் புதிய பகுதி ஒன்றைத் தொடங்கி இருக்கிறோம். இதில் இடம்பெறும் ஒவ்வொரு துணுக்கில் இருந்தும் வாசகர்கள் அருமையான பல விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

அதே போல, ‘எங்க ஏரிய ஸ்பெஷல்’ என்கிற இன்னொரு பெரிய பகுதியில் தமிழகத்தில் இதுவரை யாருக்கும் தெரியாத சந்தைகள், பெரிய அளவில் முன்னேறிய மனிதர்கள் என வாசகர்கள் எழுதவிருக்கும் ஒவ்வொரு விஷயமும் தவறாமல் படிக்கக்கூடியதாக இருக்கும்.

‘போர்ட்ஃபோலியோவை உருவாக்கும் தொடரை நிறுத்தி பல ஆண்டுகளாகி விட்டது. மீண்டும் அந்தப் பகுதியைத் தொடங்குங்கள்’ என வாசகர்கள் தொடர்ந்து கேட்டுவந்த கோரிக்கை, இந்த இதழ் முதல் நிஜமாகிறது. அதே போல, மியூச்சுவல் ஃபண்ட் குறித்த ஆய்வுக் கட்டுரை வாசகர்களின் அறிவுக்கு நல்ல தீனியாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.

சிக்கனமான நிதி நிர்வாகம், சொத்து சேர்க்கும் வழிகள், வாழ்க்கைப் பாதுகாப்புக்கான திட்டங்கள், சரியான முதலீட்டு முறைகள் என வந்திருக்கும் இந்த சிறப்பிதழ் வாசகர்களுக்கு நல்விருந்தாக இருக்கும் என்பதுடன், முதலீடு குறித்த தங்கள் அறிவைப் பெருக்கிக்கொள்வதற்கான பல கட்டுரைகளை நாணயம் விகடன் இனிவரும் காலத்திலும் தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருக்கும்.

இதுஒருபுறமிருக்க, நிதிக் கல்வியை நாம் மட்டும் பெற்றால் போதாது... நாளைய தலைமுறைக்கும் கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும். அதாவது, பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடங்கி, அனைத்துப் பிரிவினருக்கும் நிதிக் கல்வியை வழங்குவதுதான் சரியான முன்னெடுப்பாக இருக்கும்.

இதில் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்குப் பெரும்பொறுப்பிருக்கிறது. ஆம், இன்றைய டிஜிட்டல் உலகில் கண்காணாத இடங்களில் இருந்துகொண்டே வெகுசுலபமாக நிதி மோசடிகளை அரங்கேற்றி, கோடிக் கோடியாகக் கொள்ளை அடிப்பது தொடர்கிறது. இப்படி கடன், மோசடி என நாளைய தலைமுறை எந்தப் பிரச்னையிலும் சிக்காமல் இருக்க வேண்டும் எனில், நாளைய தலை முறைக்கு முழுமையான நிதிக் கல்வி கிடைக்கச் செய்வது காலத்தின் கட்டாயமே!

அரசாங்கங்களுக்கு மட்டுமல்ல, நிதி ஆலோசகர்கள், நிதி நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், நாணயம் விகடன் வாசகர்கள் மற்றும் நாணயம் விகடன் என அனைவருக்குமே இதில் பொறுப்பிருக்கிறது. அதை உணர்ந்து அனைவருமே ஆக்கபூர்வமான வகைகளில் சிந்தித்து செயலாற்றுவோம்!

- ஆசிரியர்