தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

ரிசர்வ் வங்கி செய்யக்கூடாத தவறு..!

தலையங்கம்
News
தலையங்கம்

தலையங்கம்

கடந்த புதனன்று, வட்டி விகிதத்தை மேலும் 0.35% அளவுக்கு உயர்த்தி இருக்கிறது நமது மத்திய ரிசர்வ் வங்கி. இதனால் கடன்களுக்கான வட்டி விகிதம் 6.25 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கடந்த மே மாதம் தொடங்கி இதுவரை 2.25% அளவுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 2019 பிப்ரவரிக்குப் பிறகு, அதிகமான வட்டி விகிதம் என்கிற நிலையை இப்போது நாம் எட்டி யிருக்கிறோம்.

பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தின் அடிப்படையில் மத்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை உறுப்பினர்களில் 5 பேரில் 4 பேர் வட்டி விகிதத்தை உயர்த்தும் முடிவை எடுத்துள்ளனர். ‘‘பணவீக்கத்தைச் சமாளிக்கும் திறன் நமக்கு இருக்கிறது’’ என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் சொன்னது மகிழ்ச்சி அளித்தாலும், ‘‘பணவீக்கத்துக்கு எதிரான போர் இன்னும் முடிந்துவிடவில்லை’’ என்று அவர் எச்சரித்திருப்பது கவலை தருகிறது.

காரணம், ரிசர்வ் வங்கி கவர்னரின் எச்சரிக்கைக்குப் பின், வட்டி விகிதம் இன்னும்கூட 0.25% என்கிற அளவுக்கு உயர்த்தப்படலாம் என்று ஆரூடம் சொல் கின்றனர் நிபுணர்கள். அப்படி உயர்த்தப்பட்டால் கடன்களுக்கான வட்டி விகிதம் 6.50% என்கிற நிலையை எட்டிவிடும்.

பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என ரிசர்வ் வங்கி நினைப்பது சரிதான். அதே சமயம், இதன் எதிர்விளைவாக சாமானிய மக்கள் பெருமளவில் கஷ்டப்பட வேண்டியிருக்கும்; நமது பொருளாதார வளர்ச்சி வெகுவாகக் குறைந்துவிடும் என்பதையும் ரிசர்வ் வாங்கி கவனிக்கத் தவறக்கூடாது.

குறுகிய காலத்தில் வட்டி விகிதம் கணிசமாக உயர்த்தப்பட்டதன் விளைவாக வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் என எல்லாக் கடன்களுக்கான வட்டி விகிதமும் ஏறக்குறைய 3% வரை உயர்ந்திருக்கிறது. 20 ஆண்டுகளில் கட்டிமுடிக்கிற மாதிரி வாங்கப்பட்ட வீட்டுக் கடன், தற்போது 25 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும் நிலையைக் கண்டு கடன்தாரர்கள் கலங்கிப்போயிருக்கிறார்கள்.

அதிக வட்டிக்குக் கடன் வாங்கித் தொழிலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் தொழில் நிறுவனங்கள் உள்ளன. விலைவாசி ஏற்கெனவே அதிகமாக இருக்கும் நிலையில், உயர்த்தப்பட்ட வட்டி விகிதத்தை சரிக்கட்ட பொருள்களின் விலையை மேலும் உயர்த்தினால், தொழில் நிறுவனங்களால் பொருள்களை விற்க முடியாது; லாபமும் சம்பாதிக்க முடியாது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்தும் வேகத்தை அமெரிக்க ஃபெடரல் அமைப்பே சற்று மட்டுப்படுத்திவிட்டது. ஆனால், நாம் மட்டும் பணவீக்கத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதன் காரணமாக மற்ற விஷயங்களைக் கவனிக்கத் தவறிவிடுவோம் என்பதே உண்மை!

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது முக்கியம் என்பதை உணர்ந்த அதே சமயத்தில், நாடு மற்றும் சாதாரண மக்களின் வளர்ச்சியும் முக்கியம் என்பதை நம் ரிசர்வ் வங்கி உணர்ந்து செயல்படுவது நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது!

- ஆசிரியர்