பங்குச் சந்தை
தொடர்கள்
நடப்பு
Published:Updated:

முதலீட்டை நோக்கித் திரும்பும் மக்கள்... தொடரட்டும் இந்த ஆரோக்கியமான போக்கு!

தலையங்கம்
News
தலையங்கம்

தலையங்கம்

கார் தயாரிக்கும் நிறுவனங்களில் மெர்சிடீஸ், பென்ஸ் காருக்கு மக்களிடம் எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அப்படிப்பட்ட பென்ஸ் கார் நிறுவனத்தின் இந்தியாவுக்கான நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் சந்தோஷ் ஐயர் சமீபத்தில் சொல்லியிருக்கும் ஒரு கருத்து சமூக வலைதளங்களில் பலரும் பேசும் விஷயமாக மாறியிருக்கிறது.

‘‘பென்ஸ் கார் வாங்க வேண்டும் என்று எங்களுக்கு ஆண்டுதோறும் 15,000 பேர் போன் செய்கிறார்கள். ஆனால், 1,500 பேர் மட்டுமே காரை வாங்குகிறார்கள். மீதமிருப்பவர்களில் பலரும் மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி மூலம் முதலீடு செய்யத் தொடங்கியிருப்பதால், எங்கள் காரை வாங்கவில்லை. எஸ்.ஐ.பி-க்குப் போகும் இந்தப் பணம் எங்களை நோக்கி வந்தால், எங்கள் விற்பனை பெருகும்’’ என்று சொல்லியிருக்கிறார் சந்தோஷ்.

பெரும் பணம் செலவு செய்து கார், விலை உயர்ந்த மோட்டர் பைக்குகள், செல்போன்கள் வாங்குவதைவிட, எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளத் தேவையான பணத்தை சேமிக்க வேண்டும்; அதற்கு முதலீடு செய்ய வேண்டும் என்று முடிவு செய்து, அதற்கான நடவடிக்கையில் மக்கள் இறங்கி இருக்கிறார்கள் என்கிற உண்மையை நமக்கு உணர்த்துவதாக இருக்கிறது இவரது பேச்சு.

எப்போது பணம் கிடைத்தாலும் உடனே ஏதாவது ஒரு பொருளை வாங்கி அனுபவிக்க நினைப்பதுதான் இன்றைக்கு நம்மவர்களில் பெரும்பாலானவர்களின் இயல்பான சிந்தனையாக இருக்கிறது. பணம் கிடைக்கவில்லை எனில், மாதாந்தர தவணை செலுத்தும் இ.எம்.ஐ திட்டம் மூலம் பொருளை வாங்கிவிடுகிறார்கள். ஒரு பொருளைக் கடனில் வாங்கும்போது பெரிய அளவில் வட்டி கட்ட வேண்டி இருக்கிறது. ரொக்கமாக ரூ.5 லட்சம் தந்து வாங்கக்கூடிய அதே காரை, இ.எம்.ஐ மூலம் கடனில் வாங்கும்போது ரூ.7 லட்சத்துக்கும் மேல் ஆகிவிடுகிறது. எந்தப் பொருளையும் கடனாக வாங்குவதைவிட, அதற்கான பணத்தை முதலில் சேமித்து, சரியான திட்டத்தில் முதலீடு செய்து வாங்கினால், பெரும் பணத்தை நம்மால் மிச்சப்படுத்த முடியும் என்கிற உண்மையை பணம் படைத்தவர்களைவிட நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவசியம் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்றைக்கு எஸ்.ஐ.பி மூலம் பலரும் முதலீடு செய்துவருவதால்தான், ஒவ்வொரு மாதமும் எஸ்.ஐ.பி வழியிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ரூ.13,000 கோடியைத் தொட்டிருக்கிறது. இத்தனைக்கும் மாதச் சம்பளம் வாங்குகிறவர்களில் 1% அல்லது 2% பேர்கூட எஸ்.ஐ.பி கணக்கைத் தொடங்கவில்லை. மாதச் சம்பளம் பெறும் அனைவரும் தங்கள் வருமானத்தில் 10% பணத்தை எஸ்.ஐ.பி மூலம் சேர்க்கத் தொடங்கினால், பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்தைப் பெறுவதுடன், எதிர்காலத்துக்குத் தேவையான பணத்தைக் குறைவில்லாமல் சேர்க்க முடியும்!

முதலீட்டை நோக்கி மக்கள் திரும்பியிருக்கிறார்கள். இந்த ஆரோக்கியமான போக்கு என்றென்றும் தொடரட்டும்!

- ஆசிரியர்