
தலையங்கம்
சினிமா - ஊடகக் கலைகளில் மிகவும் பவர்ஃபுல்லானது; நல்ல விஷயங்களை சினிமாவில் எடுத்துச் சொன்னால் நிச்சயம் பாராட்டுவார்கள். ஆனால், தவறாக எடுத்துச் சொன்னால், அந்த சினிமாவை கடுமையாக விமர்சிப்பார்கள். இதற்கு சிறந்த உதாரணம், ‘துணிவு’ திரைப்படம்.
இந்தப் படத்தில், ‘மியூச்சுவல் ஃபண்ட் என்பது மோசடியான திட்டம். அதில் முதலீடு செய்து பணத்தை இழக்கிறார்கள் மக்கள்’ என்கிற கருத்து ஆணித்தரமாக எடுத்து வைக்கப்பட்டிருக்கிறது. ‘சதுரங்க வேட்டை’ படத்தில் தமிழகத்தில் நடக்கும் மோசடித் திட்டங்களைப் பற்றி அழகாகவும் தெளிவாகவும் எடுத்த இயக்குநர் ஹெச்.வினோத், இப்போது ‘துணிவு’ படத்தை எடுத்திருக்கிறார்.
ஒரு படத்தின்மூலம் சொல்ல வந்த கருத்தைத் துணிவுடன் எடுத்துச் சொல்லும் உரிமை இயக்குநருக்கு உண்டு. ஆனால், சொல்ல வந்த கருத்தைத் தப்பும் தவறுமாகப் புரிந்துகொண்டு, அந்தத் தவறான கருத்துகளை மக்கள் மனதில் விதைக்கும் உரிமை அவருக்கு நிச்சயமாக இல்லை.
இன்றைக்கு இந்தியாவில் உள்ள முதலீடுகளிலேயே மிக மிகக் கண்காணிப்பு நிறைந்த முதலீடு, மியூச்சுவல் ஃபண்டுதான். பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரிய மான செபி, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கழுகு போல கண்காணிக்கிறது. இந்த நிலையில், இந்த முதலீடு எப்படி செயல் படுகிறது, முதலீட்டாளர்களுக்கு எப்படிப்பட்ட பாதுகாப்பு இருக்கிறது என்பதை சரியாகப் புரிந்துகொள்ளாமல், அரைவேக்காட்டுத்தனமான ஒரு படத்தை எடுத்து என்ன பிரயோஜனம்?
‘மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது’ என மியூச்சுவல் ஃபண்ட் விளம்பரங்களில் சொல்லப்படுவதையும் இந்தப் படத்தில் கேலி செய்திருக்கிறார்கள். ‘இந்த முதலீட்டில் ரிஸ்க் இருக்கிறது. எனவே, பார்த்து செய்யுங்கள்’ என்கிற உண்மையை தங்க நகைக்கடைக்காரர்களோ, ரியல் எஸ்டேட்காரர்களோ, வங்கி நடத்துபவர்களோ சொல்வதில்லை. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இந்த உண்மையை சொல்லும்போது, அதைப் பாராட்ட வேண்டுமே தவிர, கேலி செய்வது எப்படி சரி?
‘துணிவு’ படத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டைப் பேசுவதற்குப் பதிலாக, தமிழகம் முழுக்க தலைவிரித்தாடும் மோசடி நிதித் திட்டங்கள் பற்றி இயக்குநர் பேசி இருக்கலாமே? இந்த மோசடித் திட்டங்களுக்கு பக்கபலமாக இருந்து செயல் படும் அரசியல்வாதிகளையும், காவல் துறையினரின் முகமூடியையும் கிழித்து, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கலாமே? இந்தத் திட்டங்கள் பற்றி பேசும் ‘துணிவு’ இயக்குநருக்கோ, அஜித்துக்கோ இல்லையா?
அரசின் தீவிர கண்காணிப்புடனும் பலவித கட்டுப்பாடுகளுடனும் நடத்தப் படும் மியூச்சுவல் ஃ பண்ட் பற்றி இந்தப் படத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் மொத்தமும் தவறே. இதை நம்பி, மியூச்சுவல் ஃபண்டை மக்கள் தவிர்த்தால், அது அவர்களுக்கும் நாட்டுக்கும் நஷ்டமே. இதை அனைவருமே புரிந்துகொள்வது அவசியம்!
- ஆசிரியர்