விகடன் ஆசிரியர் குழு நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள்

உள்ளடக்கம்

  1. அறிமுகம்
  2. நோக்கம்
  3. வாசகர்களுக்கான நம் கடமை
  4. தொழில்முறை நெறிமுறைகள்
  5. தனிப்பட்ட நடத்தை மற்றும் நல முரண்கள்
  6. பிற்சேர்க்கைகள்
    1. 6.1. பிரஸ் கவுன்சில் தரும் நடத்தை விதிகள்

1. அறிமுகம்

செய்திகளைப் பக்கச் சார்பற்ற முறையில் 'பயமோ, தயவோ இல்லாமல்' நம் நிறுவனர் திரு.எஸ்.எஸ்.வாசன் அவர்களின் எண்ணங்களின்படி வழங்குவதே விகடனின் குறிக்கோள். கூடவே வாசகர்கள், செய்தி தரும் தகவலாளர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் பிறரை நியாயமாகவும் வெளிப்படையாகவும் நடத்துவதுமாகும். விகடனின் இன்றைய நற்பெயர் இந்த எண்ணங்களாலும், அதன் ஊழியர்களின் தொழில்முறைச் செயல்பாடுகளாலுமே கிடைத்தது. அதனால், விகடனின் ஆசிரியர் குழு உறுப்பினர்களும், பிற ஊழியர்களும் இதனைத் தெளிவாகக் கடைபிடிக்கிறார்கள்.

ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலமாக, விகடனின் பணியாளர்கள் அதன் நேர்மையை பிறர் பொறாமைப்படத் தக்க வகையில் பாதுகாத்து வருகின்றனர். செய்திகள் மற்றும் படைப்புகளைத் தாண்டிய எங்கள் முதல் கடமை, விகடனின் ஒருமைப்பாட்டை எந்தக் கறையும்படாமல் காப்பதாகும்.

ஆர்வம் காரணமாக வெளிப்படையான விவாத மோதல்கள் பல நேரங்களில் ஏற்படக்கூடும். அவை வாசகர்கள், செய்தி ஆதாரங்கள் அளிப்பவர்கள், ஆர்வலர் குழுக்கள், விளம்பரதாரர்கள் அல்லது போட்டியாளர்கள் காரணமாகவோ, அவர்கள் ஒவ்வொருவருக்கிடையேவோ, விகடனின் பிற பிரிவுகளுடனோ ஏற்படலாம். இருவரும் பணியாற்றும் குடும்பங்கள் என்பது வழக்கமாக இருக்கும் காலகட்டத்தில், வாழ்க்கைத் துணைவர், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் நடவடிக்கைகள் மோதல்களை உருவாக்கலாம்; அல்லது மோதல் போன்ற தோற்றத்தை உருவாக்கலாம்.

இவற்றைக் கருத்தில் கொண்டு விகடன் குழுமம் தன் நெறிமுறைகளில் மிக உயர்ந்த தரத்தை அறிமுகம் செய்து, அதைப் பராமரிக்கவும் முயற்சிக்கிறது. அதன் பணியாளர்கள் இந்த இலக்கைப் புரிந்து, பகிர்ந்து கொள்கிறார்கள் என்பது குழுமத்தின் நம்பிக்கை. வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முன்பு, விகடன் ஊழியர்கள் தொழில்முறை நெறிகளைப் புரிந்து கடைபிடிக்க வேண்டும். மேலும் விகடனின் ஈடுசெய்ய முடியாத நல்ல பெயர் என்பதன் மேல் நம் அனைவருக்குமுள்ள பங்கைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஊடகத்தின் முதன்மைப் பணி செய்தி சேகரிப்பாகும். அதன் ஆன்மாவைக் கறைபடாமல் காத்தபடி பணியைச் செவ்வனே செய்தல் வேண்டும். விகடன் குழுமத்தின் மிக முக்கிய வளம் அதன்மீதுள்ள பொதுமக்களின் நம்பிக்கையே. இந்த நெறிமுறைகளை வெளியிடுவதன் நோக்கம், விகடன் (அச்சு மற்றும் டிஜிட்டல் தளங்கள்) மற்றும் அதன் வாசகர்களுக்கு இடையேயான இந்த நம்பிக்கையைப் பலப்படுத்துதலும், விகடன் மற்றும் அதன் இதழியலின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதுமாகும். இந்த நெறிமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் விகடனுக்காகப் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் தங்களின் மற்றும் சக ஊழியர்களின் சுதந்திரம், நிலைப்பாடு மற்றும் நற்பெயரைப் பாதுகாக்கலாம். விகடனுக்காகப் பணியாற்றும் தனிப்பட்டோரும் இந்த வழிகாட்டுதல்களைக் கடைபிடிப்பது அவசியம்.

2. நோக்கம்

இந்த வழிகாட்டுதல்கள் பொதுவாக இதழ், டிஜிட்டல், வீடியோ, சமூக வலைதளங்கள் என அனைத்துத் துறைகளில் நேரடியாகப் பணியாற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் பொருந்தும்.

நிருபர்கள், தொகுப்பாளர்கள், எழுத்தாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், படத் தொகுப்பாளர்கள், கலை இயக்குநர்கள், கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள், கிராபிக்ஸ் எடிட்டர்கள் மற்றும் அனைத்துத் தொழில்முறை பணியாளர்களையும் இந்தக் கொள்கை நெறிமுறை 'ஊழியர்' என்றே கொள்கிறது.

முதலாவதாக, எந்த ஊழியரும் தனிப்பட்ட லாபத்துக்காகவோ, ஆதரவு, நன்மையைப் பெறவோ விகடனைப் பயன்படுத்தக் கூடாது. இரண்டாவதாக, அரசியல் மற்றும் அரசாங்கத்தைப் பற்றிச் செய்தியளிப்பதில் கடுமையான நடுநிலைமை கொண்ட விகடனின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கும் எதையும் யாரும் செய்யக் கூடாது; குறிப்பாக, பணியில் இருக்கும்போது எந்தவிதமான அரசியல் பாகுபாட்டையும் காட்டக் கூடாது. இந்த வழிகாட்டுதல்கள் மூலம் பாதுகாக்க விரும்பும் மதிப்பீடுகளை ஊழியர்கள் புரிந்துணர்வோடு பகிர்ந்து கொள்கிறார்கள் என்று விகடன் நம்புகிறது.

கடந்த காலங்களில், விகடன் இந்த மதிப்புகளை இணக்கமாகப் பயன்படுத்துவதில் எந்த விதிவிலக்கும் இல்லாமல் விவாதத்தின் மூலம் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்தது. இதே முறை இனியும் தொடரும் என்றும் விகடன் நம்புகிறது. ஆயினும்கூட, பின்வரும் வழிகாட்டுதல்களை வேண்டுமென்றே மீறுவதைக் கடுமையான குற்றமாக விகடன் கருதுகிறது.

நம் அனைவரின் அடிப்படை நோக்கம் விகடனின் பக்கச்சார்பற்ற தன்மை, நடுநிலைமை மற்றும் அதன் நேர்மையைப் பாதுகாப்பதாகும். பல நிகழ்ச்சிகளில் அல்லது சம்பவங்களின்போது அந்த நோக்கத்தைப் பொது அறிவுடன் பயன்படுத்துவது விகடனின் நெறிமுறைப் போக்கைச் சுட்டிக்காட்டும். சில நேரங்களில் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான பதிலைச் சுயமாகவே அறிய முடியும். அந்தக் குறிப்பிட்ட நடவடிக்கை / செயல்பாடு விகடன் குழுமத்தின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்குமா என்று தன்னைத் தானே கேட்டுக்கொள்வதே, அது பொருத்தமானதா என்பதை அறிய பெரும்பாலும் போதுமானதாக இருக்கிறது.

ஒவ்வொரு பணியாளரும் இந்த ஆவணத்தைக் கவனமாகப் படிக்கவும், மேலும் அவரவர் கடமைகளுக்கு இவை எவ்வாறு பொருந்தும் என்பதை சிந்திக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குழுமத்தின் விதிமுறைகளுடன் பரிச்சயம் இல்லாத காரணத்தைச் சுட்டினால், மீறலை மன்னிக்க முடியாது. மாறாக, இது விதிமீறலை இன்னும் மோசமாக்குகிறது. இங்கே வழங்கப்பட்டுள்ள விதிகள்மூலம் பரந்த கொள்கைகளையும் ஒரு சில எடுத்துக்காட்டுகளையும் மட்டுமே வழங்க முடியும். நம் உலகம் தொடர்ந்து வியத்தகு முறையில் மாறிவருகிறது. எந்தவொரு எழுதப்பட்ட ஆவணமும் ஒவ்வொரு சாத்தியத்தையும் எதிர்பார்க்க முடியாது. ஆகவே, இந்த ஆவணத்தின் கீழ் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை அல்லது வாய்ப்புகுறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால், ஊழியர்கள் தங்கள் மேற்பார்வையாளர்களையும் ஆசிரியர்களையும், அல்லது நிர்வாகத்தையும் கலந்தாலோசிக்க வேண்டும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மின்னஞ்சல்கள் பரிமாற்றமே போதுமானதாக இருக்கும்.

இவ்வகையில், இந்தக் கையேடு அனைத்துச் சூழ்நிலைகளின் முழுமையான தொகுப்பு அல்ல. விவாதங்களுக்கு வழிவகுக்கும் சூழ்நிலைகள் அல்லது சிக்கல்கள் கட்டாயம் நிகழும். அவையெல்லாம் இந்த நெறிமுறையில் வெளிப்படையாகக் குறிப்பிடப்படாமல் இருக்கலாம். வழிகாட்டுதல்கள், நெறிமுறைகளை அவ்வப்போது மாற்றியமைத்து விரிவாக்குவதற்கான உரிமையை விகடன் கொண்டுள்ளது.

இந்த வழிகாட்டுதல்களை விளக்குவதற்கும் பயன்படுத்துவதற்குமான பொறுப்பும் கடமையும் துறைத் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் உள்ளது. அவர்கள் அந்தக் கடமையைத் தங்களுக்கு அடுத்த நிலையில் உள்ள பொறுப்பாளர்களுக்கு வழங்கலாம்.

3. வாசகர்களுக்கான நம் கடமை

விகடன் குழுமம் அதன் வாசகர்களை நியாயமாகவும் வெளிப்படையாகவும் நடத்துகிறது. அச்சு மற்றும் டிஜிட்டல் வடிவில் நாம் அறிந்துகொண்ட முழுமையான, பட்டவர்த்தனமான உண்மையை நம் வாசகர்களிடம் சிறப்பாகக் கொண்டு சேர்க்கிறோம். பெரியதோ, சிறியதோ, எந்தப் பிழையாயினும், நம் பிழைகளை அறிந்தவுடன், அவற்றை உடனடியாகச் சரிசெய்வது நம் கொள்கை.

பொதுவெளியிலாகட்டும், தனிப்பட்ட முறையிலாகட்டும்... நாம் நம் வாசகர்களை ஒரே அளவுகோலுடன் சீராகவே நடத்துகிறோம். வாசகர்களுடன் பழகும் எவரும் இந்தக் கொள்கையை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாசகர்களே நம் உரிமையாளர்கள் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். எந்த ஒரு பரிமாற்றமும் - நேரிலோ, தொலைபேசி மூலமோ, கடிதம் அல்லது ஆன்லைன் மூலமோ நடந்தாலும் அதை நாகரிகத்துடன் கொண்டுசெல்ல வேண்டும். நம் வாசகர்களின் கடிதங்களையும் மின்னஞ்சல்களையும் புறக்கணிப்பதன் மூலம் அவர்களை அந்நியப்படுத்தக் கூடாது என்ற கொள்கையை மனத்தில் கொள்ள வேண்டும்.

விகடன் குழுமம் அதன் வாசகர்களின் நலனுக்காகத் தகவல்களைச் சேகரிக்கிறது. விகடனில் உள்ள ஊழியர்கள் அதை வேறு எந்த நோக்கத்துக்காகவும் தங்கள் பணி நிலையைப் பயன்படுத்திச் செய்யக் கூடாது. மேலே குறிப்பிட்டுள்ளபடி, அவர்கள் தங்கள் பேட்டிகளில், கட்டுரைகளில், படங்களில், வீடியோக்களில், படைப்புகளில் பெறப்பட்ட தகவல்களைச் செயல்படுத்துவதன் மூலமோ, வெளிப்படுத்துவதன் மூலமோ தங்களுக்கு அல்லது மற்றவர்களுக்கு எந்த நன்மையையும் தேடக் கூடாது.

தகவல் திருட்டில் ஈடுபட்டோ (plagiarise), தெரிந்தோ, பொறுப்பற்ற முறையிலோ தவறான தகவல்களை வெளியிடும் ஊழியர்கள், வாசகர் நம்மேல் கொண்டுள்ள நம்பிக்கை என்ற நம் அடிப்படையையே மீறுகிறார்கள். இத்தகைய நடத்தையை எந்தச் சூழலிலும் விகடன் குழுமம் பொறுத்துக்கொள்ளாது.

4. தொழில்முறைப் பண்புக்கூறுகள்

இந்த நெறிமுறை உண்மைகளைச் சரிபார்ப்பதன் முக்கியத்துவம், மேற்கோள்களின் துல்லியம், புகைப்படங்களின் நேர்மை மற்றும் அநாமதேய ஆதாரங்கள் மேலான நம் எச்சரிக்கை போன்ற அடிப்படை தொழில்முறை நடைமுறைகளைக் கையாள்கிறது.

விகடன் நிறுவனத்தின் ஊழியர்களாக, குழுமத்தின் விதிகளை நாங்கள் புரிந்துகொண்டு பின்பற்றுகிறோம். அவை சக ஊழியர்களை நாங்கள் கையாள்வதையும் எங்கள் நடத்தைகளை மதிப்பிடும் தரங்களாக இருக்கின்றன. துன்புறுத்தலுக்கு எதிரான நிறுவனத்தின் கொள்கைகளையும், கணினிகள் மற்றும் மின்னணு தகவல்தொடர்பு சார்ந்த விதிகளையும் நாங்கள் கருத்தில் கொள்கிறோம்.

அ) பெயரிடப்படாத மேற்கோள்கள்

மக்களை அநாமதேயமாகப் பேச அனுமதித்தால், அவர்கள் பெரும்பாலும் மிகவும் நேர்மையாகப் பேசுவதை நாம் காண்கிறோம். பிற எழுத்துப்பூர்வ ஆதார மேற்கோள்களை ஒரு பத்திரிகையாளர் பயன்படுத்துவதைவிட இவ்வாறான பெயரற்ற மேற்கோள்களின் பயன்பாடு, வாசகர் ஒரு விஷயத்தைப் பற்றித் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவும். ஆனால், இதையே அளவுக்கு அதிகமாகவோ, கண்மூடித்தனமாகவோ பயன்படுத்தினால் அநாமதேய மேற்கோள்கள் ஊடகத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறும். சில சூழல்களில் நம் தகவலாளர்களின் பெயரைக் குறிப்பிட முடியாவிட்டாலும், அதுகுறித்து நாம் நேர்மையாக இருக்க வேண்டும். நேரடியாகப் பெயர் குறிப்பிடப்படாத மேற்கோள்கள் சிலருக்கு நன்மையை அளிக்கக்கூடும்; ஆனால், அதன் மூலத்தை மதிப்பிட முடியாத வாசகருக்கு, அது ஊடகத்தின் மேலான நம்பிக்கையைக் குறைத்துவிடும்.

இவ்வாறான பெயர் குறிப்பிடப்படாத, தவறான மேற்கோள்கள் பயன்படுத்துவதில் விதிவிலக்கான சூழ்நிலைகள் இருக்கலாம். அது போன்ற அரிதான சூழல்களில் ஆசிரியருடன் கலந்தாலோசித்த பின்னரே அவற்றைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பிட்ட ஒப்புதல் இல்லாத நிலையில், பெயரற்ற மேற்கோள்களைப் பொழிப்புரைகளாக மாற்றியே பயன்படுத்த வேண்டும்.

ஆ) பெயர் குறிப்பிடப்படாத பங்களிப்புகள்

ஆசிரியரின் பாதுகாப்பு, தனியுரிமை அல்லது வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம் என்ற சூழலில், ஆசிரியர் அல்லது நிர்வாக இயக்குநரின் எழுத்துப்பூர்வ அனுமதியின் பேரில், விகடன் குழுமத்தின் கட்டுரைகள் பெயரின்றி வெளியிடப்படலாம். இந்தப் படைப்புகளில் எழுத்தாளரின்/ஆசிரியரின் அடையாளம் மறைக்கப்பட்டுள்ளது என்பதை வாசகர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

இந்த ஏற்பாடு அச்சு மற்றும் டிஜிட்டல் தளங்களில் மறுவெளியீடாக வரும் படைப்புகளுக்கோ, புனைப்பெயர் பரவலாக்கப்பட்ட, விகடன் நியமித்த ஆசிரியர்கள், குழுமத்தின் முன் அனுமதி பெற்ற எழுத்தாளர்களுக்கும் பொருந்தாது.

இ) மேற்கோள்கள்

விதிவிலக்கான சூழல் தவிர, பிர நேரங்களில் மற்றவர்களின் படைப்புகளைச் சரியான மேற்கோள் காட்டாமல் வெளியிடக் கூடாது. ஆதாரத்தை அடையாளம் காண முடியாத சூழலில் இவ்வாறு செய்யும்போது ஆசிரியரின் அனுமதி அவசியம் தேவை. மற்றொரு நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட, ஏற்கனவே வெளியிடப்பட்ட தகவலுக்குக் கட்டாயம் மேற்கோள் சுட்ட வேண்டும். கட்டுரை/படைப்புகளில் கணிசமான அளவு ஏஜென்சியின் தகவல்கள் பயன்படுத்தப்பட்டால், அதன் பெயரையும் அவசியம் குறிப்பிட வேண்டும்.

ஈ) குழந்தைகள்

18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் பழகும்போது சிறப்பு கவனம் கொள்ள வேண்டும். பெற்றோர்கள் இல்லாமல் குழந்தைகள் புகைப்படம் எடுக்கப்படும்போதோ, நேர்காணல் செய்யப்படும்போதோ, சம்பந்தப்பட்ட துறைத் தலைவருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். குழந்தைகளின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்களின் புரிதல் இல்லாமல் பெறப்படும் தனிப்பட்ட தகவல்கள் உள்ளடக்கிய கட்டுரைகள்/தகவல்கள் அவர்களது ஒப்புதலுடன் பெறப்பட்டாலும், அவற்றை வெளியிட வலுவான பொது நலன் தேவை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

டிஜிட்டல் வழி வெளியிடப்படும் படைப்புகளின் நீண்ட ஆயுளைக் கருத்தில் கொண்டு, ஆசிரியர்கள் குழந்தைகளின் அடையாளத்தை வெளியிடவேண்டுமா என்று சிந்திக்க வேண்டும். வளரும்போது குழந்தைகளுக்கு இதனால் தேவையற்ற சங்கடங்களோ, தீங்கோ ஏற்படலாம் என்ற நிலையில் அவர்களைப் பாதுகாக்க அவர்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை மறைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட குழந்தைக்கு இந்தத் தகவலைத் தெரிவித்து அதன் ஒப்புதலை எந்த அழுத்தமுமின்றி பெறலாம் என்ற சூழலில், அதன் ஒப்புதல் பெற வேண்டும்.

தனிப்பட்ட படைப்பாளர்களுக்கு சன்மானம்

தனிப்பட்ட படைப்பாளர்களுக்கு (ஃப்ரீலான்ஸர்கள்) நியாயமான சன்மானம் வழங்கும் நடைமுறையை விகடன் பின்பற்றுகிறது. ஆசிரியர்கள் புதிய பங்களிப்பாளர்களை நியமிக்கும்போது, விகடனின் நெறிமுறைகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்தல் வேண்டும்.

உ) நகல் ஒப்புதல்

நகல் ஒப்புதல் அனுமதி யாருக்கும் வழங்கப்படக் கூடாது என்பது பொதுவான விதியாகும். அரிதான சில சூழல்களில், சம்பந்தப்பட்ட நபரை நகல் அல்லது மேற்கோள்களைப் பார்க்க அனுமதிக்கலாம்.

ஊ) பதிப்புரிமை

பத்திரிகையாளர்கள் அங்கீகரிக்கப்படாத மூன்றாம் தரப்பு மூலங்களிலிருந்து படங்கள், உரை அல்லது பிற தகவல்களைத் தேவையான அனுமதி பெறாமல் எவ்வித உள்ளடக்கத்தையும் பயன்படுத்தக் கூடாது. வரையறுக்கப்பட்ட சட்ட சூழ்நிலைகளில் அவ்வாறு அனுமதி தேவைப்படாமல் இருக்கலாம். ஆனால், அனுமதியின்றி அவற்றைப் பயன்படுத்த ஆசிரியர் / சட்ட ஆலோசகர் அதைச் சரிபார்க்க வேண்டும். பத்திரிக்கையாளர்கள் இவ்வாறு பயன்படுத்தும் ஒரு சில பொதுதளங்களின் 'உரிமைகள் மற்றும் பயன்பாடு; குறித்த வழிகாட்டுதல்களை நன்கு அறிந்திருக்க வேண்டும்.

நேரடி மேற்கோள்கள் அவற்றின் சூழல் அல்லது பொருளை மாற்றுவதற்கு மாற்றப்படக் கூடாது.

எ) ஏற்பிசைவு

பங்களிப்பவர்கள் அல்லது அவர்களின் ஆதரவாளர்களின் பிற பொருள்கள்/வணிக விஷயங்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஊக்குவிக்க ஒப்புக்கொள்ளக் கூடாது. ஆசிரியர், நிர்வாக இயக்குநர் முடிவின்படியே, அது வாசகருக்கு உண்மையான ஆர்வம் அல்லது உதவியாக இருக்கும் பட்சத்தில், குறிப்பிட்ட பொருள் அல்லது வணிக விஷயத்தைப் பற்றிய தகவல் சேர்க்கப்பட வேண்டும்.

ஏ) பிழைகள்

குறிப்பிடத் தக்க பிழைகளை விரைவில் சரிசெய்வது விகடனின் கொள்கையாகும். விகடன் ஆசிரியர்களுடன் வெளிப்படையாக ஒத்துழைக்கவும், வாசகர்களிடம் பிழைகள் தெரிவிக்கும் கடமையும் பத்திரிகையாளர்களுக்கு உள்ளது. வாசகர்களின் அனைத்து புகார்களும் ஆசிரியர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும். அனைத்து பத்திரிகையாளர்களும் விகடன் பதிப்புகள் வெளிவரும் நாள்களில் அவற்றைப் படிக்க வேண்டும், வாசகர் கடிதங்கள் மற்றும் கருத்துகளை அறிந்துகொள்ள வேண்டும்.

ஐ) வெளி உதவி

ஊடகவியலாளர்கள் ஆசிரியரின் முன் அனுமதியின்றி வெளிப்புறப் பத்திரிகையாளர்கள் / முகவர்கள்/உதவியாளர்களின் உதவி அல்லது கட்டண சேவைகளைப் பயன்படுத்தக்கூடாது.

ஒ) நேர்மை

"எதிரிகளின் குரல் நண்பர்களின் குரல்களைவிட அதிகம் கேட்கப்பட வேண்டும்.... வெளிப்படையாக இருப்பது நல்லது; நியாயமாக இருப்பது இன்னும் சிறந்தது” (சி பி ஸ்காட், 1921).

மிகவும் கடுமையான விமர்சனங்கள் அல்லது குற்றச்சாட்டுகளை நாம் முன்வைக்கும்போது, சம்பந்தப்பட்ட நபர் பதிலளிப்பதற்கான வாய்ப்பை அனுமதிக்க அதிகக் கடமைப்பட்டுள்ளோம்.

ஓ) துக்கம்

துக்கம் மற்றும் அதிர்ச்சியின்போது மக்கள் புரிதலுடன் நடத்தப்பட வேண்டும்.

ஒள) மொழி

வாசகர்கள்மேல் நாம் கொண்டுள்ள மதிப்பின் காரணமாக, படைப்புகளில் புண்படுத்தும் சொற்களைப் பயன்படுத்தக் கூடாது. ஒரு கட்டுரையின் உண்மைகளுக்கு முற்றிலும் அவசியமானபோது அல்லது, ஒரு கட்டுரையில் ஒரு பாத்திரத்தைச் சித்தரிக்க மட்டுமே இவ்வாறான சொற்களைப் பயன்படுத்தலாம்; நேரடி மேற்கோள்கள் இல்லாமல் வேறு சூழலில் நாம் இவ்வாறான மொழியைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. வலுவான தடித்த சொல் என்றால் அதைப் பயன்படுத்த நாம் கடினமாகச் சிந்திக்க வேண்டும். தலைப்புகளில் இவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், மேற்கோள்கள் மற்றும் நிலைப்பாடுகளை விளக்கப் பயன்படுத்தும்போது கூடுதல் கவனம் கொள்ளவும்.

ஃ) சட்டம்

நம் அவதூறு மற்றும் அவமதிப்புச் சட்டங்கள் சிக்கலானவை. அவை தொடர்ந்து மாறிவருகின்றன. அவதூறு செயல்கள் நமது நற்பெயருக்கு கேடு விளைவிக்கும். ஊழியர்கள் -

அ) சட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் அதன் அம்சங்களைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். ஒருவேளை போதிய தெளிவில்லை என்று உணர்ந்தால், பயிற்சி பெறவும்;

ஆ) தங்கள் கவலைகள், ஐயங்கள்குறித்து குறிப்பிட்ட குழுமத்தின் சட்டத்துறையை நாடவும்,

இ) வழக்கமான சட்ட அறிவிப்புகளைப் படிக்கவும், சட்டத்துறை அவ்வப்போது அனுப்பும் மின்னஞ்சல்கள், நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் உத்தரவுகள்குறித்து தெரிந்துகொள்ளவும் வேண்டும்.

அஅ) புகைப்படங்கள்

டிஜிட்டல் முறையில் மேம்படுத்தப்பட்ட அல்லது மாற்றப்பட்ட படங்கள், மாண்டேஜ்கள் மற்றும் விளக்கப்படங்கள் என வெளியாகும் படங்கள் தெளிவாகப் பெயரிடப்பட வேண்டும். கிராஃபிக்ஸ் மூலம் மாற்றியமைக்கப்பட்ட படங்களை ஒரிஜினல் படங்கள் போலவே எவ்விதக் குறிப்புமின்றி பயன்படுத்துவது தவறு,

அஆ) தனியுரிமை

பிரஸ் கவுன்சில் நெறிமுறைகள் மற்றும் மனித உரிமைகள் சட்டம் ஆகியவற்றுக்கு இணங்க நாங்கள் மக்களை மதிக்கிறோம். பெரும்பாலான பத்திரிகை கட்டுரைகள் உள்ளார்ந்து ஊடுருவக்கூடியதாக இருக்கக்கூடும். அதே நேரத்தில் யாருடைய தனியுரிமையையும் ஆக்கிரமிப்பதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்ய நேர்ந்தால் தெளிவான பொதுநலன் கட்டாயம் இருத்தல் வேண்டும். விசாரணையின் அடிப்படை வலுவாக இருக்க வேண்டும்; பிரச்னை, சந்தேகம் இல்லாவிட்டால் நாங்கள் தகவல் தெரிந்துகொள்ள ‘வலைவிரிக்கும்’, 'மீன்பிடி' பயணங்களை மேற்கொள்வதில்லை. குடியிருக்கும் தெருவின் பெயர்கள் மற்றும் எண்கள் போன்ற விவரங்களை அடையாளம் காணுதல், வெளியிடுதல் போன்றவை மற்றவர்கள் தனியுரிமைக்கு ஊறுவிளைவிக்கலாம் என்பதால் அதில் கூடுதல் கவனம் தேவை.

குழப்பமான சூழல்களில் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள் இங்கே:

1. போதுமான காரணம் இருக்க வேண்டும். அதே நேரம், தனியுரிமையில் நம் ஊடுருவல் ஏற்பட வேண்டிய அவசியத்தை நியாயப்படுத்த வேண்டும்.

2. உள்நோக்கத்தில் நேர்மை இருக்க வேண்டும். அந்தக் குறிப்பிட்ட ஊடுருவல் பொதுநலத்தின் அடிப்படையில் நியாயப்படுத்தப்பட வேண்டும்.

3. செய்திகளின் தீவிரத்தன்மை மற்றும் அதன் பொதுநலனைக் கருத்தில்கொண்டே குறைந்தபட்ச ஊடுருவல் இருக்க வேண்டும்.

4. முறையான அதிகாரம் இருக்க வேண்டும். எந்தவோர் ஊடுருவலின் போதும் உயர்மட்டத்தில் பொருத்தமான மேற்பார்வையுடன் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

5. வெற்றிக்கு நியாயமான வாய்ப்பு இருக்க வேண்டும். 'மீன்பிடி பயணங்கள்' நியாயமானவை அல்ல.

அஇ) இனம்

பொதுவாக, ஒருவரின் இனம் அல்லது இனப் பின்னணி அல்லது மதம் குறித்த தகவலைப் படைப்புக்குத் தொடர்பில்லாவிட்டால் நாங்கள் வெளியிடுவதில்லை. குற்றவியல் சந்தேக நபர்களின் இனப் பின்னணி, படைப்பு/செய்திக்கு முக்கியமான பகுதி (உதாரணமாக: வெறுப்பு குற்றம்) எனில் மட்டுமே தவிர்க்க இயலாத சூழலில் வெளியிடப்படும்.

அஈ) ஆதாரங்கள்

ஆதாரங்கள்/தகவலாளர்களின் உறுதியளிக்கப்பட்ட ரகசியத்தன்மை எந்தச் சூழலிலும் பாதுகாக்கப்பட வேண்டும். எனினும், சாத்தியமான இடங்களில், தகவல் ஆதாரங்கள் குறிப்பாக முடிந்தவரை அடையாளம் காணப்பட வேண்டும்.

அஉ) அடையாளப்படுத்தல்

செய்தி சேகரிக்கும்போது பத்திரிகையாளர்கள் தங்களை விகடன் ஊழியர்களாகவே அடையாளப்படுத்த வேண்டும். இது பொருந்தாத விதிவிலக்கான பொதுநலன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் இருக்கலாம். அதற்குத் துறைத் தலைவரின் ஒப்புதல் தேவை. மற்றவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களுக்கும் இது பொருந்தும்.

அஊ) தற்கொலை

மற்றவர்களைத் தவறாக ஊக்குவிக்கக்கூடும் என்பதால் தற்கொலை அல்லது தற்கொலை சம்பந்தப்பட்ட பிரச்னைகள்குறித்து செய்தி வெளியிடும் பத்திரிக்கையாளர்கள் கூடுதல் கவனம் கொள்ள வேண்டும். படங்களின் பயன்பாடு, தற்கொலை விளக்கக் காட்சிகளிலும் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எந்தவொரு பொருளும் பொதுவாகக் குறிப்பிடப்பட வேண்டும். குறிப்பிட்டுச் சொல்கையில் கவனம் தேவை. உறவினர்களின் உணர்வுகளையும் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறான செய்திகள் வெளியிடும்போது, ஹெல்ப்லைன் எண் கொடுக்கப்பட வேண்டும்.

அஎ) செய்திகளைப் பின்தொடர்தல்

செய்தி ஆதாரங்களை, தகவலாளர்களை வாசகர்களை நடத்துவதைப் போலவே நியாயமாகவும் வெளிப்படையாகவும் விகடன் குழுமம் நடத்துகிறது. ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை நாம் அர்த்தமின்றி விசாரிப்பதில்லை. ஒத்துழைக்காத தகவலாளர்களை எந்தச் சூழலிலும் பணியாளர்கள் அச்சுறுத்தக் கூடாது. ஒத்துழைப்புக்கு ஈடாக, தகவலாளர்களுக்கு சாதகமான போக்கை உறுதியளிக்கக் கூடாது. அவர்கள்பற்றிய நேர்காணல்கள், செய்திகள் வெளியிடவோ, ஆவணங்களை வெளியிடாமல் மறைக்கவோ எந்தச் சூழலிலும் பணம் பெறக் கூடாது.

ஊழியர்கள் பொதுவாக அவர்கள் தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு (நேருக்கு நேர் அல்லது வேறு எந்தத் தகவல்தொடர்பு சாதனம் மூலமாகவும்) தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டும். இருப்பினும், அவர்கள் பொதுவாக மக்களுக்குக் கிடைக்கக்கூடிய தகவல்களைத் தேடும்போது பத்திரிகையாளர்களாகத் தங்கள் நிலையை எப்போதும் அறிவித்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை. ஊழியர்கள் ஊடகவியலாளர்களாகப் பணிபுரியும்போது காவல்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள், வணிகர்கள் அல்லது வேறு யாராகவும் தங்களை தவறாக அடையாளம் காட்டக் கூடாது (விதிவிலக்கு: அரிதான சந்தர்ப்பங்களில் நடப்பது போல, பத்திரிகையாளர்களைத் தடைசெய்யும் நாடுகளுக்குள் நுழைய முற்படும்போது, ​நிருபர்கள் தெளிவற்ற தன்மையிலிருந்து மறைந்து தங்களை வணிகர் அல்லது சுற்றுலாப் பயணிகளாக அடையாளப்படுத்திக் கொள்ளலாம்).

சினிமா, நாடகம், இசை மற்றும் கலை விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளை மதிப்பாய்வு செய்யும் பிற எழுத்தாளர்கள் தங்கள் விகடன் குழும இணைப்பை மறைப்பதில் தவறில்லை. ஆனால், பொதுவாகத் தவறான அடையாளம் அல்லது இணைப்பை விகடன் பெயரைப் பயன்படுத்தி உறுதிப்படுத்தக் கூடாது. விதிவிலக்காக, உணவக விமர்சகர்கள் தங்கள் அடையாளத்தைப் பாதுகாக்க புனைப்பெயர்களில் முன்பதிவு செய்யலாம். சிறப்பு கவனிப்புக்கான சாத்தியத்தைக் குறைக்க, உணவக விமர்சகர்கள் மற்றும் பயண எழுத்தாளர்கள் தங்கள் விகடன் இணைப்பை மறைக்க வேண்டும்.

அஏ) செய்தி சேகரிப்பில் சட்டத்திற்குக் கீழ்ப்படிதல்

செய்தித் தேடலில் பணியாளர்கள் சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும். தெளிவான அனுமதியின்றி கட்டிடங்கள், வீடுகள், குடியிருப்புகள் அல்லது அலுவலகங்களுக்குள் நுழையக் கூடாது. தரவுத்தளங்கள் மற்றும் மின்னஞ்சல் அல்லது குரல் அஞ்சல் செய்திகள் போன்ற மின்னணு சொத்துகள் உள்ளிட்ட தரவு, ஆவணங்கள் அல்லது பிற சொத்துகளை அனுமதியின்றி சேகரிக்கக் கூடாது. அவர்கள் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்கவோ, கணினிக் கோப்புகளை அனுமதியின்றி பார்க்கவோ, செய்தி மூலங்களில் மின்னணு முறையில் கேட்கவோ கூடாது. சுருக்கமாக, அவர்கள் எந்தவிதமான சட்டவிரோத செயல்களையும் செய்யக் கூடாது.

ஊழியர்கள் தங்கள் பணிகளைச் செய்யும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் காவல்துறை அல்லது பிற பணி நிறுவனங்களால் அவர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் அல்லது சிறப்பு உரிமத் தகடுகளைப் பயன்படுத்தக் கூடாது. ‘PRESS CARD’ அல்லது பிற சிறப்பு அடையாள அட்டைகளுக்கு விண்ணப்பித்த அல்லது வைத்திருக்கும் பணியாளர்கள், அதுகுறித்த தகவலை நிர்வாகம் அல்லது ஆசிரியருக்கு வெளிப்படுத்த வேண்டும். சிறப்பு அடையாள அட்டைகள் தேவையில்லாத பணியாளர்கள் அவற்றைத் திருப்பித் தர வேண்டும்.

அனைத்துத் தரப்பினரின் முன் அனுமதியின்றி பணியாளர்கள் உரையாடல்களைப் பதிவு செய்யக் கூடாது. ஒரு தரப்பினரின் அனுமதியுடன் மட்டுமே பதிவு செய்யச் சட்டம் அனுமதித்தாலும், நடைமுறையில் அது ஒரு ஏமாற்று வேலை. ரகசியமாகச் செய்யப்பட்ட பதிவுகள் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட இடங்களில் இந்தத் தடைக்குத் தலைமை ஆசிரியர்கள் அரிதான விதிவிலக்கு அளிக்கலாம்.

அஐ) தகவல் சரிபார்த்தல்

நம் ஆதாரங்களின் நம்பகத்தன்மைக்கு தகவல் சரிபார்த்தல் அவசியம். டிஜிட்டல் தொடர்புகள் அதிகமாக வளர்ந்துவிட்ட இன்றைய சூழலில், கிடைக்கும் தகவல்களை ஐயப் பார்வையுடனே அணுகி வலை மற்றும் மின்னஞ்சல் செய்திகளைச் சரிபார்க்க வேண்டும். உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரங்களிடமிருந்து செய்திகள் பெற வேண்டும். உங்களால் சரிபார்க்கமுடியாத தகவல்களை வெளியிட்டால், விகடனால் சுயாதீனமாகச் செய்தியின் உண்மைத் தன்மையைச் சரிபார்க்க முடியவில்லை என்று குறிப்பிட வேண்டும். கூடியமட்டும் செய்திதரும் தகவலாளர் குறிப்பிடுவதையே வெளியிட வேண்டும். (எ.கா., "கலவரத்தைக் கண்டதாகச் சொல்லும் ஒரு மாணவி", "கலவரத்தைக் கண்ட மாணவர்" அல்ல).

நேர்காணலை நடத்த எந்த ஊடகம் பயன்படுத்தப்பட்டது என்பதை நாம் வாசகர்களுக்கு வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் துணை ஆசிரியர்களிடம் செய்தியின் உண்மைத்தன்மை அறியும் பொறுப்பு கூடுதலாக உள்ளது.

அஒ) போட்டியைக் கையாள்வது

விகடன் பணியாளர்கள் ஆர்வத்துடன் பிற ஊடகங்களுடன் போட்டியிடலாம். அதே நேரம் போட்டியாளர்களை வெளிப்படையாகவும் நேர்மையாகவும் கையாள வேண்டும். அவர்களின் முயற்சிகளைத் தடுக்க நாங்கள் எந்தத் தடையும் சொல்வதில்லை. மற்ற வெளியீட்டாளர்கள் அறிவிக்கும் செய்திகள், உண்மைகளைப் பயன்படுத்தும்போது, ​​நாங்கள் அவற்றுக்குச் சரியான மேற்கோள் தந்துவிட வேண்டும்.

பிற நிறுவனங்களின் செய்தி சேகரிப்பு குழுக்களில் விகடன் குழும பணியாளர்கள் சேரக் கூடாது. மேலும் செய்தி உதவிக்குறிப்புகளுக்காகப் போட்டியாளர்களிடமிருந்து பணமோ, பரிசோ பெறுவது எந்தச் சூழலிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

அஓ) ஊடக நடுநிலையைப் பாதுகாத்தல்

விகடன் குழுமத்தில் பிரசுரிக்கப்பட்ட எந்தவொரு தனிநபர்களிடமிருந்தோ, நிறுவனங்களிலிருந்தோ பரிசு, டிக்கெட், தள்ளுபடிகள் அல்லது பிற வாய்ப்புகளை ஊழியர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது. அப்படி தரப்படும் பரிசுகளைக் கண்ணியமான விளக்கத்துடன் திருப்பித் தர வேண்டும்.

தனிநபர்கள் அல்லது நிறுவனங்களிடமிருந்து அவர்கள் சம்பந்தப்பட்ட செய்தி/தகவல் வழங்கும், திருத்தும், தொகுத்து அல்லது மேற்பார்வையிடும் சூழல் இருப்பின், அவர்களிடமிருந்து எந்தப் பலனையும் ஊழியர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது.

சாதகமான காட்சிப்படுத்தல் கட்டணமாக அல்லது சாதகமற்ற காட்சிப்படுத்தலை மாற்றவோ, கைவிடவோ தூண்டுதலாகக் கருதக்கூடிய எதையும் பணியாளர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது.

பொது மக்களுக்குச் சாதாரணமாகக் கிடைக்கக்கூடிய எந்தவொரு பரிசையும் தள்ளுபடியையும் பணியாளர்கள் ஏற்றுக்கொள்ளலாம். பொதுவாக அவர்கள் விகடன் குழுமம் அனைத்து ஊழியர்களுடனும் பகிர்ந்து கொள்ள முன்வந்த வழக்கமான கார்ப்பரேட் தள்ளுபடியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். எவ்வாறாயினும், பெரிய தள்ளுபடிகள் - விகடன் குழுமத்தால் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்புக்கொள்ளப்பட்டவைகூட - மற்றவர்களிடம் பாகுபாட்டின் தோற்றத்தை உருவாக்கக்கூடும் என்பதை ஊழியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அத்தகைய தள்ளுபடிகள் ஏதேனும் சந்தேகங்களை எழுப்பினால், ஊழியர்கள் தங்கள் துறைத் தலைவர்கள் மற்றும் ஆசிரியர் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

அௐள) நிதி அல்லது பிற ஆலோசனைகளை வழங்குதல்

விகடன் ஊழியர் ஒருவர் ஊதியம் பெற்றோ பெறாமலோ மக்கள் தொடர்புப் பணிகளைச் செய்வது உள்ளார்ந்த மோதலுக்கு வழிவகுக்கும். செய்தி ஊடகங்களை எவ்வாறு வெற்றிகரமாகக் கையாள்வது என்பதை ஊழியர்கள்/ உறுப்பினர்கள் தனிநபர்களுக்கோ, நிறுவனங்களுக்கோ அறிவுறுத்தக் கூடாது (அவர்கள் நிச்சயமாக விகடனின் இயல்பான செயல்பாடுகளை விளக்கி, வெளியாட்களை பொருத்தமான விகடன் நபரிடம் கொண்டு சேர்க்கலாம்). உதாரணமாக, அவர்கள் வேட்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கவோ, அறிக்கைகளை எழுதவோ, திருத்தவோ அல்லது குழுக்களின் திட்டங்களுக்குப் பங்களிக்கவோ கூடாது.

ஒரு நிறுவனத்தின் பத்திரிகை உறவு அல்லது பொதுநிலைபற்றித் தங்கள் கருத்தைக் கேட்கும் கணக்கெடுப்புகளில் பங்கேற்கக் கூடாது. எவ்வாறாயினும், தங்கள் குழந்தையின் பள்ளி, சிறிய அருங்காட்சியகம், சமூகத் தொண்டு அல்லது அவர்களின் வழிபாட்டு இல்லம் போன்ற நிறுவனங்களுக்கு நியாயமான உதவியை அவர்கள் கட்டாயம் வழங்கலாம்.

பணியாளர்கள்/ ஊழியர்கள் அவர்கள் வழங்கும், திருத்தும், தொகுக்கும் அல்லது மேற்பார்வை செய்யும் செய்தி/கட்டுரை/ஆக்கப் பணியில் புனைப்பெயரில் எழுதுவதோ, இணை ஆசிரியர்களாகப் பணியாற்றவோ கூடாது. ஏதோ ஒரு காரணத்தை ஆதரிக்கும் நிறுவனங்களுக்கு அனுமதியின்றி அவர்கள் அத்தகைய பணிகளை மேற்கொள்ளக் கூடாது.

பணியாளர்கள் நிதி ஆலோசனையில் ஈடுபடக் கூடாது (அவர்கள் எழுதும் கட்டுரைகளைத் தவிர). அவர்கள் மற்றவர்களுக்கான பணத்தை நிர்வகிக்கவோ, முதலீட்டு ஆலோசனையை வழங்கவோ, எந்தவொரு முதலீட்டு நிறுவனத்தையும் இயக்கவோ, இயக்க உதவவோ கூடாது. முதலீட்டு ஆலோசகராக பதிவு செய்தவர் செய்யக்கூடிய எதையும் அவர்கள் செய்யக் கூடாது. அவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்குச் சாதாரண நிதித் திட்டமிடலில் உதவலாம், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் சொத்துகளை நிர்வாகிக்க உதவலாம். அல்லது நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சொத்துகளின் பாதுகாவலர்/நிர்வாகியாகப் பணியாற்றலாம்.

5. தனிப்பட்ட நடத்தை மற்றும் நல முரண்கள்

நேர்மை மற்றும் சுதந்திர செய்தி பரவாக்கலுக்கான தன் நற்பெயரை விகடன் குழுமம் மதிக்கிறது. பத்திரிகையாளர்களுக்கு அவர்களது வாழ்க்கை, ஆர்வங்கள், பொழுதுபோக்குகள், எனப் பணிக்கு வெளியே உள்ள நம்பிக்கைகளில் விகடன் எந்தத் தலையீடும் செய்வதில்லை. பின்வரும் வழிகாட்டுதல்களில் அதைக் கட்டுப்படுத்தும் நோக்கமும் இல்லை.

இவை வாசகரது நியாயமான எண்ணங்களை, மதிப்பைக் கேள்விக்குள்ளாக்காமல், நம் ஒருமைப்பாட்டை சமரசம் செய்யாமல், வெளிப்படைத்தன்மைக்கு குறைவு ஏற்படாமல் இதழியலாளர்களுக்கு இதழ் சாராத வெளி ஆர்வங்கள், பத்திரிகை வாழ்க்கையுடன் முரண்படாமல் இருப்பதை உறுதி செய்யும் நோக்கம் கொண்டவை. இவற்றை ஒரே மாதிரியான விதிமுறைகள் என்பதைவிட ஒவ்வொருவருக்கான வழிகாட்டுதல்கள் எனக்கொள்ளலாம்.

'நிருபர்கள் பார்வையாளர்களாக இருக்க வேண்டுமெனில், மேடையை விட்டு வெளியேற வேண்டும். பத்திரிகையாளர் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்... செய்தியாக முயற்சிக்கக் கூடாது' என்கிற நெறிமுறையை மனத்தில் கொள்ள வேண்டும். எவ்வித ஐயமிருந்தாலும், சம்பந்தப்பட்ட துறைத் தலைவர் அல்லது ஆசிரியரைத் தொடர்பு கொள்ளலாம்.

தகவலாளர்கள், ஆதாரங்களுடன் தனிப்பட்ட உறவுகள்

செய்தி ஆதாரங்கள்/ தகவலாளர்களுடனான உறவுகளுடனான நேர்மைக்கு சிறந்த சீர்தூக்கலும், சுய ஒழுக்கமும் தேவை. ஆதாரங்களைத் தேடிக் கண்டடைந்து இணக்கமான உறவைப் பேணுவது ஒரு இன்றியமையாத திறமையாகும். ஆனால், இதற்கென பணிநேரத்துக்கு அப்பாலும், பணியிடமல்லாத பொது இடங்களிலும் திறம்பட வளர்த்தெடுக்க வேண்டிய திறன். ஆயினும், ஊழியர்கள், குறிப்பாக முக்கிய செய்தி சேகரிப்புப் பணிக்கு நியமிக்கப்பட்டவர்கள், செய்தி ஆதாரங்களுடனான தனிப்பட்ட உறவுகள் காலப்போக்கில் அவர்களுக்குச் சாதகமாக மாறக்கூடும் என்பதை உணர வேண்டும். அதே போல, ஆதாரங்கள்/ தகவலாளர்கள் தங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக ஊழியர்களிடம் தேவைக்கு அதிக இணக்கத்துடன் இருக்கும் சூழலும் உண்டு என்பதை ஊழியர்கள் உணர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

எந்தவொரு சார்புநிலையுமின்றி ஒரு தொழில்முறை பற்றின்மையை நாம் பாதுகாக்க வேண்டியது அவசியம். பணியாளர்கள் உறுப்பினர்கள் உணவு அல்லது பானங்கள் பகிர்ந்து கொள்ளும் பொது இடங்களில் தங்கள் ஆதாரங்களை/ தகவலாளர்களைக் காணலாம். ஆனால், அவர்கள் முறையான வணிகத்திற்கும் தனிப்பட்ட நட்பிற்கும் உள்ள வேறுபாட்டைக் கட்டாயம் மனத்தில் கொள்ள வேண்டும்.

செம்மையாகப் பணியாற்ற வேண்டும் எனில் அவ்வப்போது நாம் பின்வாங்கி, சற்றே அவதானித்து, நாம் கையாளும் ஆதாரங்களுடன்/தகவலாளர்களுடன் மிக நெருக்கமாக இருக்கிறோமா என்பதைக் கவனமாகப் பார்க்க வேண்டும். செய்தி மூலத்துடனான/தகவலாளருடனான அதீத ஈடுபாடு (காதல், திருமணம் போன்றவை) பாகுபாட்டுத் தோற்றத்தை வெளிப்படுத்தும் என்பது தெளிவாகிறது. ஆகவே, அப்படியான மூலம் வழங்கும் தகவல்/செய்தியைக் கையாளும் பணியாளர்கள் அப்படியான நபர்களுடன் உள்ள தங்கள் நெருங்கிய உறவை ஆசிரியர், இணை நிர்வாக ஆசிரியர் அல்லது துணை ஆசிரியர் ஆகியோருக்கு வெளிப்படுத்த வேண்டும். சில சந்தர்ப்பங்களில் இவற்றின் மேலதிக நடவடிக்கை தேவையில்லை.

மற்ற சந்தர்ப்பங்களில், ஊழியர்கள் சில குறிப்பிட்ட செய்தி சேகரிப்பு/பணிகளிலிருந்து தங்களைத் தாங்களே விலக்கிக் கொள்ள வேண்டியிருக்கும். இன்னும் சில சந்தர்ப்பங்களில், பணிகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் அல்லது துண்டிக்கப்பட வேண்டும். ஒரு சில நிகழ்வுகளில், சம்பந்தப்பட்ட ஊழியர் கருத்து நேர்மை மோதல் ஏற்படுவதைத் தடுக்க வேறு துறைக்குச் செல்ல வேண்டியிருக்கலாம்.

விருந்தோம்பலை ஏற்றுக்கொள்வது...

விகடனின் பிரதிநிதிகள் செய்திமூலம்/தகவலாளர்களை (அரசாங்க அதிகாரிகள் உட்பட) தொடர்புகொள்ளும்போது, செய்தி சேகரிக்கும்போது பயணம் உள்ளிட்ட தேவையான செலவினங்களை விகடன் குழுமம் ஏற்றுக்கொள்ளும். சில வணிக சூழ்நிலைகளிலும், சில கலாசாரங்களிலும், செய்திமூலம்/தகவலாளர்கள் தரும் உணவு அல்லது பானத்தை ஏற்றுக்கொள்வது தவிர்க்க முடியாததாக இருக்கலாம். ஆனால், ஓர் ஊழியர் 'செய்தித் தயாரிப்பாளரால்/தருபவரால்' பத்திரிகைகளுக்கு அவ்வப்போது நடத்தப்படும் விருந்துகளில் கலந்து கொள்ளக் கூடாது.

ஊழியர்கள் இலவச அல்லது தள்ளுபடி செய்யப்பட்ட போக்குவரத்து மற்றும் உறைவிட வசதியை அசாதாரண சூழல் தவிர்த்து மற்ற சூழல்களில் ஏற்கக் கூடாது. அவற்றில் அரசு ரீதியான பயணங்களும், மாற்று ஏற்பாடுகள் சாத்தியப்படாத பயணங்களும் இதன் கீழ் அடங்கும். இவ்வாறு தவிர்க்கமுடியாத சிறப்புச் சூழ்நிலைகள் ஏற்படும்போது பணியாளர்கள் தங்கள் மேற்பார்வையாளர்கள் மற்றும்ஆசிரியரை அணுக வேண்டும்.

கலை நிகழ்ச்சிகளை மதிப்பாய்வு செய்யும் ஊழியர்கள், கட்டணம் வசூலிக்கப்படும் தடகள அல்லது பிற நிகழ்வுகள்பற்றிச் செய்தி சேகரிக்கச் செல்லும் பணியாளர்கள் பத்திரிகை பாஸ்கள் அல்லது டிக்கெட்டுகளை ஏற்றுக்கொள்ளலாம். வேறு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் எக்காரணம் கொண்டும் இந்தக் கட்டணமில்லாத வசதிகளை ஏற்றுக்கொள்ளக் கூடாது. தன் பணிக்கு மிக அத்தியாவசியமான சூழல் தவிர பிற சூழல்களில், எந்த ஊழியரும் பாக்ஸ் ஆபிஸ் கட்டணம் செலுத்தும்போதுகூட, தனது விகடன் பணிகுறித்த தகவலை வெளியிடக் கூடாது.

வணிகத் தயாரிப்புகள்

துறைத் தலைவர் அல்லது ஆசிரியரின் வெளிப்படையான அனுமதியின்றி ஊழியர்கள் எந்த வணிகத் தயாரிப்பின் விளம்பரங்களில் தோன்றவோ, பணியாற்றவோ கூடாது.

ரகசியம் பேணுதல்

ஊழியர்களின் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்பான தனிப்பட்ட தகவல்களை ஆசிரியர்கள் ரகசியமாக வைத்திருக்க வேண்டும். அவசியம் ஏற்பட்டாலொழிய அவற்றை வேறு யாருக்கும் வெளிப்படுத்தக் கூடாது.

பொதுவெளியில் தோற்றம்/மேடைப்பேச்சு

பொதுவெளியில் ஊழியர்கள் தோன்றுவதும், அதன் மூலம் குழுமத்தின் நற்பெயரை மேம்படுத்தலாம், குழும நலன்களுக்கு அது உதவும் என்று விகடன் சுதந்திரமாக ஒப்புக்கொள்கிறது. ஆனாலும், இவ்வாறு தோன்றுவதால் உண்மையான அல்லது வெளிப்படையான ஆர்வ மோதலை நியாயமான முறையில் உருவாக்கினாலோ, குழுமத்தின் பக்கச்சார்பற்ற தன்மைமீதான பொது நம்பிக்கையைக் குறைக்கும் விதத்தில் அமைந்தால், எந்தவொரு ஊழியரும் பொதுவெளியில் தோன்றக் கூடாது. ஒளிபரப்பு, வெப்காஸ்ட், பொது மன்றம் அல்லது குழு விவாதத்தில் பங்கேற்கும் எந்தவொரு ஊழியரும் அந்த நிகழ்வைப் பற்றிய செய்தி கட்டுரைகளை விகடனில் எழுதவோ திருத்தவோ கூடாது.

பணியாளர்கள் அவர்கள் வழங்கும், திருத்தும், தொகுக்கும் அல்லது மேற்பார்வையிடும் குழுக்களைக் குறிக்கும்போது, ​​அவர்கள் பக்கச்சார்பின் தோற்றத்திற்கு குறிப்பாக உணர்திறன் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறான அழைப்புகளை ஏற்றுக்கொள்வதற்கு முன், ஊழியர் ஆசிரியர்/ துணை ஆசிரியருடன் கலந்தாலோசிக்க வேண்டும். எடுத்துக்காட்டாகச் சுற்றுச்சூழலைப் பற்றி எழுதும் ஒரு நிருபர், தோட்ட ஆர்வலர் குழுவுடன் சரியான முறையில் பேச முடியும். ஆனால், பொதுக் கருத்துருவாக்கத்தில் செல்வாக்கு செலுத்துவதற்கான முயற்சிகளுக்கென அறியப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுக்களுடன் பேசுவதில் அல்ல.

விகடன் குழுமம் தனக்கு பயனுள்ளதாக இருக்கும் எனத் தீர்மானித்தாலன்றி, அதன் நற்பெயருக்கு சேதம் விளைவிக்காது என்றாலும், எந்த நிறுவனத்திலோ, குழுவிலோ பேசுவதற்கான அழைப்புகளை ஊழியர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது. ஒரு வேளை நிர்வாகத்துக்கு நன்மை பயக்கும் எனக் கருதினால், விகடன் அவ்வாறு பேச அனுமதியளிக்கும். அத்தகைய பொதுக்கூட்டங்களுக்கு அழைக்கப்பட்ட ஊழியர்கள் தங்கள் மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியரை அனுமதிக்கு அணுக வேண்டும்.

முதன்மையாக லாபம் ஈட்டும் நோக்கம் கொண்ட ஒரு நிகழ்விற்கு - வாடிக்கையாளர்களை ஈர்ப்பதே முக்கிய செயல்பாடாக இயங்கும் நிறுவனங்களில் பேசுவதற்கான அழைப்புகளை ஊழியர்கள் ஏற்கக் கூடாது.

புத்தகங்களை எழுதி அவற்றைப் பிரபலமாக்க விரும்பும் பணியாளர்கள் தங்கள் துறைத் தலைவருக்கு அதுபற்றிய தகவல்களை வழங்க வேண்டும்.

விகடனின் முன் ஒப்புதல் இல்லையெனில், ஊழியர்களின் உரைகள் மற்றும் பிற வெளிப்புற முயற்சிகளில், வெளிப்படுத்திய கருத்துகள் தன்னுடையது மட்டுமே என்பதை பார்வையாளர்களுக்கு மனதார நினைவூட்ட வேண்டும். எந்தவொரு ஊழியரும் துறைத் தலைவரின் முன் ஒப்புதல் இல்லாமல் பேசும் நிகழ்ச்சிகளுக்கு ஒப்புக் கொள்ளக் கூடாது.

போட்டிகள்

விகடன் செய்தி சேகரிப்பு மற்றும் பரவலாக்கலில் நேரடியாகப் பங்குள்ள தனிநபர்கள் அல்லது குழுக்களால் ஏற்பாடு செய்யப்படும் போட்டிகளில் பணியாளர்கள் பங்கேற்கக் கூடாது. அவர்கள் இந்தப் போட்டிகளுக்கு நீதிபதிகளாகச் செயல்படவோ, அவர்களின் விருதுகளை ஏற்கவோ கூடாது. இவற்றுக்கு விதிவிலக்குகள் உண்டு. நீண்ட காலமாகச் சுயாதீனமாக ஆராய்ந்து அளிக்கப்படும் பத்திர்கைத்துறை விருதுகள் அவற்றில் சேரும்.

உறுப்பினர்கள் அனைவரும் பத்திரிகையாளர்கள் எனும் பட்சத்திலோ, அதன் உறுப்பினர்கள் தீர்ப்பு வழங்குவதில் நேரடியாகத் தலையிடவில்லை என்றாலோ, குழும உறுப்பினர்கள் நிதியளிக்கும் போட்டிகளில் பணியாளர்கள் போட்டியிடலாம். விகடன் ஊழியர்கள் அத்தகைய போட்டிகளுக்கு நீதிபதிகளாகச் செயல்படவோ, அவர்களின் விருதுகளை ஏற்றுக்கொள்ளவோ செய்யலாம்.

பிற போட்டிகளில் பங்கேற்க விரும்பும் பணியாளர்கள் தங்கள் மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியரை அணுக வேண்டும். இங்கு நிறுவப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யாத குழுக்களிடமிருந்து கிடைக்கும் விருதுகளைப் பணியாளர்கள் பணிவுடன் மறுக்க வேண்டும்.

பொதுவாக ஊழியர்கள் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களின் கௌரவ பட்டங்கள், பதக்கங்கள் மற்றும் பிற விருதுகளை ஆசிரியர் அனுமதியோடு ஏற்றுக் கொள்ளலாம்.

நல முரண்கள்

ஊடகவியலாளர்கள் பணிக்கு வெளியே செயல்படுவதன் மூலம் (பிற நிறுவனங்கள் அல்லது அரசியல் கட்சிகளில் தீவிரமாக ஈடுபடுவது உட்பட) நமது பத்திரிக்கையின் ஒருமைப்பாடு, பணி மற்றும் ஆர்வத்துக்கு இடையேயான மோதல் உருவாகக்கூடும். இவ்வாறு முரண்படக்கூடிய எந்தவொரு தனிப்பட்ட, தத்துவ அல்லது நிதி நலன்களைப் பற்றியும் ஊழியர்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும். இந்த முரண்கள் அவர்களின் தொழில்முறை செயல்திறனுடன் மோதுவதைத் தவிர்க்க வேண்டும்.

தனிப்பட்ட ஆர்வத்தை வெளிப்படுத்துதல்

1. பத்திரிகையாளர் குறிப்பிடத் தக்க தனக்குத் தொடர்புள்ள விஷயம்பற்றி எழுதும்போது, அதன் மேலுள்ள தன் தனிப்பட்ட ஆர்வத்தை அறிவிக்க வேண்டியது அவசியம். இது பிற ஊழியர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஃப்ரீலான்ஸர்கள் ஆகிய அனைவருக்கும் பொருந்தும். அவ்வாறு பணியாற்றும்போது அதுகுறித்த தகவலைத் துறைத் தலைவர் அல்லது ஆசிரியருக்குச் செய்ய வேண்டும். இதில் முழு வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். இந்தப் பிரகடனம் அச்சு மற்றும் இணையதளத்தில் தோன்ற வேண்டும்.

2. ஒரு நிறுவனத்துக்கான அறிக்கையைத் தயாரிப்பதில் ஊழியர் ஆலோசனை வழங்கினால், அதுகுறித்து விகடன் குழுமத்தில் எப்போது தகவல்/செய்தி வெளியிட்டாலும், பத்திரிகையாளர் அதைக் குறிப்பிட வேண்டும்.

3. எழுத்தாளர் பங்களிப்பதன் காரணம் தெளிவாகத் தெரியும் சூழல்களில், அந்த இணைப்பு வெளிப்படையானது என்பதால், எழுத்தாளரின் பங்களிப்பின் முடிவில் அவர் அந்த இணைப்புகுறித்து குறிப்பிட வேண்டும்.

4. பொதுவாக ஒரு பத்திரிகையாளர் தன் உறவினர் அல்லது நண்பரைப் பற்றி எழுதவோ, மேற்கோள் காட்டவோ கூடாது. அந்த உறவினர் அல்லது பங்குதாரர் கேள்விக்குரிய துறையில் நிபுணர், அல்லது வேறெந்த காரணத்திற்காகவோ விதிவிலக்கு வழங்கப்பட்டால், இந்த விதி குறித்த இணைப்பு தெளிவாக இருக்க வேண்டும்.


5. கமிஷனிங் எடிட்டர்கள் ஃப்ரீலான்ஸர்கள் இந்த விதிகளை அறிந்திருப்பதை உறுதிசெய்ய ஏதேனும் அறிவிப்பைச் செய்ய வேண்டும்.

விகடன் குழுமத்தின் அனைத்துப் பிரிவுகள்பற்றிய தகவல்களை ஊழியர்கள் அறிந்திருக்க வேண்டும். அதுகுறித்து தகவல் வெளியிடும்போது நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இலவசங்கள்

1. ஊழியர்கள் தங்களுக்கோ, மற்றவர்களுக்கோ தனிப்பட்ட நன்மைகளைப் பெற தங்கள் பதவியைப் பயன்படுத்தக் கூடாது.

2. விகடன் எந்தவிதமான பரிசு அல்லது பிற நன்மைகளைப் பெறுவதன் மூலம் அதன் செய்திகளின்/படைப்புகளின் துல்லியமின்மை, நேர்மையின்மை அல்லது குறைமதிப்பிற்கு அனுமதிக்காது. பரிசுகளை வழங்குவதன் மூலம் சாதகமான செய்திகள்/படைப்புகள் தூண்டுவதற்கான முயற்சிகள் ஆசிரியருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். அன்பளிப்புகள், பரிசுகள் அல்லது பிற நன்மைகள் வழங்கப்படுவது குறித்து நிர்வாகத்துக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும்.

3. விமான நிறுவனம், ஹோட்டல் அல்லது பிற போக்குவரத்து செலவை மற்ற நிறுவனங்கள் ஏற்றால், அதுபற்றி ஊழியர்கள் நிர்வாகத்துக்குத் தெளிவுபடுத்த வேண்டும். இத்தகைய எந்தவொரு சலுகையையும் ஊழியர் ஏற்றுக்கொண்டாலும், சம்பந்தப்பட்ட நிறுவனம்பற்றிய செய்தியை வெளியிடவோ, ஒதுக்கவோ விகடனுக்கு முழு உரிமை உண்டு.

4. பயண எழுத்தாளர்கள் எழுதும் விகடன் முன் அனுமதி தந்த சில பகுதிகளைத் தவிர, வேறு எந்தப் பயணம், தங்கும் ஏற்பாடுகளுக்கும் விகடன் பொறுப்பேற்காது. அவ்வாறு பயணிக்கும் சூழலில், ஊழியரின் குடும்பம் அல்லது நண்பர்கள் எந்த இலவச ஏற்பாட்டிலும் சேர்க்கப்படக் கூடாது. இந்தப் பயணங்களில் ஊழியருடன் ஒருவேளை குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர் (முன் அனுமதியுடன்) பயணித்தால், அவர்களுக்கான கூடுதல் செலவுகளை ஊழியர் செலுத்த வேண்டும்.

5. இதழுக்கான பணியில் விளம்பரதாரர்களின் நலன்கள் உள்ளிட்ட வணிகக் கருத்தினால் ஊழியர்கள் பாதிக்கப்படக் கூடாது

வாசகர்களுடனான தொடர்பு

நம் வாசகர்களுடனும் தள பயனர்களுடனுமுள்ள நம் உறவு மிக முக்கியமானது. நேரில், தொலைபேசி, கடிதம், மின்னஞ்சல் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் நடைபெறும் பரிமாற்றங்கள் தகுந்த மரியாதையுடன் இருத்தல் வேண்டும்.

பத்திரிகையாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் மற்றும் அனைத்து விகடன் ஊழியர்களும் அவ்வப்போது விகடன் தரும் சமூக ஊடக வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும்.

வெளிப் பணிகள்

பத்திரிகைப் பணிக்கு வெளியே, ஊழியரின் தனிப்பட்ட ஈடுபாடு, கடமை, தனிப்பட்ட வாழ்க்கை, குடிமை சமூகத்தில் பங்கேற்கும் உரிமையை விகடன் புரிந்து மதிக்கிறது. ஆனால், இதற்கு சில விதிவிலக்குகள் உண்டு.

* நீதிமன்றத்தில் ஆதாரங்கள் அளிக்கும்போது

* தொழில்முறை மாநாட்டு அமைப்பாளர்கள் அல்லது வணிகர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பொது

* மன்றங்கள் அல்லது கருத்தரங்குகளில் பங்கேற்கும்போது

* அவர்களின் தொழில்முறை கடமைகளுடன் முரண்படக்கூடிய எந்தவொரு வெளிப்புற வேலைகளையும் மேற்கொள்ளும்போது

* பொது அல்லது அரசியல் மன்றங்களில், மேடைகளில் தோன்றும்போது

* விகடனால் வெளியிடப்பட்ட செய்தி/படைப்பு தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அமைப்பிற்கும் பிரதிநிதித்துவங்கள் அல்லது சான்றுகளை வழங்கும்போது

- மேற்கண்ட சூழல்களில் ஊழியர்கள் தாங்கள் உத்தேசித்துள்ளவற்றை ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும்.

உறவுகள்

பணியாளரின் ரத்தம் அல்லது திருமணம் சம்பந்தப்பட்ட உறவுகள், காதல் உறவுகள்பற்றி அவர் எழுதவோ, புகைப்படம் எடுக்கவோ அல்லது தகவல் வெளியிடவோ கூடாது. இத்தகைய சூழல் ஒருவேளை பணி நிமித்தம் ஈற்பட்டால், ஊழியர் இதில் உள்ள நல முரணைத் தன் துறைத்தலைவருக்கு தெரிவித்து தக்க ஆலோசனை பெற வேண்டும்.

6. பிற்சேர்க்கைகள்

6.1: பிரஸ் கவுன்சில் தரும் நடத்தை விதிகள்