சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

தேர்வு எழுத வராத 1 லட்சம் மாணவர்கள்... என்ன காரணம்?

தேர்வு எழுத வராத 1 லட்சம் மாணவர்கள்... என்ன காரணம்?
பிரீமியம் ஸ்டோரி
News
தேர்வு எழுத வராத 1 லட்சம் மாணவர்கள்... என்ன காரணம்?

பள்ளிக்கு வராமல் இடைநின்ற மாணவர்களின் பெயர்கள் EMIS இணையதளத்திலிருந்து நீக்கப்படவில்லை. அனைத்து மாணவர்களுக்கும் ஹால்டிக்கெட் வந்துவிட்டது

கொரோனா, எதிர்காலத்தின் மீது ஏற்படுத்திய பாதிப்புகள் மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. இவ்வாண்டு பத்தாம் வகுப்புத் தேர்வெழுத விண்ணப்பித்தவர்களில் 42,024 பேரும், பிளஸ் ஒன் தேர்வெழுத விண்ணப்பித்தவர்களில் 43,533 பேரும், பிளஸ் டூ தேர்வெழுத விண்ணப்பித்தவர்களில் 32,674 பேரும் தேர்வெழுத வரவில்லை. இந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் என்ன ஆனார்கள் என்ற கேள்வி மிகுந்த பதற்றத்தை உருவாக்குகிறது.

கொரோனா நிகழ்த்திய கோரத்தாண்டவத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது மாணவர்கள்தான். குறிப்பாக அரசுப்பள்ளி மாணவர்கள் இரண்டாண்டுகள் பள்ளிக்கூடத்தோடு எந்தத் தொடர்புமே இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். சூழல் ஓரளவுக்குச் சரியாகி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டபோது சுமார் 4 லட்சம் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை. இவர்களை மீண்டும் வகுப்பறைக்குக்கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. அவை ஓரளவு பயனளித்தன. ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மீண்டும் பள்ளிக்குக் கொண்டு வரப்பட்டார்கள். ஆனாலும் தற்போது ஒன்றேகால் லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.

தேர்வு எழுத வராத 1 லட்சம் மாணவர்கள்... என்ன காரணம்?

பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் அனைத்தும் Educational Management Information System எனப்படும் EMIS இணையதளம் மூலம் ஒருங்கிணைக்கப்படுகின்றன. மாணவர்கள், ஆசிரியர்களின் வருகை, மாணவர்களின் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் இந்த இணையதளத்தில் அன்றாடம் பதிவு செய்யப்படும். அனைத்து மாணவர்களுக்கும் தனித்தனி எண் தரப்படும். இந்த இணையதளம் வழியாகவே மாற்றுச்சான்றிதழ்களும் வழங்கப்படும். ஒரு மாணவனைச் சேர்ப்பது என்றாலும் பள்ளியை விட்டு நீக்குவது என்றாலும் இந்த இணையதளம் வழியாகவே செய்யமுடியும்.

இடைநின்ற மாணவர்கள் எப்போது பள்ளிக்கு வந்தாலும் அவர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், தேர்வு நேரத்தில் வந்தால்கூட அவர்களைத் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்கள். அதனால், பள்ளிக்கு வராமல் இடைநின்ற மாணவர்களின் பெயர்கள் EMIS இணையதளத்திலிருந்து நீக்கப்படவில்லை. அனைத்து மாணவர்களுக்கும் ஹால்டிக்கெட் வந்துவிட்டது. தேர்வுக்கு வராத மாணவர்களின் எண்ணிக்கை அதன்மூலமாகவே இப்போது துல்லியமாக வெளிவந்திருக்கிறது.

தற்போது தேர்வுக்கு வராத மாணவர்கள் என்ன ஆனார்கள்? பெரும்பாலான மாணவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக ஆகிவிட்டார்கள். குடும்பப் பொறுப்புகளைச் சுமக்கத் தொடங்கிவிட்டார்கள். பல மாணவிகளுக்குத் திருமணம் முடிந்திருக்கிறது.

கடந்த இரண்டாண்டுகளில் வறுமை, வேலையிழப்பு, நோய்த்தொற்று பாதிப்பு, கொத்துக் கொத்தாக சாவுகள் என மாணவர்கள் பார்க்கக்கூடாதவற்றையெல்லாம் பார்த்திருக்கிறார்கள். இவ்வளவு இறுக்கத்தோடு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கி வகுப்பறையில் தக்கவைக்க அரசு எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை என்பது முக்கியமான குற்றச்சாட்டு. மாணவர்கள் அந்த இறுக்கத்திலிருந்து விடுபடுவதற்கான எந்த அவகாசத்தையும் தராமல் பாடப்புத்தகத்தைக் கையில் கொடுத்து வரிசையாகத் தேர்வை அறிவித்துவிட்டார்கள்.

எத்திராஜுலு
எத்திராஜுலு

குறைந்தபட்ச அவகாசத்திற்குள் பாடம் நடத்த வேண்டியிருந்ததால் ஆசிரியர்கள் வேகவேகமாக நடத்தி முடித்துவிட்டார்கள். கடந்த இரண்டாண்டுகள் தேர்வே எழுதாமல் தேர்ச்சி பெற்று வகுப்பறையே பார்க்காமல் மீண்டும் பள்ளிக்கு வந்த மாணவர்களை இவையெல்லாம் திணறடித்தது உண்மை. அதுவே பள்ளிமீது மிரட்சியை உருவாக்கிவிட்டது. தொழிலாளர்களாக இருந்து, கல்வித்துறையின் நடவடிக்கையால் பள்ளிக்குத் திரும்பிய மாணவர்கள் மீண்டும் வேலைக்கே சென்றுவிட்டார்கள் என்கிறார்கள் களத்திலிருக்கும் செயற்பாட்டாளர்கள்.

“நிறைய மாணவர்கள் இடப்பெயர்வு காரணமாக ஒரு பள்ளியிலிருந்து விலகி இன்னொரு பள்ளியில் இணைந்தார்கள். அந்தப் பள்ளியிலும் அவர்கள் கல்வியைத் தொடரவில்லை. பெற்றோரை வலியுறுத்தி அவர்களைப் பள்ளிக்கு அழைந்துவந்தாலும் ஓரிரு நாள்களில் மீண்டும் இடைநின்றுவிடுகிறார்கள். ஒருகட்டத்தில் பெற்றோரும் ‘அவன் வரமாட்டேங்கிறான் சார்’ என்று சொல்லிக் கைவிட்டுவிடுகிறார்கள். ஒரு ஆசிரியராக நான் களத்தில் கண்டவை இவை...” என்கிறார், தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தலைவர் பெருமாள்சாமி.

“ஆன்லைன் வகுப்புகள் வந்தபிறகு மாணவர்களின் கைகளுக்கு மொபைல் வந்துவிட்டது. இதுவரை பார்த்தறியாத ஒரு உலகத்தை அது அறிமுகப்படுத்துகிறது. பேரிடரால் பெற்றோருக்கும் பல நெருக்கடி. பிள்ளைகள்மீதான கண்காணிப்பு குறைந்துவிட்டது. இது அரசுப்பள்ளி பிள்ளைகளின் நிலை மட்டுமல்ல... தற்போது இடைநின்றிருக்கும் மாணவர்களில் தனியார் பள்ளி மாணவர்களும் அடக்கம்தான். கல்வியைப் பொறுத்தவரை ஒரு முக்கோண நிர்வாகம் இருக்கவேண்டும். ஆசிரியர், பெற்றோர், மாணவர்கள்... மூன்று தரப்பும் தொடர்ந்து தொடர்பில் இருக்கவேண்டும். உரையாட வேண்டும். கொரோனாவுக்குப் பிறகு இந்த உறவு குலைந்துவிட்டது.

விழியன்
விழியன்

1.16 லட்சம் மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை என்பது மிகவும் கவலையளிக்கும் விஷயம். 10, பிளஸ் ஒன் மாணவர்களைக் கண்டறிந்து மீண்டும் பள்ளிக்குக் கொண்டுவரலாம், 32,000 பிளஸ் டூ மாணவர்கள் பள்ளியை விட்டே போய்விட்டார்கள். பள்ளியோடு இனி அவர்களுக்குத் தொடர்பே இருக்கப்போவதில்லை. பிரைவேட்டாகத்தான் தேர்வை எழுதமுடியும். எத்தனை பேர் எழுதுவார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் என்ன ஆவார்கள் என்பதும் கேள்விக்குறி...” என்கிறார் பெருமாள்சாமி.

இந்தக் கல்வியாண்டில் 180 நாள்கள் பள்ளி நடந்துள்ளது. 9-ம் வகுப்புக்குப் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தேர்வே எழுதாமல் தேர்ச்சி பெற்று வந்தவர்கள், குறிப்பாக இந்த ஆண்டு +2 எழுதிய மாணவர்கள் இதற்கு முன்பு பொதுத்தேர்வைச் சந்திக்காதவர்கள். இந்த ஆண்டும் எப்படியும் நம்மைத் தேர்ச்சியடைய வைத்துவிடுவார்கள் என்ற மனநிலையுடனே பல மாணவர்கள் பள்ளிக்கு வந்தார்கள். ஆனால் வழக்கமான முறையில் தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த அச்சமும்கூட மாணவர்களை பாதித்திருக்கலாம் என்கிறார்கள் ஆசிரியர்கள்.

“தற்போது தேர்வுக்கு வராத மாணவர்களில் பாதிப்பேர் வேலைக்குச் சென்றுவிட்டார்கள். சம்பாதிக்கத் தொடங்கிவிட்டதால் படிப்பைப்பற்றி மாணவர்கள் யோசிக்கவில்லை. பெற்றோரும் ‘இனி பையனுக்குப் படிப்பு வராது’ என்ற மனநிலைக்குச் சென்றுவிட்டார்கள். வளர் இளம் பருவத்தில் பொதுவெளிக்கு வரும் இவர்களின் எதிர்காலத்தை அரசு பாதுகாக்க வேண்டும். சென்னை மாதிரி நகரங்களிலேயே மாணவிகளுக்குத் திருமணம் நடந்துள்ளது. முழுமையாக அரசு இதுபற்றி ஆய்வு செய்து இந்த மாணவர்களின் எதிர்காலத்தைக் காக்கவேண்டும்...” என்கிறார், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழக முன்னாள் தலைவர் எத்திராஜுலு.

பெருமாள்சாமி
பெருமாள்சாமி

குழந்தைகளின் உரிமைக்காகவும் பாதுகாப்புக்காகவும் செயல்படும் அரசு அமைப்புகள் தமிழகத்தில் ஏராளம் உண்டு. 12 பேர் கொண்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 5 அலுவலர்கள் கொண்ட குழந்தை நலக்குழு, 3 பேர் கொண்ட இளம் சிறார் நீதிக்குழுமம், 12 பேர் கொண்ட சைல்டு ஹெல்ப் லைன், 15 பேர் கொண்ட மாவட்ட குழந்தைத் திருமணத் தடுப்பு அமைப்பு, எஸ்.ஐ தலைமையில் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் குழந்தை நலக் காவல் அலுவலர்கள் எனப் பல்வேறு பிரிவுகள் இயங்குகின்றன. சமூக நலத்துறை, சமூகப்பாதுகாப்புத்துறை எனப் பல துறைகள் குழந்தைகளுக்காகப் பல்வேறு திட்டங்களோடு செயல்படுகின்றன. ஒன்றேகால் லட்சம் குழந்தைகள் இவர்களின் கவனத்திலேயே இல்லை என்பது சோகம்.

“எண்ணிக்கையாகப் பார்க்கும்போது இது மிகப்பெரும் பதற்றத்தைத்தான் உருவாக்குகிறது. பள்ளிக்கூடம் தாண்டி அரசு செயல்பட வேண்டிய தருணம் இது. தேர்வுக்கு வராத மாணவர்களைக் கண்டுபிடித்து மாலை நேரப்பள்ளிகள் மூலம் அவர்களைத் தயார்படுத்த வேண்டும். தேர்வுகளில் தேர்ச்சிபெற்றபிறகு வழக்கமான கல்விமுறைக்குள் அவர்களைக் கொண்டுவரவேண்டும். பிளஸ் டூ மாணவர்களைத் தொடர்ந்து கண்காணித்து ஜூன் மாதம் நடக்கவுள்ள தேர்வில் அவர்களைப் பங்கேற்கச் செய்யவேண்டும். வராத பிள்ளைகள் யார் என்ற பட்டியல் தயார் செய்து அரசு முழுமூச்சாகக் களத்தில் இறங்கவேண்டும்” என்கிறார், எழுத்தாளரும் குழந்தை செயற்பாட்டாளருமான விழியன்.

கல்வியை விட்டு விலகிய இந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் அடுத்த ஐந்தாண்டுகளில் என்னவாகப்போகிறார்கள் என்பதுதான் ஆய்வு செய்ய வேண்டிய கேள்வி. சமூக, பொருளாதாரக் கண்ணோட்டத்தோடு மாணவர்களுக்கான திட்டங்களைத் தீட்டி அரசு நம்பிக்கையளிக்க வேண்டும்!