
எஃப்.ஏ புராஜெக்ட் போட்டி முடிவு! - தொடர்ச்சி
சென்ற இதழில் வெளியான புராஜெக்ட் போட்டியின் முடிவுகள் இந்த இதழிலும் தொடர்கின்றன...
அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, கண்ணமங்கலம்.
சிறுநீரக செயல்பாடு

அட்டையில் பஞ்சு மற்றும் வண்ணங்களைப் பயன்படுத்தி, சிறுநீரக மாதிரி செய்தேன். பிறகு, சிறுநீரகம் செயல்படும் விதத்தை விளக்கினேன். ஆசிரியர் எழுப்பிய கேள்விகளுக்கு சரியான பதில் அளித்து, நல்ல மதிப்பீட்டைப் பெற்றேன்.
- சுலோச்சனா, 9-ம் வகுப்பு.

நுரையீரல் பாகங்கள்

சார்ட்டில் பஞ்சு மற்றும் நூலைப் பயன்படுத்தி, நுரையீரல் மாதிரியை உருவாக்கினேன். அதன் பாகங்களை ஆங்கிலத்தில் குறித்தேன். நமது உடலில் நுரையீரல் எந்தப் பகுதியில் உள்ளது, அதன் செயல்பாடு என்ன என்பதை விளக்கி, மதிப்பீடு பெற்றேன்.
- கீர்த்தனா, 9-ம் வகுப்பு.
ஓவியத்தில் செய்யுள்

தமிழ் செய்யுட் பகுதியில் வரும் விவேகசிந்தாமணியை ஓவியமாக வரைந்து வண்ணமிட்டேன். ஆசிரியரிடம் காண்பித்து, பாராட்டும் மதிப்பீடும் பெற்றேன்.
- ரேணுகா, 8-ம் வகுப்பு.
பளு தூக்கி

பயன்படாத சி.டி பாக்ஸ், டியூப், சிரிஞ்சு ஆகியவற்றைப் பயன்படுத்தி, ‘பாஸ்கல் விதி’ முறைப்படி எளிய பளு தூக்கியைச் செய்தேன். பாராட்டையும் மதிப்பீட்டையும் பெற்றேன்.
- சுலோச்சனா, 9-ம் வகுப்பு.
காற்று மாசுபாடு

அட்டைகளால் தொழிற்சாலை மாதிரியைச் செய்துகொண்டேன். அதிலிருந்து மாசடைந்த காற்று வெளியாவதைக் குறிக்க, பஞ்சு ஒட்டி, கறுப்பு வண்ணம் பூசினேன். ஆசிரியர் மதிப்பீடு அளித்தார்.
- உமாதேவி, 8-ம் வகுப்பு.
மின்சார சிக்கனம்

தெருவிளக்குகள் இரவு முழுக்க தேவையில்லாமல் ஒளிர வேண்டிய அவசியமில்லை. மனித நடமாட்டம் இருக்கும்போது மட்டும் சென்சார் மூலம் ஒளிர்ந்தால் மின்சாரத்தை சிக்கனப்படுத்தலாம். இதை விளக்கும் விதத்தில் வகையில் சாலை மற்றும் மனிதர்கள், தெருவிளக்கு ஆகியவற்றின் மாதிரியை செய்தேன். மதிப்பீடும் பாராட்டும் கிடைத்தன.
- நதியா, 9-ம் வகுப்பு.
அரசினர் உயர்நிலைப் பள்ளி, மன்னம்பாடி.
கோணங்கள் தந்த மதிப்பீடு

பாகைமானியை வைத்து, கோணங்கள் பற்றி மற்ற மாணவர்களுக்கு கூறினேன். முக்கோண வகைகளில் அளவிடப்படும் கோணங்களின் அளவுகளைக் கூறி, கரும்பலகையில் வரைந்து காட்டினேன். ஆசிரியர் பாராட்டி, மதிப்பீடு அளித்தார்.
- ம.தமிழ்மொழி, 7-ம் வகுப்பு.
பறவைக் கூண்டு

இணைச் செயல்பாடாக, பறவைக் கூண்டு ஒன்றை எளிமையாக செய்யத் திட்டமிட்டேன். வீட்டில் இருந்த உடைந்த பிளாஸ்டிக் கூடை, காலண்டர் அட்டை, சிறு குச்சிகள், சணல் ஆகியவற்றால் பறவையின் கூண்டு செய்தேன். அட்டையில் கிளியின் படம் வரைந்து, வெட்டியெடுத்தேன். வண்ணம் தீட்டி, கூண்டுக்குள் வைத்தேன். ஆசிரியரிடம் காண்பித்து பாராட்டும் மதிப்பீடும் பெற்றேன்.

- ச.சுபலெட்சுமி, 8-ம் வகுப்பு.
வளையத்தில் வென்படம்

கரும்பலகையில் வென்படம் வரைவதைப் போல, இரண்டு வண்ணங்களில் வளையங்களைத் தயார்செய்தேன். அதை இணைத்து, வென்படம் உருவாக்கினேன். மதிப்பீடு பெற்றேன்.
- பா.பவானி, 8-ம் வகுப்பு.
நூல் மனிதன்

சார்ட் அட்டையில் மனித உருவத்தின் அவுட்லைனை சிவப்பு நிறத்தில் வரைந்துகொண்டேன். பிறகு, உடல் அமைப்பு மற்றும் அதன் இயக்கத்தை பச்சை நிற நூலால் ஒட்டினேன். ஆசிரியரிடம் காண்பித்து, மதிப்பீடும் பாராட்டும் பெற்றேன்.
- அ.அஸ்வினி, 8-ம் வகுப்பு.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பள்ளப்பட்டி, தருமபுரி.
கம்ப்யூட்டர்

எங்கள் பள்ளி கம்ப்யூட்டரைப் போல நாங்களும் ஒன்று உருவாக்க திட்டமிட்டோம். தெர்மாகோல் மற்றும் அட்டையால் அழகான கம்ப்யூட்டரைத் தயாரித்தோம். பேட்டரி மூலம் லைட் எரிய வைத்தோம். எங்களின் ஆர்வத்தையும் முயற்சியையும் பாராட்டிய ஆசிரியர், முழு மதிப்பீடு அளித்தார்.

- பா.சுந்தரமூர்த்தி, ச.அஸ்வின், 8-ம் வகுப்பு.
நீர்ப்பாசனம்

ஸ்ட்ரா மற்றும் தென்னங்குச்சி ஆகியவற்றைப் பயன்படுத்தி தெளிப்பு நீர்ப்பாசன கருவிகள் செய்தோம். அவற்றை கைகளால் சுழற்றி நீரைத் தெளிக்கவைத்து, மதிப்பீடு பெற்றோம்.

- ஜெ.பெரியசாமி, க.தினேஷ்குமார், மு.சீனிவாசன், ம.விஜயகுமார், மா.தமிழ்செல்வன், ச.ஆனந்த், கு.பீரி, ச.திவ்யா, க.சுஜீதா, செ.செளதா, பீ.பீரி, மு.ஸ்ரீநிவேதா, சே.கார்த்திகாதேவி, ர.நவசகி, சே.அர்ச்சனா 8-ம் வகுப்பு.
டாக்டர் டி.திருஞானம் தொடக்கப் பள்ளி, மதுரை.
சி.டி-யில் உருவங்கள்


எங்கள் ஆசிரியர் பழைய சி.டி மூலம் விருப்பமான உருவங்களை உருவாக்க சொன்னார். வண்ணத் தாள், பசை, ஸ்கெட்ச் பேனா ஆகியவற்றை எடுத்துக்கொண்டோம். யானை, கரடி, பூனை, பன்றி போன்ற உருவங்களை செய்து காண்பித்து, மதிப்பீடு பெற்றோம்.
- பிரபாவதி, மு.தர்ஷினி, பொ.அருணாதேவி, க.நித்யா, 5-ம் வகுப்பு.
குவி ஆடி, குழி ஆடி!

`விண்ணைத்தாண்டி' பாடத்துக்கு எளிய தொலைநோக்கியைச் செய்தோம். பிவிசி பைப், அட்டை, பசை, சார்ட் உதவியுடன் உருவாக்கி, ஆசிரியரிடம் காண்பித்தோம். இருபக்க குவியாடி, ஒரு பக்க குழியாடி இணைக்கச் சொன்னார். அவற்றையும் இணைத்து, மதிப்பெண்ணுடன் பாராட்டைப் பெற்றோம்.
- ப.பிரபாவதி, பா.சுந்தர ரம்யா, த.விஜயகுமாரி, 5-ம் வகுப்பு.
அழைப்பிதழ்!

`சித்திரைப் பொருட்காட்சி' பாடத்துக்கு கல்வி இணைசெயல்பாட்டில் அழைப்பிதழ் உருவாக்கினோம். ஆசிரியர் பாராட்டி, மதிப்பீடு அளித்தார்.
- வி.யுவராணி, பிரபாவதி, 5-ம் வகுப்பு.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி, புதுக்கோட்டை-2.
மழை நீர்

வீடுகளில் மழை நீர் சேமிப்பது பற்றிய ஓவியம் வரைந்தேன். இந்திய வரைபடத்தில் மழை பொழிவின் அளவுகளை வண்ணங்களால் வேறு படுத்திக் காட்டி மதிப்பீடு பெற்றேன்.
- சு.சபரிநாதன்,
தொகுப்பு: வி.எஸ்.சரவணன்
அடுத்த இதழில்... தமிழ்ப் பாடத்துக்கு அதிக பக்கங்கள்!