FA பக்கங்கள்
புதிர் பக்கங்கள்
Published:Updated:

புத்தக உலகம் - ரேஸ் ராஜா!

புத்தக உலகம் - ரேஸ் ராஜா!
பிரீமியம் ஸ்டோரி
News
புத்தக உலகம் - ரேஸ் ராஜா!

கிங் விஸ்வா

புத்தக உலகம் - ரேஸ் ராஜா!

ழைய காலத்து மாடலில், பெரிய இன்ஜினுடன் வேகமாக ஓடும் காரை, ‘ஹாட் ராட்’ என்று அமெரிக்காவில் அழைப்பார்கள். தெற்கு ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் காணப்படும் ஒரு வகையான சுண்டெலிக்கு ‘ஹாம்ஸ்டர்’ என்று பெயர். இந்த இரண்டும் சேர்ந்ததுதான், ஹாட் ராட் ஹாம்ஸ்டர் (Hot Rod Hamster).

புத்தக உலகம் - ரேஸ் ராஜா!


நாய்களுக்காக, நாய்களால் நடத்தப்படும் ஒரு கார் ரேஸில் கலந்துகொள்ள விரும்புகிறார் நம்ம ஹீரோவான எலியார். அவரிடமோ கார் இல்லை. பழைய கார்களின் டீலரான புல் டாக் உதவியைக் கேட்கிறார்.

புல் டாக் உதவியாளர்களான மூன்று மூஞ்சுறுகள், நம்ம ஹீரோவுக்கு ஒரு காரைத் தயார்செய்கிறார்கள். அவர்கள் அடிக்கும் லூட்டி, ரேஸில் ஜெயிக்க ஹாம்ஸ்டர் செய்யும் பயிற்சிகள் என அழகான விறுவிறுப்புடன் ரேஸ் வேகத்தில் செல்கிறது கதை.

வலிமையானவர்களுடன் உடல் வலிமையற்றவர்கள் மோதும்போது, அந்த சிறியவர்தான் ஜெயிப்பார் என்று தெரியும். நம்ம எலியார், கார் ரேஸில் பெரிய நாய்களுடன் போட்டி போடும்போதும் முடிவு தெரிகிறது. ஆனால், அது எப்படி நடக்கிறது என்பதை சொல்வதில்தான் கதாசிரியரின் வெற்றி இருக்கிறது.

இந்தக் கதையின் ஆசிரியர் சிந்தியா லார்டு. எலிகள், முயல்கள், பறவைகள் என ஏகப்பட்ட வளர்ப்புப் பிராணிகளை வளர்ப்பவர். அதில், ராக்கி என்று ஒரு ஹாம்ஸ்டர் வகை எலி மிகவும் சூட்டிகை. வீட்டின் பல இடங்களில் ராக்கி ஒளிந்துகொள்ளும். அப்போதெல்லாம் சிந்தியா, ஒரு தட்டில் உணவை வைப்பார். வாசனையைப் பிடித்து ராக்கி வெளியே வந்துவிடும். அப்படி பல விஷமங்களைச் செய்த ராக்கியின் மேல் ஏற்பட்ட ஈர்ப்பே, இந்தக் கதை உருவாகக் காரணம்.

புத்தக உலகம் - ரேஸ் ராஜா!

இந்தக் கதைக்கு ஓவியம் வரைந்தவர்  ஆண்டர்ஸன். அவரது வளர்ப்பு நாயின் பெயர், ஃப்ரைடே (Friday). அதனாலேயே, கார் டீலராக ஒரு நாய் உருவானது. இந்தக் கதைக்கு ஓவியம் வரைய ஆரம்பித்த அன்று அவரது நாய்க்கு 13-வது பிறந்த நாள். அதனால், எலியாரின் கார் நம்பர் 13. இப்படி கதையின் பின்னால் இருக்கும் விஷயங்களும் வெகு சுவாரஸ்யமானது.

குழந்தைகள், காமிக்ஸ்களை எளிதில் படித்துவிடுவார்கள். கவிதை, கதைகளைப் படிக்கவைப்பது சற்று சிரமம். இவை வாசிப்பு அளவில் இரண்டாம் கட்டத்தில் இருப்பதைப் பார்த்த சிந்தியா, முதன்முதலில் எழுத்துக் கூட்டி படிக்கும் சிறுவர்களுக்காக காமிக்ஸ், சிறுவர் இலக்கியம், கவிதை / பாடல்கள் என்று மூன்று வடிவங்களையும் கச்சிதமாக இதில் சேர்த்திருக்கிறார்.

ஒருமுறை படித்தால், மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும். அதனாலே, பள்ளி மாணவர்களிடையேயும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமாக உள்ளது, ஹாட் ராட் ஹாம்ஸ்டர்.

புத்தக உலகம் - ரேஸ் ராஜா!

கதாசிரியர்: சிந்தியா லார்டு (Cynthiya Lord), அமெரிக்கா

4 வயதில் சொந்தமாக பாட்டெழுதி, பாட ஆரம்பித்த சிந்தியா, சிறு வயதில் கூச்ச சுபாவம் மிக்கவர். ஏகப்பட்ட புத்தகங்களைப் படித்து வளர்ந்தவர். கல்லூரியில் பல சிறுகதைகள், கட்டுரைகள் எழுதிப் பரிசுகளைக் குவித்தார். தன்னுடைய இரண்டாவது மகனுக்குக் கற்றல் குறைபாடு (ஆட்டிஸம்) இருப்பது தெரிந்த பிறகு, முழுமையாக குழந்தைகளுக்காக எழுத ஆரம்பித்தார். சிந்தியாவின் மகள், ‘அம்மா, நம் குடும்பம் போன்றவர்கள் பற்றி ஏன் கதையோ, தொலைக்காட்சித் தொடரோ வருவதில்லை?’ என்று கேட்டாள். மாற்றுத்திறனாளிகள், சிறப்புக் குழந்தைகள் பற்றிய பெரும்பாலான புத்தகங்கள் சோகமாகவே இருப்பதைக் கண்டார் சிந்தியா. அவர்களுக்காக எழுதிய ‘Rules’ என்ற கொண்டாட்டமான கதையே, இவரது முதல் நாவல். உலகின் முதல் சிறுவர் இலக்கிய விருதான ‘ஜான் நியூபெரி விருது’ தொடங்கி பல முக்கியமான விருதுகளைப் பெற்றவர் சிந்தியா.

புத்தக உலகம் - ரேஸ் ராஜா!

ஓவியர்: டெரக் ஆண்டர்ஸன் (Derek Anderson). அமெரிக்கா

ஆண்டர்ஸனின் அம்மா ஓர் ஆசிரியை. ஆண்டர்ஸன் மழலையர் பள்ளியில் இருக்கும்போதே வரைய ஆரம்பித்துவிட்டார். அவரது ஓவியத்தைப் பார்த்து வியந்த பிரின்சிபால், அதை நோட்டீஸ் போர்டில் ஓர் ஆண்டு முழுவதும் ஒட்டிவைத்து சிறப்பித்தார். ஆண்டர்ஸன் வளர வளர, அவரது பேச்சுத் திறமையும், ஓவியத் திறமையும் வளர்ந்தன. மொத்தம் 21 புத்தகங்களுக்கு ஓவியம் வரைந்துள்ளார் ஆண்டர்ஸன். 5 புத்தகங்களை அவரே எழுதியும் உள்ளார். அமெரிக்காவின் பல பள்ளிகளுக்குச் சென்று ஓவியம், வாசிப்பு பற்றி சிறுவர்களிடையே பேசிய அனுபவம் இவருக்கு உண்டு.

புத்தக உலகம் - ரேஸ் ராஜா!

கதை: Hot Rod Hamster

கதாசிரியர்: சிந்தியா லார்டு

ஓவியர்: டெரக் ஆண்டர்ஸன்

மொழி: ஆங்கிலம் (ஆரம்ப நிலை).

வயது: 3 வயது முதல் அனைவருக்கும்.

வெளியீடு: 2010 (முதல் கதை),

2016 (5-வது கதை)

பதிப்பாளர்: Scholastic Inc

புத்தக அளவு:
26.7 x 26 Inches

பக்கங்கள்:
40 முழு வண்ணப் பக்கங்கள்

வாங்க: இணையதளம் மூலம். ஆடியோ மற்றும் இணைய லிங்க்குகள் உள்ளன.

கதை வரிசை: மொத்தம் 5 புத்தகங்கள்.

விருதுகள்: பெற்றோரின் விருப்பத் தேர்வு முதலான தலைசிறந்த சிறுவர் இலக்கிய விருதுகள்.

சிறப்பு அம்சம்:
இந்தத் தலைமுறைக்காக கவிதை நடையில் உருவாக்கப்பட்ட புத்தகம் இது. ஓவியங்கள் மூலம் கதையை நகர்த்தும் காமிக்ஸ் ஸ்டைல். கவிதை / பாடல் வடிவில் வசனங்கள் என வித்தியாசமான அனுபவம் தரும் புத்தகம்.