
கிங் விஸ்வா
சிறுவர்களுக்கு ஒரு விஷயம் பிடித்துவிட்டால், உலகத்தில் இருக்கும் எந்தச் சக்தியாலும் அதன் வெற்றியைத் தடுக்க முடியாது என்பதற்கு இந்த ‘எரிச்சலூட்டும் ஆரஞ்சு’ அண்ணாச்சி ஓர் உதாரணம்.

முதன்முதலில் ஒரு யூடியூப் வீடியோவாக வந்தபோது, ஆரஞ்சு அண்ணாச்சியை சுட்டீஸ்களுக்கு மட்டுமே பிடித்தது. அப்பா, அம்மாக்களுக்குப் பிடிக்கவே இல்லை. குழந்தைகள் அடம்பிடித்ததால் பார்க்க ஆரம்பித்த பெற்றோர்களும் விரைவிலேயே இந்தத் தொடருக்கு தீவிரமான விசிறிகள் ஆகிவிட்டனர்.
உலகிலேயே முதன்முறையாக 55 லட்சம் பேர் பின்தொடரும் முதல் சுட்டீஸ் யூடியூப் சேனல் இதுதான். ஸ்கூல் பேக், டீ ஷர்ட், தொப்பி, காபி கோப்பை, வாட்டர் பாட்டில், என ஏகப்பட்ட பொருட்களோடு, உலகிலேயே டாப் 10 சந்தைப்படுத்துதல் பொருட்கள் (Merchandising Goods) கொண்ட கார்ட்டூன் தொடர் என்ற சாதனையையும் செய்துள்ளது.
எரிச்சலூட்டும் ஆரஞ்சுப் பழத்தின் சாதனைகளில் இருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடம்... நம்முடைய வளர்ச்சிக்கு நமது தொடக்கம் ஒருபோதும் தடையாக இருக்க முடியாது.
வீட்டில் இருக்கும் பழங்கள் பேசினால் எப்படி இருக்கும் என்ற கற்பனையின் நீட்சிதான் இந்தத் தொடர். அப்படிப் பேசும் பழங்களில் வாயாடி இந்த ஆரஞ்சு. ஆப்பிள், கொய்யா, மாதுளை, திராட்சைகள் மற்றும் வயதான ஓர் எலுமிச்சம்பழம் ஆகியவையும் முக்கியமான பாத்திரங்கள்.

யூடியூப் சேனலில் ஒவ்வொரு தொடரின் ஆரம்பத்திலும் ஆரஞ்சு அண்ணாச்சி, மற்ற பழங்கள் மற்றும் காய்கறிகளை வம்புக்கு இழுப்பார். தொடர்ந்து, அவர்களது பெயரைச் சொல்லிச்சொல்லி அழைப்பார். ‘என்ன?’ என்று கேட்டால், ஒரு மொக்கை ஜோக்கைச் சொல்வார் நம்ம அண்ணாச்சி. அந்த மொக்கை ஜோக்குக்குச் சிரிக்கச் சொல்லுவார். சிரிக்கவில்லையென்றால், இன்னும் சில பல அறுவை ஜோக்குகளை அள்ளிவிடுவார். நடுவில் சில சுவாரஸ்யமான தகவல்களையும் சொல்வார்.
இப்படி யூடியூப் சேனலில் அட்டகாசமான வரவேற்பைப் பெற்று, கார்ட்டூன் நெட்வொர்க் சேனலில் தொடராக சாதனை புரிந்த நம்ம ஆரஞ்சு அண்ணாச்சி, இப்போது காமிக்ஸ் வடிவிலும் கலக்குகிறார்.
முதல் கதையிலேயே ஜேம்ஸ் பாண்டை கிண்டல் செய்கிறார் ஆரஞ்சு அண்ணாச்சி. கதையில் வரும் ஒரு வில்லன், பழைய டென்னிஸ் பந்துகளை ‘ஆப்ரிகாட்’ பழங்கள் போல பேக்கிங் செய்து தில்லுமுல்லு செய்வதைத் தடுக்கிறார். அவருக்கு உதவியாக ஒரு பேசும் ஃபுட்பால்.
ஒவ்வொரு பக்கமும் ஜேம்ஸ் பாண்ட், வால்ட் டிஸ்னியின் ஓஸோ ஆகிய பாத்திரங்களைக் கிண்டலடித்து, நகைச்சுவையாகச் செல்கிறது. இதுவரை நீங்கள் ஆரஞ்சு அண்ணாச்சியைச் சந்தித்தது இல்லை என்றால், உடனே யூடியூப் சென்று வீடியோக்களைப் பாருங்கள். புத்தகத்தையும் வாங்கிப் படியுங்கள். காய்கறிகள், பழங்களைப் பற்றிப் பல விஷயங்களை ஜாலியாகத் தெரிந்துகொள்ளலாம்.

இந்தத் தொடரில், மைக் எழுதும் கதைக்கு ஷா ஓவியம் வரைவார். அடுத்து, ஷா கதை எழுத, மைக் ஓவியம் வரைவார். சில வேளைகளில், இருவரும் ஒரே கதையைப் பாதி பாதியாகப் பிரித்துக்கொண்டு கதை எழுதி, ஓவியமும் வரைவார்கள்.
கதாசிரியர் - ஓவியர்: ஸ்காட் ஷா
65 வயதான ஸ்காட் ஷா, அமெரிக்காவின் மிக முக்கியமான காமிக்ஸ் ஆளுமைகளில் ஒருவர். இப்போது பிரபலமாக இருக்கும் ‘சான்-டியாகோ காமிக் கான்’ திருவிழாவை 1970-ம் ஆண்டு தொடங்கியதில் ஷாவுக்கும் முக்கியப் பங்குண்டு. பதின்ம வயதிலேயே ஓவியம் வரைய ஆரம்பித்தவர். பொம்மைகளை வடிவமைப்பது, விளம்பரப் படங்கள், கார்ட்டூன் தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்கள் என்று படிப்படியாக முன்னேறியவர். கிராமி விருதுகளை வாங்கியவர். விடாமுயற்சியின் விளைவுகள் வெற்றியைத் தவிர வேறில்லை என்பதற்கு அருமையான உதாரணம், ஷா.
கதாசிரியர் - ஓவியர்: மைக் கஸாலெ

55 வயதாகும் மைக், டி.வி. மெக்கானிக்காக வாழ்க்கையைத் தொடங்கியவர். ஓவிய ஆர்வத்தில் காமிக் உலகில் நுழைந்தார். 1960-களில் பிரபலமாக இருந்த ‘அண்டர் கிரவுண்ட் காமிக்ஸ்’ இயக்கத்தில் முக்கியப் பங்கெடுத்தவர். அமெரிக்காவின் ஃபேன்டா கிராஃபிக்ஸ் காமிக்ஸ் பதிப்பகத்துக்காகப் பல அருமையான கிராஃபிக் நாவல்களை வடிவமைத்தவர். கார்ட்டூன் தொலைக்காட்சித் தொடர்களை இயக்கியவர். நேரடியாக வாசகர்களுடன் உரையாடுவது போன்று கதாபாத்திரங்களை வடிவமைப்பது இவரது சிறப்பம்சம்.

கதை: Annoying Orange 1: Secret Agent Orange.
கதை, ஓவியம்: ஸ்காட் ஷா & மைக் கஸாலெ.
மொழி: ஆங்கிலம் (ஆரம்ப நிலை).
வயது: 5 வயது முதல் அனைவரும் படிக்கலாம்.
வெளியீடு: 2012 (முதல் கதை), 2016 (6 கதைகள்)
பதிப்பாளர்: Paper Cutz
புத்தக அளவு: 15 x 22.4 Inches
பக்கங்கள்: 64 முழு வண்ணப் பக்கங்கள்.
வாங்க: கடைகள் & இணையதளம்.
கதை: பேசும் திறன்கொண்ட ஆரஞ்சுப் பழத்தின் சாகசங்கள்.
கதை வரிசை: 6 புத்தகங்கள்
சிறப்புகள்: இணையத்திலேயே ‘மிக அதிக ஹிட்ஸ்’ பெற்ற தொலைக்காட்சித் தொடர். கார்ட்டூன் நெட்வொர்க்கில் வந்தபோது, அனைத்து தொலைக்காட்சி விருதுகளையும் ஒருங்கே பெற்ற தொடர்.
சிறப்பு அம்சம்: கதையின் மூலம் பழங்களின் குணாதிசயங்களைச் சொல்லுவது; ஜாலியாகப் பாடம் படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவது.