FA பக்கங்கள்
Published:Updated:

அழிய விடல் ஆகாது பாப்பா! - வெளிமான்

அழிய விடல் ஆகாது பாப்பா! - வெளிமான்
பிரீமியம் ஸ்டோரி
News
அழிய விடல் ஆகாது பாப்பா! - வெளிமான்

ஆயிஷா இரா.நடராசன்

அழிய விடல் ஆகாது பாப்பா! - வெளிமான்

ன்புள்ள நண்பர்களுக்கு...

நான்தான் வெளிமான் எழுதுகிறேன். மிகுந்த அச்சத்தில் இருக்கும் எங்கள் இனத்தின் கடைசி குரலாக இது இருக்கலாம்.

அழிய விடல் ஆகாது பாப்பா! - வெளிமான்

நண்பா, எங்களை ஆங்கிலத்தில் Black Buck என்று அழைப்பார்கள். தமிழ் இலக்கியங்கள் எங்களை ‘இரலை மான்’ என்று குறிப்பிடுகின்றன. தமிழ்க் கடவுள் கொற்றவையின் வாகனம் நாங்கள். தமிழ்நாட்டின் அடையாளங்களில் நாங்களும் உண்டு. திறந்தவெளியை மேய்ச்சல் வாழிடமாகக் கொண்டிருந்ததால், ‘வெளிமான்’ என்று அழைக்கப்பட்டோம்.

சுழன்று மேல்நோக்கி வளரும் கூர்மையான கொம்புகள் எங்களது அடையாளம். கண்களைச் சுற்றி வெள்ளைவெளேர் நிறத்தில் காணப்படும்  வளையங்கள், எங்களுக்குக் கொள்ளை அழகைக் கொடுக்கும். பசுமை, வறட்சி எனப் பருவங்கள் மாறினாலும், அதற்கேற்ப நாங்கள் வாழ்ந்தோம்.

எங்களில் ஆண்களை ‘கிடா மான்கள்’ என்பர். திறந்தவெளி மேய்ச்சல் சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்திகள். எல்லைகளை வகுத்துக்கொண்டு பெரிய மந்தைகளை வழிநடத்துவோம். ஓநாய்கள், சிறுத்தைகள் துரத்தும்போது மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓடுவோம்.

சூரியக் கடவுளின் தேரை குதிரைகள் இழுப்பது போன்ற ஓவியங்களைப் பார்த்திருப்பீர்கள். அதுபோல  சந்திரக் கடவுளின் தேரை, இரண்டு மான்கள் இழுக்கும்.  அது நாங்கள்தான் நண்பா.

மகா அலெக்சாண்டரின் இந்தியப் படையெடுப்பின் மூலமே எங்களை ஐரோப்பியர்கள் அறிவார்கள். எங்களில் ஆயிரக்கணக்கான மான்களை அலெக்சாண்டரின்  படை, பிடித்துச்சென்றதாக வரலாற்றுப் பதிவு உள்ளது.

மன்னர்கள், தங்களது வீரத்தைக் காட்ட எங்களை வேட்டையாட ஆரம்பித்தனர். எங்கள் தோலின் மேல் அமர்வது புனிதம், எங்கள் கொம்புகளுக்கு மந்திரசக்தி உண்டு, எங்கள் மாமிசத்துக்கு மருத்துவக்குணம் உண்டு என்றெல்லாம் சொல்லப்பட்டு, எங்கள் அழிவு வெகுவேகமாக நடந்தது. இன்று, மேய்ச்சல் வெளிகள் எல்லாம் கட்டடங்கள் ஆகிவிட்டன. காடுகள், சரணாலயங்களாகச் சுருங்கிவிட்டன. நாங்களும் வன விலங்கு பூங்கா வேலிகளுக்குள் முடங்கிவிட்டோம். சில ஆயிரம் வெளிமான்களே மிஞ்சி இருக்கிறோம்.

1972-ம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டப்படி எங்களை வேட்டையாடுவது குற்றம். அழிவின் விளிம்பில் உள்ள எங்களை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும் நண்பர்களே.

தெலுங்கு மொழியில் எங்களை ‘கிருஷ்ண சிங்கா’ (கிருஷ்ணரின் வாகனம்) என்று அழைக்கும் அளவு கலாசாரத்தின் அங்கமாக இருந்த எங்களைக் காப்பது உங்களின் கடமை அல்லவா?

காடுகளை அழித்து, திறந்தவெளிகளை ஆக்கிரமித்து வசிப்பிடங்கள் கட்டுவதை நிறுத்த வழி செய்யுங்கள்.  வன உயிர்களின் கொம்புகளைப் பாடம் செய்து வீட்டில் மாட்டிவைப்பதைத் தவறு எனச் சுட்டிக்காட்டுங்கள். வன உயிர்களை பலியிடுவது, அயல்நாட்டுக்குக் கடத்துவது போன்ற செயல்களுக்கு எதிராகக் குரல் கொடுங்கள் நண்பர்களே.

பேரழிவில் இருந்து எங்களைக் காப்பாற்றும் பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கிறோம்.

அன்புள்ள வெளிமான் வளநாடு வனவிலங்கு சரணாலயம்