பொது அறிவு
Published:Updated:

அழிய விடல் ஆகாது பாப்பா! - செந்நாய்

அழிய விடல் ஆகாது பாப்பா! - செந்நாய்
பிரீமியம் ஸ்டோரி
News
அழிய விடல் ஆகாது பாப்பா! - செந்நாய்

ஆயிஷா இரா.நடராசன்

ன்பு நண்பர்களே,

நான்தான் செந்நாய் எழுதுகிறேன். நலமா? மிகுந்த அச்சத்தில் உங்கள் உதவி வேண்டி இதை எழுதுகிறேன்.

அழிய விடல் ஆகாது பாப்பா! - செந்நாய்

மனிதனின் உண்மைத் தோழனான நாய் இனத்திலேயே முன் தோன்றி, லட்சக்கணக்கான வருடங்களாக வனத்தில் வசிப்பவர்கள் நாங்கள். எங்கள் நிறம், இளம் சிவப்பு. மேற்குத் தொடர்ச்சி மலையின் காவல் தெய்வங்களாக, தமிழின் மூத்த குடிகளான மலைவாழ் குரும்பர்கள் எங்களைத்தான் கருதுகின்றார்.

தமிழில் செந்நாய்கள் என்றும் மலையாளத்தில் வட்டை கரவு என்றும் கன்னடத்தில் கென் - நாய் என்றும் தெலுங்கில் ரேச்சு குட்கா என்றும் எங்களை அழைப்பார்கள். குவான் அல்பினஸ் (Cuon alpinus) என்ற உயிரியல் பெயர்கொண்ட எங்களுக்கு, பல சிறப்புகள் உள்ளன. வன நாய்களான ஓநாய்களிடமிருந்து நாங்கள் பலவிதங்களில் வேறுபடுகிறோம்.

குடும்பங்களாகவும் கூட்டங்களாகவும் நாங்கள் வாழ்கிறோம். நாய் வகையில், குகை அமைத்து வாழ்வது நாங்கள் தான். மண்ணில், பாறை இடுக்கில் எங்கள் குகைகள் அழகான பொந்துகளைப் போன்று இருக்கும். தோல் (Dhole) என்று ஆங்கிலேய வன நிபுணர்களால் நாங்கள் அழைக்கப்படுகிறோம். ஒரு காலத்தில், லட்சக்கணக்கில் வாழ்ந்த வேட்டையாடிகள் நாங்கள். புலிகள், சிறுத்தைகள், சிங்கங்கள் வேட்டையாடும் விலங்குகளையே நாங்கள் பகிர்வதுண்டு.

ஆங்கிலேயர் வருகையில்தான் எங்கள் பேரழிவு தொடங்கியது. வேட்டையாடும் விளையாட்டில், அவர்களது பிரதான இலக்காகிப் போனோம் நண்பா. ருட்யார்ட் கிப்ளிங் எழுதிய ஜங்கிள் புக் தொடங்கி, பல நூல்களில் காடுகளின் ஒழுங்கற்ற மோசமான உயிர்களாக நாங்கள் சித்திரிக்கப்பட்டோம். மனிதர்கள் பார்க்கும் வீட்டு விலங்குகள் பக்கமே நாங்கள் வருவது கிடையாது. எங்களை வீடுகளில் வளர்ப்புப் பிராணியாக்குவதும் சாத்தியம் இல்லை.

வெறும் 25 ரூபாய் இருந்தால் போதும், எங்களது பதப்படுத்திய மேல் தோலை நீங்கள் வாங்கிவிடலாம். சீனர்கள் ஐரோப்பியர்களுக்கு குளிர் மேலங்கி, ஆங்கிலேய கனவான்களுக்கு, தாங்கள் சிறந்த வேட்டைக்காரர்கள் என்பதைக் காட்டிக்கொள்ள, எனப் பல காரணங்களுக்காக எங்கள் இனத்தை மனிதர்கள் அழித்தார்கள். சிறுத்தையும் புலிகளுமே அழிக்கப்பட்டபோது, நாங்கள் எம்மாத்திரம்?

உடுமலை முதல் ஊட்டி மலை வரையிலான அந்த 1000 மைல் மலைவனப் பகுதியில் சில நூறுகளாய் நாங்கள் சுருங்கிவிட்டோம் நண்பர்களே! எங்களை வேட்டையாடுவது தடை செய்யப்பட்ட நிலையிலும் அழிவு தொடர்கிறது. சர்வதேச வனவிலங்குகள் பாதுகாப்பு கவுன்சில் (IUCN), முற்றிலும் அழிக்கப்பட்டுவிடும் அபாய விலங்குகளின் பட்டியலில் எங்களைச் சேர்த்துள்ளது.

இனி, நீங்கள்தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும். எங்களது வாழிடங்களான மலையகப்  புதர்களை அழிவிலிருந்து மீட்க வேண்டும். செந்நாய்களை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம். அவற்றின் வாழிடங்களை அழிப்பதும் தோல், மாமிசம் ஆகியவற்றை விற்பதும் குற்றம் என்பதை வேகமாக நண்பர்களிடையே பரப்புங்கள். எங்களது தோலால் ஆன கைப்பைகள், குல்லாக்களை வாங்காமல் புறக்கணிக்க வேண்டும்.

உங்களை நம்பி இந்தப் பணியை ஒப்படைக்கிறோம். பேரழிவின் விளிம்பிலிருந்து எங்களைக் காப்பாற்று நண்பர்களே!

இப்படிக்கு,

செந்நாய்  மேற்குத் தொடர்ச்சிமலை