
கிங் விஸ்வா
2012-ஆம் ஆண்டின் இறுதியில், அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றி உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்க, லட்சக்கணக்கான சிறுவர்கள் எதிர்பார்த்ததும் அமெரிக்க அதிபர் பற்றிய ஒரு விஷயத்தைத்தான். ஆனால், அது பேபி மௌஸ் என்ற காமிக்ஸ் தொடரில் ‘‘அமெரிக்க அதிபராக, பேபி மௌஸ்” (Babymouse for President) என்ற கதைக்காகத்தான். அந்த ஆண்டின் ஐஸ்னர் விருது, இந்த காமிக்ஸ் புத்தகத்துக்கே கிடைத்தது. ஒரு எலிக்குட்டியை மையமாகவைத்து எழுதப்பட்டுவரும் இந்தத் தொடரில், இதுவரை 20 புத்தகங்கள் வந்துள்ளன. முதல் புத்தகமே, 18 லட்சம் பிரதிகள் விற்றுச் சாதனை செய்தது. பேபி மௌஸ், இந்த ஆண்டு மே மாதம் மேல்நிலைப்பள்ளிக்குப் போவதாக இந்தத் தொடரின் 21-ஆவது புத்தகம் தயாராகிவருகிறது.

பல லட்சக்கணக்கான புத்தக விற்பனை என்ற சாதனையைத் தொடர்ந்து, சிறுவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என்று அனைத்துப் பிரிவினரும் ரசிக்கும், கொண்டாடும் ஒரு புத்தகத் தொடராக இந்த ‘பேபி மௌஸ்’ தொடர் இருக்கிறது. அப்படி இந்த காமிக்ஸ் தொடரில் என்ன விசேஷம்? வாருங்கள், பார்க்கலாம்.
பேபி மௌஸ்: வீட்டின் செல்லக்குட்டியான ஒரு எலிதான் இந்தக் கதையின் நாயகி. அதன் பெயர், பேபி மௌஸ். ஒவ்வொரு சிறுவர், சிறுமிக்கும் இருப்பது போலத்தான் நம்ம இம்சை அரசிக்கும் ஆசைகள் இருக்கின்றன.
‘ஹோம் ஒர்க்கே இருக்கக் கூடாது;
மத்தியானம் லன்ச் சாப்பிட ஐஸ்கிரீம் தான் இருக்கணும்;
உலகிலேயே சிறந்த உடைகள் என்னிடம்தான் இருக்கணும்;
நாட்டுக்கு அரசியாக / இளவரசியாக இருக்கணும்;’
என்றெல்லாம் நம்ம எலிக்குட்டிக்குப் பல ஆசைகள் இருக்கின்றன. ஆனால், உண்மையில், நம்ம எலிக்குட்டி படிக்கும் பள்ளிக்கு மட்டுமில்லை, அந்த ஊருக்கே இளவரசியாக இருப்பது ஃபெலிஷியா என்ற அவளது வகுப்பு எலிக்குட்டிதான்.
பிரபலம்: நமது சுட்டிகள் அனைவருக்குமே வகுப்பில் நாம்தான் பிரபலமாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த ஆசைக்கு ஏற்ப, அவர்களது செயல்களும் இருக்கும். சக மாணவர்களைப் பார்த்து, அவர்களின் நிலையைப் பார்த்து ஏற்படும் மன அழுத்தத்தைப் பற்றிய மிக முக்கியமான பாடமாகவே இந்த எலிக்குட்டியின் முதல் கதை அமைந்துள்ளது.
கறுப்பு வெள்ளையில் ஓவியங்களும் எழுத்துகளும் இருக்க, ஆங்காங்கே பிங்க் நிறத்தில் சில பல ஓவியங்கள் வந்து, படிப்பவர்கள் மனதைக் கொள்ளையடிக்கிறது. குழந்தைகள் மட்டுமல்ல, பெற்றோரும் ஆசிரியர்களும் படிக்கவேண்டிய கதைத் தொடர் இது.
குழந்தைகளுக்கான புத்தகம்: ஒரு நல்ல சிறுவர் இலக்கியப் புத்தகம் எப்படி இருக்க வேண்டும் என்றால், நல்ல சுவாரஸ்யமான, விறுவிறுப்பான கதையையும் அந்தக் கதையினூடே நல்ல அறிவுரைகளையும் கொண்டிருக்க வேண்டும். அப்படி ஒரு புத்தகம் இருந்தால், அது மாணவ சமுதாயத்துக்கே நல்வழி காட்டும். இந்த அறிவுரைக் கோட்பாட்டின்படி எழுதப்பட்டதுதான் ‘பேபி மௌஸ்’ என்ற எலிக்குட்டியின் சாகசங்கள் நிறைந்த இந்த காமிக்ஸ் தொடர்.
ஜெனிஃபர் எல் ஹோம் (Jennifer L Holm) – கதாசிரியர்

அமெரிக்காவில், சிறுவர் இலக்கியத்துக்கான தலை சிறந்த விருதாகக் கருதப்படுவது, நியூபெர்ரி விருது. 1921-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் இந்த விருதை வாழ்நாளில் ஒருமுறை பெறுவதே லட்சியம் என்று பலரும் எழுதிவருகிறார்கள். அப்படி இருக்க, எழுத வந்த சில ஆண்டுகளிலேயே இந்தப் புகழ்பெற்ற நியூபெர்ரி விருதை, மூன்று முறை வென்றவர் ஜெனிஃபர். இது மட்டுமல்ல, காமிக்ஸ் துறையில் உச்சபட்ச விருதான ஐஸ்னர் விருதையும் பெற்றவர் இவர்.
ஜெனிஃபர் எழுத வந்ததே சுவாரஸ்யமான ஒரு நிகழ்வு. தன்னுடைய 31-வது வயது வரை அவர் எதையுமே மெனக்கெட்டு எழுதியதில்லை. ஒருமுறை அவரது பாட்டி எழுதிய டைரி ஒன்று கிடைக்க, அதைப் படித்தார் ஜெனிஃபர். மிகவும் சுவாரஸ்யமாக இருந்த அந்த டைரியை, ஒரு நாவலாக எழுதினார். அந்த முதல் நாவல் பல விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, அவரது எழுத்துப் பயணம் அந்த டைரியின் மூலமாகத் தொடங்கியது. இப்போது, உலகின் மிகப் பிரபலமான சிறுவர் இலக்கிய எழுத்தாளர்களில் ஒருவராகக் கொண்டாடப்படுகிறார்.
மேத்யூ ஹோம் (Matthew Holm) – ஓவியர்
ஜெனிஃபரின் சகோதரர்தான் மேத்யூ. டிசைன் கன்ஸல்டன்டாகப் பணிபுரிந்து வந்த மேத்யூ, படிக்கும்போது பல்கலைக்கழகத்தின் பத்திரிகையில் கார்ட்டூனிஸ்டாக ஓவியங்கள் வரைந்தவர். பின்னர், பிரபல பத்திரிகைகளில் ஆர்க்கிடெக்சர், உணவு, பயணம் என்று பல டாப்பிக்குகளில் எட்டு வருடம் தொடர்ந்து எழுதிவந்தார். இதற்கிடையில் அவரது சகோதரி ஜெனிஃபர் ஒரு பிரபல எழுத்தாளராக உருவாகி இருந்தார்.
ஜெனிஃபரிடம், ‘`ஒரு சிறுவர் இலக்கியக் கதையை நாமிருவரும் இணைந்து படைக்கலாமா?’’ என்று கேட்டார் மேத்யூ. ‘என்ன மாதிரியான கதையைச் சிறுவர் இலக்கியமாகப் படைக்கலாம்’ என்று ஜெனிஃபர் கேட்டார். ஜெனிஃபரும் இவரும் சிறுவயதில் ஒன்றாக வளர்ந்துவரும்போது, அவர்கள் வீட்டில் ஒரு பாடம் செய்யப்பட்ட எலி பொம்மை இருந்தது. அந்த எலி பொம்மையுடன் இருவரும் பல கதைகளைப் பேசி விளையாடி இருந்தார்கள்.` உடனே, அந்த எலியைப் பற்றிச் சொல்லி, இருவரும் ஒரு எலிக்குட்டியை மையமாகவைத்து ‘பேபி மௌஸ்’ என்ற இந்ததொடரை ஆரம்பித்தனர்.

கதை: Babymouse # 20: Babymouse Goes for the Gold
கதாசிரியர்: ஜெனிஃபர் ஹோம் (Jennifer L Holm)
ஓவியர்: மேத்யூ ஹோம் (Mathew Holm)
மொழி: ஆங்கிலம்
வயது: 7 வயது முதல் அனைவரும் படிக்கலாம்.
வெளியீடு: 2016
பதிப்பாளர்: Random House
புத்தக அளவு: 14.1 x 17.9 Inches
பக்கங்கள்: 96
விலை: 201 ரூபாய்
கதை: எலிக்குட்டியின் அறிமுகமும் அட்டகாசமான சாகசமும்
கதை வரிசை: மொத்தம் 20 புத்தகங்கள்.
சிறப்புகள்: முதல் புத்தகமே 20 லட்சம் பிரதிகள் விற்பனையானது. அதன் பின்னர் வந்த ஒவ்வொரு புத்தகமும் விற்பனையில் தொடர்ந்து சாதனை செய்துவரும் கதைத் தொடர் இது. அமெரிக்காவின் அனைத்துச் சிறுவர் இலக்கிய விருதுகளையும் பெற்ற தொடர்.
சிறப்பு அம்சம்: மனிதர்களுக்கான உலகத்தைப் போல எலிகளுக்கும் ஓர் உலகம் உண்டு. அந்த உலகில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் மிகவும் ஜாலியாக, அதே சமயம் படிக்கச் சுவையாக எழுதப்பட்டிருப்பது இந்தத்தொடரின் சிறப்பம்சம். இதை ஒரு பூனையே படித்தாலும்கூட, அதுகூட இந்தக் கதையில் வரும் எலிகளை விரும்பத் தொடங்கிவிடும்.