
பிரதமருக்குக் கடிதம் எழுதிய பள்ளி மாணவிஷோபனா எம்.ஆர்

இன்றைய நவீன காலத்தில், குழந்தைகளை ஈர்க்கும் உணவாக இருக்கிறது, ஜங்க் ஃபுட் என்கிற பதப்படுத்தப்பட்ட உணவுகள். ஜங்க் ஃபுட் தொடர்பான விளம்பரங்களும் குழந்தைகளையே குறிவைக்கின்றன. நூடுல்ஸ், ஃப்ரெஞ்சு ஃப்ரை, பர்கர், பீட்சா எனச் சென்னையில் எந்தப் பக்கம் திரும்பினாலும் இந்தப் பதப்படுத்தப்பட்ட உணவுகளைப் பார்க்க முடிகிறது. பெற்றோர்களும் தங்களின் அவசர வாழ்க்கைச் சூழ்நிலையில், குழந்தைகளைச் சமாதானப்படுத்த ஓர் எளிய வழியாக, இதுபோன்ற உணவுகளை வாங்கிக் கொடுக்கிறார்கள்.
இப்படி, குழந்தைகள் உலகத்துக்குள் ஜங்க் ஃபுட் நுழைந்துவிட்டது. கவலையைக் கிளப்பும் இந்தச் சூழ்நிலையில், ஜங்க் ஃபுட் அளிக்கும் தீமையை உணர்ந்து, அதை எதிர்த்துக் குரல் கொடுத்துவருகிறார் சென்னையைச் சேர்ந்த 10-ம் வகுப்புப் பள்ளி மாணவி ஸ்வாதி அனன்யா.

“நான் சவீதா-எக்கோ பள்ளியில் படிக்கிறேன். அஞ்சு மாசத்துக்கு முன்னாடி, எங்க ஸ்கூல்ல சுற்றுச்சூழல், இயற்கை, உணவுகள் என ஏதாவது ஒரு விஷயத்தைப் பத்தி ஒரு புராஜெக்ட் செய்யச் சொன்னாங்க. அப்படி நான் எடுத்த டாபிக்தான், ஜங்க் ஃபுட்.” என்று கூறும் ஸ்வாதிக்கு, அவரின் அம்மா சிவபிரியாதான் மிகவும் உறுதுணையாக இருக்கிறாராம்.
‘‘இந்த விஷயத்தை எங்க அம்மாகிட்டச் சொன்னேன். அவங்க ஒரு டாக்டர். இந்த புராஜெக்ட்டுக்காக ஒரு நல்ல பெயர் யோசிச்சுட்டு இருந்தப்ப, எங்க அம்மா ரெண்டு மூணு பெயர்கள் சொன்னாங்க. அதுல, ‘சந்ததி’ என்ற பெயர்தான் எனக்குப் பிடிச்சிருந்தது. `சந்ததி’ன்னா அடுத்த தலைமுறைனு அர்த்தம். நல்ல உணவுகள்தான் அடுத்த தலைமுறையை ஆரோக்கியமா உருவாக்கும் என்ற அடிப்படையில் இந்தப் பெயரை செலெக்ட் பண்ணினேன். ஜங்க் ஃபுட்னால என்னென்ன உடல்நல பாதிப்புகள் வருதுனு இன்டர்நெட்ல தேடிப்பார்க்கும்போது அதிர்ச்சியா இருந்தது. ஜங்க் ஃபுட் சாப்பிடுறதுனால, பயங்கரமான நோய்கள் தாக்குதுனு தெரிஞ்சுக்கிட்டேன். மறதி, மனஅழுத்தம், இதய நோய், பொறுமையின்மை, கற்கும் ஆற்றல் குறைவு எனப் பல பிரச்னைகள் வருதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன். இதைப் பத்தி முழுமையா ஒரு கட்டுரை எழுதினேன். உள்ளூர் பத்திரிகைகளுக்கு அனுப்பினேன்.

அதுமட்டுமில்ல... `ஜங்க் ஃபுட்ஸை ஒழிக்கணும்’னு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மத்திய கல்வித் துறை அமைச்சரகம்... இவங்களுக்கும் கடிதம் அனுப்பினேன். இவங்க பதிலுக்காகக் காத்துக்கிட்டு இருக்கேன்” என்று நம்பிக்கையோடு கூறுகிறார் ஸ்வாதி!
``அப்போ நீங்க ஜங்க் ஃபுட் சாப்பிட்டதில்லையா?’’ என்று கேட்டால், “நான் அஞ்சாம் வகுப்பு படிக்கும் வரைக்கும், நூடுல்ஸ், உருளைக்கிழக்கு சிப்ஸ் நிறைய சாப்பிட்டுக்கிட்டிருந்தேன். ஆனா, அதோட விளைவுகளைப் பத்திப் படிக்க ஆரம்பிச்சதும், கொஞ்சம் கொஞ்சமா நிறுத்திட்டேன். இப்போ, என் ஃப்ரெண்டஸுக்கும் `ஜங்க் ஃபுட்’ஸால வர்ற பாதிப்புகளைப் பத்தி எடுத்துச் சொல்றதுதான் என்னோட முக்கிய வேலை!” என்று கூறும் ஸ்வாதியின் பொறுப்பு உணர்வுக்கு ஆயிரம் லைக்ஸ் கொடுக்கலாம்!