மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தெய்வத்தான் ஆகாதெனினும் - இரவின் வெளிச்சம்!

தெய்வத்தான் ஆகாதெனினும் - இரவின் வெளிச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
News
தெய்வத்தான் ஆகாதெனினும் - இரவின் வெளிச்சம்!

தமிழ்ப்பிரபா, படங்கள்: ப.சரவணகுமார்

``மொத்தம் எனக்கு முந்நூறு பசங்க தம்பி!” எனச் சொல்லும் உமா மகேஸ்வரி, கண்ணகி நகரில் தள்ளுவண்டியில் சூப் கடை வைத்திருக்கிறார். ஃபீஸ் கட்டவில்லை என்பதற்காகத் தன் பிள்ளைகள் டியூஷனிலிருந்து துரத்தப்பட, வீட்டுவாசலிலேயே பாய் விரித்து, தெருவிளக்கின் வெளிச்சத்தில் அவர்களைப் படிக்கவைத்திருக்கிறார். இவர்களுடன் அக்கம்பக்கத்துக் குழந்தைகளும் சேர்ந்து மாலை நேரத்தில் படிக்க ஆரம்பித்திருக்கின்றனர். இப்போது முந்நூறு பிள்ளைகளுக்குமேல் பயிலும் இரவுப் பாடசாலையாக மாறியிருக்கிறது, உமா மகேஸ்வரி தொடங்கிய ஒரு சிறு முயற்சி.

தெய்வத்தான் ஆகாதெனினும் - இரவின் வெளிச்சம்!

``இன்னும் அரை மணி நேரம் வெயிட் பண்ணுங்க. பசங்க எப்படி ஷார்ப்பா வர்றாங்கன்னு மட்டும் பாருங்க” என உமா மகேஸ்வரியின் கணவர் வாசுதேவன் சொன்னதுபோலவே, சரியாக மாலை 5:30 மணிக்குப் பிள்ளைகள் வரத் தொடங்கினார்கள். மொத்தம் மூன்று பெரிய அறைகள். பத்து மற்றும் ப்ளஸ் டூ தேர்வுக்குப் படிக்கும் மாணவர்களுக்குத் தனி அறை, சிறுபிள்ளைகளுக்குத் தனி அறை. இவை தவிர, கணினி அறை ஒன்றும் உள்ளது. ஆனால், அங்கு இருந்த எந்தக் கணினியும் வேலைசெய்யவில்லை. ஒரு மாணவி லேப்டாப்பில் சொல்லிக்கொடுக்க, மற்றவர்கள் கவனிக்கிறார்கள். கழுவிய முகத்தில் ஈரம் காயாமல் அப்பிய பவுடருடன் சிறுபிள்ளைகள் வகுப்புவாரியாகப் பிரிந்து உட்கார, கொஞ்ச நேரத்தில், ``நான் ஆறாவது. எங்க வீட்டுக்காரர் பத்தாவது. எங்களுக்கு இன்னா சொல்லித் தரத் தெரியும்? அதனால சம்பளத்துக்கு மூணு டீச்சருங்கள பாடம் சொல்லித்தர வெச்சிருக்கோம்” என உமா மகேஸ்வரி சொல்லிக்கொண்டிருக்கும்போதே, ஆசிரியைகள் வருகை தந்தார்கள்.

ஆசிரியைகளுக்குச் சம்பளம் தர இயலாமல் இரண்டு பேர் வேலையை விட்டு நின்றுவிட,  மற்ற மூவரை வைத்து வகுப்புகளை நடத்திக்கொண்டிருக்கிறார் உமா மகேஸ்வரி. இவர்களுடைய சேவையை உணர்ந்த சில நல்ல மனிதர்கள், தேவையான வசதிகளைச் செய்துகொடுத்திருக்கிறார்கள். அதை இறுகப் பிடித்தபடிதான் இயங்கிக்கொண்டிருக்கிறது இந்தக் கல்விக்கூடம்.

தெய்வத்தான் ஆகாதெனினும் - இரவின் வெளிச்சம்!

கண்ணகி நகரில் மக்கள் குடியமர்த்தப்பட்ட புதிதில் நிறைய குழந்தைகள் பள்ளியிலிருந்து நின்றுவிட்டனர். அவர்கள் ஒவ்வொருவர் வீட்டுக்கும் சென்று பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பச் சொல்லி உமா மகேஸ்வரி வலியுறுத்த, பெரும் மாணவர் கூட்டம் மீண்டும் பாடப்புத்தகத்தைத் தொட்டிருக்கிறது.

``ஒருமுறை எங்ககிட்ட 25 ப்ளஸ் டூ பசங்க டியூஷன் படிச்சாங்க. 25 பேரும் பாஸ் பண்ணி காலேஜ் போனதை என் வாழ்நாள்லயே மறக்க முடியாது. அந்தப் புள்ளைங்க பை மாட்டிக்கினு போறதைப் பார்க்கும்போது எனக்கு அழுகையே வந்துடும்” என்று சொல்லும்போதே அடக்க முடியாமல் மகிழ்ச்சியில் அழுகிறார் உமா மகேஸ்வரி.

“இதை அடுத்த கட்டத்துக்கு எப்படிக் கொண்டுபோறதுன்னெல்லாம் தெரியலை. எனக்கு சூப்புக்கடை இருக்குது. எங்க வீட்டுக்காரர் ஆட்டோ ஓட்டுறார். எங்க சக்திக்கு உட்பட்டு, புள்ளைங்களைத் தொடர்ந்து படிக்கவைப்போம். இன்னும் கொஞ்ச நாள்ல கண்ணகி நகர் புள்ளைங்களும் ஐ.டி கம்பெனிகள்ல வேலை செய்யப்போறாங்க, பாருங்க”  என்ற உமா மகேஸ்வரியின் குரலில் இருந்த உறுதியும் நம்பிக்கையும் சாதாரணமாகக் கடந்துவிடக்கூடியவை அல்ல.