
எட்ட முடியாத உயரத்தில் எம்.பி.பி.எஸ்! - உண்மையாக உதவாத அரசு ‘நீட்’ பயிற்சி
பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் மருத்துவக் கல்லூரியைத் தொடுவதற்கான புது வாசலான ‘நீட்’ தேர்வுக்கு இன்னும் சில நாள்களே இருக்கின்றன. கடந்த ஆண்டு, கடைசிவரை ‘நீட்’ தேர்வி லிருந்து விலக்குக் கிடைத்து விடும் என்று தமிழக அரசு தவறான நம்பிக்கை கொடுத்தது. ஆனால், அந்த நம்பிக்கை தகர்ந்து, ‘கண்டிப்பாக நீட் தேர்வு எழுத வேண்டும்’ என நீதிமன்றம் உத்தர விட்டுவிட, வேறு வழியில்லாமல் தேர்வெழுதினார்கள் மாணவர்கள். தேர்வு முடிவுகளும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. பிளஸ் 2 பொதுத்தேர்வில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்ற பல மாணவர்கள் தோல்வியைத் தழுவினார்கள். சிறப்புப் பயிற்சிகள் இல்லாமை, போதிய நேரமின்மை, சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலிருந்து கேள்விகள் கேட்கப் பட்டது... போன்றவையே அதற்குக் காரணம்.
இந்தக் குளறுபடிகளையெல்லாம் சரிசெய்யும் விதமாக, தமிழக அரசு சார்பில் ‘தொடுவானம்’ என்ற பெயரில் ‘நீட்’ சிறப்புப் பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 412 மையங்கள், மாணவர்கள் தங்கிப் படிக்கும்விதமாக எட்டு மையங்கள் என மொத்தம் 420 மையங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. மே 6-ம் தேதி ‘நீட்’ தேர்வு. இந்தப் பயிற்சி மையங்கள் எந்த அளவுக்கு உதவின?

‘நீட்’ தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி மையங்கள் பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. சில இடங்களில் நேரடியாகவும், பெரும்பாலான இடங்களில் ஆன்லைன் மூலமும் பயிற்சியளிக்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் நடத்தப்படும் வகுப்புகளில் மாணவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், ஆன்லைன் மூலமாகவே கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். இதுதவிர உதவிக்காக ஆசிரியர்களும் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு பள்ளிக்கும் ஆன்லைன் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கான புரொஜெக்டர், கம்ப்யூட்டர் ஆகியவற்றுக்காக ஒன்றரை லட்ச ரூபாயும் ஆசிரியர்களுக்கு சிறப்பூதியம் வழங்க 50 ஆயிரம் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு வினாக்கள் அடங்கிய புத்தகங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன.
இந்தப் பயிற்சி மையங்களுக்கு விசிட் அடித்தோம். சென்னை எழும்பூரில் உள்ள அம்பேத்கர் அரசு உயர்நிலைப் பள்ளி மையத்தில் மொத்தம் 22 மாணவர்கள் பயில்கிறார்கள். நாங்கள் சென்றபோது, வெறும் 12 பேர் மட்டுமே வகுப்புக்கு வந்திருந்தார்கள். மாணவிகள் காயத்ரி மற்றும் அனிதாவிடம் பயிற்சிகள் குறித்துக் கேட்டோம். ‘‘நாங்கள் இருவரும் சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து வருகிறோம். இந்தப் பயிற்சி வகுப்பு எங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது. பயிற்சியின்போது சந்தேகம் ஏற்பட்டால் ஆன்லைனிலேயே கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். வகுப்பறையில் இருக்கும் ஆசிரியர்களிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். சி.பி.எஸ்.இ பாடத்திட்டமாக இருப்பதால், படிப்பதற்குக் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. நாங்கள் ஆங்கிலவழியில் படித்தவர்கள். இந்த மையம் தமிழ்வழியில் படித்தவர்களுக்கானது. ஆங்கிலவழியில் படித்த மாணவர்களுக்கு வெறும் 10 மையங்கள் மட்டுமே இருக்கின்றன. அடுத்த ஆண்டிலாவது, ஆங்கில வழியில் படிப்பவர்களுக்கான மையங்களை அதிகப்படுத்த வேண்டும்’’ என்ற கோரிக்கையுடன் முடித்தார்கள். சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து வந்திருந்த மாணவர் திவாகர் மற்றும் புரசைவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் சிந்தனைச்செல்வன் ஆகியோரும் இதே கருத்துக்களைச் சொன்னார்கள்.
சென்னை, மயிலாப்பூர் லேடி சிவசாமி அய்யர் பெண்கள் பள்ளியில் விண்ணப்பித்திருந்த பலர் பயிற்சிக்கு வரவில்லை. ஏழெட்டு மாணவர்கள் மட்டுமே வகுப்பில் இருந்தார்கள். மாணவிகள் உமா மகேஷ்வரி, லாவண்யாவிடம் பயிற்சிகள் குறித்துக் கேட்டோம். ‘‘மயிலாப்பூரில் உள்ள சில்ட்ரன்ஸ் கார்டன் பள்ளியிலிருந்து வருகிறோம். ஆசிரியர்கள் நேரடியாகச் சொல்லிக் கொடுப்பது மாதிரி ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் இல்லை. ஸ்மார்ட் போர்டில் கவனிப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. நிறைய சந்தேகங்கள் வருகின்றன. இப்போது வரை, எதுவுமே படித்த மாதிரி இல்லை. சி.பி.எஸ்.இ பாடத்திட்டம்தான். இங்கே கொடுக்கப்பட்டுள்ள மெட்டீரியல்ஸ் கொஞ்சம் உதவியாக இருக்கும். எங்களின் நண்பர்கள் தனியார் மையங்களில் படிக்கிறார்கள். அங்கே அவர்களுக்கு நல்ல மெட்டீரியல்ஸ் கொடுத்துள்ளனர். அங்கு நல்லா நடத்துகிறார்கள் என்று நண்பர்கள் சொன்னார்கள். எங்களைப் பொறுத்தவரை இது 25 சதவிகிதம் உதவியாக இருந்தது” என்றார்கள்.

பல மையங்களில் நாம் கண்ட காட்சிகள் அதிர்ச்சி அளிப்பவையாக இருந்தன.
மின்வசதி இல்லாததால், ஒரு பள்ளியில் மதிய வேளையிலேயே மாணவர்கள் வீட்டுக்குச் சென்றுவிட்டார்கள்.
ஒரு பள்ளியில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே தொடர்ச்சியாக வருகிறார். ‘மற்றவர்கள் விருப்பப் பட்டால் வருவார்கள்’ என்கிறார்கள் அந்தப் பள்ளியைச் சேர்ந்தவர்கள்.
ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களுக்கு உதவி செய்ய ஆசிரியர்கள் பணியமர்த்தப் பட்டிருக்கிறார்கள். ஆனால், பல பள்ளிகளில் ஆசிரியர்கள் இருப்பதில்லை.
ஆசிரியர்களில் பலர் பொதுத்தேர்வு வினாத்தாள் திருத்தச் சென்றுவிட்டதால், மாணவர்களுக்கு சொல்லித்தர ஆசிரியர் இல்லை.
ஆன்லைன் பயிற்சி மையங்களில் பல மாணவர்கள், ஸ்மார்ட் போர்டில் திரையிடப்படும் பாடங்களைக் கவனிக்காமல் தங்களின் மொபைல் போன்களில் மூழ்கியிருந்தனர். அவர்களிடம் கேட்டதற்கு, ‘ஆன்லைன் வகுப்புகள் சுவாரஸ்யமாக இல்லை’ என்கிறார்கள்.
தமிழ்நாடு அரசு நல்ல நோக்கத்துடன் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தாலும், அதை செயல்படுத்துவதில் மிகப் பெரிய தேக்க நிலை இருக்கிறது. இந்த ஆண்டும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ் தொடுவானமாக இல்லாமல் தொட முடியாத தூரத்திலேயே இருப்பதை உணர முடிகிறது.
- இரா.செந்தில் குமார்