மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தெய்வத்தான் ஆகாதெனினும் - அலையாய்ப் பரவும் ‘அறிவுச்சுடர்’!

தெய்வத்தான் ஆகாதெனினும் - அலையாய்ப் பரவும் ‘அறிவுச்சுடர்’!
பிரீமியம் ஸ்டோரி
News
தெய்வத்தான் ஆகாதெனினும் - அலையாய்ப் பரவும் ‘அறிவுச்சுடர்’!

தமிழ்ப்பிரபா - படம்: தே.அசோக்குமார்

 “படிச்ச கல்வியைவெச்சு நாம சம்பாதிக்கிறோம். அப்படியே செட்டிலும் ஆகிடுறோம். ஆனா, நாம கத்துக்கிட்ட கல்வி என்ன ஆகுது? அது இன்னொருத்தருக்குப் பயன் படலைன்னா நாம எவ்ளோதான் சம்பாதிச்சாலும் வீண்தானே! அந்தக் கல்வி உங்களைப் பார்த்துச் சிரிக்காது?’’ எனப் புன்னகைத்துக்கொண்டே கேட்கிறார் இரவு நேரப் பாடசாலையின் ஒருங்கிணைப்பாளர் தேவா.

``எங்க கிராமத்துல முதல் பட்டதாரி நாங்கதான். ஆனா, இன்னிக்கு எங்க கிராமத்துல வீட்டுக்கு ஒரு பட்டதாரியை உருவாக்கியிருக்கோம்” என இன்னொரு ஒருங்கிணைப்பாளரான சக்தி சொல்ல, அதை ஆமோதிக்கும்விதமாகத் தலையாட்டுகிறார் தேவா.

விழுப்புரம் மொடையூர் கிராமத்தைச் சேர்ந்த இந்த இளைஞர்கள், தங்கள் பகுதிப் பிள்ளைகள் கல்வியறிவு பெற வேண்டும் என வீட்டு அருகில் இரவு நேரப் பாடசாலையை ஆரம்பித்திருக்கிறார்கள்.  இவர்களைப் பார்த்து மற்ற கிராமத்து இளைஞர்களும் ஊக்கம்கொள்ள, அது அப்படியே பரவி விழுப்புரத்தைச் சுற்றி ஒவ்வொரு கிராமத்திலும் இரவு நேரப் பாடசாலை ஆரம்பித்து, தற்போது சென்னை, காஞ்சிபுரம் உள்பட 61 இடங்களில் `அறிவுச்சுடர்’ என்ற பெயரில் மாலை நேரக் கல்விநிலையம் நடைபெற்றுவருகிறது.

தெய்வத்தான் ஆகாதெனினும் - அலையாய்ப் பரவும் ‘அறிவுச்சுடர்’!

``எங்க கிராமத்துப் பிள்ளைங்க, குடும்ப வறுமை காரணமா படிப்பைப் பாதியிலேயே நிறுத்திட்டு, கூலி வேலை, கேட்டரிங் வேலை, திரிசூலத்துல கல் உடைக்கிற வேலைன்னு சென்னைக்கு வந்துடறாங்க. அவங்க எல்லோரும் விடுமுறையில கிராமத்துக்கு வரும்போது, அவங்களோடு கொஞ்ச நேரம் பேசுவோம். `இங்கேயே இருந்து படிங்கடா’ன்னு சொன்னோம். ஆரம்பத்துல, எங்களை யாரும் மதிக்கலை. போகப் போக புரிஞ்சுக் கிட்டாங்க” எனச் சொல்லும் சக்தி, தற்போது குருநானக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார்.

`அறிவுச்சுடர்’ என்ற பெயரில் இவர்கள் ஆரம்பித்த இந்த இரவு நேரப் பாடசாலைக்கு, முதலில் சொந்த கிராமத்திலேயே பல வகையில் எதிர்ப்பு வந்தன. ``நாங்க காலனியில இருக்கிறவங்க. எங்ககிட்ட பாடம் படிக்கிற ஒரு ஊர்ப்பையன், போற வழியில என்னைப் பார்த்து வணக்கம் சொன்னான். அவங்க அப்பா அவனைப் போட்டு செம அடி அடிச்சுட்டு, எங்கிட்டயும் பிரச்னை பண்ணிட்டார். அது பெருசாயிடுச்சு. அதெல்லாம் விரிவா சொல்ல விரும்பலை சார்” என்கிறார் தேவா.

அரசியல்வாதிகளின் தலையீடு, சாதிப் பாகுபாடு எனப் பல பிரச்னைகளைத் தாண்டி, விழுப்புரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களைப் பட்டதாரி ஆக்கியிருக்கிறார்கள். படிப்பு என்பதையும் தாண்டி, கிராமத்து இளம் வயதுப் பெண்களுக்கு மாதவிடாய் வகுப்பு, பெரியவர்களுக்குத் தங்களுக்கான அரசியல் உரிமை, இளைஞர்களுக்கு உயர்கல்வி ஆலோசனை, தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை அழைத்து கல்வித் திருவிழா எனப் பல தளங்களில் கடந்த பதினைந்து வருடமாக இயங்கிவருகிறார்கள்.

``எனக்கு அப்பா இல்லை. நாலாம் வகுப்புக்குமேல வீட்டுல ஸ்கூலுக்கு அனுப்பலை. அப்போ அண்ணனுங்கதான் என்னைப் பார்த்துக் கூப்பிட்டு விசாரிச்சு, திரும்பவும் ஸ்கூல்ல சேர்த்துவிட்டாங்க. சாயங்காலம் அவங்ககிட்ட டியூஷன் படிச்சேன். தொடர்ந்து ஹெல்ப் பண்ணாங்க. எனக்கு காலேஜ் அப்ளிகேஷன் போடுறது, ஃபீஸ் கட்டுறது, புக்ஸ் வாங்கிக் கொடுக்கிறது எல்லாமே இவங்கதான். இப்போ எம்.ஏ படிச்சிட்டிருக்கேன்” எனச் சொல்லும் அருணாவைப்போல முதல் தலைமுறைப் பட்டதாரிகள் பலரை உருவாக்கியிருக்கிறார்கள் `அறிவுச்சுடர்’ இளைஞர்கள்.

``எங்களுக்கு இதுவரை எந்த அரசியல் தலைவரும் உதவி செய்யலை. எங்களுக்கு உதவிகூட வேணாம்; தொல்லை கொடுக்காம இருந்தாலே போதும். எங்க கிட்ட படிச்ச மாணவர்கள் பலபேர் இன்னைக்கு சென்னையில் நல்ல வேலையில் இருக்காங்க. கிராமத்துக்கு வரும்போது அவங்களால முடிஞ்சதைக் கொடுப்பாங்க. அதுபோதும்” எனச் சொல்கிறார்கள் இந்த இளைஞர்கள்.தொடரட்டும் இவர்களின் கல்விப் பயணம்!