2018 ஸ்பெஷல்
சினிமா
Published:Updated:

2018 டாப் 10 பிரச்னைகள் - உயர் கல்வியைக் குறி வைக்கும் அபாயங்கள்!

2018 டாப் 10 பிரச்னைகள் - உயர் கல்வியைக் குறி வைக்கும் அபாயங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
2018 டாப் 10 பிரச்னைகள் - உயர் கல்வியைக் குறி வைக்கும் அபாயங்கள்!

அ.கருணானந்தன் பேராசிரியர்

2018-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 முக்கியப் பிரச்னைகளைப் பற்றி, பல்வேறு துறைசார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...

ல்கலைக்கழகங்கள் உட்பட தமிழகத்தின் உயர்கல்வி நிறுவனங்கள் பலவும் அவலங்களுக்கு ஆளாகும் ஆண்டாக இருந்தது 2018. துணைவேந்தர்கள் உட்பட பலர்மீது ஊழல் குற்றச்சாட்டுகள்; பேராசிரியர்கள்மீது பாலியல் புகார்கள், தேர்வுத்தாள் ஊழல்கள். கல்வியாளர்களும், நியாய உணர்வுள்ள பொதுமக்களும் கொதித்துப்போயுள்ளனர்.

2018 டாப் 10 பிரச்னைகள் - உயர் கல்வியைக் குறி வைக்கும் அபாயங்கள்!

புரவலர்கள், உதவியாளர்கள், மேலிடத்து ஆதரவு இல்லாமல் `நிர்மலா தேவிகளோ',  `கையூட்டுப் பேராசிரியர்களோ’ செயல்பட முடியுமா? அறிகுறிகளே நோய்களாகிவிடுமா? அறிகுறிகளைத் தாக்குவதால் நோயை நீக்கமுடியுமா? ஆணிவேரை அடையாளங்கண்டு பிடுங்கி எறியவேண்டும்.

ஊழலும்  முறைகேடுகளும் மட்டுமே உயர்கல்வி பிரச்னைகளென்று சுருக்கிவிட முடியாது. மாநில உயர்கல்வி நிறுவனங்களை மத்திய அரசு கபளீகரம் செய்யும் தீவிர முனைப்புகள் இதைவிடப் பெருங்கொடுமை. 

2018 டாப் 10 பிரச்னைகள் - உயர் கல்வியைக் குறி வைக்கும் அபாயங்கள்!

புதுச்சேரியில் ஓர் இடத்தைக்கூடப் பிடிக்க முடியாத பாரதிய ஜனதாவால் நியமிக்கப்பட்ட,  துணை நிலை ஆளுநர் மூன்று நியமன எம்.எல்.ஏ.க்களை உருவாக்குவது, அப்பகுதி மக்கள் மீது தார்மீகமற்ற நெறியில், அவர்களால் புறக்கணிக்கப்பட்ட கட்சியினரைத் திணிப்பது எந்தவிதத்தில் நியாயமில்லையோ அதுபோன்றதுதான், மாநில அரசினைப் புறக்கணித்தோ, அதன் விருப்பங்களை மதிக்காமலோ துணைவேந்தர்களை `வேந்தர்' என்ற நிலையில் ஆளுநர் நியமிப்பதும். இது  கூட்டாட்சி விழுமியங்களுக்கு முற்றிலும் முரண்பட்ட செயல்.  `ஆளுநருக்கு அதற்கு அதிகாரமுண்டு' என்று `சல்யூட்' அடிக்கும் அமைச்சர்களால் மாநிலத்தின் கல்வி உரிமைகள் பறிபோவதைத் தடுக்க இயலுமா?

வந்துவிட்ட `நீட்' தேர்வு மட்டுமல்ல, வரவிருக்கின்ற `தேசிய நுழைவுத் தேர்வு'கள் மூலம் தமிழகத்தின் அத்தனை கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையிலும் மாநில உரிமைகள், கல்லூரி - பல்கலைக்கழகங்களின் `தன்னாட்சி' உரிமைகள் படுகொலை செய்யப்படுகின்ற பேரபாயம் உருவாகிவிட்டது.

மத்திய அரசு ஒருதலைபட்சமாகத் திணிக்க விரும்பும் `இந்திய உயர்கல்வி ஆணையச் சட்டம்' இறுதியாகிவிட்டால், இந்தியாவின் மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட மாநிலச் சட்டங்களால் உருவாக்கம் பெற்று முறைப்படுத்தப்பட்ட, மாநில அரசின் நிதி உதவியால் நடத்தப்படும் 42,000-த்துக்கும் மேற்பட்ட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும், அந்த `ஆணையத்தின்' சொத்துகளாகிவிடும். அந்த `தேசிய ஆணையத்தின்' அங்கீகாரத்துடன் மட்டுமே செயல்பட முடியும்.

இதுவரை, தமிழகத்தின் கல்வியும், உயர்கல்வியும் மாநில அரசுகளின் முனைப்புகளாலும் சட்டங்களாலும் மானியங்களாலும்தான் மேம்பட்டன. காங்கிரஸ் ஆட்சியோ, கழக ஆட்சியோ, கடந்த 60-க்கும் மேற்பட்ட ஆண்டுகளில் தமிழகத்தின் கல்வி வளர்ச்சியும், மருத்துவ வசதியும் மாநில அரசின் சாதனைகளாகவே இருந்து வந்துள்ளன. அதனால்தான் HDI குறியீடுகளில் பஞ்சாப், கேரளா போன்றவற்றுடன் தமிழகமும் முன்னிலை மாநிலமாக உள்ளது.

2018 டாப் 10 பிரச்னைகள் - உயர் கல்வியைக் குறி வைக்கும் அபாயங்கள்!

ஊழல்கள், ஒழுக்கக் கேடுகள், முறைகேடுகள் அனைத்தும் பெரும் நோய்கள்தாம். ஆனால் தலைவலிக்குப் பரிகாரம் தலையை வெட்டி விடுவதல்ல. மாநில அரசிடமிருந்து கல்வி - மருத்துவத்தைப் பிரித்து மத்திய அரசிடமோ, கார்ப்பரேட் பெருமுதலாளிகளிடமோ ஒப்படைப்பதால் விடிவு வந்துவிடுமா?

கூட்டாட்சி உணர்வுகளுக்கு உட்பட்டு, மாநிலக் கல்விப் பிரச்னைகளுக்கு மாநிலத்திற்குள்ளேயே தீர்வு காணப்படவேண்டும். எலிக்கு அஞ்சிக் காட்டை எரிக்கக்கூடாது. மலையை இடிக்கக் கூடாது. தமிழக உயர்கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி உரிமைகளையும், தரத்தையும் உறுதிப்படுத்துவதாகக் கூறி, ஆளுநர்களின், அதிகாரிகளின், மத்திய அரசுத் துறைகளின் கைப்பாவைகளாகத் தமிழக உயர்கல்வி நிறுவனங்கள் மாறிவிடக் கூடாது.