மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், தொலைநெறி தொடர்கல்வி இயக்ககத்தின் சார்பாக, 141 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. நாட்டிலேயே முதல்முறையாக, தொலைநெறிக் கல்வியில் பயின்றவர்களுக்குப் பட்டமளிப்பு விழா நெல்லையில் நடத்தப்பட்டுள்ளது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், நேரடியாகக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க இயலாத மாணவர்களுக்கும் கல்வி வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன், தொலைநெறி தொடர்கல்வி இயக்ககம் செயல்பட்டுவருகிறது. இதன் வாயிலாகப் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மாணவ மாணவிகள், இளங்கலை, முதுகலை, ஆசிரியப் பயிற்சி உள்ளிட்டவற்றைப் பயின்றுவருகிறார்கள்.
தொலைநெறி தொடர்கல்வி இயக்ககத்தின்மூலம் பட்டம் பெறுபவர்களுக்கான சான்றிதழ்கள் தபால் மூலமாகவே இதுவரை வழங்கப்பட்டு வந்த நிலையில், நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், முதல்முறையாக தொலைநெறிக் கல்வி முறையில் பயின்ற மாணவர்களுக்கும் பட்டமளிப்பு விழா நடத்தி சாதனை படைத்துள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவுக்கு வந்தவர்களைப் பல்கலைக்கழகப் பதிவாளர் சந்தோஷ்பாபு வரவேற்றார். துணைவேந்தர் பாஸ்கர் தலைமையில் நடந்த விழாவில், டாடா ரியாலிட்டி மற்றும் உள்கட்டமைப்பு குழுமத்தின் செயல் அதிகாரியான வேலன் கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார்.
விழாவில் பேசிய துணை வேந்தர் பாஸ்கர், ’’தொலைநெறிக் கல்வி இயக்ககத்தின் சார்பாகக் கல்வி பயின்ற மாணவர்களை நேரில் அழைத்து பட்டமளிப்பு விழா நடத்துவது என்பது நாட்டிலேயே இதுதான் முதல் முறை. மாணவர்களின் நலனில் அக்கறைகொண்டு செயல்பட்டு வரக்கூடிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தொலைநெறி கல்வி பயிலும் மாணவர்கள் நலனிலும் அக்கறை கொண்டுள்ளதால், இந்தப் பட்டமளிப்பு விழா நடத்தப்படுகிறது.
நாம் பெற்ற பட்டம் மற்றும் கல்வி, நமது நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபடுவதாக அமைந்திருக்க வேண்டும். தொலைதூரக் கல்வி வாயிலாகப் பட்டம்பெற்றுள்ள நீங்கள், இத்துடன் படிப்பை கைவிட்டுவிடாமல், தொடர்ந்து கல்வி கற்க வேண்டும். உயர் கல்விக்கான வாய்ப்புகளும் தொலைநெறி தொடர்கல்வி இயக்ககத்தின் சார்பாக கொடுக்கப்படுவதை அனைவரும் பயன்படுத்திக்கொண்டு, உயர் கல்வியையும் கற்க முன்வர வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.
விழாவில் பேசிய டாடா ரியாலிட்டி மற்றும் உள்கட்டமைப்புக் குழுமத்தின் செயல் அதிகாரியான வேலன், ‘’இந்தியாவின் பலமாகவும் பலவீனமாகவும் இருப்பது, மக்கள் தொகைப் பெருக்கம். நமது நாட்டில் 60 சதவிகிதத்துக்கும் அதிகமான இளைஞர்கள் இருந்தபோதிலும் முன்னேற்றம் அதிகமாக இருக்கவில்லை. ஆனால், நமது நாட்டில் உள்ள மாணவர்களில் அனேகர், தொழிற்கல்விகளில் ஆர்வம் காட்டுவதால், நாட்டின் தொழில் வளர்ச்சி அமோகமாக இருக்கிறது.
அனைவரும் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தொலைநெறிக் கல்வி வாய்ப்பு என்பது நமது இளைஞர்களுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு. நானே தொலைநெறிக் கல்வி வாயிலாகவே இளங்கலைப் பட்டம் பெற்றேன். அதைத் தொடர்ந்து உயர்கல்வியையும் இந்தத் திட்டத்தின் வாயிலாகவே படித்து, இன்று உங்கள் முன்னால் இந்த அளவுக்கு நின்றுகொண்டிருக்கிறேன். அதனால், அனைவரும் தொலைநெறிக் கல்விக்கான வாய்ப்பை சரிவர பயன்படுத்தி வாழக்கையில் உயருங்கள்’’ என்று வாழ்த்தினார்.
விழாவில், 141 மாணவ மாணவியருக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில், 93 பேர் ஆசிரியப் பயிற்சிப் பட்டம் பெற்றனர். 23 பேர் முதுகலைப் பட்டம் பெற்றார்கள். 21 மாணவ மாணவிகள் இளங்கலைப் பட்டம் பெற்றார்கள். இந்த விழாவில், தொலைநெறி தொடர்கல்வி இயக்குநர் தமிழ்ச்செல்வன், கூடுதல் துணை தேர்வாணையர் முருகன் மற்றும் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.