சமூகம்
Published:Updated:

கடைக்கோடிக்கு கிடையாதா கேந்திரிய வித்யாலயா?

கடைக்கோடிக்கு கிடையாதா கேந்திரிய வித்யாலயா?
பிரீமியம் ஸ்டோரி
News
கடைக்கோடிக்கு கிடையாதா கேந்திரிய வித்யாலயா?

கடைக்கோடிக்கு கிடையாதா கேந்திரிய வித்யாலயா?

பின்தங்கிய கிராமப் பகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளியை அமைக்க மத்திய அரசு முன்வந்தபோதிலும், அதற்குத் தேவையான இடத்தை ஒதுக்கிக்கொடுக்க தமிழக அரசு முன்வரவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இதற்காக அந்தக் கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தபோதிலும், மாநில அரசும் மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே பேய்க்குளம், ஆசீர்வாதபுரம் உட்பட 13 குக்கிராமங்களை உள்ளடக்கியது, ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சி. வேலைவாய்ப்பில் பின்தங்கிய இந்த ஊராட்சியை 2014-ம் ஆண்டில், தி.மு.க-வின் மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழி தத்தெடுத்தார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புப் பயிற்சிகள் அளித்தல், பள்ளிகளுக்குக் கூடுதல் வகுப்பறைகள் கட்டிக்கொடுத்தல் எனப் பல்வேறு திட்டங்களை இங்கு கனிமொழி செயல்படுத்திவருகிறார். இதன் தொடர்ச்சியாக அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வித் திறனை மேம்படுத்த, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியைக் கொண்டுவர அவர் முயற்சி எடுத்துவருகிறார். இதுதொடர்பாக மத்திய மனிதவளத்துறை அமைச்சரான பிரகாஷ் ஜவ்டேகரிடமும் பலமுறை கனிமொழி பேசியிருக்கிறார். பள்ளிக்கான  இடத்தைத் தமிழக அரசு வழங்கினால், உடனடியாகப் பள்ளியை அமைப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால், தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் அரசியல் காரணமாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டுகிறார்கள் பொதுமக்கள்.

கடைக்கோடிக்கு கிடையாதா கேந்திரிய வித்யாலயா?

இதுகுறித்து பேய்க்குளம் வியாபாரிகள் சங்கத் தலைவரான ஸ்டாலின், “இந்தப் பகுதியைச் சுற்றிலும் 40 கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள், இங்கிலீஷ் மீடியம் பள்ளிகளில் படிக்க 15 கி.மீ தூரம் போக வேண்டும். கனிமொழி எம்.பி எங்க கிராமத்தைத் தத்தெடுத்ததும், அவரிடம், ‘கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைச்சுத் தரணும்’னு கோரிக்கை வெச்சோம். மத்திய அமைச்சரிடம் பேசிய பின்னர் அவர் எங்களிடம், ‘போதுமான இடவசதி இருக்கிறதா?’ என்று கேட்டார். 1975-ம் வருஷம் என் தாத்தா உட்பட இதே கிராமத்தைச் சேர்ந்த மூணு தனிநபர்கள் இணைந்து பள்ளிக்கூடம் கட்டுவதற்காக அஞ்சு ஏக்கர் நிலத்தை கலெக்டர் பெயருக்குத் தானமாகக் கொடுத்திருக்காங்க. அந்த இடத்தை மாவட்ட நிர்வாகம் கொடுத்தால், அங்கேயே கேந்திரிய வித்யாலயா பள்ளியைக் கட்டிடலாம். அதையும் கனிமொழியிடம் சொன்னோம். மாணவர்களின் கல்விக்காக நாங்கள் ஏற்கெனவே தானமாக வழங்கிய நிலத்தைத்தான் கேட்கிறோம். கலெக்டரிடம் மூணு முறை மனுக் கொடுத்தும் பதில் இல்லை” என்றார்.

ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஸ்ரீதரிடம் பேசினோம். “தானமாகக் கொடுத்த ஐந்து ஏக்கர் நிலத்தில் மரக்கன்றுகளை அரசு நடவுசெய்துவருகிறது. அங்கு பள்ளி அமைந்தால், இரண்டாயிரம் மாணவர்கள் பயனடைவார்கள். மாநில அரசும் மாவட்ட நிர்வாகமும் அனுமதி தர மறுப்பது தவறான நடவடிக்கை” என்றார் வேதனையுடன்.

குறுகால்பேரி கிராமத்தைச் சேர்ந்த கண்ணன், “நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் தொழில் துறையிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்பட்டவை. கனிமொழி எம்.பி., தான் தத்தெடுத்த இந்தக் கிராமத்துக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர், சாலை, மருத்துவம் உள்ளிட்ட வசதிகளைச் செய்துகொடுத்திருக்கிறார். தரமான கல்வி கிடைக்கவும் முயற்சி செய்துவருகிறார். அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய தமிழக அரசு, அரசியல் பகை காரணமாகத் தடை செய்வது வேதனையாக இருக்கிறது” என்றார்.

கடைக்கோடிக்கு கிடையாதா கேந்திரிய வித்யாலயா?

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  “மத்திய அரசுப் பணியாளர்களின் குழந்தைகள் கல்வி கற்பதற்காக கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்கப்படுகின்றன. பிற மாணவர்களுக்கு, தகுதியின் அடிப்படையில் சீட் வழங்கப்படும். அதுபோல, சுற்றுவட்டாரப் பகுதிகளில் மத்திய அரசு நிறுவனம் ஏதும் இல்லை.  எனினும், கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க, மத்திய அரசு தயாராக உள்ளது என மக்கள் சொல்கின்றனர். பள்ளிக்கான அடிப்படைக் கட்டமைப்புகள் தயாராக இருப்பதாக மாவட்ட நிர்வாகம், மாநில அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். அதன் பின்னர் மாநில அரசு பரிந்துரை செய்தால் மட்டுமே, மத்திய அரசு அனுமதி வழங்கும்’’ என்றார்.

கனிமொழி தரப்பில் பேசியவர்களோ, “நாடு முழுவதும் கடந்த ஆண்டு 103 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இவற்றில், 70 சதவிகிதத்துக்கும் அதிகமான இடங்களில் மத்திய அரசு நிறுவனங்கள் இல்லை. எனவே, மத்திய அரசு நிறுவனம் இருந்தால்தான் இந்தப் பள்ளியை அமைப்போம் என்று சொல்வது தவறு” என்றனர்.

- பி.ஆண்டனிராஜ், இ.கார்த்திகேயன்

படங்கள்: ப.கதிரவன்