அலசல்
சமூகம்
Published:Updated:

கஜா துயரம்... என்ன செய்தது இந்த அரசு?

கஜா துயரம்... என்ன செய்தது இந்த அரசு?
பிரீமியம் ஸ்டோரி
News
கஜா துயரம்... என்ன செய்தது இந்த அரசு?

பொதுத் தேர்வை எப்படி எழுதப்போகிறார்கள் மாணவர்கள்? படங்கள்: பா.பிரசன்னா

மிழகத்தில் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் மார்ச் 1-ம் தேதியும், 11-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் மார்ச் 6-ம் தேதியும், 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் மார்ச் 14-ம் தேதியும் தொடங்கவுள்ளன. மக்கள், கஜா புயலில் வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்துவிட்ட நிலையில், மாணவர்களும் அந்தப் பாதிப்பிலிருந்து இன்னும் மீளவில்லை. உணவு, உடை எதுவும் கிடைக்காமல் முகாம்களில் கணிசமான நாள்களைக் கழித்த மாணவர்கள், உளவியல் ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குடும்பத்தின் வாழ்வாதார இழப்பு, மாணவர்களைப் படிப்பின் மீதான கவனத்தைச் சிதறடித்துள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகள் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அரசு அப்படி எதையும் செய்யவில்லை. எப்படி இருக்கிறார்கள் மாணவர்கள்? சில பள்ளிகளுக்குச் சென்றோம்.

கஜா துயரம்... என்ன செய்தது இந்த அரசு?

நாகை மாவட்டத்தில் பாரம்பர்யப் பெருமை வாய்ந்தது மணக்குடி வையாபுரியார் மேல்நிலைப் பள்ளி. இங்கு 97 பேர் 10-ம் வகுப்பு தேர்வுகளையும், 113 பேர் 12-ம் வகுப்பு தேர்வுகளையும் எழுதவுள்ளனர். அங்கு பணியாற்றும் ஆசிரியர்களிடம் பேசினோம். “எங்கள் பள்ளியில் பயிலும் சுமார் 15 மாணவர்களின் வீடுகள் புயலில் பாதிப்படைந்தன. அந்த வீடுகளுக்குத் தேவையான கீற்று மற்றும் பாளைகளை ஆசிரியர்கள்தான் வாங்கிக்கொடுத்தோம். பள்ளி முடிந்த பின்பு மாலையில் ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்துகிறோம். படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு இரவு ஏழு மணி வரையில் பாடம் சொல்லித்தருகிறோம். தேர்வு சமயத்தில் அவர்களைப் பள்ளியி லேயே தங்க வைக்கவும் திட்டமிட்டுள்ளோம். மாலையில் எங்கள் செலவில் டீ, பிஸ்கட் தருகிறோம். தேர்வு முடியும் வரை மாணவர்களை ஊக்கப்படுத்த யாரேனும் ஸ்நாக்ஸ் உதவி செய்தால் பரவாயில்லை. இது பின்தங்கியப் பகுதி என்ற போதிலும், கடந்த ஆண்டு 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் 94 சதவிகிதம் பேர் வெற்றி பெற்றனர்” என்றனர்.

திருப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை 112 பேரும், 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை 163 பேரும் எழுதவுள்ளனர். தலைமையாசிரியர் கணேசனிடம் பேசியபோது, “மாணவர்களுக்கு காலையில் பள்ளி தொடங்கும் முன் ஒரு மணி நேரமும், மாலையில் பள்ளி முடிந்த பின்பு ஒரு மணி நேரமும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மாலையில் ஏதேனும் ஸ்நாக்ஸ் கொடுத்தால் மாணவர்கள் கொஞ்சம் உற்சாகமாக இருப்பார்கள். அதற்கு இங்கே வசதி இல்லை” என்றார்.

தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த பெற்றோர் சிலரிடம் பேசியபோது, “தலைஞாயிறு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கணினி ஆசிரியர், ஓவிய ஆசிரியர், தொழிற்கல்வி ஆசிரியர், கைத்தொழில் ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் ஆகியோர் இல்லை. மேல்நிலை வகுப்புகளுக்கு இயற்பியல் ஆசிரியரைத் தவிர வேறு எந்தப் பாடத்துக்கும் ஆசிரியர்கள் இல்லை. இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர், வாட்ச்மேன் ஆகியோரும் இல்லை. இப்பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் குண்டுரான்வெளி, வண்டல் ஆகிய தீவு கிராமங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தினம்தோறும் படகில்தான் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், கஜா புயலில் இப்பள்ளி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கடந்த இரண்டு மாதங்கள் பள்ளி வளாகம், கஜா புயலின் தங்கும் முகாமாக மாறியிருந்தது. இந்தச் சூழலில், மாணவர்கள் எப்படிப் படிப்பார்கள்? கஜா புயலில் பாதித்த பல பகுதிகளில் மாணவர்கள் படிக்கிற சூழலே இல்லை. பொதுத்தேர்வை எப்படி எழுதப்போகிறார்களோ...” என்று கவலையுடன் கூறினர்.

கஜா துயரம்... என்ன செய்தது இந்த அரசு?

இத்தனை சிரமங்களுக்கு இடையிலும், இங்கு பெற்றோர் - ஆசிரியர் கழகம் சார்பில் தற்காலிக ஆசிரியர்களை அமர்த்தி, பொதுத் தேர்வுக்கு மாணவர்களைத் தயார் செய்துவருகின்றனர்.

இந்தப் பிரச்னை குறித்து நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதாவிடம் பேசினோம். “தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு காலையிலும், மாலையிலும் சிறப்பு வகுப்புகள் அந்தந்தப் பள்ளிகளில் நடத்தப்படுகின்றன. ஆசிரியர்கள் தங்கள் சொந்தப் பணத்திலிருந்து மாணவர்களுக்கு டீயும் ஸ்நாக்ஸும் வாங்கித் தருகிறார்கள். தகட்டூர் மேல்நிலைப் பள்ளியில் இரவு வகுப்புகள் நடைபெறுகின்றன. சில இடங்களில் லயன்ஸ் கிளப் போன்ற தொண்டு நிறுவனங்கள், மாணவர்களுக்கு உதவிகளைச் செய்கிறார்கள். பொதுத் தேர்வுகள் எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளியிலேயே தேவையான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன” என்றார்.

ஆனால், இவையெல்லாம் போதாது. எந்தப் பிரச்னைகளும் இல்லாத சூழலிலேயே பொதுத் தேர்வுகளை எதிர்க்கொள்ள தனியார் பள்ளிகளில் நிறைய வசதிகள் செய்துகொடுக்கப்படுகின்றன. ஆனால், எப்போதும் ஏராளமான குறைகளைக் கொண்டிருக்கும் அரசுப் பள்ளிகளில், பொதுத் தேர்வுகளை எதிர்நோக்கி - கஜா துயரத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவர்களுக்கு பலமடங்கு கூடுதலான அக்கறையை அரசு செலுத்த வேண்டும்.

- மு.இராகவன்