``மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் வகையிலான புதிய ஆன்லைன் பாடத்திட்டங்கள், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்படும்'' எனப் புதிய துணைவேந்தர் பிச்சுமணி தெரிவித்தார்.
நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பிச்சுமணியை நியமித்து, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டார் அதைத் தொடர்ந்து, சனிக்கிழமை அவர் முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். அடுத்த மூன்று வருடங்களுக்கு அவர் இந்தப் பொறுப்பில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறையில் நீண்ட அனுபவம் கொண்டவரான பிச்சுமணியின் வரவால், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் புதிய துறைகள் தொடங்கப்பட்டு, மாணவர்களின் நலன் மேம்படும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த துணைவேந்தர் பிச்சுமணி, ’’மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தை மேலும் வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்லும் வகையில் அனைத்துத் துறைகளின் தலைவர்களோம் இணைந்து செயலாற்றுவேன். மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வகையில் அவர்களின் நலன் சார்ந்து திட்டமிட்டு, புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
தற்போது, இந்தப் பல்கலைக்கழகத்தில் 29 துறைகள் செயல்படுகின்றன. அவற்றை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளோம். மாணவர்கள், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்க ஊக்குவிக்கப்படுவார்கள். கலைத்துறை மாணவர்களும் அறிவியல்துறை மாணவர்களும் இணைந்து புதிய ஆய்வுகள் மேற்கொள்ளும் வகையில், வழிவகை மேற்கொள்ளப்படும். மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் வகையிலான புதிய ஆன்லைன் பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில், வெளிநாட்டில் உள்ள தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும். இதன்மூலம், மாணவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் ஆய்வு மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படும். அத்துடன், வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டு மாணவர்கள், நமது பல்கலைக்கழகத்தில் வந்து படிக்கும் வகையில் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.