கேரளாவில் கோழிக்கோடு அருகே பெரம்பரா கிராமத்தில் பட்டியலின மாணவர்கள் படித்ததால், அந்தப் பள்ளியில் மற்ற சமூகத்தினர் தங்கள் குழந்தைகளைப் படிக்கச் சேர்க்காமல் தவிர்த்து வந்தனர். பல ஆண்டு காலமாகப் பட்டியலின மாணவர்கள் மட்டுமே இங்கு படித்து வந்தனர். பிற சமூக மக்கள் தங்கள் குழந்தைகளை இங்கே சேர்த்தாலும், பட்டியலின மாணவர்களுடன் சேர்ந்திருக்க மாட்டார்கள். தங்களுக்குத் தனி இடம் ஒதுக்க வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தனர். குழந்தைகளிடம் பிரிவினை காட்டக் கூடாது என்பதால் பள்ளி நிர்வாகமும் பிற சமூக மக்களைச் சேர்க்க வற்புறுத்தவில்லை.
(KSTM/Facebook)

(KSTM/Facebook)
கடந்த 10 ஆண்டு காலமாகப் பட்டியலின மாணவர்கள் மட்டுமே இங்கு கல்வி கற்று வந்தனர். இதனால், இந்தப் பள்ளிக்கு `பட்டியலின பள்ளி ' என்ற பெயரும் நிலைத்துவிட்டது. இந்நிலையில், கேரள ஆசிரியர் சங்கத்தினர் பெரம்பாரா கிராமத்தைச் சேர்ந்த மற்ற சமூக மக்களைச் சந்தித்துப் பேசி, பள்ளியில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்குமாறு அறிவுறுத்தினர். தங்களின் இந்த நோக்கத்துக்கு `ஆபரேஷன் ரோகித் வெமுலா' என்றும் ஆசிரியர்கள் பெயர் சூட்டினர்.

சாதிய பாகுபாடுகளைக் களைய வேண்டிய தருணம் இது என்றும் எடுத்துக் கூறினார்கள். பல முறை எடுத்துக் கூறியும் பிற சமூக மக்கள் அதை ஏற்கவில்லை. ஆனால், இதே ஊரைச் சேர்ந்த இஸ்லாமிய மக்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க முடிவு எடுத்தனர். இதனால், ஆசிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததோடு, பள்ளியில் சேர்ந்த குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். பட்டியலின மாணவர்கள் தங்களுடன் படிக்கச் சேர்ந்த புதிய மாணவர்களுக்கு கேக் ஊட்டினர். மதியம் அனைவரும் தரையில் அமர்ந்து மதிய உணவும் சாப்பிட்டனர்.