Published:Updated:

`நம்ம புதுச்சேரியை நல்லாத் தெரிஞ்சுப்போம்' - தேர்வில் கலக்கியச் சுட்டிகள்

ஜெ.முருகன்
அ.குரூஸ்தனம்

புதுச்சேரி மாணவர்களுக்கு சுட்டி விகடன் மூலம் நடத்தப்பட்ட ‘இன்ஃபோ 200’ என்ற தேர்வில் புதுச்சேரி – காரைக்காலைச் சேர்ந்த 5,000 மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

கல்வித்துறை அமைச்சருடன் மாணவர்கள்
கல்வித்துறை அமைச்சருடன் மாணவர்கள்

அனைத்து பள்ளி மாணவர்களும் தங்களின் மாவட்டம் குறித்தும் அதன் வரலாற்று சிறப்புகள் குறித்தும் தெளிவாக தெரிந்து கொள்வதற்காக ‘இன்ஃபோ 200’ என்ற இணைப்பிதழை பள்ளிகள் வழியே கொடுத்து, தேர்வுகளை நடத்தி பரிசுகளை வழங்கி வருகிறது நம் சுட்டி விகடன். அதன்படி சேலம், மதுரை, சென்னை, தர்மபுரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்களைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலுள்ள பள்ளிகளிலும் சுட்டி விகடன் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டன.

அமைச்சரிடம் பரிசு பெறும் மாணவிகள்
அமைச்சரிடம் பரிசு பெறும் மாணவிகள்

இதில் புதுச்சேரி மற்றும் காரைக்காலைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பங்கேற்றன. 26 பள்ளிகளைச் சேர்ந்த 5,000 மாணவர்கள் கலந்துகொண்டு ஓ.எம்.ஆர் (OMR SHEET) முறையில் தேர்வு எழுதினர்.

தேர்வில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகள்
தேர்வில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகள்
அ.குரூஸ்தனம்

அதில் வெற்றிபெற்ற 300 மாணவ மாணவிகளை கௌரவித்து அவர்களுக்கு பரிசளிக்கும் விழா புதுச்சேரி அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாணவர்களுடன் ஆசிரியர்களும், பெற்றோர்களும் பங்கேற்றதால் அரங்கம் நிரம்பியது.

சுட்டி விகடன் ஆசிரியர் கே.கணேசன் மற்றும் விகடன் குழும விற்பனைப் பிரிவின் துறைத் தலைவர் சுந்தர் தியாகராஜன் கலந்து கொண்ட இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக புதுச்சேரி வேளாண், கல்வி மற்றும் மின்துறை அமைச்சர் இரா.கமலக்கண்ணன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசளித்தார்.

புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன்
புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன்

அப்போது மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர்,``வெறும் படிப்பு மட்டும் ஒருவரை வாழ்வில் வெற்றிபெற வைத்துவிடாது. அதனால் வாசிக்கும் திறனை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

மாணவர்களுக்கு உலக அறிவும், பொது அறிவும் மிகவும் முக்கியம். வாசிப்புப் பழக்கம் இருந்தால்தான் இவற்றைப் பெற முடியும். புத்தகங்களை தலை குனிந்து படித்தால் மட்டுமே வாழ்வில் தலைநிமிர்ந்து வாழமுடியும்.

மாணவர்கள்
மாணவர்கள்

ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை பயின்றால் மட்டுமே சமுதாயம் அவர்களை அங்கீகரிக்கும். 93 வருடங்கள் பாரம்பர்யமிக்க விகடன் குழுமத்தில் இருந்து வெளிவரும் சுட்டி விகடன் நடத்திய தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகள்” என்றார்.