Published:Updated:

தமிழில் படித்தால் இடஒதுக்கீடு... ஆனால், தமிழில் நடத்தப்படாத ஆசிரியர் தகுதித் தேர்வு!

விஷ்ணுராஜ் சௌ

கணினி ஆசிரியர்களுக்காக நடைபெற்ற தகுதித் தேர்வானது, ஆங்கிலத்தில் மட்டும் நடைபெற்றிருப்பது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

Teacher Eligibility Test
Teacher Eligibility Test ( விகடன் )

தமிழகத்தில் ஆசிரியர்களின் போராட்டங்கள் என்பது கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்கதையாகிவருகின்றன. அதேவேளையில், பள்ளிக்கல்வித் துறையில் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டிருக்கும் அறிவிப்புகளும் அதிரடிகாட்ட ஆரம்பித்துள்ளன.

Directorate of Public Instruction Campus
Directorate of Public Instruction Campus
விகடன்

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கிட்டத்தட்ட 800-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் இல்லாத சூழல்தான் உள்ளது. இந்நிலையில், கணினி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு தொடர்பான அறிவிப்பு, கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. அதனடிப்படையில், கணினி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள 119 தேர்வு மையங்களில் நடைபெற்றது.

இந்தத் தேர்வு நடைபெற்ற முறையிலே பல்வேறு குளறுபடிகள் நடந்தேறின. தேர்வானது முழுமைக்கும் கணினி மூலமாக நடைபெற்றதால், பல்வேறு தேர்வறைகளில் ஏற்பட்ட சர்வர் கோளாறு காரணமாகத் தேர்வெழுத வந்த பலரும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட, அவர்களுக்கான மறுதேர்வையும் அறிவித்தது, ஆசிரியர் தேர்வு வாரியம்.

Directorate of government examinations
Directorate of government examinations

இந்நிலையில், கணினி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான 20 சதவிகித இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தத் தகுதித் தேர்வு முழுமையும் ஆங்கிலத்தில் நடைபெற்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்தத் தகுதித் தேர்வு குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், எந்த மொழியில் தேர்வு நடைபெறும் என்பது தொடர்பான எந்தச் செய்திகளும் குறிப்பிடப்படவில்லை.

ஆனால், தேர்வுக்கு ஒருவாரத்துக்கு முன்பு வெளியிடப்பட்டிருந்த நுழைவுச் சீட்டில் தேர்வானது முழுமையாக ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தத் தேர்வு முறையில் நடைபெற்ற குளறுபடிகள் காரணமாக, இந்தத் தேர்வை முழுமையாக ரத்துசெய்து மீண்டும், புதிய தேர்வை நடத்த வேண்டும் எனத் தமிழ் வழியில் கல்வி பயின்ற கணினி ஆசிரியர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் கணினிப் பாடங்களானது, தமிழில்தான் கற்பிக்கப்பட்டு வருகின்றன. தேர்வுகளானது, முழுமையாக ஆங்கிலத்தில் நடத்தப்படுவதால் முறையாக ஆசிரியர் படிப்புகளின் வாயிலாக வரும் ஆசிரியர்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், `கணினி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், தேர்வு எந்த மொழியில் நடைபெறும் எனக் குறிப்பிடாதது ஏன்' எனக் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இதுதொடர்பாக ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் செப்டம்பர் 6-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்' என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லாப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் குமரேசன், ``தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியான சமயத்திலேயே, தேர்வானது எந்த மொழியில் நடைபெறும் என்பது குறித்து முதல்வர் தனிப்பிரிவில் நாங்கள் கேட்டிருந்தோம். அதேபோல் மற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுகளானது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடைபெறுவதுபோல இந்தத் தேர்வுகளும் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் நடைபெற வேண்டும் என்பது தொடர்பான கோரிக்கையையும் முன்வைத்திருந்தோம். ஆனால், தகுதித் தேர்வில் 150 கேள்விகளும் ஆங்கிலத்தில்தான் கேட்கப்பட்டிருந்தன. சைக்காலஜி சம்பந்தமான கேள்விகள்கூடத் தமிழில் கேட்கப்படவில்லை.

Teacher Eligibility Test
Teacher Eligibility Test

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் கணினிப் பாடங்களானது, தமிழில்தான் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் தகுதித் தேர்வில் தற்போது இன்ஜினீயர் பட்டதாரிகளும் தேர்வு எழுதுகின்றனர். தேர்வுகளானது முழுமையாக ஆங்கிலத்தில் நடத்தப்படுவதால், முறையாக ஆசிரியர் படிப்புகளின் வாயிலாக வரும் ஆசிரியர்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் 11-ம் வகுப்பில்தான் முதல்முறையாகக் கணினி அறிவியல் பாடத்தைப் படிக்கிறார்கள். ஆனால், தனியார் பள்ளிகளில் கணினிப் பாடத்திட்டமானது முதலாம் வகுப்பிலிருந்தே கற்பிக்கப்படுகிறது. ஆகையால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான வாய்ப்புகள் குறைக்கப்படுகின்றன. சமச்சீர் கல்வியின்போது ஆரம்ப கல்வியிலேயே கணினி கற்கும் விதமாகப் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு புத்தகங்கள் எல்லாம் கொண்டுவரப்பட்டன. ஆனால், இந்தப் புத்தகங்கள் இப்போது நிறுத்தப்பட்டுவிட்டன. அதேவேளையில், கிட்டத்தட்ட 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணினி ஆசிரியர்கள் வேலையில்லாதவர்களாக உள்ளோம்” என்றார்.

தேர்வு நடைமுறைகளில் நடந்துவரும் குளறுபடிகளில், அரசு கவனம் செலுத்த மறுத்தல் என்பது மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும்.