FA பக்கங்கள்
Published:Updated:

மழைக் கால அனுபவம்!

மழைக் கால அனுபவம்!

##~##

தர்மபுரி மாவட்டம் - பென்னாகரம் ஒன்றியம் கருங்கல்மேடு தொடக்கப் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள், தங்களின் மழைக் கால அனுபவங்களை வகுப்பில் பகிர்ந்துகொண்டனர். அவற்றில் சிலரது அனுபவங்கள்...

ம.சிந்து: ''எனக்கு மழை என்றால் மிகவும் பிடிக்கும். மழை பெய்யும்போது எங்க வீட்டுக் கூரையில் இருந்து மழைநீர், வெள்ளிக்கம்பிபோல் விழுவதைப் பார்ப்பேன். அந்த மழைநீரைக் கையில் பிடித்து விளையாடுறது ரொம்ப ஜாலியா இருக்கும். அம்மா, 'மழையில் விளையாடாதே... காய்ச்சல் வரும்’னு சொன்னாலும், விளையாடாமல் இருக்க முடியாது. அவங்க பார்க்காமல் இருக்கும்போது, ஜாலியா விளையாடுவேன். காகிதத்தில் கப்பல் செய்து மழைநீரில் விடுவேன்!’

ம.ஏழுமலை: ''முன்பெல்லாம் எங்கள் வீடு, மழை வந்தால் ஒழுக ஆரம்பிச்சிடும். ஒருநாள் இரவு நேரம் கனமழை பெய்தது. மழைநீர் சொட்டுகிற இடத்தில் எல்லாம் வீட்டில் உள்ள பாத்திரங்களை வைத்து, தரை ஈரமாகாமல் பார்த்துக்கிட்டேன். பாத்திரம் நிரம்பியதும், அதை எடுத்து வீட்டுக்கு வெளியே தெருவில் ஊற்றினேன். அன்று இரவு மழை நிற்கும் வரை எங்கள் வீட்டில் யாரும் தூங்கவே இல்லை. அடுத்த நாளே எங்கப்பா, வீட்டுக் கூரையைச் சரிசெய்தார். அந்த மழை நாளை என்னால் மறக்கவே முடியாது.''

மழைக் கால அனுபவம்!

மா.தனலட்சுமி: ''ஒருநாள் பள்ளிக்கூடம்விட்டுச் செல்லும்போது, மழை பிடித்துக்கொண்டது. நனைந்தபடியே வேகமாக வீட்டைநோக்கி ஒடினேன். வீட்டுக்குப் போவதற்குள் முழுக்க நனைஞ்சுட்டேன். வீட்டுக்குப் போனதும், 'மழை அதிகமாப் பெய்தால் வழியில் இருக்கிற மரத்தடியில் நின்னு மழைவிட்டதும் வரலாமே'னு அம்மா திட்டினாங்க. நான், ' அம்மா, 'மழை பெய்யும்போது மரத்தின் மீது இடி விழும் அபாயம் உள்ளதால், மரத்தடியில் நிற்கக் கூடாது’னு எங்க ஆசிரியர் சொல்லியிருக்கிறார். அதனாலதான் மரத்தடியில் நிற்கலை'' என்றேன். 'ஓ... அப்படியா?'னு ஒரு புதிய தகவலைத் தெரிந்துகொண்ட ஆச்சர்யத்துடன் எங்க அம்மா என்னை வாரி அணைச்சுக்கிட்டாங்க!''

கு.சக்திவேல்: ''போன வருஷம் நம்ம ஊரில் மழையே பெய்யாமல், குடிக்கத் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டோம். அதுக்கு அப்புறம் ரொம்ப நாள் கழித்து மழை பெய்தது. அந்த நாள் இன்றைக்கும் என் மனசுல இருக்கு. அன்றைய மாலை நேரம்... லேசாத் தூறல் போட்டது. நாங்க, 'மழை வருது... மழை வருது... நெல்லைக் கூட்டுங்க’னு பாட்டுப் பாடிக்கிட்டு சந்தோஷமா விளையாடிட்டு இருந்தோம். கொஞ்ச நேரத்தில் தெருவெல்லாம் ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துப்பதைப் போல ஓடியது. அதனால், தண்ணீர் பிரச்னை தீர்ந்து, எல்லோருக்கும் சந்தோஷம்!''

ஆசிரியர் எஸ்.செல்வராஜ்: ''அருமை! மழை நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவத்தைத் தருகிறது. 'வானம் சுருங்கும்போது தானம் சுருங்கும்’ என்று மழையின் அருமையை அழகாக வள்ளுவர் சொல்லியிருக்கிறார். மழை நமக்கு இன்றியமையாதது என்பதால், மரம் வளர்ப்போம்... மழை பெறுவோம்.''

இதுபோன்று மாணவர்களின் அனுபவங்களை உங்கள் வகுப்பறையிலும் பகிரச்செய்யுங்கள். அவர்களின் ஈடுபாட்டுக்கு ஏற்ப மதிப்பிடுங்கள்.  

- த.சிங்காரவேலன், தர்மபுரி.