உற்பத்தித் தொழிற்சாலைகள் !
##~## |
ஆசிரியர்: ''வணக்கம் மாணவர்களே... தொழிற்சாலைகளை, பல காரணிகளைக்கொண்டு வகைப்படுத்த முடியும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.''
கயல்விழி: ''தெரியும் டீச்சர். தொழிற்சாலை வகைகளின் காரணிகள் என்னென்ன என்பதை நான் கூறுகிறேன். 1. மூலப்பொருள் 2. தொழிற்சாலை உரிமம் 3. மூலதன அளவு 4. உற்பத்தியாகும் பொருள்.''
ஆசிரியர்: ''மாணவர்களே, உங்கள் வகுப்பறையிலுள்ள உற்பத்திப் பொருட்கள் ஒவ்வொன்றின் மூலப்பொருட்கள் என்னென்ன என்று அறிந்து, அதனை வகைப்படுத்துங்கள்.''
கயல்விழி: ''கரும்பலகை, மேசை, நாற்காலி போன்றவை காட்டுவளம் சார்ந்த மூலப்பொருட்கள். கண்ணாடி, மை, கடிகாரம் போன்றவை கனிமவளம் சார்ந்த மூலப்பொருட்கள்.''
ஆசிரியர்: ''தனியார் துறை, பொதுத் துறை, இணைத் துறை, கூட்டுறவுத் துறை முதலியவை தொழில் உரிமங்களாகும். இதற்கு ஒவ்வொரு குழுவினரும் ஓர் எடுத்துக்காட்டு சொல்லுங்கள்.''

குழு அ: ''டாடா மொபைல் - தனியார் துறை.''
குழு ஆ: ''தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம் - பொதுத் துறை.''
குழு இ: ''சர்க்கரை ஆலை - கூட்டுறவுத் துறை.''
குழு ஈ: ''கூடங்குளம் அணுசக்தி நிலையம் - இணைத் துறை.''
ஆசிரியர்: ''உங்கள் பகுதியில் உள்ள முக்கியத் தொழிற்சாலை எது? அந்த இடத்தில் அமைந்ததற்கான 'மூலதன அளவு’ காரணிகளைப் பட்டியலிடுக.''
துர்கா: ''டீச்சர், வேலூர் மாவட்டத்தில் இருக்கும் 'ஙிபிணிலி’ கம்பெனி, 'பெருநிலை மூலதன அளவுகொண்ட தொழிற்சாலை’ என்று எங்கள் அப்பா கூறியுள்ளார்.''
தமிழ்க்குடிமகன்: '' 'குடிசைத் தொழில்’ என்பது மிகக் குறைந்த முதலீடுகொண்ட தொழிலாகும்.''

விக்னேஷ்: ''பாய் பின்னுதல், மரப்பொம்மைகள், பனையோலை... முதலியன தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க கைவினை மற்றும் குடிசைத் தொழில் மூலம் உற்பத்தியாகும் பொருட்களாகும்.''
ஆசிரியை: ''அருமை மாணவர்களே... உங்கள் கருத்துகளை சிறப்பாக எடுத்துவைத்தீர்கள். இதன் அடிப்படையில் 'தொழிற்சாலை வகைகள்’ என்ற தலைப்பில் செயல்திட்டம் ஒன்றைத் தயாரித்து வாருங்கள்.''
குறிப்பு: மாணவர்களின் ஈடுபாட்டின் அடிப்படையில் மதிப்பெண் அளிக்கலாம்.
- எஸ்.ரஜினி, அ.மே.நி.பள்ளி,
கொரட்டி, வேலூர்.