ஆற்றலைச் சேமிப்போம்!
##~## |
மாணவர்களை நான்கு குழுக்களாகப் பிரித்துக்கொள்ளவும். முதல் குழுவுக்கு பள்ளி மற்றும் பள்ளி வளாகத்தில் எந்த வகையான ஆற்றல்கள் பயன்படுத்தப்படுகின்றன; அவற்றில் எவை புதுப்பிக்க இயலாத ஆற்றல் மூலங்கள், எவை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் என்பதை அறிந்து, குழுவில் விவாதித்து பட்டியலிடச் செய்யவும்.
இரண்டாவது குழுவுக்கு பள்ளியில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவுகுறித்த தகவல்களை தலைமையாசிரியர் அனுமதியுடன் சேகரிக்கச் சொல்லவும். மின் சேமிப்பு மற்றும் மின் சிக்கனம் ஆகியவற்றின் அவசியத்தைக் குழுவில் விவாதித்து, ஆசிரியரிடம் தங்களின் ஆலோசனை அறிக்கையைச் சமர்ப்பிக்கவும்.
உதாரணம்: நீர் சேமிப்புத் தொட்டியில் தண்ணீர் நிரம்பி வழிந்தாலும், மின் மோட்டார் அணைக்கப்படாமல் இருக்கும். தேவையற்ற நேரங்களில் அதை அணைப்பது, வெளிச்சமான இடங்களில் மின்சார பல்புகள் எரிவதைத் தவிர்ப்பது, யாருமற்ற அறைகளில் மின்விசிறி சுழல்வதை நிறுத்துவது.

மூன்றாவது குழுவுக்கு, ஆற்றல் சேமிப்பு தினமாக ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து, தங்கள் குழுக்களில் உள்ள நபர்களிடம் ஆலோசனை நடத்தி, ஆற்றல் சேமிப்பு வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை வகுப்பறை மற்றும் பள்ளி வளாகத்தில் ஓட்டச்செய்யவும். பட்டிமன்றங்கள், பொது விவாதங்கள் மூலம் ஆற்றல் சேமிப்பு குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்தச் சொல்லவும்.
நான்காவது குழுவுக்கு, நாடகங்கள் மூலம், ஆற்றல் சேமிப்பின் அவசியத்தைக் மாணவர்களைக்கொண்டு காலைப் பிரார்த்தனையில் நடித்துக்காட்டச் சொல்லவும்.

மாணவர்களை, ஆற்றல்குறித்த அறிவு, மின்சார சேமிப்பின் அவசியம்குறித்த போதுமான திறன், தாம் பெற்ற அறிவை எடுத்துரைக்கும் பண்பு, வெளிப்படுத்தும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடலாம்.
- க.சரவணன்,
டாக்டர் டி.திருஞானம் தொடக்கப் பள்ளி,
கீழச்சந்தைப்பேட்டை, மதுரை-9.