1981 ஜனவரி மாதம், மதுரையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில்தான் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான விதை ஊன்றப்பட்டது. மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் எம்.ஜி.ஆர், 'தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும், தமிழில் ஆராய்ச்சிகளை மேம்படுத்தவும், உயர்கல்விக்கான பாடத் திட்டங்களை தமிழில் உருவாக்கவும் தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்படும்' என்று அறிவித்தார். செப்டம்பர் 15-ம் தேதி, பல்கலைக்கழகம் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது.
975 ஏக்கர் பிரமாண்டமான நிலப்பரப்பில் தமிழ் விழுமியங்களுடன் தொடங்கப்பட்ட அந்த பல்கலைக்கழகத்தில் 1991-ம் ஆண்டு, ஆராய்ச்சி படிப்புகளும் 2006-ம் ஆண்டு, தொலைநிலைக் கல்வி படிப்புகளும் தொடங்கப்பட்டன. மொழிபெயர்ப்பு, கலை, இலக்கியம், வரலாறு, தொல்லியல் சார்ந்த பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.

உலகத்துக்கே முன்னுதாரணமாக, மிகுந்த கனவுகளோடும் தொலைநோக்கோடும் தொடங்கப்பட்ட இந்த தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நிலை தற்போது கவலைக்குரியதாக மாறியிருக்கிறது என்கிறார்கள், பல்கலைக்கழகத்தோடு தொடர்பிலிருப்பவர்கள்.

விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் சசிதரன் என்ற வாசகர், தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடர்பாக ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். "தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இளநிலை தொலைநிலைப் படிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழ் பல்கலைக்கழகத்தை மூடப்போவதாக செய்திகள் வருகின்றன. அது உண்மையா?" என்பதே அவருடைய கேள்வி.

"தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இன்றைய நிலை மிகவும் கவலைக்குரியதாகத்தான் இருக்கிறது. நிர்வாகச் சிக்கல்கள், தகுதியில்லாத நபர்களைப் பணிக்கு அமர்த்தியது, தொலைநிலைக் கல்வியில் இருந்த இளநிலை பாடத்தை நீக்கியது, இணையதளத்தில் ஆங்கிலத்தில் வகுப்புகள் நடத்துவது, கல்வி மையங்களை மூடியது எனப் பல நடவடிக்கைகள் கவலையை ஏற்படுத்தியுள்ளன. இதை தமிழக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு மௌனமாக இருப்பது கவலை அளிக்கிறது" என்கிறார்கள், பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அக்கறையுள்ள பேராசிரியர்கள்.
உண்மையில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் என்னதான் நடக்கிறது?
கலைப் புலம், அறிவியல் புலம்,மொழிப் புலம், சுவடிப் புலம், வளர்தமிழ் புலம் என மொத்தம் 5 புலங்களாகப் பிரிக்கப்பட்டு, அவற்றின்கீழ் 26 துறைகள் கொண்டு செயல்பட்டுவருகிறது தமிழ்ப் பல்கலைக்கழகம். குறிப்பாக, மொழி, பண்பாடு, அறிவியல் என ஒவ்வொன்றிலும் தனித்தனி துறைகள் உள்ளன. உதாரணமாக, கலைப்புலத் துறையில் நாடகம், இசை, சிற்பம் ஆகிய தனித்துறைகள் உள்ளன. இதேபோல், ஒவ்வொரு புலத்தின் கீழும் சுமார் மூன்று அல்லது நான்கு துறைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், இலக்கியத்துறை மற்றும் தொல்லறிவியல் துறைகள் ஆகியன முக்கியமான துறைகளாகும். தொடக்கத்தில், உயர்கல்வித் துறையின்கீழ் செயல்பட்டுவந்த தமிழ்ப் பல்கலைக்கழகம், பின்னர் தமிழ் வளர்ச்சித்துறையின் கீழ் மாற்றப்பட்டது.

தமிழகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட தொலைநிலைக் கல்வி மையங்கள் செயல்பாட்டில் இருந்தன. இந்த கல்வி மையங்களே, தொலைநிலைக் கல்வியை ஊக்கபடுத்தும் வகையில் பல்கலைக்கழகத்திற்கும் மாணவர்களுக்கும் இடையே இணைப்புப் பாலமாகச் செயல்பட்டுவந்தன. மாணவர் சேர்க்கை, அதற்குரிய ஆவணங்கள் பெற்றுத்தருவது, பாடப்புத்தகங்கள் பெற்றுத்தருவது, பல்கலைக்கழக சுற்றறிக்கைகளை மாணவர்களிடம் கொண்டுசேர்ப்பது, அவர்களின் சந்தேகங்களைத் தீர்ப்பது உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் இந்த கல்வி மையங்களே செய்துவந்தன. ஏராளமான ஏழை மாணவர்கள் தமிழ்வழியில் கல்வி பயில இந்த மையங்கள் உதவியாக இருந்தன. மத்திய அரசின் வழிகாட்டுதலின் பேரில், டெல்லி பல்கலைக்கழக மானியக் குழு, சமீபத்தில் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் வழிகாட்டுதல் ஒன்றை வழங்கியது.

அந்த வழிகாட்டுதலில், கல்லூரிகள் மட்டுமே கல்வி மையங்களாகச் செயல்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழ்ப் பல்கலைக்கழக நிர்வாகம், கல்வி மையங்களை மூடிவிட்டு, அதற்கான கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறது. கல்விமையங்களை மூடியதால், மாணவர் சேர்க்கை பெருமளவு குறைந்துவிட்டது. இதேபோல், தொலைநிலைக் கல்வியின்மூலம் கொடுத்துவந்த இளநிலை பட்டப் படிப்புகளையும் நிறுத்திவிட்டனர். வரும் கல்வி ஆண்டில் இருந்து முதுநிலை பாடத்தையும் நிறுத்தப்போவதாகத் தகவல்கள் வருகின்றன. மேலும், ஆன்லைன் வகுப்புகளில் ஆங்கிலத்தில் பாடங்கள் நடத்தப்படுவது மிகவும் வருத்தம் தருவதாகச் சொல்கிறார்கள் ஆர்வலர்கள். தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நடத்தப்படும் அனைத்துத்துறை வகுப்புகளும் தமிழிலேயே இருந்தால் மட்டுமே தமிழ் வளர்ச்சியை உறுதிசெய்யமுடியும் என்கின்றனர்.

"இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள 26 துறைகளுக்கும் தனித்தனி நோக்கமும் இலக்குகளும் உண்டு. உதாரணமாக, சிற்பத்துறை என்பது ஒரு தனித்துவமான துறை. அதனுடைய முதன்மை இலக்கு என்பது, தொல்லியல் சார்ந்தது. அந்த துறையுடன் இணைந்து, ஒவ்வொரு சிற்பத்தையும் ஆய்வுசெய்து அறிவதே இதன் பணி. இந்த துறைகளில் வல்லுநர்களாக இருப்பவர்களே, பேராசிரியர், இணை பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியராக பணிக்கு அமர்த்தப்பட வேண்டும். ஆனால், 'சிற்பத்துறை வரலாற்றுத்துறையில் அடங்கும்' எனக் கூறி விதிக்குப் புறம்பாக வேறு பல்கலைக்கழகங்களில் இருக்கக்கூடிய சில வரலாற்றுப் பேராசிரியர்களை இங்கு பணி நியமனம் செய்துள்ளார்கள்.
இதுமாதிரி பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளுக்குப் புறம்பாகவும், பல்கலைக்கழக நோக்கத்திற்கு எதிராகவும் நிறைய வேலைகள் இங்கு நடக்கின்றன. அரசை ஏமாற்றி, ஆளுநரை ஏமாற்றி சுயநலத்துக்காக விதிகளை உருவாக்கித் தகுதியே இல்லாதவர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு நூறுக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பியிருக்கிறார்கள். மேலும், எல்லா துறைகளிலும் உள்ள 42 உயர்நிலை பொறுப்புகளுக்கு தரம், திறன் இல்லாதவர்களைப் போட்டுள்ளார்கள். இதன்மூலம், கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஊழல் நடைபெற்றிருக்கிறது. இதற்கு, நிர்வாகத்தில் பலர் உடந்தையாக இருந்துள்ளனர்.

நிதி நிர்வாக முறைகேடு, ஊழல் மற்றும் தகுதியற்ற நபர்களை நியமனம் செய்தது, இவற்றினால் அனைத்து துறைகளும் முடக்கியுள்ளன. தகுதியான நபர்கள் அந்தத் துறைகளிலே இருந்தும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்குக்கூட தகுதி இல்லாத நபர்களை நேரடிப் பேராசிரியராக நியமனம் செய்துள்ளனர். குறிப்பாக, மொழியியல் துறையில் பேராசிரியர்களாக இருப்பவர்களுக்கு மூன்று மொழிகள் தெரிந்திருக்க வேண்டும். ஆனால், தற்போது இருப்பவருக்கு ஒரு மொழிதான் தெரியும். அப்படியிருக்க, மொழிபெயர்ப்பு ஆராய்ச்சி எப்படி செய்ய முடியும்? அப்படியே செய்தாலும் அந்த ஆராய்ச்சி தரமானதாக இருக்காது. இவர்களைப் பின்பற்றும் மாணவர்களும் தரமானவர்களாக உருவாக வாய்ப்பே இல்லை.
இதை நாங்கள் கடுமையாக எதிர்த்தோம். இந்த ஊழலைத் தட்டிக் கேட்பதற்கு, இந்திய அளவில் உள்ள 23 அமைப்புகளுக்கும் பிரதமர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கும், நேரடியாகவும் தபால் மூலமும் புகார்கள் அனுப்பினோம். அதன்பிறகு, ஆளுநர் மற்றும் பல்கலைக்கழக வேந்தரான பன்வாரிலால் புரோகித்தை சந்திக்கச் சொல்லி உத்தரவு வந்தது. பின்னர், இரண்டு முறை அவரைச் சந்தித்து பிரச்னையை எடுத்துக் கூறினோம். ஆனால் அடுத்த இரண்டு நாட்களில், 'நான் அவதூறு பரப்புவதாகவும், போலி ஆவணம் தயாரித்து மிரட்டுகிறேன்' என்றும் கூறி என்னைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்" என்கிறார், 'ஆய்வு சிறகுகள்' மற்றும் 'ஆய்வு மாணாக்கர்கள்' கூட்டமைப்பைச் சேர்ந்த சிவக்குமார்.

ஓய்வுபெற்ற முன்னாள் துணைவேந்தர் பாஸ்கரனிடம் இதுகுறித்துப் பேசினோம்.
"என்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள், நூறு சதவிகிதம் பொய். விதியை மீறி யாரையும் பணிக்கு அமர்த்தவில்லை. சிறு அளவிலான விதிமீறல்கூட இதில் நடைபெறவில்லை. என்னை தொந்தரவுசெய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் எந்த ஆதாரமும் இல்லாமல் சிலர் அவதூறு கிளப்புகின்றனர். இது குறித்து என்னிடம் இருக்கும் ஆதாரங்களைக்கொண்டு நீதிமன்றத்தில் விளக்கமாக எடுத்துரைப்பேன்" என்றார்.
துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் என்ன சொல்கிறார்..?
"பல்கலைக்கழக மானியக்குழுவால் அவ்வப்போது வகுக்கப்படுகிற சட்டதிட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் நாங்கள் செயல்பட முடியும். 'முறைப்படுத்தப்பட்ட பட்டப்படிப்பில் இளங்கலைக் கல்வி இல்லாத பல்கலைக்கழகங்கள் தொலைநிலைக் கல்வியில் இளங்கலைப் படிப்பை நடத்தக்கூடாது' என்று ஆணை பிறப்பித்துள்ளனர். நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட இந்த நடவடிக்கையாலேயே இங்கும் இளங்கலைப் பாடங்கள் தொலைநிலைக் கல்வியிலிருந்து நீக்கப்பட்டன. அதற்காக, தற்போது இளங்கலை மற்றும் முதுகலை இணைந்த, ஒருங்கிணைந்த ஒரு பாடப் பிரிவை உருவாக்கியிருக்கிறோம். இளங்கலைக் கல்வியை மீண்டும் தொலைநிலைக் கல்வியில் கொண்டுவருவதற்கும் முயல்கிறோம். மானியக் குழு, பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்பட்ட 195 கல்வி மையங்களைக் கலைத்துவிட்டது.

அதற்குப் பதிலாக, கற்றல் உதவி மையங்களாகக் கல்லூரிகளை இணைத்துக் கொண்டு செயல்பட அறிவுறுத்தியுள்ளது. அதன்படி 15 கல்லூரிகளை இணைத்து, நான்கு மண்டலமாக பிரித்துக் கொண்டு செயல்படவிருக்கிறோம். இதன்மூலம், மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்துவதோடு, கல்வித் தரத்தையும் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முன்னாள் துணைவேந்தர் பாஸ்கரன், விதிக்குப் புறம்பாக பலரை நியமனம் செய்தது தொடர்பாக, ஏகப்பட்ட வழக்குகள் உள்ளன. பலர் தகவல் அறியும் உரிமை ஆணையத்திலும் தகவல் கேட்டுள்ளனர். லஞ்சஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். அதன்படி, இதில் தொடர்புடையவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுமோ, அவை மேற்கொள்ளப்படும். தற்போது, பல்கலைக்கழகத்திற்கு அதிகமாக நிதி ஒதுக்கப்படுகிறது. இதன்மூலம், பல ஆக்கபூர்வமான பணிகள் நடைபெறுவதுடன், வளர்ச்சிப் பாதையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் சென்றுகொண்டிருக்கிறது. மூடப்படும் என்பதெல்லாம் ஆதாரமற்ற செய்தி" என்கிறார் அவர்.
இந்தக் கட்டுரை வெளிவந்த நிலையில், தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் தரப்பிலிருந்து, கீழ்கண்ட விளக்கம் அனுப்பப்பட்டுள்ளது. "இந்தக் கட்டுரைக்கு வைக்கப்பட்டுள்ள தலைப்பு “தற்போது தமிழ்ப் பல்கலைக்கழகம் தடுமாறிக் கொண்டிருக்கிறது” என்ற பொருளைத் தருகிறது. இது தவறானது. தமிழக அரசின் உதவியுடனும் வெளிப்படைத் தன்மையுடனும் நேர்மையான நிர்வாகத்தின் வழியாகவும் தமிழ்ப் பல்கலைக்கழகம் செம்மையாக நடைபெற்று வருகிறது. ஆய்வுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. வளர்ச்சிப் பணிகள் வேகம் எடுத்துள்ளன. தமிழ்ப் பல்கலைக்கழகம் முறையான சேர்க்கையில் (Regular Admission) மாணவர்களின் எண்ணிக்கை இவ்வாண்டு கூடியுள்ளது. கடந்த காலங்களில் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதித்துறை, விசாரணை அமைப்புகள் வழங்கும் வழிகாட்டுதல்களைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் செயல்படுத்தும்..."
