இந்தியாவில் கொரோனா காலகட்டத்தில் நேரடி வகுப்புகளுக்குச் சாத்தியமில்லாமல் இருந்த நேரங்களில், ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு, உலகின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியாவில் போட்டி தேர்வு, உயர்நிலைப்பள்ளி, நுழைவுத்தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் என அனைவருக்கும் ஆன்லைன் கற்றல் தளத்தை அறிமுகப்படுத்தியிருந்தது.
2019 முதல் அமேசான் தனது கல்வி தளத்தைச் சோதித்து வந்த நிலையில் அவர்களால் உருவாக்கப்பட்ட ஆன்லைன் கற்றல் தளம்தான் இந்த அமேசான் அகாடமி. ஆகஸ்ட் 2023 முதல் இந்தியாவில், தனது கற்றல் சேவை தளத்தை நிறுத்தப்போவதாக அமேசான் அறிவித்துள்ள நிலையில் இந்த ஆண்டு பதிவு செய்த மாணவர்களுக்கு அவர்களின் முழு பணமும் திரும்பத் தரப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இதற்கான காரணம் என்ன என்று பார்த்தால், அமேசான் நிறுவனம் தனது செலவு குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அமேசான் அகாடமியை நிறுத்தப்போவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா லாக்டௌன்களுக்குப் பிறகு இந்தியா முழுவதும் மீண்டும் பள்ளிகள் மற்றும் பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டுவிட்டதால் பல ஆன்லைன் கல்வி சேவை நிறுவனங்கள் இது போன்ற முடிவுகளை எடுத்து வரும் நிலையில், தற்போது அமேசான் நிறுவனமும் இம்முடிவை எடுத்துள்ளது.