சிறுதொழில் நிறுவனங்கள் தோல்வியைத் தவிர்க்கும் வழிகள்! - செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

நீங்கள் உங்களுடைய சிறிய நிறுவனத்தை ‘புரொஃபஷனலைஸ்’ செய்தீர்கள் எனில், அது உங்களுக்கு மட்டுமல்ல உங்களிடம் வேலை பார்க்கும் நபர்களுக்கும் பணி ரீதியான பாதுகாப்பையும் சம்பளத்தையும் தரும். எப்படி..?
‘‘அமெரிக்காவில் புதிதாக ஆரம்பிக்கப் படும் சிறு நிறுவனங்களில் கிட்டத்தட்ட 25% முதலாண்டிலேயே தோல்வி அடைந்துவிடு கின்றன. முதல் ஐந்து ஆண்டுகளில் 45% நிறுவனங்கள் காணாமல் போய்விடுகின்றன. அமெரிக்காவில் மட்டும் 3.3 கோடி அளவுக்கு சிறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. சிறு தொழில்களின் தோல்வியானது மிகப் பெரிய பாதிப்பை சமூகத்தில் ஏற்படுத்தும் வல்லமை கொண்டதாக இருக்கிறது. இந்த முக்கியத்துவத்தை மனதில் கொண்டே சிறு தொழில் தோல்வி அடையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லும் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளேன்’’ என்கிறார் ‘ஹவ் டு குரோ யுவர் ஸ்மால் பிசினஸ்’ (How to Grow Your Small Business) என்ற புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதிய டொனால்டு மில்லர். இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்.

வளர்ச்சிக்கான வழிமுறைகள் உண்டா?
‘‘பெரும்பாலான சிறு நிறுவனங்கள் தோல்வி அடையக் காரணம், அந்த நிறுவனத்தின் வளர்ச்சியை எப்படி சரிவரக் கட்டமைப்பது என்பதைத் தெரிந்துகொள்ளாமல் நிறுவனர்கள் இருப்பதால்தான். சிறு நிறுவனங்களை நடத்தும் உங்களுக்கு எப்படி சம்பாதிப்பது (எதை எவ்வளவு விற்பது, எப்படி விற்பனையை அதிகரிப்பது, எப்படி லாபத்தை அதிகரிப்பது என்பவை) என்பது தெரியாவிட்டால் உங்களுடைய நிறுவனம் தோல்வி அடையவே செய்யும். பெரிய நிறுவனங்களுக்கு இருக்கும் அனுகூலமான பெரிய அளவிலான பட்ஜெட் (பணப்புழக்கம்/சுலபமாக பணம் திரட்ட/கடன் வாங்க முடிதல் போன்ற) இல்லாத காரணத்தால், சிறு நிறுவனங்களால் சிறிய தவறுகளையோ, ஏதாவது ஒரு விஷயத்தில் திறமையற்ற நிலையைக் கொண்டிருந்தாலோ நீண்ட காலத்துக்குத் தாக்குப்பிடித்து வெற்றி பெற முடிவதில்லை’’ என்கிறார் ஆசிரியர்.
‘‘எப்போதும் பணம் பணம் என்று பணத்துக்கு ஏற்பாடு செய்வதையே முழுநேர வேலையாகக் கொண்டிருக்கும் ஒரு சிறு தொழில் நிறுவனத்தை நடத்தும் நபர் மிகச் சுலபத்தில் உடல் / மனம் என இரு வகையிலும் சோர்வடைந்துவிடுகிறார். பல சமயங்களில், சிறிய நிறுவனங்களின் உரிமையாளர்கள் பலர், பெரிய நிறுவனங்களுக்குத் தேவையான அளவு பணம் தொடர்ந்து கிடைப்பதை பொறமையுடன் பார்க்கின்றனர். பெரிய நிறுவனங்களால் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது என்று கேட்டால், அவை கொண்டிருக்கும் நடைமுறைகளே அதற்குக் காரணம். அதே போன்ற நடைமுறைகளை சிறு நிறுவன உரிமையாளர்கள் உருவாக்கிவிட்டாலே அதிக சிரமம் ஏதும் படாமல் தொழிலை வளர்த்தெடுக்க முடியும்’’ என்று ஆசிரியர் சொல்வதை, மனதில்கொள்ள வேண்டும்.
நிறுவனத்தை ‘புரொஃபஷனலைஸ்’ செய்யுங்கள்...
சிறிய நிறுவனத்தை நிபுணர்களால் (professional) நடத்தப்படும் நிறுவனமாக ‘புரொஃபஷனலைஸ்’ செய்வது அவசியம். இதை எப்படிச் செய்வது என்ற கேள்விக்கான விளக்கத்தைத் தருகிறார் புத்தக ஆசிரியர். ‘‘உங்கள் நிறுவனத்தின் செயல்பாடு களை நிபுணர்கள் நடத்து வதுபோல அமைத்துக் கொள்ளாவிட்டால், நீங்கள் எதிர்பார்த்த வருமானம் ஈட்ட முடியாது. உங்கள் நிறுவனம் இந்த உலகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறைவானதாகவே இருக்கும். நிறுவனம் தொடர்பான முடிவுகள் அனைத்தையும் உரிமை யாளரே எடுக்க வேண்டியிருக்கும். இதனால் வளர்ச்சி குறித்த தொலைநோக்குத் திட்டங்கள் எதையுமே சிந்திக்கவும் செயல்படுத்தவும் முடியாமல் போகும். உங்கள் நிறுவனம் என்ன நிலைக்கு செல்ல வேண்டும் என்பது குறித்த தெளிவான ஒரு சிந்தனை இருந்தாலும், அதற்கான பாதையில் ஓர் அடிகூட முன்னோக்கி உங்களால் பயணிக்க முடியாமல் போகும். உங்கள் நிறுவனம் தயாரிக்கும் தயாரிப்புக்கோ, வழங்கும் சேவைக்கோ அதிக அளவிலான தேவை இருந்தாலும் கூட அதைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையிலேயே இருக்க வேண்டியிருக்கும்.

புரொஃபஷனலைஸ் செய்ய வேண்டிய ஆறு விஷயங்கள்...
தலைமை, மார்க்கெட்டிங், சேல்ஸ், தயாரிப்புகள் / சேவைகள், செலவுகள் மற்றும் செயல்பாடுகள், பணப்புழக்கம் என்ற ஆறு விஷயங்களிலுமே புரொஃபஷனலைஸ் செய்ய வேண்டியது அவசியமான ஒன்றாகிறது. இந்த ஆறு விஷயங்களும் புரொஃபஷனலைஸ் செய்யப்பட்டுவிட்டால் சிறு நிறுவனங் களுக்கு உரித்தான பெரும்பாலான பிரச்னைகளை நீங்கள் சுலபமாகக் கடந்துவிடுவதற்கான வாய்ப்பு உருவாகிவிடும். பெரும்பாலான சிறு நிறுவனங்கள் பின்வரும் இந்த ஆறு விஷயங்களாலேயே தோல்வியைச் சந்திக்கின்றன.
1. நிறுவனத்தின் பொருளாதாரம் ஸ்திரமாக இருக்க முக்கிய மானது எது என்று கண்டுபிடிக்கத் தவறுவது, 2. வாடிக்கை யாளர்களுக்கு சரியான விஷயத்தைக் கொண்டு சேர்க்கத் தவறுவது, 3. வாடிக்கையாளரே ஹீரோ என்ற அடிப்படையைக் கொண்டு விற்கத் தவறுவது, 4. தேவை குறைவாகவும் அதிக லாபம் இல்லாததுமான தயாரிப்புகளை உற்பத்தி செய்வது, 5. உற்பத்தி மற்றும் நிர்வாகம் செய்யும் ஊழியர்களுக்கான சம்பளங்கள் அந்தத் துறையில் நிலவும் செலவுக்கு ஒப்பான தாக இல்லாமல் மிக அதிக அளவில் இருப்பது, வாங்கும் சம்பளத்துக்கு ஏற்ற திறமையும் உற்பத்தித்திறனும் இல்லாதவர் களாக பணியாளர்கள் இருப்பது, 6. தேவையான நேரத்தில் தேவையான அளவு பணம் கையிருப்பு இல்லாமல் இருப்பது மற்றும் கையிருப்பில் இருக்கும் பணத்தை சரிவர நிர்வகிக்காமல் இருப்பது... இந்த ஆறு விஷயங்களையும் கருத்தில் கொண்டு நிறுவனத்தை ஒரு விமானம் போல் சரிவரக் கட்டமைத்தால் அது பறந்தே ஆக வேண்டும். ஒருபோதும் அது கீழே விழ வாய்ப்பே இல்லை’’ என்று ஆசிரியர் அடித்துக் கூறுகிறார்.
நிறுவனம் நடத்துவதற்கும் விமானம் ஓட்டுவதற்கும் என்ன சம்பந்தம்..?
‘‘விமானங்கள் பல்வேறு உதிரிபாகங்களைக் கொண்ட வையாக இருந்தாலும் ஆறே விஷயங்களே அது சரியாக பயணம் செய்யத் தேவையான வையாக உள்ளன. உங்கள் நிறுவனத்தை ஒரு விமானம் என்று வைத்துக்கொள்வோம். விமானிகள் அமரும் அறை லீடர்ஷிப்பைக் குறிக்கிறது. என்னதான் எல்லாமே சரியாக இருந்தாலும் விமானம் சரியாகப் பறப்பது விமானிகள் கையில் இருக்கிறது இல்லையா? ஒருவேளை, போக வேண்டிய இடத்துக்கு போய்ச் சேர முடியாவிட்டால் வேறெங்கே தரையிறங்க முடியும் என்பதையும் (இருக்கும் எரி பொருளுக் கேற்ப) ஆரம்பத்திலேயே திட்டமிடுவதும் விமானிகள் தானே!
விமானத்தின் வலது இன்ஜின் மார்க்கெட்டிங் முயற்சிகளைக் குறிக்கிறது. விமானம் பறக்க வலது இன்ஜினின் செயல்பாடு மிக அவசியம் என்கிற மாதிரி, நிறுவனம் புதிய உயரத்தைத் தொடக் காரணமாக இருக் கிறது மார்க்கெட்டிங். வலது இன்ஜின் மார்க்கெட்டிங் எனில், இடது இன்ஜின் விற்பனையைக் குறிக்கும். இந்த இன்ஜின் விமானத்தின் உயரத்தை அதிகரிக்கச் செய்வதுபோல, விற்பனை நிறுவனத்தின் டேர்ன்ஓவரை அதிகரிக்கச் செய்யும்.
விமானத்தின் இறக்கைகள் உங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகள்/சேவைகளைக் குறிக்கிறது. நீங்கள் தயாரிக்கிற தயாரிப்புகள்/தருகிற சேவை கள் மிகவும் தேவை இருப்ப தாகவும் அதிகம் லாபம் தருவதாகவும் இருந்தால் அது விமானத்தின் இறக்ைகளைப் போல் நிறுவனம் எவ்வளவு எடை உடையதாக இருந்தா லும் அதைச் சுலபமாக எடுத்துக்கொண்டு எளிதாக உயரே பறக்க வைக்கும்.
விமானத்தில் பயணிகள் அமரும் பகுதியானது உங்களது செயல்பாட்டுக்கான செலவுகளைக் குறிக்கிறது. செலவினங்கள் மிகவும் பெரிதாக இருந்தால், விமானத் தின் வயிற்றுப் பகுதியும் பெரியதாகி எடையும் மிக அதிக அளவில் அதிகரிக்கும். என்னதான் இறக்கைகள் சிறப்பானவையாக இருந் தாலும் எடை அதிகரிக்க அதிகரிக்க பறக்கும் உயரம் மட்டுப்படவே செய்யும். மோசமான வானிலையில் விமானம் விபத்தை சந்திக் கவும் வாய்ப்புண்டு.
இறுதியாக, விமானத்தின் எரிபொருள் நிரப்பும் பகுதி உங்களுடைய கேஷ் ஃப்ளோவைக் குறிக்கிறது. விமானத்தின் மற்ற ஐந்து விஷயங்களும் சிறப்பான முறையில் நிர்வகிக்கப் பட்டபோதிலும் எரிபொருள் (பணம்) இல்லாவிட்டால் விமானம் பறக்க முடியாது. அதுவும் பாதிப் பயணத்தில் எரிபொருள் தீர்ந்துவிட்டால் விபத்து நடப்பது நிச்சயம் இல்லையா? அவ்வளவு ஏன், விமானத்தளத்தில் இறங்க சற்றுத் தாமதமாகி ஒரு எக்ஸ்ட்ரா சுற்று சுற்ற எரிபொருள் இல்லாவிட்டால்கூட விபத்து என்பது தவிர்க்க முடியாததாகிவிடுமே!
இந்த விமான உதாரணத்தில் இருந்து உங்களுக்கு என்ன புரிகிறது? உங்களுடைய வளர்ச்சிக்கு ஏற்ற தலைமை, மார்க்கெட்டிங், விற்பனை, தயாரிப்பு /சேவை மற்றும் செலவு என்பது இருக்க வேண்டும். இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று சரியான விகிதாசாரத்தில் இணைந்து வளர்ந்தால் மட்டுமே நிறுவனம் செழித்து வளரும். இதில் ஏதாவது ஒன்று, மற்றவற்றுக்கு ஏற்ற அளவில் இல்லாவிட்டால் விபத்து நடப்பது நிச்சயம்.
தவறாக நினைக்கும் உரிமையாளர்கள்...
இதில் கொடுமை என்னவெனில், ஓரளவு நன்றாக நடக்கும் பல சிறு நிறுவனங்களை நடத்தும் உரிமை யாளர்கள், சிறிய வெற்றியைக் கண்டவுடனே தன்னுடைய நிறுவனம் வெற்றிகரமாக நடப்பது போல நினைத்துவிடுவதுதான். இந்தவித தவறான புரிதலினாலேயே எக்கச்சக்கமான புதிய முதலீடு களைச் செய்தும், விரிவாக்கங்களைச் செய்தும் தொழில் ரீதியாக வளர முடியாமல் தவிக்க ஆரம்பிக்கின்றனர்.
நீங்கள் உங்களுடைய சிறிய நிறுவனத்தை ‘புரொஃபஷனலைஸ்’ செய்தீர்கள் எனில், அது உங்களுக்கு மட்டுமல்ல உங்களிடம் வேலை பார்க்கும் நபர்களுக்கும் பணி ரீதியான பாது காப்பையும் சம்பளத் தையும் தரும். லாபம் அதிகரித்தால், அது உங்களையும் உங்களைச் சார்ந்தவர்களையும் செழிப்பாக வாழவைக் கும்’’ என்று சொல்லி முடிக்கிறார் புத்தகத்தின் ஆசிரியர்.
முன்னேறத் துடிக்கும் சிறு தொழில் முனைவோர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது!