சென்சிட்டிவ் மனிதரா நீங்கள்..? உங்களைப் புரிந்துகொண்டால் ஜெயிக்கலாம்! - செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

சென்சிட்டிவிட்டி என்பது வருந்தத்தக்க குணமல்ல. அது மனிதகுலத்தில் நிலவும் ஒரு குணாதிசயம்...
‘‘எளிதில் உணர்ச்சிவசப்படுகிற (சென்சிட்டிவ்) நபரா நீங்கள்..? உங்களின் இந்தக் குணத்தைப் பற்றி நீங்கள் கவலையுடன் இருக்கிறீர்களா? விட்டுத்தள்ளுங்கள், உங்கள் கவலையை. உங்களின் இந்தக் குணத்தைப் பற்றி நீங்கள் சரியாகப் புரிந்துகொண்டாலே போதும், நீங்கள் அதைக் கடந்துவந்து வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்’’ என்கிறார்கள் ‘சென்சிட்டிவ்’ (Sensitive) என்ற புத்தகத்தின் ஆசிரியர்கள். அமெரிக்காவைச் சேர்ந்த ஜென் க்ரானிமேன் (Jenn Granneman) என்ற பெண்மணி, ஆண்ட்ரே சொலோ (Andre Solo) என்பவருடன் சேர்ந்து எழுதிய புத்தகத்தில் உணர்ச்சி வசப்படுகிறவர்கள் ஜெயிக்கும் வழிகள் குறித்து சொல்லப்பட்டுள்ளது.

யார் சென்சிட்டிவ் மனிதர்...
‘‘தன்னைப் பற்றி ஒரு ஜோக்கைக்கூட தாங்கிக்கொள்ள முடியாதவர், வெகு சீக்கிரமே கோபம் கொள்பவர், எக்கச்சக்கமாக அழுபவர், தன் உணர்வுகளை எளிதில் காயப்படுத்திக் கொள்பவர், ஃபீட்பேக் மற்றும் குறை என்ற இரண்டையும் ஏற்றுக் கொள்ள முடியாதவர்களையே நாம் ‘சென்சிட்டிவ்’ நபர்கள் என்று அழைக்கிறோம். இது வெறுமனே மனம் சார்ந்த விஷயம் மட்டுமல்ல, உடல் சார்ந்த விஷயமும்கூட. உதாரணமாக, சிலருக்கு சில வாசனைத் திரவியங்களின் வாசனை பிடிக்கவே பிடிக்காது. சிலருக்கு வெளிப்புற வெப்பம் சற்று அதிகரித்தால்கூட டென்ஷன் ஆகிவிடுவார்கள். மனிதர்களின் மனரீதியான சென்சிட்டிவிட்டிக்கும் அவர்களின் உடல் ரீதியான சென்சிட்டிவிட்டிக்கும் பெரிய தொடர்பு இருக்கிறது என ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. உதாரணமாக, தலைவலிக்கு மருந்து சாப்பிட்டபின், பிரச்னைகளைப் புரிந்துகொள்வது பெரிதும் மாறுபடுகிறது.
ஆக, சென்சிட்டிவிட்டி என்பது வருந்தத்தக்க குணமல்ல. அது மனிதகுலத்தில் நிலவும் ஒரு குணாதிசயம். ஆனால், சமீபகாலம் வரை உலகம் இதைப் பெரிய அளவில் புரிந்துகொள்ளவில்லை. கூச்ச சுபாவம் என்பதுகூட ஒரு காலகட்டத்தில் கெட்ட குணமாகவே இருந்தது. இன்றைக்கு அதைப் பலரும் புரிந்துகொண்டு ஏற்றுக் கொள்ளும் குணமாக மாறிவிட்டது. ‘அவர் ஒரு இன்ட்ரோவர்ட்’, ‘நான் ஒரு இன்ட்ரோவர்ட்’ என்று ஒருவர் தன்னைப் பற்றி சகஜமாக எடுத்துச் சொல்வதைப் பார்க்கிறோம். ஆனால், சென்சிட்டிவிட்டி என்கிற குணம் இன்னும்கூட மோசமான விஷயமாகவே பார்க்கப் படுகிறது. ஆனால், இந்தக் குணமும் இயற்கையான குணம்தான் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.
சென்சிட்டிவ்வாக இருப்பதால், ஒருவருக்கு பல்வேறு அனுகூலங்கள் கிடைத்தாலும், பெற்றோர்கள், பாஸ்கள், மனைவி போன்றவர்களுக்கு இது ஒரு மனித குணாதிசயம் என்பது புரிவதே இல்லை. மாறாக, இதை ஒரு குறைபாடாகவே பார்க்கின்றனர். அதுகூட பரவாயில்லை, இதை ஒரு கெட்ட விஷயம் என்கிற ரீதியில் சிலர் பார்க்கின்றனர். நம்முடைய குழந்தைகளிடம் நாம் என்ன சொல்கிறோம்? ‘அழுவதை நிறுத்து’, ‘போனால் போகட்டும் விடு’ என்பது போன்ற சமாதானங்களைச் சொல்கிறோம். அதைக் கேட்காவிட்டால், ‘ஓவரா சீன் போடாதே’ அல்லது ‘இதுக்கெல்லாம் இவ்வளவு சென்சிட்டிவ்வாக இருக்க வேண்டியதில்லை’ என்றே கடிந்துகொள்கிறோம். இந்தப் புத்தகம் இதுபோன்ற சென்சிட்டிவ் விஷயங்களைக் கையாள்வது குறித்து அறிந்துகொள்வதற்காகவே எழுதப்பட்டுள்ளது’’ என்கின்றனர் இந்தப் புத்தக ஆசிரியர்கள்.
ஒரு மாணவன், ஒரு மாணவி...
‘‘சென்சிட்டிவ் மனிதர்கள் முழுமையாகப் புரிந்துகொள்ளப்பட்டு அவர்கள் இயல்பாக இந்த உலகில் செயல்படும்போது அளப்பரிய பலன் இந்த உலகத்துக்குக் கிடைக்கவே செய்யும்.
ஒரே பள்ளியில் படித்த இருவரின் கதையைப் பார்ப்போம். பள்ளிக்கூடம் செல்லும் ஒரு மாணவன், சூப்பராகப் படிப்பவன். பெரிய பண வசதி இல்லாதவன். பெற்றோர்கள் பணிக்குச் சென்று சொற்ப வருமானம் ஈட்டுபவர்கள். வகுப்பறையில் எல்லா மாணவர்களையும் போல் அவன் சாதாரணமானவனாகத் தான் இருப்பான். விளையாட்டுக்கான வகுப்பு வந்தால் அவன் ஓடிப்போய் ஓர் இடத்தில் ஒளிந்துகொள்வான். அவன் ஏன் அப்படி இருக்கிறான் என அவனால் சொல்ல முடியவில்லை.
அதே போல்தான் பள்ளி செல்லும் ஒரு மாணவி. பெரிய வசதி இல்லாத குடும்பத்தைச் சார்ந்தவள். அவள் படிப்பு உட்பட எல்லா விஷயங்களிலும் முதல் ஆளாக ஓடிவந்து பங்கேற்பாள். ஏதாவது ஒரு நிகழ்ச்சி எனில், அதற்கான திட்டங்களை எல்லாம் சூப்பராக வகுத்து பலருடனும் பேசி ஒருங்கிணைத்து நிகழ்ச்சியை நன்றாக நடத்தச் செய்வதில் கைதேர்ந்தவள். ஆனால், நிகழ்ச்சி ஆரம்பித்தபின் அவள் எங்காவது ஒரு மூலையில் சென்று அமர்ந்துகொள்வாள். இவ்வளவு ஒருங்கிணைப்பு பணியைச் செய்த அவள் ஒருபோதும் லைம் லைட்டுக்கு வரவே மாட்டாள்.
மாணவன் வளர வளர அவனைச் சுற்றியுள்ளவர்கள் அவனைக் கிண்டலடித்துக்கொண்டே இருப்பார்கள். சில சமயம் அழுவான். வளர வளர இந்தக் குணம் அதிகரிக்கவே செய்தது. எல்லோரும் ஃபுட்பால் விளையாட சென்றால், இவன் காட்டுக்குள் பயணிக்க நினைப்பான். அந்தப் பெண்ணோ வளர வளர பள்ளிக்குச் செல்வதைத் தவிர்க்க ஆரம்பித்தாள்.
அந்தப் பையன் பள்ளியை விட்டுவிட்டு தெரு ஓவியர்களின் பின்னால் செல்ல ஆரம்பித்தான். அந்தப் பெண்ணோ ஒரு சர்ச்சில் தன்னார்வலராகச் சேர்ந்து பல வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள். சர்ச் உறுப்பினர்கள் இவ்வளவு திறமை கொண்ட இந்தப் பெண் ஒரு சிறப்பான நோக்கத்துடன் படைக்கப்பட்டவள் என்று பெருமைகொண்டனர்.
மேலே சொன்ன பையன் பெரியவனாகி, மெக்ஸிகோ முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டு இரவில் வானத் தையே குடையாய் கொண்டு திறந்தவெளியில் படுத்துத் தூங்கி புத்தகங்கள் எழுதிக்கொண்டு யாரையும் சார்ந்திருக்காமல் தனித்து வாழ ஆரம்பித்தான். ‘நான் ஒரு சென்சிட்டிவ் மனிதன்’ என்று அவன் தன்னை எப்போதும் ஒப்புக் கொள்வதே இல்லை. அந்தப் பெண்ணோ ‘நான் ஒரு சென்சிட்டிவ் மனிதன்’ என்பதை ஏற்று, உணர்ந்து அதற்கேற்ப வாழ முயற்சி செய்து ஜர்னலிசம், மார்க்கெட்டிங், ஆசிரியர் பணி எனப் பல வேலைகளை யும் பார்த்து, பல சிக்கல்களை எதிர்கொண்டு வாழ ஆரம் பித்தாள்.
இந்த இருவரும் சந்தித்துக் கொண்டனர். அவன் எப்பேர்ப்பட்ட சென்சிட்டிவ் வான குணம் கொண்டவன் என்பதைத் தெளிவாக அவனுக்கு விளக்கினாள் அவள். அவனோ, அந்தக் குணம் இருந்தாலும் அதை வைத்துக்கொண்டு தனிச் சிறப்பான வாழ்க்கை வாழ்வது எப்படி என்று சொல்லித் தந்தான். அதன்பின் இந்த இருவரும் இணைந்து பணிபுரிய ஆரம்பித்தனர். ஒரு இணையதளம் (highlysensitiverefuge.com) ஆரம்பித்து, சென்சிட்டிவ் மனிதர்கள் எப்படி மகிழ்ச்சியான வாழ்க் கையை வாழலாம் என்று எழுத ஆரம்பித்தனர். அது தான் அவர்களைப் பிற்பாடு இந்தப் புத்தகத்தை எழுத வைத்தது. யெஸ், அவர்கள் வேறு யாருமல்ல, இந்தப் புத்தகத்தை எழுதும் நாங்கள் தான். நாங்கள் இருவரும் சென்சிட்டிவ்தான். அதை நாங்கள் பெருமையுடன் ஒப்புக்கொள்கிறோம்’’ என்று சொல்லும் ஆசிரியர்கள், சென்சிட்டிவிட்டியைப் புரிந்துகொண்டால் ஜெயிக்க முடியும் என்கிறார்கள்.

சென்சிட்டிவிட்டியைப் புரிந்து கொள்ளுங்கள்...
‘‘கடந்த 10 ஆண்டுகளில் பல மனிதர்களுடன் நாங்கள் அவர்களுடைய சென்சிட்டி விட்டி பற்றி தனிப்பட்ட முறையில் உரையாடி இருக்கிறோம். அதில் பலரும் அவர்களுடைய வாழ்வில் முதல்முறையாக சென்சிட்டி விட்டி என்றால் என்ன வென்று தெரிந்து கொள்பவர் களாக இருந்தனர். அதைப் பற்றி அவர்கள் தெளிவாக புரிந்த நிமிடம் அவர்கள் ‘வாவ்’ என்று மகிழ்ச்சி அடைந்தனர். அந்த நிமிடமே அவர்கள் யார் என்றும், அவர்களின் நடவடிக்கை ஏன் அப்படி இருக்கிறது என்றும் தெளிவாகப் புரிந்து கொண்டுவிட்டனர்.
அது மட்டும் இல்லாமல், அவர்களுடைய குழந்தை, சக பணியாளர் மற்றும் மனைவி குறித்து அதுவரை இருந்ததை விட இன்னும் நன்றாகப் புரிந்துகொண்டனர். இதனாலேயே சென்சிட்டிவிட்டி என்பது ஒரு சாதாரணமான மனித குணம் என்று அனைவரும் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இதைப் புரிந்து கொள்ளாததால்தான் சென்சிட்டிவ்வான நபர்கள் தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டாமல் ஒளிந்து கொள்கின்றனர். இதனால்தான் அவர் களுடைய பங்களிப்பு எதுவுமே சரிவர அவர்கள் இருக்கும் குழுவுக்குக் கிடைப்பதில்லை.
எங்கள் இருவரின் கதை இந்த உலகில் வாழும் பல சென்சிட்டிவ் மனிதர்களின் கதையைப் போன்றது. ஒவ்வொரு சென்சிட்டிவ் மனிதரும் தனக்கென ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து பயணிக்க வேண்டியுள்ளது. இதில் மிக முக்கியமானதும் கடினமானதுமாக ஒன்று இருக்கிறது. அது என்ன தெரியுமா? சென்சிட்டிவிட்டி என்பதை ஒரு குறையாகப் பார்க்காமல் ஒரு பரிசாகப் பார்ப்பதுதான்.
சென்சிட்டிவ்வாக இருப்பவர்கள் பிறர்சொல்லும் குறைகளை மனதுக்குள் எடுத்துச் செல்கின்றனர். அதை வைராக்கியமாக்கி சிறப்பான ஃபர்பா மன்ஸைத் தரவல்லவர்களாகவும் இருக்கின்றனர்” என்று சொல்லும் ஆசிரியர்கள், நீங்கள் சென்சிட்டிவ்வாக இருக்கும் நபரா என்பதை எப்படிக் கண்டறிவது, சென்சிட்டிவ்வாக இருப்பதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன, சென்சிட்டிவ்வாக இருப்பது ஒரு குறையல்ல என்பதை எப்படி உணர்ந்து கொண்டு செயல்படுவது, உங்களுக்கு ஏற்ற பாதையை எப்படித் தேர்தெடுத்துப் பயணிப்பது என்பது போன்ற பல்வேறு விஷ யங்களையும் நிஜ வாழ்க்கை உதாரணங் கள் மற்றும் ஆராய்ச்சி முடிவுகள் வாயிலாக இந்தப் புத்தகத்தில் விளக்குகிறார்கள்.
ஒரு சென்சிட்டிவ் நபராக நீங்கள் இருக்கும் பட்சத்தில் நீங்கள் தெளிவாக செயல்படுவது எப்படி என்பதைத் தெளிவாகப் புரிய வைக்கும் இந்தப் புத்தகத்தைப் படித்துப் பயன் பெறலாம்.