
அமெரிக்காவில் இருக்கும் மில்லியனர் தொழிலதிபர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் கல்லூரிப் படிப்பை முடிக்காதவர்களே.!
‘‘நீங்கள் வெற்றி பெற்றீர்கள் எனில், அதற்குக் காரணம் உங்களுடைய திறமைதான் என்று அடித்துச் சொல்ல முட்டாள் கூட்டம் ஒன்று இந்த உலகில் இருக்கும்’’ என்று சொல்லியுள்ளார் பிரான்ஸ் நாட்டு கவிஞர் எடோயார்ட் பைலரோன். இது மிகச் சரியான உண்மை. ‘பெரிய அளவில் வெற்றி பெற்ற மனிதர்கள் எல்லாம் அந்த வெற்றியைப் பெற காரணம், தங்களின் திறமைதான் என்றே நம்புகிறார்கள். ஆனால், இது வெற்றி குறித்த மிக மிகத் தவறான கண்ணோட்டம்’ என்று அடித்துச் சொல்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் சி. மேக்ஸ்வெல் எழுதிய ‘சக்சஸ் இஸ் எ சாய்ஸ்’ (Success is a Choice) என்கிற ஆங்கிலப் புத்தகம்.

எது உண்மையான திறமை..?
‘‘திறமை மட்டுமே வெற்றிக்கு முக்கியமான காரணி எனில், எப்படி நீங்களும் நானும் திறமை வாய்ந்த இன்னும் பலரும் வெற்றி பெறாமல் இருக்கிறோம்? ‘மனிதனின் செயல் திறனுக்கும் அவனுடைய அறிவு, புத்திசாலித்தனம், கற்பனைத்திறன், போன்றவற்றுக்கும் இடையே ஒரு இணையுறவு (Correlation) இருக்கிறது. இவை எல்லாம் அவசியமான ஒன்றுதான். இவற்றை ஒருங்கிணைத்து காரியத்தை நடத்தி வெற்றி பெறச் செய்வது செயல் திறனே’ என்று சொல்லியுள்ளார் நவீன மேலாண்மையியலின் தந்தை என அழைக்கப்படும் பீட்டர் ட்ரக்கர்.
வெற்றி பெற திறமை மட்டுமே போதுமெனில், இந்த உலகில் மிகப் பெரிய வெற்றி பெற்றவர்கள் அனைவரும், பெரிய அளவுக்கு திறமை படைத்தவர்களாக அல்லவா இருக்க வேண்டும், ஆனால், உலக நடைமுறையைப் பார்த்தால் அப்படி இல்லையே! பார்ச்சூன் 500 நிறுவனத்தின் சி.இ.ஓ-களில் பாதிக்கும் மேற்பட்டோர் கல்லூரியில் ‘சி’ கிரேட் அல்லது அதற்கும் சற்றும் குறைவான கிரேட் பெற்றவர்களாகவே இருக்கின்றனர். அமெரிக்க செனட்டர்களில் சுமார் 65% பேர் பள்ளிப்பருவத்தில் மிகக் குறைவான மார்க் வாங்கும் நபர்களாகவே இருந்துள்ளனர். அமெரிக்காவில் இருக்கும் மில்லியனர் தொழிலதிபர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் கல்லூரிப் படிப்பை முடிக்காதவர்களே!
இதிலிருந்து என்ன தெரிகிறது? வெறும் திறமை ஒன்றே வெற்றிக்கு போதுமான விஷயமாக இல்லை என்பதுதான். அப்படியானால் எது வெற்றியாளர்களை உருவாக்குகிறது, யார் வேண்டுமானாலும் வெற்றியாளராக முடியுமா, திறமைக்கு மரியாதை ஏதும் இல்லையா என்பது போன்ற கேள்விகள் உங்கள் மனதில் எழுகின்றன இல்லையா?” என்று கேட்கும் ஆசிரியர் வெற்றிக்கான சூட்சுமங்களை விளக்குகிறார்.

உங்கள் தனிப்பட்ட திறமையை வளர்த்தெடுங்கள்...
‘‘நம் அனைவருமே திறமையானவர்கள்தான். ஒரு சிலரிடத்தில் பல்வேறு திறமைகள் ஒருங்கிணைந்து இருக்கின்றன; பலருக்கு ஒரு சில திறமைகளே இருக்கின்றன. ஆனால், உங்களுக்கென்று தனிப்பட்ட திறமை ஒன்று இருக்கிறது. அதுதான் உங்கள் பலம். உங்களிடத்தில் இயல்பாக இருக்கும் அந்தத் திறமையை வளர்த்தெடுங்கள். உங்களுக்குத் தேவை என்று நினைக்கும் திறமையை வலுக்கட்டாயமாக வளர்த்தெடுக்க முயலாதீர்கள்.
எவர் ஒருவர் அவருடைய திறமையை நம்பி அல்லது திறமையைக் கண்டறிந்து வளர்த்தெடுத்து உபயோகிக்கிறாரோ, அவரே வெற்றியாளர். அபரிமிதமான வெற்றியைப் பெற வேண்டுமெனில், நீங்கள் உங்களுடைய பலமான தனித் திறமையைக் கண்டறிந்து, அதை வளர்த்தெடுக்க முயல வேண்டுமே தவிர, உங்களுடைய பலகீனத்தை சரிசெய்ய முயலக் கூடாது. பலகீனத்தைப் பலமாக்குவதற்குப் பதிலாக, உங்கள் பலத்தை அதீத பலமாக்கினால் மட்டுமே வெற்றிக்கு வழி அமைத்து தரும்.
நீங்கள் உங்களுடைய திறமையை (பலத்தை) வளர்ப்பதில் கவனம் செலுத்தப்போகிறீர்களா அல்லது உங்களுடைய பலகீனங்களை சரிசெய்வதில் கவனம் செலுத்தப் போகிறீர் களா, எதில் உங்களுடைய சக்தியை செலவழிப்பது பயன்மிக்க தாக இருக்கும், இந்த இரண்டில் எது உங்கள் சாய்ஸ் என்பதில் தான் வெற்றிக்கான வழியே இருக்கிறது’’ என்கிறார் ஆசிரியர்.
வெற்றிக்கான 14 விஷயங்கள்...
‘‘வெற்றி என்பது உங்களுடைய தேர்ந்தெடுத்தலுக்கு ஏற்றாற் போல் கிடைக்கும் ஒன்று. நீங்கள் சரியான விஷயங்களை மட்டுமே தேர்ந்தெடுப்பேன் என்பதில் முனைப்பாக இருந்தீர்கள் எனில், உங்களால் நிச்சயமாக வெற்றி பெறமுடியும். வெற்றிக்கான தேர்ந்தெடுத்தல் என்பதில் பின்வரும் 14 விஷயங்கள் மிகவும் முக்கியமானவையாக இருக்கின்றன. இந்த 14 விஷயங்களில் கவனம் செலுத்தினால் உங்களால் நிச்சயமாக வெற்றி பெற முடியும்.
1. வெற்றி பெற உதவும் விஷயங்களை மட்டுமே தேர்வு செய்து அதில் செயல்படுவது.
2. நம் மீது முழுமையான நம்பிக்கை வைப்பது. இது நம்மில் பெரும்பான்மையானவர்களால் செய்ய முடியாத ஒன்று, நம்பிக்கை வைக்க முடியாததுதான். நம்முடைய திறமையை முழுமையாகப் பயன்படுத்த முடியாமல் போவதற்கான முழு முதல் காரணமாக இருக்கிறது. சொல்லப்போனால், மனிதன் தோல்வி அடைவதற்கு முழுமுதல் காரணமே தன் மீது அவன் நம்பிக்கை கொள்ளாததுதான். நம்மீது நாம் வைக்கும் நம்பிக்கைதான் நம் எதிர்பார்ப்புகளை வளர்த்தெடுக்கிறது. எதிர்பார்ப்புகளே நம் நடவடிக்கைகள் எந்தளவுக்கு இருக்கின்றன என்பதற்கு அடித்தளம் அமைக்கின்றன. நம் நடவடிக்கைகளே நமக்கான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இதனாலேயே நம்பிக்கை வைப்பது மிகவும் அவசியமாகிறது.
3. நம் திறமையையொட்டிய மற்றும் நமக்குப் பிடித்த விஷயத்தைச் (Passion) செய்வதில் பேரார்வம் கொண்டு செயல்படுவது. எது மனிதர் களை உயர உயர கொண்டு செல்கிறது, எது மனிதர்களை அதிக அளவிலான ரிஸ்க்கு களை எடுக்க வைக்கிறது, செய்யும் காரியத்தில் எந்த மாதிரியான இடையூறுகள் வந்தாலுமே எது மனிதர்களை இடைவிடாது உழைத்து நினைத்ததை அடைய உதவி யாக இருக்கிறது என்பது போன்ற கேள்விகளுக்கு பேரார்வம் என்பதுதான் விடையாக இருக்கிறது.
பேரார்வம் என்பது மிகவும் பலம் பொருந்திய ஒன்று. பேரார்வமே சாதனைகளுக் கான முதல் படியாக இருக்கிறது. பேரார்வமே ஒருவருடைய மன உறுதியை அதிகரிக்கச் செய்கிறது. பேரார்வமே ஒருவர் செயல்படும் சக்தியைத் தருகிறது. பேரார்வமே ஒருவர் முதன்மை நிலையை அடைய அடித்தளமாக இருக்கிறது.
4. வெற்றிக்கான நடவடிக்கை களை உத்வேகத்துடன் தொடங்குவது.பயணத்துக் கான முதல் படி, அதை உத்வேகத்துடன் தொடங்கு வதாகும். உத்வேகமே பயம் வரும் வழியின் கதவை மூடு வதாக இருக்கிறது. உத்வேகமே வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்கிறது. மனிதன் எதிர் கொள்ளும் கஷ்டங்களை உத்வேகமே இலகுவானதாக மாற்றுகிறது. இன்னும் சொல் லப்போனால், வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே இருக் கிற வித்தியாசம் உத்வேகம் என்றே சொல்லலாம். செய்ய வேண்டிய விஷயங்களை யாரும் சொல்லாமலேயே செய்யும் நபரே உத்வேகம் கொண்ட நபராவார்.
5. நம் சக்தியை செலவழிப் பதில் கண்ணும் கருத்துமாக இருப்பது எப்படி என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.
6. ஈடுபடும் காரியத்தின் தன்மை குறித்து முன்னேற் பாட்டுடன் அனைத்துக்கும் தயார் நிலையில் இருப்பது. வெற்றி பெறும் மனிதர்கள் எக்கச்சக்கமான முன்னெச் சரிக்கையுடன்கூடிய தயார் நிலையில் இருத்தலே பெரும் வெற்றிக்கு வழிவகை செய் கிறது என்பதை உணர்ந்தவர் களாக இருக்கின்றனர். ஏனென்றால், தயார் நிலையில் இருக்க முயலும்போது நம் முழுத் திறமையையும் உபயோகிக்க ஆரம்பிப்போம்.
7. பயிற்சி என்பதை முழுமனதுடன் தொடர்ந்து செய்வது. உங்களுடைய செயல்பாடுகள் அனைத்தும் நீங்கள் எந்தளவுக்குப் பயிற்சி எடுத்துக்கொண்டீர்களோ, அந்தளவுக்கே இருக்கும். பயிற்சியே முன்னேற்றத்துக்கு வழிவகை செய்யும். மேலும், பயிற்சியே புதிய பல கோணங் களை உருவாக்கித் தரும்.
8. சோதனைகள் வந்த போதும் தளராமல் தொடர்ந்து முன்னேற்றத் துக்காகப் பாடுபடுவது. நீங்கள் எந்தளவுக்கு திறமை வாய்ந்தவராக இருந் தாலுமே விடாமுயற்சி என்பது இல்லாவிட்டால் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவு.
9. எப்போதும் தைரியத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பது. வெளிப்படுத்தப்படும் தைரிய மானது தொடர்ந்து சவால்களை சந்திப்பதாய் இருக்கவே செய்யும். தைரியம் என்பதை உங்களுள்ளே தேடுங்கள். வெளியே தேடாதீர்கள். சின்னச் சின்ன காரியங்களில் தைரியமாய் செயல்படுவதன் மூலம் பெரிய காரியங்களுக்குத் தேவையான தைரியத்தை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக்கொள்ள முடியும்.
10. எதையும் விரும்பி கற்றுக்கொள்ளும் குணம் கொண்டிருப்பது. கற்றுக்கொள்வதில் உங்களுக்கு ஈடுபாடு இல்லை எனில், எவ்வளவு சுவாரஸ்யமான விஷயமாக இருந்தாலுமே அதைக் கற்றுக்கொள்வதில் முழுமை இருக்காது.
11. நல்ல குணங்களை வளர்த்தெடுப்பது. 12. சுற்றம் மற்றும் நட்புடன் சிறப்பாக இணைந்து செயல்படுவது. 13. பொறுப்பேற்று நடத்திச்செல்வதில் முனைப்புடன் இருப்பது. 14. குழுவாக செயல்படுவதில் ஆர்வத்துடன் இருப்பது என இந்த 14 விஷயங்களையும் நீங்கள் செய்ய ஆரம்பித்தால், நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
வெற்றிக்கான சூத்திரம்...
ஆக மொத்தத்தில், நீங்கள் யார் + உங்களுடைய தேர்ந்தெடுத்தல்கள் என்னென்ன = உங்களுடைய வெற்றி என்பதுதான் வெற்றிக் கான சூத்திரம். சரியான விஷயங்களைத் தேர்வு செய்து, நீங்கள் மிகவும் தீர்மானமாக இருந்து செயல் பட்டீர்கள் எனில், இயல்பாக உங்களுக்கு இருக்கும் திறமையை முழு அளவுக்கு பயன்படுத்தி அதன் மூலம் வெற்றியை உங்களால் பெற முடியும்” என்று கூறி முடிக்கிறார் ஆசிரியர்.
வெற்றி பெற விரும்பும் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது.