தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

நிரந்தரமாகக் குடியிருக்கும் நிச்சயமற்றத்தன்மை... மீண்டுவந்து ஜெயிக்கும் வழிகள்!

நிச்சயமற்றத்தன்மை
பிரீமியம் ஸ்டோரி
News
நிச்சயமற்றத்தன்மை

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்: நிச்சயமற்றத்தன்மை கொண்ட சூழல் என்பது மனிதவாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் இருக்கும் தவிர்க்க முடியாத ஒரு விஷயம்...

நிச்சயமற்றத்தன்மை (Uncertainty) என்பது நம் அனைவருடைய வாழ்விலும் அடிக்கடி வந்துபோகக்கூடிய ஒன்றுதான். அதைத் தவிர்க்க முடியாவிட்டாலும், எதிர்கொண்டு வெற்றிபெறும் வழிகளை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அமெரிக்காவில் உள்ள மேரி லேண்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆரி க்ருலான்ஸ்கி (Arie Kruglanski) என்பவர் எழுதிய ‘அன்செர்ட்டைன்: ஹெள டு டர்ன் யுவர் பிக்கஸ்ட் ஃபியர் இன்டு யுவர் கிரேட்டஸ்ட் பவர்’ (Uncertain: How to Turn Your Biggest Fear into Your Greatest Power) என்ற புத்தகம், நம் வாழ்வில் நாம் எதிர் கொள்ளும் நிச்சயமற்றத்தன்மையைக் கண்டு பயப்படாமல், அதிலிருந்து மீண்டுவரும் வழிகளைப் பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்கிறது.

‘‘நிச்சயமற்றத்தன்மை என்பது நம் வாழ்வில் எப்போதாவது வந்துபோகும் விஷயம் இல்லாமல், நம் வாழ்வில் நிச்சயமான ஒன்றாக இருக்கிறது. இந்தப் புத்தகத்தை நான் எழுத ஆரம்பித்தபின், கோவிட்-19 எனும் சிக்கல் உலக அளவில் எக்கச்சக்கமான நிச்சயமற்றத்தன்மையை உருவாக் கியது. உலகில் வாழும் அனைவரையும் இந்த நிச்சயமற்றத்தன்மை தலைகீழாகப் புரட்டிப்போட்டது. இந்த நிச்சயமற்றத்தன்மை குறித்து நான் கற்ற அனைத்து விஷயங்களையும் இந்தப் புத்தகத்தில் தந்துள்ளேன்’’ என்று சொல்கிறார் புத்தகத்தின் ஆசிரியர்.

புத்தகத்தின் பெயர்: Uncertain 
ஆசிரியர்: Arie Kruglanski
பதிப்பகம்:‎  Michael Joseph Ltd
புத்தகத்தின் பெயர்: Uncertain ஆசிரியர்: Arie Kruglanski பதிப்பகம்:‎ Michael Joseph Ltd

20 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அளவுகோல்...

‘‘நிச்சயமற்றத்தன்மை குறித்து நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிகளை நான் செய்துள்ளேன். மனிதர்கள் எந்த அளவுக்கு நிலையான தன்மையை விரும்புகிறார்கள் என்பதை அறிந்துகொள்வதற்கான ஓர் அளவுகோலை நாங்கள் வடிவமைத்துள்ளோம். இந்த அளவுகோலானது கிட்டத்தட்ட 20 மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டு வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நிச்சயமற்றத்தன்மை என்றவுடனேயே மனிதர்களுக்கு அதுதரும் பாதிப்புகளே சட்டென நினைவுக்கு வருகிறது. இதுவே மனிதர்கள் நிலையானதன்மையை மிகவும் வெறுப்பதற்கும் பயப் படுவதற்கும் முக்கியமான காரணமாக இருக்கிறது.

சரி, பயம் எப்போது நமக்கு வருகிறது? நமக்குத் தெரியாத, புலப்படாத ஒரு விஷயத்திலேயே நமக்கு பயம் உருவாகிறது. நம் கண்ணைக்கொண்டு பார்க்க முடியாத விஷயங்கள் குறித்தே நாம் பயப்படுகிறோம். இருட்டானாலும் சரி, மரணமானாலும் சரி, அதற்குப் பின்னால் இருக்கும் விஷயங்கள் நமக்குத் தெரியாமல் இருப்பதாலேயே நாம் அது குறித்து பெரிய அளவில் பயப்படுகிறோம் என்பதே நிதர்சனமான உண்மை.

நிச்சயமற்றத்தன்மை துயரத்தை உருவாக்குகிறதா..?

நிச்சயமற்றத்தன்மை மனிதர்களுக்கு துயரத்தை உருவாக்குகிறதா என்கிற கேள்விக்கு, பதில் சொல்வது கொஞ்சம் கடினமான விஷயமாகவே இருக்கிறது. உதாரணமாக, கோவிட்-19 அதிகமாக இருந்த காலத்தில் நிலையற்றத்தன்மை எக்கச்சக்கமாக இருந்தது. இந்தக் காலகட்டத்தில் மக்களின் துயரமானது அதிகரித்தது என உலக சுகாதார அமைப்பு தந்த தகவல்களின்படி அறிய முடிகிறது. சீனாவில் 35 சதவிகிதமும், இரானில் 65 சதவிகிதமும், அமெரிக்காவில் 45 சதவிகிதமும் மக்களின் துயரம் அதிகரித்ததாகக் கூறுகிறது உலக சுகாதார அமைப்பு. அப்படி யென்றால் கோவிட்-19 மட்டுமே இதற்குக் காரணமா என்றால், முழுக்க முழுக்க அது காரணமாக இருக்கும் என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறமுடியாது. கோவிட்-19 அதிகரிப்பும் துயரம் அதிகரிப்பும் ஒரே சமயத்தில் நடந்தது என்று வேண்டுமானால் கூறலாம். இதையே ஆய்வுகள் கூறுகின்றன.

எதனால் இப்படி என்று கேட்கிறீர்களா? இரண்டு விஷயங்கள் ஒரே நேரத்தில் நிகழ்கிறது என்பதால் ஒன்றுக்கு மற்றொன்றே காரணம் என்று உறுதியாகக் கூற முடியாது என்பதால்தான். உதாரணமாக, அமெரிக்காவில் உள்ள பெருநகரங்களில் ஐஸ்க்ரீம் விற்பனையாகும் அளவு அதிகரிக்கும்போதெல்லாம் அந்த நகரங்களில் நடக்கும் கொலைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இதை வைத்துக் கொண்டு ஐஸ்க்ரீம் சாப்பிடுவது கொலை செய்யும் எண்ணத் தைத் தூண்டுகிறது என்று கூற முடியுமா? வெயில் காலத்தின் வெப்பம் ஐஸ்க்ரீம் அதிகமாக சாப்பிடத் தூண்டுவதாக இருக்கிறது. அதே வெப்பம்தான் மனிதர்களுக்கு அதிக எரிச்சலை ஊட்டி ஆக்ரோஷமாக நடந்துகொள்ளும் மனநிலைக்குத் தள்ளிவிடுகிறது. இதனாலேயே கோவிட்-19 காரணமாக உருவான நிச்சயமற்றத்தன்மை மட்டுமே மக்களின் துயரத்தை அதிகரிக்க காரணமாக இல்லை என்று நம்மால் சொல்ல முடிகிறது.

கோவிட்-19 உச்சத்தில் இருந்த காலகட்டத்தில்கூட நீங்கள் கோவிட்-19 காரணமாக பாதிப்படைய 50% வாய்ப்புள்ளதா அல்லது 90% வாய்ப்புள்ளதா என்று கேட்டால், பெரும் பாலானோர் 50% என்றே கூறியிருக்கின்றனர். நிஜத்தில் 90 வாய்ப்பிருந்த அந்தச் சூழ்நிலையிலுமே 90% என்பது அதிக நிச்சயமற்றத்தன்மையை உருவாக்க (வந்துவிட்டால் செலவுக்குப் பணம் இருக்குமா, மருத்துவமனையில் இடம் கிடைக்குமா என்பது போன்ற பல்வேறு விடை தெரியாத கேள்விகளுடன் கூடிய) வாய்ப்பு இருப்பதாலேயே 50% வாய்ப்புள்ளது என்று மட்டுமே ஒப்புக்கொள்கிறோம். அதிக அளவிலான நிச்சயமற்றத் தன்மை நமக்கு இயல்பாகவே பிடிக்காது என்பதால்தான் குறைந்த அளவு நிச்சயமற்றத் தன்மையை நாம் எதிர்பார்க்கிறோம்.

நிரந்தரமாகக் குடியிருக்கும் நிச்சயமற்றத்தன்மை...
மீண்டுவந்து ஜெயிக்கும் வழிகள்!

மன உளைச்சல் தரும் நிச்சயமற்றத்தன்மை...

நிச்சயமற்றத்தன்மை ஏன் மனிதர்களுக்குப் பிடிக்காது? அதிக அளவிலான நிச்சயமற்றத்தன்மை அதிக மன உளைச்சலை உருவாக்குகிறது. மன உளைச்சல் அதிகரிப்பது நமக்குப் பிடிக்காது. மனிதர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் நிச்சயமற்றத் தன்மையான சூழலில் இருந்து அவர்கள் எப்படி மீண்டு வந்தார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களுடைய தற்போதைய செயல்பாடுகள் இருக்கும்.

உதாரணமாக, ஏற்கெனவே அவர்கள் எதிர்கொண்ட இது போன்ற சூழ்நிலைகளில் பெரிய அளவில் பாதிப்புகளை (தோல்வி/இழப்பு) சந்தித்திருந் தால், அதே போன்றதொரு பாதிப்பு மீண்டும் வரும் என்று எதிர்பார்த்தே அவர் களுடைய செயல்பாடுகள் இருக்கும். ஏற்கெனவே, பல சூழ்நிலைகளில் வெற்றி பெற்றிருந்தால், அவர் களுடைய தற்போதைய செயல்பாடுகள் வெற்றியை எதிர்ப்பார்த்த அளவிலேயே இருக்கும்.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்ன? நம்முடைய முந்தைய அனுபவத்தைக் கொண்டு நாம் உருவாக்கிக்கொள்ளும் ஒரு வரையறையை ஒப்புக் கொண்டு நாம் நம்முடைய வாழ்க்கையை வாழ ஆரம் பித்துவிடுகிறோம். இதில் பாதிப்பு எதையாவது நாம் சந்தித்திருந்தால், அதே போல மீண்டும் நடக்கும் என்கிற எண்ணத்தை நாம் பெற்று விடுகிறோம். இதனால் நமக்கு உடனடியாக மன உளைச்சல் உருவாகிவிடுகிறது.

மன உளைச்சல் இப்படி உருவாகும் விதம் பற்றி நாம் முதலில் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி புரிந்துகொள்வதன் மூலம் எதிர்காலத்தில் நாம் சந்திக்கப் போகும் நிச்சயமற்றத்தன்மை கொண்ட சூழல்களில் நாம் சிறப்பாகச் செயல்பட மிகவும் உதவியாக இருக்கும்.

புரிந்துகொண்டால்தான் சிறப்பாகச் செயல்பட முடியும்...

யார் யார் நிச்சயமற்ற தன்மைகொண்ட சூழலை வெற்றிகரமாகக் கையாண்டு கடந்து போக முடியும், யார் யார் அது போன்ற சூழலை எதிர்கொள்ள முடியாமல் துவண்டு தோல்வி அடை வார்கள் என்பதைப் புரிந்து கொள்வதன் மூலமே அந்தச் சூழ்நிலையை நன்கு உணர்ந்து மீண்டு வர முடியும். அது மாதிரியான நிச்சயமற்றச் சூழ்நிலையில் சிறப்பாகச் செயல்படுவது எப்படி என்பதையும் கற்றுக்கொள்ள முடியும். மேலும், இது போன்ற சூழலில் அமைதி யாகச் சிந்தித்துச் செயல் படவும் அந்த நிச்சயமற்றச் சூழலில் இருக்கும் வாய்ப்பு களையும் தெளிவாகக் கண்டுபிடித்து அவற்றை உபயோகித்து வாழ்வில் வெற்றிபெற முடியும்.

நிச்சயமற்றத்தன்மை ஏற்படுத்தும் மோசமான விளைவுகளை எதிர்கொள்ளத் தேவையான ஸ்ட்ராட்டஜி களை நாம் அறிந்துகொள்ள வேண்டும். இந்த ஸ்ட்ராட்டஜி களை நாம் கண்டறிந்த நிமிடமே நம்மால் அந்த நிச்சயமற்றச்சூழலில் தோன்றும் எதிர்மறை எண்ணங்களைத் தொலைத் துக்கட்ட முடியும். எதிர்மறை எண்ணங்களை ஒழித்துக் கட்டிவிட்டால், மன உளைச்சலையும் பயத்தையும் விரட்டியடிக்க முடியும். அப்படி விரட்டியடித்தால், சுலபமாக எந்த ஒரு நிச்சய மற்றத்தன்மை கொண்ட சூழலையும் நம்மால் சுலபமாகக் கடந்து செல்ல முடியும்’’ என நிச்சயமற்றத் தன்மையில் இருந்து மீண்டுவந்து ஜெயிக்கும் வழிகளைச் சொல்கிறார் ஆசிரியர்.

இந்தப் புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் நிச்சயத்தன்மை மற்றும் நிச்சயமற்றத்தன்மை குறித்த உங்களுடைய மனப்போக்கை அளவிட உதவும் கேள்விகள் அடங்கிய அளவுகோல் ஒன்று தரப்பட்டு உள்ளது. இதை வைத்து உங்களுடைய தற்போதைய நிலைமையை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.

மூன்று பெரும் பிரிவுகளாக...

இந்தப் புத்தகம் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது. முதல் பிரிவில், நிலையற்றத்தன்மை கொண்ட சூழலில் மனிதர்களின் எதிர் வினையாற்றுகிற செயல்பாடுகள் காரணமாக இருக்கும் உணர்வுகள் மற்றும் ஏனைய காரணங்கள் குறித்து விளக்கம் தரப்பட்டுள்ளது. இரண்டாவது பிரிவில், இதுபோன்ற எதிர்வினைகள் உருவாக்கும் தாக்கங்கள் குறித்து விரிவாகப் பேசுகிறது. மூன்றாவது பிரிவில், நம்முடைய வாழ்வில் கேரியர், உறவுகள், பெற்றோர்கள் என ஒவ்வொரு காலகட்டத்திலும் நாம் எதிர்கொள்ளும் நிச்சயமற்றத்தன்மை கொண்ட சூழலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்த பரிந்துரைகள் பலவும் தரப்பட்டுள்ளன.

நிச்சயமற்றத்தன்மை கொண்ட சூழல் என்பது மனிதவாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் இருக்கும் தவிர்க்க முடியாத ஒரு விஷயம். எனவே, அனைவருமே இதைக் கையாளுவது எப்படி என்பதைச் சொல்லும் இந்தப் புத்தகத்தை அனைவரும் கட்டாயம் படித்து பயன் பெறலாம்.