பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

உங்கள் கனவுப் படிப்பு கைகூட கைகொடுக்கும் கல்விக் கடன்! சுலபமாக வாங்க சூப்பர் டிப்ஸ்

கல்விக் கடன்...
பிரீமியம் ஸ்டோரி
News
கல்விக் கடன்...

உள்நாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.30 லட்சம், வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1.5 கோடி வரை கல்விக் கடன் கிடைக்கும்!

12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிந்துவிட்டன. இன்னும் சில வாரங்களில் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. அடுத்து எந்தப் படிப்பைப் படிக்க லாம், எந்தக் கல்லூரியில் சேரலாம் என மாணவர்கள் பேசிக்கொண்டிருக்க, படிப்புச் செலவுக்கு என்ன செய்யப்போகிறோம் என்கிற கவலை பெற்றோர்களுக்கு.

நல்ல இன்ஜினீயரிங் கல்லூரியில் பொறியியல் படிக்க வேண்டும் எனில், பல லட்சம் ரூபாய் செலவாகும்; டாக்டருக்குப் படிக்க வேண்டும் எனில், பல பத்து லட்சம் ரூபாய் செலவாகும். ஃபேஷன் டிசைனிங், ஹோட்டல் மேனேஜ்மென்ட், ஃபுட் இன்ஜினீயரிங், பயோ டெக்னாலஜி என எந்தப் படிப்பை எடுத்துக் கொண்டாலும், சில லட்சமாவது கையில் இல்லை எனில், மகனையோ, மகளையோ மகிழ்ச்சியாக கல்லூரிக்கு அனுப்பி படிக்க வைக்க முடியாது.

உங்கள் கனவுப் படிப்பு கைகூட
கைகொடுக்கும் கல்விக் கடன்!
சுலபமாக வாங்க சூப்பர் டிப்ஸ்

மகன்/மகளின் கல்லூரிப் படிப்புக்கு இதுநாள் வரை பெரிதாக பணம் எதுவும் சேர்த்து வைக்காதவர்களுக்குக் கல்விக் கடன் ஒன்றுதான் அவர்களுக்கு உதவக்கூடியதாக உள்ளது. 2023-24-ம் நிதியாண்டில் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களில் வாங்கப்படும் கல்விக் கடன் 40 சதவிகிதமாக உயரும் என்றும், இதன் தொகை ரூ.35,000 கோடியைத் தொடும் என்றும் கடன் மதிப்பீட்டு நிறுவனமான கிரிசில் (CRISIL) கூறுகிறது.

கல்விக் கடனைப் பற்றி மாணவர் களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் பல சந்தேகங்களும் கேள்விகளும் இருந்து வருகின்றன. இந்தக் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார் கல்வி வழிகாட்டி ரமேஷ் பிரபா...

ரமேஷ் பிரபா
ரமேஷ் பிரபா

ரூ.30 லட்சம் வரை...

‘‘இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்குத் தான் கல்விக் கடன் கிடைக்கும் என்கிற தவறான புரிதல் பலரிடமும் இருக்கிறது. அப்படி இல்லை, கல்விக் கடன் என்பது அனைத்து அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பு மற்றும் டிப்ளோமா படிப்புகளுக்கும் கிடைக்கும். கல்விக் கடனைப் பொறுத்தவரை, உள்நாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.30,00,000 வரையிலும், வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1.5 கோடி வரையிலும் கல்விக் கடன் கிடைக்கும். இதில் போக்குவரத்துச் செலவுகளும் அடங்கும்.

வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களின் கல்விக் கடனில் அவர்களின் போக்குவரத்துச் செலவுகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கல்விக் கடன் பெற அதிக மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும், கவுன்சலிங்கில் கலந்துகொண்டிருக்க வேண்டும் என்று கூறுவதெல்லாம் தவறான தகவல். கல்விக் கடனைப் பொறுத்தவரை, இந்த மாதிரியான எந்தவொரு விதிமுறையும் இல்லை.

முக்கியமாக, இந்தக் கல்லூரியில், இந்தப் படிப்பில் சேரப்போகிறேன் என்றெல்லாம் சொல்லி, கல்விக் கடன் வாங்க முடியாது. கல்லூரி யில் சேர்ந்த பிறகுதான், கல்விக் கடனுக்காக வங்கியை அணுக முடியும். அதே போல, இந்த மாதத்தில்தான் கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதில்லை. ஆண்டு முழுவதும் எந்த மாதத்தில் வேண்டுமானலும் கல்விக் கடனுக்கு விண்ணப்பிக் கலாம். மேலும், பயிலும் கல்லூரிக்கு அருகில் உள்ள வங்கியில்தான் கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் கனவுப் படிப்பு கைகூட
கைகொடுக்கும் கல்விக் கடன்!
சுலபமாக வாங்க சூப்பர் டிப்ஸ்

தேவைப்படும் ஆவணங்கள்...

அடுத்ததாக, கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்க வங்கியில் கல்லூரியின் உறுதிச் சான்று (Bonafide Certificate) மற்றும் செலவுப் பட்டியலை (Schedule of Expenses) சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னர்தான், வங்கி யானது கடன் வழங்குவதற்கான நடவடிக்கைகளையே எடுக்கத் தொடங்கும். செலவுப் பட்டி யலில் குறிப்பிடப்பட்டுள்ள கல்விக் கட்டணம் (Tuition fee), ஹாஸ்டல் கட்டணம், உபகரணக் கட்டணம் (Equipment fee), புத்தகக் கட்டணம் ஆகியவற்றை கல்விக் கடனாக வங்கி வழங்கிவிடும். படிப்புக்காக வாகனம் தேவைப் படும் எனில், கல்விக் கடனில் வாகனக் கடனாக அதிகபட்சம் ரூ.50,000 வரை மாணவருக்கு வழங்கப்படும் என்பது கூடுதல் சிறப்பு.

கூடுதல் கட்டணம் செலுத்தி இருந்தால்...

சில கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை உடனடியாகச் செலுத்தச் சொல்வார்கள். இந்த மாதிரியான சூழ்நிலைகளில் கல்லூரியில் நமது சொந்தப் பணத்தில் கட்டணத்தைக் கட்டி விட்டாலும், பின்னர் அந்தத் தொகையைக் கல்விக் கடன் மூலம் வங்கியில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும்.

இன்றைய நடைமுறையில் வங்கிகளில் தரப்படும் கல்விக் கடன் நேரடியாகக் கல்லூரி அல்லது கல்வி நிறுவனங்களுக்கு தான் செல்லுமே தவிர, நமது கைகளுக்குக் கிடைக்காது. ஏற்கெனவே கல்லூரியில் கட்டணம் செலுத்திவிட்ட சூழலில், வங்கி யானது கல்லூரிக்கு செலுத்தும் கல்விக்கான பணத்தைக் கல்லூரி நம்மிடமே மீண்டும் திருப்பித் தந்துவிடும்.

வட்டி எவ்வளவு?

கல்விக் கடனா, வட்டி அதிகமாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம். தனிநபர் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன் போன்றவற்றை ஒப்பிடும்போது கல்விக் கடனில் வட்டி விகிதம் குறைவுதான். (பார்க்க: அட்ட வணை) மேலும், கல்விக்காக ஏதாவது ஒரு பொருளை அட மானம் வைப்பது அல்லது பிற வழிகளில் பணம் திரட்டுவதைவிட ‘கல்விக் கடன்’தான் சிறந்த வழி.

ஒவ்வொரு வங்கிக்கேற்ப கல்விக் கடனில் வட்டி விகிதங்கள் மாறுபடும். சில வங்கிகளில் மாணவி களுக்குக் கல்விக் கடனில் 0.5% வரை வட்டி விகிதம் குறைக்கப் படுகிறது. மேலும், இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, ரூ.4 லட்சம் வரை கல்விக் கடன் வாங்க எந்தவோர் அடமானமும் தேவை இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

வட்டிக்கு மானியம்...

மத்திய அரசாங்கம் கல்விக் கடன் வட்டியில் மானியம் வழங்கு கிறது என்பது இன்னும் பலருக்குத் தெரிவதில்லை. இந்த மானியம் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. மேலும், பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4 லட்சத்தைத் தாண்டாத மாணவர்களுக்கும் இந்த மானியம் வழங்கப்படுகிறது.

இந்த மானியம் பெற்ற மாணவர் கள் கடன் தொகையை மட்டும் கட்டினால் போதுமானது. அதற்கு வட்டி இல்லை. உங்களுக்கு வட்டி பெறும் தகுதி உள்ளதா, இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள கல்விக் கடன் பெறும் வங்கியிடமே கேட்டுத் தெரிந்துக்கொள்ளலாம்.

மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் கீழ், பட்டயப் படிப்பு காலம் + ஓராண்டுக்கு மாணவர்கள் தங்களது கடனுக்கான வட்டியை வங்கியில் கட்ட வேண்டாம். மாணவர்களுக்காக அரசே இந்த வட்டியை வங்கியில் செலுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டத்தைப் பற்றி மேலும் education.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

எப்போது திருப்பிச் செலுத்த வேண்டும்?

கல்லூரிப் படிப்பை முடித்த மாணவர்கள் வேலை கிடைத்திருந்தாலும் அல்லது வேலை கிடைத்திருக்கா விட்டாலும் கடனைத் திருப்பிச் செலுத்த தொடங்க ஓராண்டு வரை சலுகை வழங்கப்படும். மேலும், 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தலாம். மாணவர்களால் படிக்கும்போதே வட்டியைச் செலுத்த முடியாது எனில், அதை வங்கிக்கு எழுத்துபூர்வமாகத் தெரிவிக்க வேண்டும். ஆக, படிக்கும் காலத்திலேயே வட்டிகட்ட வேண்டும் என்று எந்த வங்கியும் மாணவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைனில் கல்விக் கடன்...

ஆன்லைன் மூலம் கல்விக் கடன் பெற முடியும். மத்திய அரசின் http://www.vidyalakshmi.co.in என்ற இணைய தளத்தில் 35-க்கும் மேற்பட்ட வங்கிகளில் 70 வகையான கல்விக் கடன் திட்டங்கள் உள்ளன. இந்த இணைய தளம் ஒரு ஒற்றை சாளர தளம் (Single Window Platform) ஆகும். அதாவது, இந்த இணைய தளத்தில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.இந்த இணையதளத்திலேயே வங்கிகள் மாணவர்களின் விண்ணப்பத்தைப் பரிசீலித்து, விண்ணப்பத்துக்கான ஸ்டேட் டஸையும் அப்டேட் செய்யப்படும். இந்த இணையதளத்தில் பதிவு செய்ய மாணவரின் முழுப் பெயர், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி மட்டும் போதுமானது.

உங்கள் கனவுப் படிப்பு கைகூட
கைகொடுக்கும் கல்விக் கடன்!
சுலபமாக வாங்க சூப்பர் டிப்ஸ்

ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும்தானா?

ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கும் கல்விக் கடன் வழங்கப்படும். இப்படி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றுக்கும் மேற்பட் டோர் கல்விக் கடன் பெறும்போது, மொத்தக் கல்விக் கடன் தொகையைக் கணக்கிட்டு அதற்கான ஜாமீனை மாணவர்களின் பெற்றோர்கள் கொடுக்க வேண்டும்.

ஒருவேளை, இவர் களுக்கு வட்டி மானியம் பெறும் தகுதி இருந்தால், இந்தக் குடும்பத்தில் கல்விக் கடன் பெற்றிருக்கும் அனைவருக்கும் இந்தச் சலுகை செல்லும்.

நிர்வாக ஒதுக்கீட்டின்கீழ் சேரும் மாணவர்களுக்கு...

நிர்வாக ஒதுக் கீட்டின்கீழ் கல்லூரியில் சேரும் மாணவர்கள் கல்விக் கடன் பெற தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள் அரசு ஒதுக்கீட்டின் கீழ் தாங்கள் விரும்பிய கல்லூரியில் இடம்கிடைக்க வில்லை என்பதை நிரூபிக்க வேண்டும். இந்திய வங்கிகள் சங்கத்தின் திட்டத்தின்கீழ் இயங்கும் (IBA – Indian Bank’s Association) வங்கிகள் இவர் களுக்குக் கல்விக் கடன் வழங் காது என்பது குறிப்பிடத்தக்கது.

டெலஸ்கோப்பிக் ஆப்ஷன்...

கல்லூரி முடித்து வேலைக்குச் சென்றாலும், சிலருக்கு அவர்களது குறைவான சம்பளத்தால் கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்துவது கடின மாக இருக்கும். இவர்களுக்கான சிறந்த தீர்வுதான் டெலஸ் கோப்பிக் ஆப்ஷன். இது இந்திய வங்கிகள் சங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறையின் மூலம் கல்விக் கடனைத் திருப்பி செலுத்தத் தொடங்கும்போது, குறைந்த பட்சத் தொகையை மட்டும் திருப்பிச் செலுத்தத் தொடங் கலாம். அவர்களது வருமான மும், பொருளாதாரச் சூழலும் உயர உயர, திருப்பிச் செலுத்தும் தொகையையும் அதிகரித்துக் கொள்ளலாம்’’ என்று பேசி முடித்தார் ரமேஷ் பிரபா.

இந்த விஷயங்களை எல்லாம் தெரிந்துகொண்டு முயற்சி செய்தால், கல்விக் கடனை சுலபமாகப் பெறலாம்.

கல்விக் கடன் பெற தேவையான ஆவணங்கள்...

* 10, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள்.

* பெற்றோரின் ஆதார் கார்டு மற்றும் வருமானச் சான்றிதழ்.

* பெற்றோரின் வங்கிக் கணக்கு தொடர்பான ஆவணங்கள்.

* இருப்பிடச் சான்றிதழ்.

* ஆதார் கார்டு.