கார்ஸ்
Published:Updated:

மஹிந்திரா ரிசர்ச் மையத்தில் மாணவர்களுடன் ஒருநாள்!

மஹிந்திரா ரிசர்ச் மையம்
பிரீமியம் ஸ்டோரி
News
மஹிந்திரா ரிசர்ச் மையம்

ஃபேக்டரி விசிட்: மஹிந்திரா ரிசர்ச் மையம்

மஹிந்திரா ரிசர்ச் மையத்தில் மாணவர்களுடன் ஒருநாள்!

`மின்சார வாகனங்களின் நிலை இப்போது எப்படி இருக்கிறது? அதன் எதிர்காலம் எப்படி இருக்கும்?' - இதுதான் இப்போது அதிகமாக விவாதிக்கப்படும் தலைப்பு. ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் ICE வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றி விற்பனை செய்வது என்ற திட்டத்தின் கீழ் XUVe8, XUVe9 என்று இரண்டு கார்களை மஹிந்திரா உருவாக்கி வருகிறது. இதில் XUVe8 என்பது XUV700 காரின் மின்சார வடிவமாக இருக்கும். அதேபோல, XUVe9 என்பது கூபே வடிவிலான காராக இருக்கும். இந்த இரண்டு வாகனங்களுமே INGLO ப்ளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட இருக்கிறது. இது தவிர Born Electric என்ற வகையில் முழுக்க முழுக்க மின்சாரக் கார்களாகவே BE05, BE07, மற்றும் BE09 என்று மூன்று வாகனங்களையும் மஹிந்திரா வடிவைத்துக் கொண்டிருக்கிறது. இதைத் தாண்டி XUV 400 என்ற மின்சார வாகனமும் இருக்கிறது.

மஹிந்திரா இப்படி மின்சார வாகனங்கள் மீது அதிக கவனம் செலுத்தி வருவதாக... மின்சார வாகனங்களின் எதிர்காலம் பற்றி மஹிந்திராவின் தலைமைப் பொறியாளர்களும், ஆராய்ச்சியாளர்களும் மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும். அந்த எண்ணத்தில் பிறந்ததுதான் இந்த வாக் அரவுண்ட் வொர்க்‌ஷாப். சித்திரைத் திருநாளான ஏப்ரல் முதல் தேதி செங்கல்பட்டில் அமைந்திருக்கும் மஹிந்திரா ரிசர்ச் மையத்தில் நடைபெற்ற இந்தப் பயிலரங்கத்தில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இருந்து சுமார் 125 மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்த ஆராய்ச்சிக் கூடத்தில் எத்தனை பரிசோதனைக் கூடங்கள் இருக்கின்றன? இது எத்தனை ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்திருக்கிறது? எத்தனை பொறியாளர்கள் பணியாற்றுகிறார்கள்? மின்சார வாகனங்களை வடிவமைக்கவும் உருவாக்கவும் எப்படி ஒரு தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது என்ற முன்னோட்டத்தை மனிதவள மேம்பாட்டுத் துறையைச் சேர்ந்த ஜோஷ்வா விளக்கினார்.

இதையடுத்து மஹிந்திராவின் ஆட்டோமேட்டிக் டெக்னாலஜி மற்றும் ப்ராடக்ட் டெவலப்மென்ட் துறை தலைவர் ஆர்.வேலுசாமி பணி நிமித்தமாக ஜெர்மன் நாட்டில் இருந்தார் என்றாலும், அங்கிருந்தபடியே மின்சார வாகனங்கள் குறித்து மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் கூறினார். மாணவர்கள் எழுப்பிய எந்த ஒரு கேள்வியையும் தவிர்க்காமல், அத்தனை கேள்விகளுக்கும் அவர் பதில் சொன்ன விதம் மாணவர்கள் பலரையும் கவர்ந்தது. வேலுசாமி காணொளிக் காட்சி வாயிலாக பேசி முடித்ததும், அவர் இருந்த பிரம்மாண்டத் திரைக்குப் பக்கத்தில் அத்தனை மாணவர்களும் ஓடிச் சென்று அவருடன் செல்பி எடுத்து தங்கள் அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்தினார்கள்.

மஹிந்திரா ரிசர்ச் மையத்தில் மாணவர்களுடன் ஒருநாள்!

இதை அடுத்து Vehicle Mechanical Systems துறையின் Engineering Head டாக்டர் வி.விக்ரமன், The Art and Science of Electric Vehicles and Battery பற்றி அழகான தமிழில் அற்புதமாகப் பேசினார். மின்சார வாகனங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு காற்றில் இருக்கும் மாசைக் கட்டுப்படுத்துவதுடன், நம் நாட்டுக்கு எப்படி பல நூறு கோடி டாலர் மதிப்பிலான அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்தும் என்று கூறினார்.

வாகனங்கள் வெளியேற்றும் புகையை வெகுவாகக் கட்டுப்படுத்த உலக நாடுகள் அடுத்தடுத்து பல முயற்சிகள் எடுத்து வருவதால்... தன்னெழுச்சியாகவே மின்சார வாகனங்களுக்கான காலம் உருவாகி வருவதை அவர் புள்ளிவிவரங்களோடும் ஆதாரங்களோடும் காட்டினார். அத்துடன் மஹிந்திரா உருவாக்கியிருக்கும் INGLO ப்ளஃாட்பார்ம் எப்படிச் செயல்படுகிறது, என்று துவங்கி செல் கெமிஸ்ட்ரி, செல் டைப், அந்த செல்கள் எப்படி பேக் செய்யப்படுகின்றன, செல் இன்டகரேஷன் எஃபீயன்ஸி பல நுணுக்கமான பல விஷயங்களை அவர் எளிமையாக விளக்கியது மாணவர்களைக் கவர்ந்தது.

ICE இன்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்களின் பாதுகாப்புக்கு எடுக்கும் முன்னெச்சரிக்கைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை விட பல மடங்கு கவனம் பேட்டரி வாகனங்களை உருவாக்கும்போது இருக்க வேண்டும். அதனால் விபத்து நேரும்போது, அது Frontal Crash ஆக இருந்தாலும் சரி, Side Crash ஆக இருந்தாலும் சரி - அவை பேட்டரிக்குப் போகாமல் எப்படி மடை மாற்றிவிடுவது. அதையும் மீறி பேட்டரியை விபத்து பாதித்தால் அது நிலை குலையாமல் இருக்க அதன் Thermal and Chemical Stabilityயை உறுதிபடுத்தவும் எத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதையும் டாக்டர் விக்ரமன் தெள்ளத் தெளிவாக விளக்கினார்.

பெட்ரோல் பங்க்குகள் எப்படிப் பரவலாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு சார்ஜிங் ஸ்டேஷன்கள் வர வேண்டும். பேட்டரி கார்களின் விலை கட்டுபடியான விலையில் இருக்க வேண்டும். அனைத்துக்கும் மேலாக ஒரு முறை சார்ஜ் செய்தால் எவ்வளவு கிமீ ஓடும் என்ற கவலை இல்லாத அளவுக்கு மின்சார கார்களின் ரேஞ்ச் உயர வேண்டும். வரும் காலத்தில் இது போன்ற கேள்விகளுக்கும் விடை கண்டாக வேண்டும் என்று டாக்டர் விக்ரமன் முடித்தபோது, மாணவர்கள் அனைவரும் பலமாகக் கைதட்டி அவருக்கு நன்றியைத் தெரிவித்தார்கள்.

அதன் பிறகு Connected Car தொழில்நுட்பம் குறித்து, இத்துறையின் தலைவராக விளங்கும் சி.நந்தகோபாலன் மாணவர்களுடன் கலந்துரையாடினார். எலெக்ட்ரிக் ஆர்க்கிடெக்ச்சர், பவர் மேனேஜ்மென்ட், ஆப்பரேட்டிங் சிஸ்டம், சாஃப்ட்வேர் ப்ளாட்ஃபார்ம், சாஃப்ட்வேர் அப்ளிகேஷன், Cloud, Ext Interfaces, GPS, Cyber Security, Functional Safety என்று இதோடு தொடர்புடைய ஒவ்வொரு விஷயத்தையும் விளக்கியதுடன், இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று இயந்து எப்படி செயலாற்றுகின்றன என்பதைக் கூறியது மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைந்திருந்தது.

அதன் பிறகு Vehcile Testing Center, Systems Evaluation Lab, Fatigue Lab, NVH Lab என்று அங்கே அமைந்திருக்கும் பல பரிசோதனைச் சாலைகளுக்கும் சென்று அவற்றின் செயல்பாட்டையும் அவர்கள் கண்டு ரசித்தார்கள். வழக்கம்போல, அடுத்த பயிலரங்கம் எப்போது என்ற கேள்வியோடு அன்றைய பயிலரங்கம் முடிவுக்கு வந்தது. இதனிடையே மஹிந்திரா அளித்த அற்புதமான விருந்து உபசரிப்பு மற்றும் கட்டணமில்லாத போக்குவரத்து ஏற்பாடுகள் ஆகியவையும் தொலைதூரத்தில் இருந்து வந்த மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருந்தது.

மஹிந்திரா ரிசர்ச் மையத்தில் மாணவர்களுடன் ஒருநாள்!