
சிறுபான்மையினருக்கான எல்லா நலத்திட்டங்களையும் முற்றிலுமாகக் கைவிடுவதே இவர்களின் நோக்கம். அதன் ஒரு படிதான் இந்தத் திட்ட ரத்து அறிவிப்பு
ப்ரீ மெட்ரிக் கல்வி உதவித்தொகை ரத்து’ சர்ச்சை ஓய்வதற்கு முன்பே, சிறுபான்மையினரின் மேற்படிப்புக்காக வழங்கப்படும் ‘மௌலானா ஆசாத் உதவித்தொகை’யை அடுத்த ஆண்டிலிருந்து நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது மத்திய அரசு!
சிறுபான்மையின மாணவர்களை எம்.பில்., பிஹெச்.டி போன்ற மேற்படிப்புகளைத் தொடர ஊக்குவிப்பதே, ‘மௌலானா ஆசாத் உதவித்தொகை’ திட்டத்தின் நோக்கம். இந்தத் திட்டம் நிறுத்தப்படுவது தொடர்பாக மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டபோது, ‘2014 தொடங்கி தற்போது வரை இந்தத் திட்டத்தின்கீழ் 6,772 மாணவர்கள் ரூ.738.85 கோடி உதவித்தொகை பெற்றிருக்கிறார்கள். பிற உதவித்தொகைத் திட்டங்களால் பயன்பெறும் சிறுபான்மையின மாணவர்கள் இதிலும் பதிவுசெய்கிறார்கள். எனவேதான் இந்தத் திட்டம் நிறுத்தப்படவிருக்கிறது’ என்று மத்திய கல்வி அமைச்சகம் கூறியிருக்கிறது.

2017-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த உதவித்தொகை பெறும் மாணவர்கள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம். எனவே, மாணவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட உதவித்தொகைகள் பெற்றால், அதைக் கண்டுபிடித்து நிறுத்துவதும், திரும்பப் பெறுவதும் சுலபம். அதைச் செய்வதைவிட்டுவிட்டு, முற்றிலுமாக இந்தத் திட்டத்தை ரத்துசெய்திருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
இது குறித்து நம்மிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கனகராஜ், ‘‘சிறுபான்மையினருக்கான எல்லா நலத்திட்டங்களையும் முற்றிலுமாகக் கைவிடுவதே இவர்களின் நோக்கம். அதன் ஒரு படிதான் இந்தத் திட்ட ரத்து அறிவிப்பு. மற்ற திட்டங்களில் சிறுபான்மையினருக்குச் சலுகை இருப்பதால்தான், சிறப்புத் திட்டமான மெளலானா ஆசாத் திட்டம் ரத்துசெய்யப்படுகிறது என்கிறார்கள். ‘மௌலானா ஆசாத் உதவித்தொகை’ திட்டத்தில் பயன்பெறுவதோடு, வேறு பிற சிறப்புத் திட்டங்களிலும் மாணவர்கள் சலுகை பெற பதிவுசெய்கிறார்கள்’ என மாணவர்கள் மீது பழியைப் போடுகிறது மோடி அரசு. அந்தக் குற்றச்சாட்டு உண்மை என்றால், அதை டெக்னிக்கலாக எப்படிச் சரிசெய்வது என்றுதான் யோசிக்க வேண்டும். சரி... முதலில் அந்தக் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை வெளியிடாதது ஏன்?” என்று கேள்வியெழுப்புகிறார்.

இது தொடர்பாக தமிழக பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் அஸ்வத்தாமனிடம் விளக்கம் கேட்டோம். ‘‘பா.ஜ.க ஆட்சியில், ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழங்கப்படும் நிதி உயர்த்தி வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கு சிறப்பு நிதியும் வழங்கப்படுகிறது. இப்படியான திட்டங்களில் சிறுபான்மை மாணவர்களும் பயனடையலாம். எனவே, ‘அனைவருக்கும் ஒரே உதவித்தொகை’ என்னும் நோக்கத்தில்தான், அரசு இந்தச் சிறப்புத் திட்டத்தை நிறுத்தத் திட்டமிட்டிருக்கிறது” என்றார்.
ஒரே நாடு... ஒரே மொழி... ஒரே சட்டம்... ஒரே திட்டம் என்கிற விளையாட்டில், இன்னும் யார் யாரிடமிருந்து என்னென்ன உரிமைகளைப் பறிக்கப்போகிறார்களோ?