
அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவுபெறும் நிலையில், திட்டத்தின் நிறை குறைகள் குறித்து ஆய்வு செய்யவேண்டிய அவசியமும் பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது.
கொரோனா பொது முடக்கத்தின்போது, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கற்றல் இடைவெளியைப் போக்க, ‘இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை’ முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்து ஓராண்டு நிறைவுபெறவிருக்கும் நிலையில், இந்தத் திட்டம் குறித்த சலசலப்புகளும் எழுந்துவருகின்றன. அது குறித்த விசாரணையில் இறங்கினோம்.
தூத்துக்குடி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அருணாச்சல சுந்தரம், “கிராமப்புறங்களில் இந்தத் திட்டத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆனால், எங்கள் மாவட்ட நகர்ப்புறங்களில் தனியார் டியூஷன் சென்டர்கள் அதிக அளவில் இருப்பதால், மாணவர் வருகை சதவிகிதம் குறைந்துவருகிறது. தூத்துக்குடியில் மொத்தமுள்ள 2,797 மையங்களில், 94 மட்டுமே நகர்புறங்களில் இருக்கின்றன. இவற்றில், 68 மையங்களில் 17 முதல் 25 மாணவர்களும் மற்ற 26 மையங்களில் 12 முதல் 15 மாணவர்களுமே பயன்பெறுகிறார்கள். இது தொடர்பாக, தன்னார்வலர்கள் மூலம் பல இடங்களில் புதிய சேர்க்கைக்கான முயற்சிகளை எடுத்துவருகிறோம்” என்றார்.

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் இரா.தாஸ் பேசும்போது, “பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இந்தத் திட்டத்துக்கு நேரடியாக வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. ஆயிரம் ரூபாய் மட்டுமே மாதாந்தர ஊக்கத்தொகையாக வழங்கப்படுவதால், தன்னார்வலர்களிடமும் ஆர்வம் வடிந்துவிட்டது. மாதம்தோறும் நடைபெறும் பயிற்சி வகுப்புகளுக்கு வரும் தன்னார்வலர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. பலர் தங்கள் வீடுகளிலேயே பாடம் எடுப்பதால், மற்ற சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பாடம் கற்க வருவதை தன்னார்வலர்களின் பெற்றோர்கள் சிலர் ஏற்பதில்லை. இது போன்ற சமூகப் பிரச்னைகளைத் தவிர்க்க கிராமப்புறங்களில் ஒரு பொதுமையத்தை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும்” என்றார்.
இந்தத் திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலர்கள் சிலரிடம் பேசினோம். “திட்டத்தில் சேர்ந்து ஒரு வருடம் நிறைவுபெறப் போகிறது. ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகையான ரூபாய் ஆயிரம் இதுவரை உயர்த்தி வழங்கப்படவில்லை. மாதா மாதம் வழங்கவேண்டிய ஊக்கத்தொகை சரியான தேதியில் கிடைப்பதில்லை. ஜூன் மாதத்துக்கான தொகையே இப்போதுதான் கிடைத்தது. ஊக்கத்தொகையை மூவாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க, கோரிக்கை வைத்திருக்கிறோம். அதை அரசு கண்டுகொள்ளவில்லை. ஒவ்வொரு மாதமும் மையங்களுக்கு வரவேண்டிய பயிற்றுவிப்புக் கருவிகள், சார்ட் அட்டைகள் போன்றவையும் குறித்த நேரத்தில் கிடைப்பதில்லை.

எங்கள் பகுதியில் மட்டும் எட்டு மையங்கள் செயல்படுகின்றன. அவற்றில் ஒரு மையம்தான் அரசு இடத்தில் இருக்கிறது. மழைக்காலத்தில் பாடம் எடுப்பதில் சிரமங்கள் நேர்கின்றன. மேலும், டிசம்பர் மாதத்துடன் இந்தத் திட்டம் முடிந்துவிடும் என்பதால் பலர் விலகிக் கொள்கின்றனர். இதனால் பணிச்சுமை கூடுகிறது. இருப்பினும் அரசு ஆசிரியர் பணி, டி.என்.பி.எஸ்.சி., அங்கன்வாடிப் பணியாளர் தேர்வுகளில் எங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்” என்றனர்.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் கூறுகையில், “ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையில் 34 லட்சம் மாணவர்கள் தொடக்கக் கல்வி பயில்கிறார்கள். இவர்களில் நாள்தோறும் 25 முதல் 30 லட்சம் மாணவர்கள் ‘இல்லம் தேடிக் கல்வி’த் திட்டத்தின் வாயிலாகப் பயனடைந்து வருகிறார்கள். இந்தத் திட்டத்தில் மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாகப் பங்கேற்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. எனவே, மாணவர்களின் எண்ணிக்கை கூடுவதும் குறைவதும் தவிர்க்க முடியாததுதான். மேலும், பள்ளிகளில் கொடுக்கப்படும் வீட்டுப்பாடங்கள், மையங்கள் அமைந்துள்ள பகுதிக்குச் செல்லும் தொலைவு ஆகிய காரணங்களால் மாணவர்கள் மாலை நேர வகுப்புக்கு வருவதில்லை என்று கண்டறிந்தோம். இவ்வளவுக்கும் மத்தியில், கிராமப்புறங்களில் இந்தத் திட்டம் 100 சதவிகிதம் வெற்றிபெற்றிருக்கிறது. நகர்ப்புறங்களில் மையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும், தன்னார்வலர்களின் தேவையும், அவர்களைத் தேர்வு செய்வதில் சில இடர்பாடுகளும் இருக்கின்றன. விரைவில் அவற்றைச் சரிசெய்வோம்.

சமூகப் பிரச்னைகள் குறித்து இதுவரை எங்களுக்கு எந்தப் புகாரும் வரவில்லை. அப்படி ஏதாவது இருந்தால் எங்களின் கவனத்துக்குக் கொண்டுவரலாம். நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், 90 சதவிகித மையங்கள் பள்ளிகளில்தான் இயங்குகின்றன. 10% மட்டுமே தன்னார்வலர்களின் வீடுகளுக்கு அருகில் செயல்படுகின்றன. ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்குவது பற்றி அரசுதான் முடிவு செய்யும்” என்று பதிலளித்தார்.
இந்தத் திட்டம் நகர்ப்புற மாணவர்களைவிட கிராமப்புற மாணவர்களுக்குப் பயனளித்திருப்பதை அறிய முடிகிறது. அதேநேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவுபெறும் நிலையில், திட்டத்தின் நிறை குறைகள் குறித்து ஆய்வு செய்யவேண்டிய அவசியமும் பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது. சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு இடமளிக்காத வகையிலும், தன்னார்வலர்களின் உழைப்புக்கு மதிப்பளிக்கும் வகையிலும் அரசும் அதிகாரிகளும் சரியான செயல்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு!