
கல்வியாளர் ரமேஷ் பிரபா
ஒருவருக்குக் கிடைக்கும் உயர்கல்வி, அவர் குடும்பத்தின் தலையெழுத்தையே மாற்றிவிடும். அது விருப்பம் சார்ந்ததாகவும், நல்ல எதிர்காலம் தருவதாகவும் இருப்பது நலம். என்றாலும், அதை முடித்தால் என்ன வேலை கிடைக்கும் என்ற கேள்வியே பலர் மனதில் நிற்கிறது. `பல்வேறு படிப்புகளைப் படித்து இத்தனை லட்சம் பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்களே' என்ற கேள்விக்கு, `இனி படித்தால் மட்டும் போதாது, வேலைக்கான தகுதிகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்' என்கிற யதார்த்தமே பதிலாக வெளிப்படுகிறது.

எனவே, இந்தத் தொடரில் இந்த இரண்டு விஷயங்களையும் இணைத்தே நாம் பேசுவோம். பல்வேறு துறைகளில் இந்திய, உலகளவில் உள்ள ஏராளமான படிப்புகள்... அவற்றில் எப்படிச் சேர்வது என்கிற வழிமுறைகள்... அவற்றைப் படித்தால் என்ன வேலையில் சேரலாம் என்கிற விரிவான வழிகாட்டுதல்கள்... இவையெல்லாம் ஒரு புறம் இருக்கும். விரும்பிய இலக்கை அடைய, படிப்பைத் தாண்டி நாம் என்னென்ன தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்கிற நெறிப்படுத்துதல் இன்னொரு புறம் கூடவே தொடரும். இவை இரண்டையும் இணைந்து பின்பற்றினால் மட்டுமே வெற்றி சாத்தியம்.
நமது குடும்பங்களைப் பொறுத்தவரை கல்வி கற்பதற்கான பொருளாதாரச் சூழல் என்பது இன்னொரு முக்கிய அம்சம். வங்கிகளில் கல்விக்கடன் பெறுவது எப்படி என்பதில் தொடங்கி அரசு மற்றும் அரசு சாராத பல்வேறு நிறுவனங்கள் வழங்கும் கல்வி உதவித்தொகைகள் பெறுவது வரை அனைத்தையும் விரிவாகவே சொல்லப்போகிறேன்.

உயர்கல்வி என்பது ஒட்டுமொத்தக் குடும்பமும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு என்பதால், இது பெற்றோரும் பிள்ளைகளும் இணைந்தே படிக்க வேண்டிய ஒரு வாழ்க்கை வழிகாட்டல் தொடராக அமையப்போகிறது.
பல்வேறு படிப்புகளைப் பற்றியும் பார்ப்பதற்கு முன்பாக நமது கல்விச்சூழலில் நிகழும் மாற்றங்களையும் அறிய வேண்டியது அவசியமாகிறது. ‘NEP 2020’ எனப்படும் தேசியக் கல்விக்கொள்கையின் பரிந்துரைப்படி உயர்கல்வியைக் கட்டுப்படுத்தும் முக்கிய அமைப்புகளான பல்கலைக்கழக மானியக் குழு (UGC), அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் (AICTE) இரண்டுமே கலைக்கப்பட்டு புதிதாக பிரதமர் தலைமையில் இந்திய உயர்கல்விக் கழகம் (HECI) இந்நேரம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அது இந்தக் கல்வி ஆண்டிலும் நடைபெறவில்லை. எனினும் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் வேலைகள் வேகம் எடுத்துள்ளன. அந்த வகையில் UGC, AICTE இரண்டுமே தனித்தனியாக சில முக்கியக் கொள்கை முடிவுகளை சமீபத்தில் அறிவித்துள்ளன. கல்லூரிக் கல்வியில் அழுத்தமான தாக்கங்களை உண்டாக்கப்போகிற அந்த அறிவிப்புகளை ஒவ்வொன்றாக ஆராய்வோம்.

இந்த ஆண்டு தொடங்கி உயர்கல்வியில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு மாணவரும் ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளில் சேர்ந்து படிக்க முடியும் என்பதுதான் யுஜிசி அறிவித்திருக்கும் முக்கிய முடிவு. இது பட்டப் படிப்புக்கும் (UG) பட்ட மேற்படிப்புக்கும் (PG) பொருந்தும். ஆனால். Ph.D. என்கிற ஆய்வு பட்டப்படிப்புக்குப் பொருந்தாது. ஒரு மாணவர் ஒரே நேரத்தில் இரண்டு பட்டப் படிப்புகளை நேரடியாக ஒரே கல்வி நிறுவனத்தில் படிக்கலாம்; அல்லது, இரண்டு வெவ்வேறு கல்வி நிறுவனங்களில் படிக்கலாம். ஆனால், வகுப்புகள் நடைபெறும் நேரம் வெவ்வேறாக இருக்க வேண்டும். அல்லது ஒரு பட்டப்படிப்பை நேரடியாகக் கல்லூரியிலும் இன்னொரு பட்டப்படிப்பைத் தொலைதூரக் கல்வி அல்லது ஆன்லைன் மூலமாகப் படிக்கலாம்; இரண்டு பட்டப் படிப்புகளையும் தொலைதூரக் கல்வி அல்லது ஆன்லைன் மூலமாகவும் படிக்கலாம். ஒருவர் இப்படி இரண்டு பட்டப்படிப்புகளைத் தேர்ந்தெடுக்கும் கல்வி நிறுவனங்கள் UGC, AICTE போன்ற அமைப்புகளின் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டியது கட்டாயம்.




இதில் சாதகங்கள் என்னவென்று பார்த்தால், முதலில் இது ஒரு திணிப்பு கிடையாது. எந்த ஒரு மாணவரால் இரண்டு படிப்புகளை ஒரே நேரத்தில் படிக்க முடியுமோ அவர்தான் இதை விரும்பி எடுத்துக்கொள்ளப்போகிறார். ஒன்றையொன்று சார்ந்த இரண்டு துறைகளில் நீங்கள் படிக்கலாம்; அல்லது, சம்பந்தமே இல்லாத இரண்டு வெவ்வேறு துறைகளைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். உதாரணமாக, பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும் ஒரு மாணவர் மொழி சார்ந்த பாடங்களில் ஆர்வம் கொண்டு படிக்க வாய்ப்பு இருக்கிறது. அறிவியல் பயிலும் ஒரு மாணவர் பொருளாதாரம் சார்ந்து படிக்க வாய்ப்பு இருக்கிறது. இப்படி இரண்டு பட்டப்படிப்புகள் படிப்பது அவர்களுக்கு வேலைவாய்ப்பை சற்று அதிகரிக்கச் செய்யும் என்பது ஒரு வாதமாகச் சொல்லப்படுகிறது. அதேபோல் யு.பி.எஸ்.சி போன்ற போட்டித் தேர்வுகளுக்குச் செல்லும்போதும் இது கண்டிப்பாகப் பயனளிக்கும்.
எந்த ஒரு பட்டப் படிப்பைப் படித்தாலும் அத்துடன் வேலைவாய்ப்புக்கு உகந்த கம்ப்யூட்டர் சயின்ஸ், டேட்டா சயின்ஸ், பிசினஸ் அனலிட்டிக்ஸ் போன்ற கூடுதல் விஷயங்களைத் தெரிந்துகொள்ளக் கண்டிப்பாக இது உதவும். சொல்லப்போனால் பொறியியல் பட்டத்திலேயேகூட இரண்டு வெவ்வேறு துறைகளைத் தேர்ந்தெடுத்து இரண்டிலும் வல்லவராக மாறும் திறமை பல மாணவர்களுக்கு உண்டு. தவிர, இரண்டு ஷிஃப்ட் என்கிற விஷயம் ஏற்கெனவே கலை அறிவியல் கல்லூரிகளில் பிரபலம். எனவே ஒரு மாணவர் ஒரே கல்லூரியில் காலை நேரம் ஒரு பட்டப்படிப்பையும் பிறகு அங்கேயே இரண்டாவது ஷிஃப்டில் இன்னொரு பட்டப்படிப்பையும் தாராளமாகப் படிக்க முடியும், அல்லது, அருகருகே இருக்கிற இரண்டு கல்லூரிகளைத் தேர்ந்தெடுத்து ஒன்றில் காலையில், மற்றொன்றில் மதியத்தில் கூட இரண்டு பட்டப்படிப்புகளைப் படிக்க முடியும்.

இதில் பாதகங்கள் என்ன? நடைமுறைச் சிக்கல்கள் என்ன? இன்று, ஒரு பட்டப் படிப்பு படிப்பதற்கே பொருளாதாரச் சூழல் சரியாக இல்லாத மாணவர்கள் அதிகம் இருக்கையில், இரண்டு பட்டப்படிப்பைத் தீர்மானிப்பது பெரும்பாலும் பணமாகவே இருக்க வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில், வசதி படைத்த மாணவர்களுக்கென தங்கள் விதிமுறைகளைக் கல்வி நிறுவனங்கள் வளைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். தவிர, இது ஒரு பட்டப் படிப்புக்கே சீட் கிடைக்காமல் சிரமப்படுகிற ஒரு மாணவரின் வாய்ப்பைத் தட்டிப் பறிக்கும் செயலைச் செய்து விடுமோ என்கிற அச்சமும் உள்ளது. இந்த அச்சத்தைப் போக்கும் விதமாக யு.ஜி.சி சேர்மன் ஒரு விதிமுறையைச் சொல்லியிருக்கிறார். ஒரே ஒரு பட்டப்படிப்பை மட்டும் படிக்கும் மாணவருக்கே ஒரு கல்லூரி முன்னுரிமை கொடுக்க வேண்டும். எஞ்சியுள்ள இடங்களில் மட்டுமே இரண்டாவது பட்டப்படிப்பு படிக்கும் மாணவரைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். நடைமுறையில் இது கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை அரசு எந்திரங்கள் கண்காணிக்க வேண்டியது அவசியம்.




அடுத்து AICTE வெளியிட்டிருக்கிற ஒரு தடாலடி அறிவிப்பு பற்றிப் பார்ப்போம். இதுவரை இன்ஜினீயரிங்கில் சேர, கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய மூன்று பாடங்களும் கண்டிப்பாகப் படித்திருக்க வேண்டும். இந்த விதியை மாற்றி `இந்த மூன்று பாடங்களுமே இல்லாமல்கூட பொறியியல் பட்டம் படிக்க முடியும்' என்று இந்த வருடம் AICTE சொல்லியிருப்பது கலவையான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. எனினும் இதை ஒரு பொதுப்படையான அறிவிப்பாக அவர்கள் வெளியிடவில்லை. ஒரு சில பிரிவுகளுக்கு ஒரு சில பாடங்கள் தேவை இல்லை என்பதுதான் அவர்களுடைய வாதம். அந்த அடிப்படையில், கம்ப்யூட்டர் சார்ந்த எலக்ட்ரானிக்ஸ் பிரிவுகளுக்கு கெமிஸ்ட்ரி தேவையில்லை என்று முடிவெடுத்திருக்கிறார்கள். சில துறைகளுக்குக் கணிதப் பாடம் தேவையில்லை என்றும், இன்னும் சில பிரிவுகளுக்குக் கணிதம், இயற்பியல் இரண்டும் தேவையில்லை என்றும் முடிவெடுத்துள்ளனர். சில குறிப்பிட்ட பிரிவுகளுக்கு இந்த மூன்றுமே தேவையில்லை எனச் சொல்லியிருப்பதுதான் அதிர்ச்சிக்குரிய விஷயம். எனினும் 14 பாடங்களைப் பட்டியலிட்டு அவற்றில் ஒன்றாவது கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
இன்ஜினீயரிங் படிப்பு என்பதே கணிதம் சார்ந்த ஒன்று. அப்படி இருக்கும்போது அதை முற்றிலுமாகத் தவிர்த்துப் படித்தால் அது சரியாக இருக்குமா என்று வல்லுநர்கள் கேட்கிறார்கள். `தவிர்க்கப்படும் இந்தப் பாடங்களுக்கு பொறியியல் கல்லூரிகள் பிரிட்ஜ் கோர்ஸ் ஒன்றைக் கண்டிப்பாக நடத்த வேண்டும்' என சமாதானம் சொல்கிறது AICTE. `நிறைய மாணவர்கள் பொறியியல் படிக்க இது வாய்ப்பாக அமையும். தேவையில்லாத பாடங்களை சுமையாகத் தூக்கிக்கொண்டு சிரமப்பட வேண்டாம்' என்பதையும் சாதகமாகச் சொல்கிறார்கள். எனினும், நடைமுறைப்படுத்துவதில் இது எந்த மாதிரியான சிக்கல்களை ஏற்படுத்தப் போகிறது என்பதை இனி பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
- படிப்பு தொடரும்...
இந்தக் கட்டுரையை வீடியோ வடிவில் காண கீழே இருக்கும் லிங்க்கை க்ளிக் செய்யவும் https://bit.ly/3vEihHU