
கல்வியாளர் ரமேஷ் பிரபா
ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டுவந்த இந்த வருடத்துக்கான காலேஜ் அட்மிஷன் பணிகள் பரபரப்பாகத் தொடங்கிவிட்டன. இந்த வேளையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்கும் TNEA 2022 எனப்படும் பொறியியல் மாணவர் சேர்க்கை மற்றும் TNGASA 2022 எனப்படும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை ஆகிய இரண்டின் ஆன்லைன் விண்ணப்ப நடைமுறைகளைத் தெளிவாக ஒருமுறை பார்த்துவிடலாம்.
TNEA 2022: இந்த வருட ஆன்லைன் பொறியியல் சேர்க்கைக்கான இணைய முகவரி tneaonline.org. அதில் நுழைந்து உங்களைப் பற்றிய விவரங்கள் கொடுத்து User Id, Password ஆகியவற்றுடன் முதலில் பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்த User Id, பாஸ்வேர்டு கடைசிவரை அவசியம் என்பதால் பத்திரமாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு உங்களது சுயவிவரக் குறிப்புகள், கல்வி கற்ற விவரம் ஆகியவற்றை நிரப்ப வேண்டும். ஒவ்வொரு பக்கமும் நிரம்பியவுடன் Save & Continue கொடுத்தால் அடுத்த பக்கத்திற்குத் தானாகச் செல்லும். அனைத்து விவரங்களையும் நிரம்பியவுடன் இப்போது விண்ணப்பக் கட்டணம் செலுத்தச் சொல்லும். இது SC, SCA, ST பிரிவினருக்கு ரூ. 250, மற்றவர்களுக்கு ரூ. 500 ஆகும். இதனை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, பேங்க் டிரான்ஸ்பர் ஆகியவற்றின் மூலம் நீங்கள் ஆன்லைனிலேயே செலுத்த முடியும்.

கட்டணம் செலுத்தியபின் நீங்கள் அடுத்து, உங்களுடைய சர்ட்டிபிகேட்டுகளை ஸ்கேன் செய்து அப்லோடு செய்ய வேண்டும். சர்ட்டிபிகேட் அப்லோடிங் பற்றி சில முக்கியமான தகவல்களை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். முதலில் என்னென்ன சர்ட்டிபிகேட் தேவை என்கிற வகையில் பார்த்தால், அந்த விண்ணப்பத்திலேயே சிவப்பு நிறத்தில் மார்க் கொடுக்கப்பட்டிருக்கும். அவையெல்லாம் கண்டிப்பாக உடனே பதிவேற்றம் செய்ய வேண்டிய சர்ட்டிபிகேட்கள் என்று அர்த்தம்.Optional என்று போடப்பட்டவையும் தேவைதான் எனினும், இப்போதே அப்லோடு செய்ய வேண்டிய அவசியமில்லை. பிறகு தேவைப்படும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று அர்த்தம். அந்த வகையில் பார்த்தால் 10th மார்க் ஷீட், 12th மார்க் ஷீட் இரண்டும் கட்டாயம். TC ஆப்ஷனல் என்று கொடுக்கப்பட்டிருந்தாலும் ஏற்கெனவே கையில் வைத்திருந்தால் உடனே பதிவேற்றம் செய்துவிடுங்கள். யாருக்கெல்லாம் கம்யூனிட்டி சர்ட்டிபிகேட் சம்பந்தப்பட்டிருக்கிறது என்று பார்த்து அதைக் கண்டிப்பாக இப்போதே பதிவேற்றம் செய்ய வேண்டும். இவை தவிர மற்ற சில இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்குக் கூடுதல் சர்ட்டிபிகேட் இருக்கலாம். உதாரணமாக, ஸ்போர்ட்ஸ் கோட்டா மாணவர்கள் நிறைய சர்ட்டிபிகேட்கள் வைத்திருப்பார்கள். அவர்கள் அவற்றை அடிஷனல் சர்ட்டிபிகேட் என்கிற பக்கத்தில் ஒவ்வொன்றாகப் பதிவேற்றம் செய்யலாம். தவிர உங்களுடைய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒன்றும், உங்களது கையெழுத்தும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். உங்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒன்றை ஸ்கேன் செய்து கொள்ளுங்கள். அதேபோல் உங்கள் கையெழுத்தை ஒரு வெள்ளைத்தாளில் போட்டு அதையும் ஸ்கேன் செய்துகொள்ளுங்கள். நீங்கள் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம், ஒவ்வொரு சர்ட்டிபிகேட்டையும் ஸ்கேன் செய்த பிறகு அதற்கு ஒரு File Name கொடுத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் பதிவேற்றம் செய்யும்போது வசதியாக இருக்கும்.
இதில் டெக்னிக்கல் விஷயங்களைக் கொஞ்சம் கவனமாகச் செய்ய வேண்டும். அதாவது சர்ட்டிபிகேட், போட்டோ, கையெழுத்து அனைத்தையுமே உங்களுடைய ஸ்மார்ட்போனில் ஸ்கேன் செய்து, பிறகுதான் அப்லோடு செய்ய வேண்டும். இதற்கு உங்களுடைய ஆப் ஸ்டோரில் நிறைய ஸ்கேனர்கள் இருக்கும். உதாரணமாக கேம்ஸ்கேனர் என்பது புகழ்பெற்ற ஒன்று. இதைப்போன்று ஏதாவது ஒரு ஆப் டவுன்லோடு செய்து அதன் மூலம் ஸ்கேன் செய்யுங்கள். ஏனென்றால், இந்த டாக்குமென்ட் ஒவ்வொன்றும் Pdf அல்லது jpeg வடிவத்தில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். கூடவே File Size என்பதும் முக்கியம். அந்த வகையில் சர்ட்டிபிகேட் எல்லாமே குறைந்தபட்சம் 150 KB, அதிகபட்சம் 1 MB சைஸில் மட்டுமே இருக்க வேண்டும். ஸ்போர்ட்ஸ் கோட்டா போன்ற சிறப்பு இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் மட்டும் கூடுதல் சர்ட்டிபிகேட் பதிவேற்றம் செய்ய அதிகபட்சம் 2 MB வரை அனுமதி உண்டு. அதேபோல புகைப் படத்துக்கும் கையெழுத் துக்கும் தனி சைஸ் உண்டு. குறைந்தபட்சம் 20 KB, அதிகபட்சம் 50 KB சைஸில் மட்டுமே அவை இருக்க வேண்டும். Pdf, jpeg என்று வடிவத்தை மாற்றுவது மற்றும் ஃபைல் சைஸ் கூட்டுவது குறைப்பது ஆகியவற்றை இந்த ஆப் மூலம் நீங்கள் செய்யலாம்.

பதிவேற்றம் முடிந்தபிறகு ஒவ்வொரு சர்ட்டி பிகேட்டையும் டவுன்லோடு செய்து, சரியானது சரியான இடத்தில் உட்கார்ந்திருக்கிறதா என்பதைப் பார்த்துக்கொள்வது முக்கியம். எல்லாவற்றையும் சரிபார்த்தபிறகு Freeze Upload என்று ஒன்று இருக்கும். அந்த பட்டனை அழுத்துங்கள். அதன்பிறகு எந்த மாற்றமும் செய்ய முடியாது.
விண்ணப்பம் நிரப்புவதில் எந்த நிலையில் உங்களுக்குச் சிக்கல் இருந்தாலும் அல்லது நிரப்பிய விண்ணப்பத்தில் ஏதாவது தவறு இருந்து சப்மிட் செய்த பிறகுதான் உங்களுக்குத் தெரிய வந்திருந்தாலும் கவலைப்பட வேண்டாம். அருகிலுள்ள ஒரு TFC சென்டருக்கு நேரில் சென்று அவர்களிடம் முறையிட்டால் அதைச் சரிசெய்துகொள்ளலாம். அதேபோல் ஆன்லைனில் விண்ணப்பம் செய்வதற்கும் பிறகு ஆன்லைனில் கவுன்சலிங் கலந்துகொள்ளவும் உங்களுக்கு வீட்டில் கம்ப்யூட்டர் வசதி இல்லை என்றால், நீங்கள் இந்த TFC சென்டர்களை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கென தமிழகம் முழுவதும் 110 இடங்களில் TFC சென்டர்களை அரசு உருவாக்கியுள்ளது. அந்த TFC சென்டர்களின் முழுப்பட்டியல், அதற்கான உரிய அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொலைபேசி எண்கள் என்று அனைத்து விவரங்களும் இணையதளத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளன.
இதற்கு அடுத்த நிலையில் சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறும். பிறகு ஒட்டுமொத்தமாக விண்ணப்பித்தவர்களின் ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். இதில் இரண்டு விதமான ரேங்க் இருக்கும். ஒன்று, ஒட்டுமொத்தமான ரேங்க். மற்றது, நீங்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வருபவர் என்றால் உங்கள் கம்யூனிட்டி பிரிவிற்கு ஏற்றவாறு கம்யூனிட்டி ரேங்க் ஒன்று கொடுக்கப்படும்.
அடுத்த நிலையில், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள், ஸ்போர்ட்ஸ் கோட்டா ஆகியோருக்கான கவுன்சலிங் முதலில் நடக்கும். அடுத்த நிலையில் அரசுப் பள்ளி மாணவர்கள் 7.5% ஒதுக்கீடு, ஒகேஷனல் குரூப் மற்றும் பொது எனஅனைவருக்குமான கவுன்சலிங் நடைபெறும். அதுவரை நடந்த கவுன்சலிங்கில் நிரம்பிய இடங்களின் நிலவரத்தைப் பார்த்து, மீதமுள்ள இடங்களுக்கு சப்ளிமென்டரி கவுன்சலிங் நடைபெறும். இதற்கு அந்த நேரத்தில் புதிதாக விண்ணப்பிக்க அனுமதி உண்டு. அதன்பிறகு SCA பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருந்தால் அது SC பிரிவினருக்கு மாற்றப்பட்டு அதற்கென சப்ளிமென்டரி கவுன்சலிங் நடைபெறும். இப்போதைய நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 18.10.22 அன்று இன்ஜினீயரிங் கவுன்சலிங் நிறைவுபெறும்.

TNGASA 2022: அரசு கலை அறிவியல் கல்லூரிகளின் இந்த கவுன்சலிங்கிற்கும் கிட்டத்தட்ட பொறியியல் கவுன்சலிங் போலவேதான் விண்ணப்பிக்க வேண்டும். ஒரே வித்தியாசம், இங்கு பதிவுக் கட்டணம் குறைவு. SC/SCA/ST பிரிவினருக்கு இரண்டு ரூபாய் மட்டுமே. மற்ற அனைவருக்கும் 50 ரூபாய் கட்டணம்.
விண்ணப்பங்களை www.tngasa.in, www.tngasa.org ஆகிய ஏதாவது ஒரு இணையதள முகவரியில் சென்று பதிவு செய்யலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள் 7.7.2022. தமிழகத்தில் உள்ள மொத்தம் 163 அரசு கலை அறிவியல் கல்லூரிகளின் முழுப் பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு விண்ணப்பத்தின் மூலம் நீங்கள் அனைத்துக் கல்லூரிகளுக்குமே விண்ணப்பிக்க முடியும். உங்கள் தகுதிக்கு ஏற்ப அந்தந்தக் கல்லூரிகளில் உள்ள எத்தனை பாடப்பிரிவுகளுக்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.
எந்த அடிப்படையில் Cut-off கணக்கிட்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடுவார்கள் என்று பார்த்தால், பி.ஏ தமிழ் படிப்பதற்கு பிளஸ் 2-வில் நீங்கள் வாங்கிய தமிழ்ப்பாட மதிப்பெண் மட்டும் எடுத்துக்கொள்ளப்படும். அதேபோல் BA(English) படிப்பதற்கு பிளஸ் 2-வில் நீங்கள் வாங்கிய ஆங்கிலப் பாட மதிப்பெண் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும். மற்ற அனைத்துப் படிப்புகளுக்கும் நீங்கள் பிளஸ் 2-வில் வாங்கிய மதிப்பெண்களில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டும் தவிர்க்கப்பட்டு மற்ற நான்கு பாடங்களில் வாங்கிய 400 மதிப்பெண் அடிப்படையில்தான் தரவரிசைப் பட்டியல் போடப்படும். பொறியியல் சேர்க்கையில் ஏதாவது உதவி தேவைப்பட்டால் நேரில் சென்று உதவி பெற TFC சென்டர் இருப்பதுபோல இங்கும் AFC மையங்கள் நிறைய ஏற்படுத்தப்பட்டுள்ளன. வீட்டில் கம்ப்யூட்டர் அல்லது இன்டர்நெட் வசதி இல்லாத மாணவர்கள் தாங்கள் விண்ணப்பிக்க இந்த மையங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த சேவை முற்றிலும் இலவசம்.
- படிப்பு தொடரும்...
TNEA 2022 - என்ன புதுசு?
* இந்த வருடம் விண்ணப்பத்தில் சில புதிய தகவல்கள் கேட்கப்படுகின்றன. சீட் கிடைத்ததும் விட்டுப்போக வாய்ப்புள்ள மாணவர்களைக் கண்டறியும் நோக்கில் நீங்கள் இந்த வருடம் JEE அல்லது NEET எழுதுபவரா என்று கேட்கப்படுகிறது.
*தவிர, மாணவரின் EMIS நம்பர் கேட்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியாகக் கொடுக்கப்படும் இந்த எண்ணை வைத்து அந்த மாணவர் பற்றிய அத்தனை தகவல்களையும் தெரிந்துகொள்ள முடியும்.
*ரேங்க் பட்டியல் வெளிவந்த பிறகு அதில் ஏதாவது சிக்கல்கள் இருந்தால் சரி செய்துகொள்ள சில நாள்கள் கொடுக்கப்படுவது இதுவே முதல் முறை.
*கவுன்சலிங் கிட்டத்தட்ட இரண்டு மாத கால அளவில் நடப்பதும் இதுவே முதல் முறை. இந்தக் காலதாமதத்திற்குக் காரணம், ஒவ்வொரு வருடமும் கவுன்சலிங் முடிந்த பிறகு ஏராளமான இடங்கள் காலியாகக் கிடப்பதைத் தவிர்க்கும் நோக்கம்தான். இந்த முறை ஒவ்வொரு சுற்று கவுன்சலிங் நடந்த பிறகும் அவர்கள் சேரவேண்டிய குறிப்பிட்ட கல்லூரியில் 7 நாள்களுக்குள் பணம் கட்டிச் சேர வேண்டும் என்கிற நிபந்தனை விதிக்கப்பட்டு, அப்படி அவர்கள் தவறினால் அந்தக் குறிப்பிட்ட இடம் காலியானதாக முடிவு செய்யப்பட்டு அடுத்த ரவுண்ட் கவுன்சலிங்கில் சேர்க்கப்படும். இதற்குத்தான் சற்று காலம் அதிகமாகத் தேவைப்படுகிறது.