நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 11 - ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலம் சேர்வது எப்படி?

கல்வியாளர் ரமேஷ் பிரபா
உயர்கல்வி சேர்க்கையில் பெரும்பாலான படிப்புகளில், அதிலும் குறிப்பாகத் தொழிற்கல்விப் படிப்புகளில் வகுப்புவாரியான இட ஒதுக்கீடு தவிர சிறப்பு இட ஒதுக்கீடு என்று ஒன்று உண்டு. அதில் விளையாட்டுத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கான இட ஒதுக்கீடு, முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகளுக்கான இட ஒதுக்கீடு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு ஆகியவை அடங்கும். தவிர, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு மற்றும் Vocational எனப்படும் தொழிற்பிரிவு மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு ஆகியவையும் குறிப்பிடத்தக்கவை. இதைப்பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
Sports Quota: உங்களுடைய விளையாட்டுச் சாதனை மதிப்பெண்கள் மட்டுமே அட்மிஷனுக்குக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். முழுக்க முழுக்க நீங்கள் விளையாட்டில் வாங்கிய மதிப்பெண்களின் அடிப்படையில், உங்களோடு ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் போட்டியிடும் மற்றவர்களுடன் சேர்த்து ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். பொறியியல், வேளாண்மை, மருத்துவம், சட்டம் போன்ற எந்தப் படிப்பாக இருந்தாலும் அதற்கு நீங்கள் விண்ணப்பிக்கும் வழக்கமான விண்ணப்பத்திலேயே, நீங்கள் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் விண்ணப்பிக்கிறீர்கள் என்பதைக் குறிப்பிட வேண்டும். சான்றிதழ் பதிவேற்றம் செய்யும்போது விளையாட்டு சாதனை சம்பந்தமான சான்றிதழ்களையும் சேர்த்துப் பதிவுசெய்ய வேண்டும்.
வழக்கமாக ஸ்போர்ட்ஸ் கோட்டாவுக்கான கவுன்சலிங்தான் முதலில் நடைபெறும். கடந்த நான்கு ஆண்டுகளில் உங்களுடைய விளையாட்டு சாதனைச் சான்றிதழ்களைக் கணக்கில் கொண்டு மதிப்பெண் போடப்படும். அதாவது ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ ஆகிய நான்கு வருடங்களில் நீங்கள் மாவட்ட அளவில், மண்டல அளவில், மாநில அளவில், தேசிய அளவில், சர்வதேச அளவில் பங்கேற்ற விளையாட்டுகளில் என்ன சாதித்திருக்கிறீர்கள் என்பதை வைத்து மதிப்பெண் போடப்படும். தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற நிலைகளைத் தாண்டி, பரிசு வாங்காமல் வெறுமனே நீங்கள் பங்கேற்றிருந்தால்கூட அதற்கும் மதிப்பெண் உண்டு. ஆனால் கண்டிப்பாக ஒவ்வொன்றிற்கும் உரிய சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இதற்கெனக் கொடுக்கப்பட்டிருக்கும் மாதிரிப் படிவத்தில் உங்களுடைய பங்கேற்பு மற்றும் சாதனையை நிரப்பவேண்டும். ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் ஒதுக்கப்படும் சீட் உங்களுக்குத் திருப்தி இல்லை என்றால், பிறகு நீங்கள் அனைவருக்குமான பொது கவுன்சலிங்கில் தாராளமாகக் கலந்துகொள்ளலாம்.

பள்ளிப் பருவத்தில் விளையாட்டில் பங்கேற்கும் மாணவர்கள் இந்த ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் விண்ணப்பிக்கும்போது, `நாம் தேசிய அளவில், சர்வதேச அளவில் பெரிய அளவில் விளையாடவில்லையே, பங்கேற்ற விளையாட்டுகளிலும் பெரிய அளவில் பதக்கங்கள் பெறவில்லையே, நமக்கெல்லாம் இதில் சீட் கிடைக்குமா' என்ற சந்தேகத்தில் விண்ணப்பிக்காமல் இருப்பதுண்டு. நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், விண்ணப்பித்த மாணவர்களின் சாதனைகளை வைத்து மட்டுமே ரேங்க் பட்டியல் போடப்படும். எனவே எல்லோருமே பெரிய அளவில் விளையாடி பெரிய அளவில் பதக்கங்கள் வென்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய பங்கேற்புக்குக் கூட மதிப்பெண்கள் உண்டு என்கிற நிலையில், நம்பிக்கையுடன் கையில் வைத்திருக்கும் சான்றிதழ்களைக் கொண்டு விண்ணப்பிக்கவேண்டும். முயற்சி செய்வதில் எந்தத் தவறும் இல்லை. கிடைக்கவில்லை என்றால் பொது கவுன்சலிங்கில் தாராளமாகக் கலந்து கொள்ளலாமே.
ஸ்போர்ட்ஸ் கோட்டாவைப் பொறுத்தவரை அதில் உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு தங்களுடைய விளையாட்டை மீண்டும் பெரிய அளவில் தொடர நல்ல வாய்ப்பு உள்ளது. குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ், அது அரசுக் கல்லூரியாக இருந்தாலும், தனியார் கல்லூரியாக இருந்தாலும், மண்டல அளவில் விளையாட்டுப்போட்டிகள் பெரிய அளவில் நடத்தி விருதுகள் கொடுக்கப்படுவதுண்டு. தனியார் கல்லூரிகளும்கூட விளையாட்டு வீரர்களுக்கு முன்னுரிமை கொடுத்து மேனேஜ்மென்ட் கோட்டாவில் சீட் வழங்குவதும் உண்டு. அந்த வகையில் எல்லாக் கல்லூரிகளும் விளையாட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்றன. அவர்கள் அதைப் படிப்போடு இணைந்து தொடர்ந்தால், பிற்காலத்தில் ரயில்வே, பேங்க், கஸ்டம்ஸ் போன்ற மத்திய அரசு நிறுவனங்களில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

Ex-Servicemen Quota: ஸ்போர்ட்ஸ் கோட்டாவைத் தொடர்ந்து சிறப்பு இட ஒதுக்கீட்டில் உள்ள இன்னொரு பிரிவு எக்ஸ் சர்வீஸ்மேன் எனப்படும் முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகளுக்கான இடங்கள். தமிழக இன்ஜினீயரிங் கவுன்சலிங் பொறுத்தவரை 150 இடங்கள் இதற்கென ஒதுக்கப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகள், அரசுக் கல்லூரிகள் தவிர தனியார் கல்லூரிகளிலும் இந்த இட ஒதுக்கீடு உண்டு. முன்னாள் ராணுவத்தினரின் மகன் அல்லது மகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கென உரிய சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். வழக்கமான விண்ணப் பத்திலேயே சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ் முன்னாள் ராணுவத் தினருக்கு எனக் கொடுக்கப்பட்டிருக்கும் இடத்தில் உரிய விவரங்களை நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும. சான்றிதழைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். உங்களுக்கும் கவுன்சலிங் தொடக்கத் திலேயே நடந்துவிடும். இதில் கிடைக்கும் சீட் உங்களுக்குத் திருப்தி இல்லை என்றால் நீங்கள் பொது கவுன்சலிங்கில் கலந்துகொள்ளலாம்.
Seats for Persons with Benckmark Disabilities: சிறப்பு இட ஒதுக்கீட்டில் உள்ள இன்னொரு பிரிவு, மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு. மொத்தமுள்ள இடங்களில் ஒரு சதவிகித இடம் இவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு வகையான குறைபாடு உடையவர்கள் அடங்குவர். பார்வைக் குறைவு, காது கேளாமை, உடல்ரீதியான குறைகள் மற்றும் ஆட்டிசம் ஆகியவற்றில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட குறைபாடு உடையவர்கள் இந்த இட ஒதுக்கீட்டுக்குத் தகுதியானவர்கள். இதற்கும் அவர்கள் பெற வேண்டிய சான்றிதழ் மாதிரிப் படிவம் கொடுக்கப்படும். அந்த சர்ட்டிபிகேட்டை District Medical Board இடமிருந்து பெறவேண்டும். வழக்கம்போல விண்ணப்பத்தில் இதற்கென உரிய இடத்தில் விவரங்களைக் குறிப்பிட்டு உரிய சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவர்களுக்கும் தொடக்கத்திலேயே கவுன்சலிங் நடைபெறும்.
7.5% Seats for Govt. School Students: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு என்பது இன்னொரு சிறப்பு இட ஒதுக்கீடு ஆகும். ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் இதில் பயன்பெறலாம். இவர்களுடைய தங்கும் வசதி உள்ளிட்ட அனைத்துக் கல்விக் கட்டணங்களையும் அரசே ஏற்றுக்கொள்கிறது. வழக்கமான ஆன்லைன் விண்ணப்பத்திலேயே, 'அரசுப் பள்ளி மாணவரா' என்ற கேள்விக்கு `ஆம்' என்று பதில் சொல்ல வேண்டும். பொது கவுன்சலிங் தொடக்கத்திலேயே இவர்களுக்கான கவுன்சலிங் நடைபெற்றுவிடும்.
Seats for Vocational Students: வொக்கேஷனல் குரூப் எனப்படும் தொழிற்கல்வி மாணவர்களுக்கு இன்ஜினீயரிங், அக்ரி, சட்டம் எனப் பல்வேறு தொழிற்கல்விப் பட்டப்படிப்புகளிலும் தனியாகச் சிறப்பு இட ஒதுக்கீடு உண்டு. பிளஸ் டூ-வில் அவர்கள் எடுத்த தொழில் பாடப்பிரிவு சார்ந்து இந்த உயர்கல்விச் சேர்க்கை நடைபெறும். பொதுவாக 4% இடங்கள் இவர்களுக்கு என்பது வரையறுக்கப்பட்ட ஒரு விஷயம். இவர்களுக்கான கவுன்சலிங் பொது கவுன்சலிங் தொடங்கும்போது ஆரம்பத்திலேயே நடந்துவிடும்.
படிப்பு தொடரும்...
இதுபுதுசு!
இன்ஜினீயரிங் கவுன்சலிங்கைப் பொறுத்தவரை தொழிற்கல்வி மாணவர்களுக்கு இந்த வருடம் புதிய இட ஒதுக்கீடு அறிமுகமாகிறது. ஏற்கெனவே அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் இருந்து வந்த இட ஒதுக்கீடு இந்த முறை அண்ணா பல்கலைக்கழக நேரடிக் கல்லூரிகளான CEG, MIT, ACTech, அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் ஆகிய அனைத்துக் கல்லூரிகளுக்கும் பொருந்தும் வகையில் ஒட்டுமொத்தமாக பொறியியல் கலந்தாய்வில் 2 சதவிகித இடங்கள் தொழிற்கல்வி மாணவர்களுக் கென ஒதுக்கப்படுகிறது. பிளஸ் 2-வில் கீழ்க்கண்ட 6 பாடப் பிரிவுகளின் கீழ் தொழில் கல்வி பயின்றவர்கள் இன்ஜினீயரிங் சேரத் தகுதி பெற்றவர்கள்:
1.Basic Mechanical Engineering
2.Basic Electrical Engineering
3.Basic Electronics Engineering
4.Basic Civil Engineering
5.Basic Automobile Engineering
6.Textile Technology

இத்தனை விளையாட்டுகளா!
நமக்கு ஒரு சில புகழ்பெற்ற விளையாட்டுகள் மட்டுமே தெரியும். ஆனால், 60 வகையான விளையாட்டுகளில் சாதனை படைத்தவர்கள் உயர்கல்விச் சேர்க்கைக்குத் தகுதியானவர்கள் என்று ஒரு பெரிய பட்டியலே தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதோ அந்தப் பட்டியல்:
Archery Athletics AtyaPatya Badminton Ball Badminton Baseball Basketball Beach Volleyball Bridge Billiards and Snookers Body Building Boxing Canoeing & Kayaking Carom Chess Cricket Cycle Polo Cycling Deaf Sports Equestrian for Parasports Fencing Football Golf Gymnastics Handball Hockey Judo Karate – Do Kabaddi Kho – Kho Korf Ball Mallakhamb Motor Sports Netball Polo Powerlifting Roll Ball Roller Skating Rowing Rugby Sailing Sepak Takraw Shooting Silambam Soft Ball Soft Tennis Squash Rackets Swimming Table Tennis Taek–won–do Tennikoit Tennis Throwball Triathlon Volleyball Weightlifting Wrestling Wushu Yachting Yogasanas.