மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 15 - NEET தேவையில்லாத மருத்துவப் படிப்புகள்!

வாழ்க்கை வழிகாட்டல்
பிரீமியம் ஸ்டோரி
News
வாழ்க்கை வழிகாட்டல்

கல்வியாளர் ரமேஷ் பிரபா

தமிழகத்தில் நீட் எதிர்ப்பு தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த ஆண்டும் நீட் தேர்வு நடந்து முடிந்துவிட்டது. இப்போதைய சூழலில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மற்றும் இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி ஆகியவற்றிற்கு கண்டிப்பாக நீட் தேவை. இந்திய மருத்துவத்தில் உள்ள இன்னொரு படிப்பான நேச்சுரோபதி பட்டப்படிப்புக்கு இதுவரை நீட் தேவையில்லை. BNYS (Bachelor of Naturopathy and Yogic Sciences) எனப்படும் அதுவும் எதிர்காலத்தில் மிகுந்த வரவேற்பைப் பெறக்கூடியதே!

ஒரு மாணவர் நீட் எழுதி எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்காமல் போகும்போது ஒட்டுமொத்தக் குடும்பமே விரக்தியில் மூழ்கிவிடுகிறது. சமீபகாலம் வரையிலான ‘நீட்' தற்கொலைகள் இதற்குச் சாட்சி. இது தேவையற்ற ஒன்று. இதிலிருந்து மீள்வதற்கான ஒரே வழி,

எம்.பி.பி.எஸ் படிப்பை மட்டுமே குறிவைக்கும் நாம், அதைத் தாண்டி உள்ள மருத்துவப் படிப்புகளில் கவனம் செலுத்துவதுதான். எல்லாக் காலகட்டங்களிலும் அதிகம் பேருக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தருபவை Para Medical Courses அல்லது Allied Medical Courses எனப்படும் மருத்துவப் படிப்புகள்தான். அவை என்னென்ன என்பது பற்றி இங்கு பார்ப்போம்.

மருந்தியல் துறை சார்ந்த B.Pharm பட்டப்படிப்பு எல்லாக் காலங்களிலுமே புகழ்பெற்ற ஒன்றாகும். இன்றைக்கு தெரு முழுக்க மருந்துக் கடைகள், 24 மணி நேரமும் வீட்டுக்கே நேரடியாக மருந்துகளைக் கொண்டு வந்து தரும் வசதி, நிறைய கார்ப்பரேட் மருந்துக்கடைகள் என்று மாறி வருகிற சூழல் B.Pharm படிப்பின் முக்கியத்துவத்தைச் சற்றே அதிகப்படுத்தி வருகிறது எனலாம். தவிர, உலகெங்கும் நிறைந்துள்ள பன்னாட்டு மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களில் வேலை செய்யும் வாய்ப்பு B.Pharm படித்தவர்களுக்கு பிரகாசமாகவே உள்ளது.

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 15 - NEET தேவையில்லாத மருத்துவப் படிப்புகள்!
JackF

இதே மருந்தியலில் அதிகம் அறியப்படாத இன்னொரு பட்டப் படிப்பும் உள்ளது. Pharm D எனப்படும் இந்தப் பட்டப் படிப்பு டாக்டருக்கு இணையானது. ஐந்து வருடங்கள் கல்லூரியிலும் ஒரு வருடம் நேரடிப் பயிற்சியும் என மொத்தம் ஆறு ஆண்டுகள் படிக்கக்கூடிய இது, உலகளாவிய நாடுகளில் வேலைவாய்ப்பை உருவாக்கித் தருகிற படிப்பாகும். விருப்பமுள்ளவர்கள் இதிலும் சேரலாம்.

இவை தவிர, சிறப்பு நிபுணத்துவம் வாய்ந்த துறைகளுக்கு எப்போதுமே தனி மகத்துவம் உண்டு. உதாரணமாக பிசியோதெரபி துறை சார்ந்த BPT பட்டப்படிப்பு மற்றும் அதிலேயே சிறப்பு நிபுணத்துவம் வாய்ந்த BOT எனப்படும் ஆக்குபேஷனல் தெரபி படிப்பு. இவை நல்ல எதிர்காலம் உள்ள படிப்புகளாகும்.

பல் மருத்துவத்தைத் தாண்டிய அதிக முக்கியத்துவம் இன்று கண் மருத்துவத்திற்கு உள்ளது. இந்தச் சூழலில் முழுக்க முழுக்கக் கண் மருத்துவத்திற்கு என மட்டுமே தனியாகப் பட்டப்படிப்பு இருக்கிறது என்கிற விஷயம் பலரது பார்வையை எட்டியதே இல்லை. B.Optom மற்றும் B.Sc. (Optometry) என்கிற இந்தப் பட்டப் படிப்புகள் சமீப ஆண்டுகளில் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 15 - NEET தேவையில்லாத மருத்துவப் படிப்புகள்!

எல்லாக் காலங்களிலும் நிரந்தரமான இடத்தைப் பிடித்துவரும் ஒரு படிப்பு, நர்சிங். இந்தியாவைத் தாண்டி உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்திய நர்சுகளுக்கு மிகப்பெரிய மரியாதையும் வரவேற்பும் எப்போதுமே உண்டு என்றாலும், சமீப ஆண்டுகளில் அது சற்று அதிகமாகி இருக்கிறது என்றே சொல்லலாம். 4 ஆண்டுகள் படிக்க வேண்டிய பட்டப்படிப்பான B.Sc (Nursing) தமிழகத்தில் பல தனியார் மற்றும் அரசுக் கல்லூரிகளில் சொல்லித் தரப்படுகிறது என்பதால் சீட் கிடைக்கும் வாய்ப்பும் சற்றே அதிகம். பாட அறிவைத் தாண்டி நல்ல நிதானமும் பொறுமையும் கனிவும் சேவை மனப்பான்மையும் இதைப் படிப்பவர்களுக்குத் தேவை. நர்சிங் படிப்பைப் பொறுத்தவரை இது ஏதோ பெண்கள் மட்டுமே படிக்கக் கூடியது என்பது போன்ற ஒரு தவறான புரிதல் நம் மத்தியில் இருந்துவருகிறது. ஆண்களும் படிக்கக்கூடிய, சம அளவில் வேலைவாய்ப்பு பெறக்கூடிய ஒரு நல்ல படிப்புதான், B.Sc Nursing.

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 15 - NEET தேவையில்லாத மருத்துவப் படிப்புகள்!
triloks

மருத்துவத் துறை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கண்டுவிட்ட நிலையில், மெடிக்கல் லேபாரட்டரிகள் மற்றும் கார்ப்பரேட் ஹாஸ்பிடல்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. இந்தச் சூழலில் டாக்டர்களுக்கு உதவி செய்ய சிறப்பு நிபுணத்துவம் பெற்ற டெக்னீஷியன்களும் துறைவாரியாக நிறையவே தேவைப்படுகிறார்கள். தவிர, லேபாரட்டரிகளுக்கான டெக்னீஷியன்களும் நிறையவே தேவைப்படுகிறார்கள். அத்தகைய சிறப்பு டெக்னீஷியன் பதவிகளை அடைய அந்தந்தத் துறைகளில் சிறப்பு நிபுணத்துவம் வாய்ந்த பட்டப்படிப்புகளைப் படிக்க வேண்டியது அவசியம். நமது தமிழகப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் 30க்கும் மேற்பட்ட B.Sc. மருத்துவப் படிப்புகள் உள்ளன என்று சொன்னால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். இவை அனைத்துமே பிராக்டிகலான சிறப்பு நிபுணத்துவம் வாய்ந்தவை. மற்ற மருத்துவப் படிப்புகளை ஒப்பிடும்போது கல்விக் கட்டணமும் ஓரளவுக்குக் குறைவு. தமிழ்நாடு அரசு கவுன்சலிங்கைப் பொறுத்தவரை இனிதான் விண்ணப்பங்கள் விநியோகம் ஆகும் என்பதால் உரிய நேரத்தில் நம் மாணவர்கள் இந்தப் படிப்புகளில் சேர முயல்வது பலனளிக்கும். தனியார் பல்கலைக்கழகங்களில் இந்த B.Sc. படிப்புகளுக்கு ஏற்கெனவே அட்மிஷன் தொடங்கிவிட்டது.

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 15 - NEET தேவையில்லாத மருத்துவப் படிப்புகள்!
FatCamera

மருத்துவத்தைத் தாண்டி பிரபலமாக உள்ள இன்னொரு சிறப்புத் துறை, கால்நடை மருத்துவம். இதில் B.V.Sc. & AH எனப்படும் வெர்ட்னரி சயின்ஸ் பட்டப்படிப்பு காலகாலமாக நம் மத்தியில் சிறப்பாக இருந்துவருகிற ஒன்று. சென்னை வேப்பேரியில் உள்ள நூற்றாண்டுப் பழைமை வாய்ந்த கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகத்தின் கீழ் சென்னை மட்டுமல்லாது நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, ஓசூர், சேலம், தேனி, உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களிலும் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. தவிர, கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகத்தின் கீழ் சென்னையில் இயங்கும் இன்னொரு சிறப்புக் கல்லூரி College of Food and Dairy Technology என்பதாகும். இதில் Food Technology மற்றும் Dairy Technology ஆகிய சிறப்புப் பிரிவுகளில் B.Tech பட்டப்படிப்பு சொல்லித் தரப்படு கிறது. ஓசூர் அருகேயுள்ள மத்திகிரியில் உள்ள கல்லூரியில் Poultry Technology பட்டப்படிப்பு உள்ளது. கால்நடை மருத்துவம் சார்ந்து படிப்பவர்கள் தனியாக மருத்துவ ராக ப்ராக்டிஸ் செய்யலாம். அரசு கால்நடை மருத்துவமனைகள், கால்நடைப் பண்ணைகள், விலங்குகளுக்கான மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் விலங்குகளுக்கான சிறப்பு உணவுத் தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றில் வேலைவாய்ப்பு உண்டு.

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 15 - NEET தேவையில்லாத மருத்துவப் படிப்புகள்!
Sujay_Govindaraj

இதேபோல் சமீப ஆண்டுகளில் புகழ்பெறும் இன்னொரு துறை, மீன்வளம். நாகப்பட்டினத்தை மையமாகக் கொண்டு இயங்கும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் நாகை தவிர தூத்துக்குடி, தலைஞாயிறு, பொன்னேரி, மாதவரம், ராயபுரம், முட்டுக்காடு, ராமநாதபுரம் ஆகிய இடங்களிலும் உறுப்புக் கல்லூரிகள் உள்ளன. இந்தப் பல்கலைக்கழகத்தில் B.F.Sc (Bachelor of Fisheries Science) எனப்படும் நான்கு வருடப் படிப்பு சொல்லித் தரப்படுகிறது. கூடவே நிறைய இன்ஜினீயரிங் பட்டப் படிப்புகளும், B.Voc எனப்படும் நேரடி வேலைவாய்ப்பை உருவாக்கித் தருகிற Vocational படிப்புகளும் உள்ளன என்பது அதிகம் பேருக்குத் தெரியாது. இன்று இந்தியாவின் அந்நியச் செலாவணியில் மீன்வளம் குறிப்பிட்ட பங்காற்றிவருகிற நிலையில் இத்தனை வகையான மீன்வளப் படிப்புகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. தமிழ்நாடு அரசு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்புகளுக்கான ஆன்லைன் அப்ளிகேஷன் தொடங்கிவிட்டது. அதற்காக நீங்கள் விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி https://www.tnjfu.ac.in

எனவே, பயாலஜி குரூப் எடுத்தவர்கள் ஒரே ஒரு

எம்.பி.பி.எஸ் படிப்புக்கு மட்டும் முட்டி மோதி, கிடைக்காமல்போனால் விரக்தி அடைவதைத் தவிர்த்து, மேலே குறிப்பிட்ட பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். சீட் கிடைக்கும் வாய்ப்பு, வேலைவாய்ப்பு என இரண்டுமே சிறப்பாக அமையும்.

(படிப்பு தொடரும்)

மீன்வளப் படிப்புகள்!

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் உள்ள வித்தியாசமான படிப்புகளின் விவரம் இதோ:

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 15 - NEET தேவையில்லாத மருத்துவப் படிப்புகள்!

உடனே வேலை!

படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பைத் தரக்கூடிய, தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சொல்லித் தரப்படும் சிறப்பு நிபுணத்துவம் வாய்ந்த B.Sc. பட்டப்படிப்புகள் இவை:

Cardio Pulomonary Perfusion care Technology  Cardiac Technology  Radiotherapy Technology  Clinical Nutrition  Neuro Electro physiology

 Radiography & Imaging Technology  Respiratory Therapy  Medical Laboratory Technology

 Accident & Emergency care Technology

 Operation Theatre & Anaesthesia Technology

 Critical Care Technology  Dialysis Technology  Physician Assistant  Nuclear Medicine Technology  Medical Sociology

 Neuro Electrophysiology  Medical Record Science  Medical Imaging Technology  Renal Dialysis Technology  Pathology  Audiology

 Physiology  Radiography  Anaesthesia

 Trauma Care Management  Clinical Nutrition  Clinical Research.