
இன்ஜினீயரிங் கவுன்சிலிங் 2022
ஒரு மாத காலம் விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் சுமார் 1,69,000 பேர் இந்த வருட தமிழ்நாடு பொறியியல் கவுன்சிலிங்கில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனர். கவுன்சிலிங் நடைமுறைகள் விறுவிறுப்பாகத் தொடங்கிவிட்டன. கிட்டத்தட்ட அக்டோபர் இறுதி வரை நடைபெற இருக்கும் மிக நீளமான இந்தக் கவுன்சிலிங் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ள நிலையில் அவற்றின் வகைப்பாடுகள் என்னென்ன என்பதை முதலில் தெரிந்துகொள்ளலாம். CEG எனப்படும் கிண்டி பொறியியல் கல்லூரி, MIT எனப்படும் சென்னை தொழில்நுட்பக் கல்லூரி, ACTech ஆகிய மூன்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடிக் கல்லூரிகள் ஆகும். இவை தவிர அண்ணா பல்கலைக்கழகத்தின் ரீஜினல் கேம்பஸ் கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய மூன்று இடங்களில் உள்ளன. UCE (University College of Engineering) எனப்படும் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் தமிழகத்தில் 13 ஊர்களில் உள்ளன. தவிர 11 ஊர்களில் அரசுப் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவை அனைத்திலும் கல்விக்கட்டணம் மிகக்குறைவு என்பது மாணவர்கள் கவனிக்க வேண்டிய ஒன்று. இதற்கு அடுத்த நிலையில் PSG Tech., CIT ஆகிய இரண்டு கோவையிலும், தியாகராஜர் கல்லூரி மதுரையிலும் என மொத்தம் மூன்று அரசு உதவி பெறும் கல்லூரிகள் உள்ளன. இவற்றோடு மத்திய அரசின் மூன்று சிறப்புக் கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளன. அவற்றிற்கான இடங்களும் இந்தக் கவுன்சிலிங் மூலமே நிரப்பப்படும். சென்னை கிண்டியில் உள்ள CIPET எனப்படும் பிளாஸ்டிக் இன்ஜினீயரிங் சார்ந்த கல்லூரி, காரைக்குடியில் உள்ள CECRI எனப்படும் எலக்ட்ரோ கெமிக்கல் படிப்பு சார்ந்த கல்லூரி மற்றும் சேலத்தில் உள்ள IIHT எனப்படும் டெக்ஸ்டைல் துறை சார்ந்த கல்லூரி ஆகியவை இந்தச் சிறப்புக் கல்லூரிகள். இவை தவிர சுமார் 400க்கும் மேற்பட்ட சுயநிதி தனியார் பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளன.
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அரசுக் கல்லூரிகளைப் பொறுத்தவரை அனைத்து இடங்களும் கவுன்சிலிங் மூலமே நிரப்பப்படும். ஆனால் சுயநிதி தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஒரு குறிப்பிட்ட அளவு இடங்கள் மேனேஜ்மென்ட் கோட்டா மூலம் அவர்களாகவே நிரப்பிக்கொள்ளலாம். பெரும்பகுதி இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும். 400க்கும் மேற்பட்ட இந்தக் கல்லூரிகளில் சுமார் 50 கல்லூரிகள் தன்னாட்சி பெற்றவை (Autonomous). கல்லூரி தொடங்கி குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில் பல்வேறு வகையிலும் சிறந்து விளங்கும் கல்லூரிகளை ஆய்வு செய்து அண்ணா பல்கலைக்கழகம் தன்னாட்சி அந்தஸ்து வழங்கும். இந்தத் தன்னாட்சிக் கல்லூரிகளுக்குப் பாடத்திட்டம் உட்பட பல்வேறு விஷயங்களில் தனித்து இயங்க சுதந்திரம் உண்டு.

கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் இன்ஜினீயரிங் கவுன்சிலிங் முழுக்க முழுக்க ஆன்லைன் மூலமாகவே நடைபெறுகிறது. விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் வேலை நிறைவுபெற்றது. இதில் விளையாட்டுப் பிரிவு மாணவர்கள் மட்டும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு நேரில் சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர். மற்ற அனைவரின் சான்றிதழ்களும் TFC மூலமாக ஆன்லைனிலேயே சரிபார்க்கப்பட்டு, குறைகள் இருப்பின் அவற்றை நிவர்த்தி செய்ய மாணவர்களுக்குத் தகவல் தந்து, தேவையான சான்றிதழ்களை மீண்டும் பதிவேற்ற ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இந்த விண்ணப்பங்களில் தகுதியானவர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான ரேங்க் லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவருக்கும் ஒட்டுமொத்த ரேங்க் மற்றும் கம்யூனிட்டி ரேங்க் என்று 2 இருக்கும். ‘ஒட்டுமொத்தமாக விண்ணப்பித்தவர்களில் நீங்கள் எந்த வரிசையில் இருக்கிறீர்கள்' மற்றும் ‘உங்கள் கம்யூனிட்டி பிரிவில் விண்ணப்பித்தவர்களில் நீங்கள் எந்த வரிசையில் இருக்கிறீர்கள்' என்பதை இது உணர்த்தும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 69% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் BC, BCM, MBC, SC, SCA, ST என்கிற கம்யூனிட்டி பிரிவுகள் மூலம் ஒவ்வொன்றிற்கும் ஏற்றவாறு ஒவ்வொரு கல்லூரியிலும் ஒவ்வொரு பாடப் பிரிவிலும் இட ஒதுக்கீடு செய்யப்படும். கவுன்சிலிங்கின் தொடக்கம் என்பது சிறப்பு இட ஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்களுக்கு முதலில் நடைபெறும். மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டுப் பிரிவு மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித இட ஒதுக்கீடு ஆகியவை இதில் அடங்கும். அதன்பிறகு அனைவருக்குமான பொது கவுன்சிலிங் தொடங்கும். இது பொது மற்றும் தொழில் பிரிவு ஆகிய இரண்டு வகை மாணவர்களுக்கான கவுன்சிலிங்காக இருக்கும்.
பொதுப்பிரிவு கவுன்சிலிங்கில் ஒரு ரவுண்டில் 15,000 மாணவர்கள் என்கிற வீதத்தில் அடுத்தடுத்த சுற்றுகளாக கவுன்சிலிங் நடக்கும். இதில் முதலில் நீங்கள் கவுன்சிலிங் டெபாசிட் தொகை கட்ட வேண்டும். பிறகு Choice Filling செய்யச்சொல்லி அவகாசம் கொடுப்பார்கள். அதில் உங்கள் Cut-off மற்றும் Rank ஆகியவற்றுக்கு ஏற்ப கிடைக்க வாய்ப்புள்ள கல்லூரிகளையும், அவற்றில் நீங்கள் விரும்பும் பாடப்பிரிவுகளையும் தேர்ந்தெடுத்து சாய்ஸ் லிஸ்ட்டை நிரப்பவேண்டும். இதில் நீங்கள் 200 சாய்ஸ் வரைகூடக் கொடுக்கலாம், எல்லை கிடையாது. எப்போதுமே அதிக சாய்ஸ் கொடுப்பது நல்லது. இந்த லிஸ்டில் நீங்கள் நிரப்புவதற்கு வசதியாக ஒரு தகவல் புத்தகம் வெப்சைட்டிலேயே கொடுக்கப்படும். அதில் பல்வேறு கல்லூரிகளின் பெயர்கள், அந்தக் கல்லூரிகளின் கோட் நம்பர் மற்றும் ஒவ்வொரு கல்லூரியிலும் உள்ள பாடப்பிரிவுகள், அவற்றின் கோட் நம்பர் கொடுக்கப்பட்டிருக்கும். இவற்றை கவனமாகக் குறித்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் ஒரே பெயரையொட்டி ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகள் இருப்பதால் கோட் நம்பர் குறித்துக்கொண்டால் குழப்பம் வராது.
இந்தப் புத்தகத்திலேயே ஒவ்வொரு கல்லூரி பற்றிய விரிவான தகவல்களும் உள்ளன. அந்தக் கல்லூரியில் உள்ள பாடப்பிரிவில் எத்தனை இடங்கள் உள்ளன, அவற்றிற்குத் தர அங்கீகாரம் கிடைத்துள்ளதா, கல்லூரியில் ஹாஸ்டல் வசதி உள்ளதா, கட்டணம் எவ்வளவு மற்றும் சந்தேகங்கள் இருந்தால் கேட்பதற்காக கல்லூரியின் போன் நம்பர் உட்பட அனைத்துத் தகவல்களும் இந்தப் புத்தகத்தில் உள்ளதால் அதை கவனமாகப் படித்துக்கொள்வது நல்லது. இப்படி நீங்கள் சாய்ஸ் லிஸ்ட் நிரப்பியவுடன் உங்களுக்கு முதலில் தற்காலிக அலாட்மென்ட் வரும். அதை அப்படியே ஏற்றுக்கொள்ளலாம்; அல்லது Upward Movement எனப்படும் மேல்நோக்கி நகரும் வாய்ப்பைக் கோரலாம்; அல்லது, அடுத்த சுற்றுக்குப் போகிறேன் என்று சொல்லலாம்.
புகழ்பெற்ற கல்லூரிகளில் சீட்களைத் தேர்ந்தெடுத்த மாணவர்கள் பிறகு நீட், ஐஐடி போன்ற காரணங்களுக்காகச் சேராமல் விட்டுவிடும் நிலை ஏற்படுவதால் ஒவ்வொரு வருடமும் டாப் கல்லூரிகளில் நிறைய இடங்கள் வீணாகின்றன. அதைத் தடுக்கும் பொருட்டு இந்த வருடம் ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். உங்களுக்கு தற்காலிக அலாட்மென்ட் கிடைத்த ஒரு வாரத்தில் நீங்கள் கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும், அப்படி இல்லையென்றால் அந்த இடம் காலியானதாகக் கருதப்பட்டு அடுத்த சுற்றுக்கு வருபவர்களுக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்தக் கவுன்சிலிங்கைப் பொறுத்தவரை நான் ஒரே ஒரு ஆலோசனை மட்டும் சொல்ல ஆசைப்படுகிறேன். சாய்ஸ் லிஸ்ட் போடும்போது ஒரு கல்லூரி முக்கியமா, பாடப்பிரிவு முக்கியமா என்று கேட்டால், கண்டிப்பாக சிறந்த கல்லூரிதான் முக்கியம் என்பதே என்னுடைய பரிந்துரை. வாழ்த்துகள்!
(படிப்பு அடுத்த வாரம் தொடரும்)
மாற்றப்பட்ட புதிய தேதிகள்!
இந்த ஆண்டு CBSE பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மிகவும் தாமதமாக வந்த காரணத்தால் பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கக் கடைசித் தேதி தள்ளிவைக்கப்பட்டது. எனவே ஒட்டுமொத்த கவுன்சிலிங் நடைமுறைகளும் தள்ளிப்போக வேண்டிய சூழலில் இப்போது புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தப் பட்டியல் இதோ:

மாணவர்கள் விருப்பம் எது?
கொஞ்ச காலத்துக்கு முன்பு IT (Information Technology) Branch மாணவர்களின் முதல் தேர்வாக இருந்தது. பிறகு அது மாறி ECE(Electronics and Communication Engineering) துறை முதல் தேர்வாக ஆனது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே CSE எனப்படும் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறைதான் விண்ணப்பிக்கும் அத்தனை பேரின் ஒரே தேர்வாக உள்ளது. Covid காலத்தில் அதிகம் பாதிக்கப்படாததாகவும், இன்றளவும் வீட்டிலிருந்தே லட்சங்களில் சம்பளம் வாங்க முடிகிற துறையாகவும் சாஃப்ட்வேர் துறை இருப்பதால் மாணவர்களின் முழுக் கவனமும் அதன்மீது திரும்பியுள்ளது. மாணவர்களின் இந்த விருப்பத்தையும் இண்டஸ்ட்ரியின் தேவையையும் புரிந்துகொண்ட பல்கலைக்கழகங்கள் சமீப ஆண்டுகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த நிறைய புதிய சிறப்புத் துறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. முதலில் தன்னாட்சி பெற்ற கல்லூரிகளில் மட்டும் வந்த இந்தச் சிறப்புப் படிப்புகள் இந்த ஆண்டு பரவலாக நிறைய கல்லூரிகளில் வந்துவிட்டன. அவற்றில் சில:
Artificial Intelligence & Data Science
Artificial Intelligence & Machine Learning
Computer Science and Business System
Cyber Security
Internet of Things(IOT)
50 துறைகள்!
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் கிட்டத்தட்ட 50 விதமான துறைகளில் இன்ஜினீயரிங் படிப்புகள் உள்ளன என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கும். எனினும் மிக அதிக எண்ணிக்கையில் இடங்களைக் கொண்டவை ஆறு துறைகள் ஆகும். CSE, ECE, EEE, IT, Civil, Mechanical ஆகிய இந்த ஆறு துறைகளில் மட்டும் ஒட்டுமொத்த இடங்களில் 40% உள்ளன என்று சொல்லலாம். நீட் மூலம் மருத்துவம் சேர முடியாமல் இன்ஜினீயரிங் பக்கம் திரும்பும் பயாலஜி மாணவர்கள் விரும்பும் படிப்புகளாக BioTechnology, BioMedical ஆகியவை உள்ளன. இதற்கு அடுத்த வரிசையில் மாணவர்கள் ஓரளவுக்குத் தேர்ந்தெடுக்கும், அதேசமயம் கணிசமான இடங்களும் உள்ள பிரிவுகள் என்று எடுத்துக்கொண்டால் Aeronautical, Automobile, Instrumentation, Mechatronics, Chemical ஆகியவை அடங்கும். எனினும் ஒரு சில கல்லூரிகளில் மட்டுமே உள்ள, குறைந்த இடங்களைக் கொண்ட Agricultural, Apparel, Ceramic, Environmental, Food, Fashion, Industrial, Leather, Manufacturing, Marine, Metallurgical, Mining, Plastic, Petroleum, Pharmaceutical, Production, Printing, Robotics, Rubber, Textile போன்ற 30க்கும் மேற்பட்ட துறைகளும் உள்ளன என்பது கவனிக்கப்பட வேண்டியது.