மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 4 - இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகள்!

நாளை என்ன வேலை?
பிரீமியம் ஸ்டோரி
News
நாளை என்ன வேலை?

கல்வியாளர் ரமேஷ் பிரபா

கல்லூரியில் சேர்வதென்றால், பெரும்பாலும் நம் வீட்டுக்குப் பக்கத்திலேயே, நம் மாவட்டத்திலேயே, அதிகபட்சம் தமிழ்நாட்டைத் தாண்டாமல் இருந்தால் நல்லது என்ற மனோபாவம் பலருக்கு உண்டு. ஆனால் சிறப்புத்துவம் வாய்ந்த படிப்புகள் குறிப்பிட்ட சில கல்லூரிகளில் மட்டும் இருப்பதாலும், இந்தக் கல்லூரிகள் பல்வேறு மாநிலங்களில் இருப்பதாலும், இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சென்று படிக்க நாம் தயாராக இருக்க வேண்டும். அப்படி அகில இந்திய அளவில் உள்ள பல்வேறு படிப்புகளில் சேர்வதென்றால் பெரும்பாலும் அவற்றுக்கு நுழைவுத்தேர்வு நிச்சயம் இருக்கும். அந்த வகையில் அகில இந்திய அளவில் உள்ள பல்வேறு துறை சார்ந்த படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகள் பற்றிய விவரங்களை இனி பார்க்கலாம்...

JEE (Main): அகில இந்திய அளவில் பொறியியல் படிப்பில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களாகக் கருதப்படுபவை ஐஐடி மற்றும் என்ஐடி. இவற்றில் சேர்வதற்காக நடத்தப்படும் நுழைவுத்தேர்வுதான் ஜே.இ.இ. இந்தத் தேர்வுகள் இன்னும்கூட தமிழகத்தில் கிராமப்புற மற்றும் அரசுப்பள்ளி மாணவர்கள் மத்தியில் பிரபலமாக இல்லை என்பதுதான் யதார்த்தம். காலகாலமாக ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே இருந்த இந்தத் தேர்வு தற்போது தமிழிலும் எழுதலாம் என்று சொல்லப்பட்டிருப்பது ஆறுதல். இது JEE(Main), JEE(Advanced) என இரண்டு நிலைகளில் நடத்தப்படுகிறது.

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 4 -  இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகள்!
Arindam Ghosh

முதல் நிலையான JEE(Main) தேர்வுகள் இந்தியாவின் 31 நகரங்களில் உள்ள NIT-களில் சேர்வதற்காக நடத்தப்படுவது. தவிர 26 நகரங்களில் உள்ள IIIT(Indian Institute of Information Technology) எனப்படும் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கும் இந்த ஸ்கோர்தான் பயன்படுகிறது. கூடவே இந்தியாவில் உள்ள மத்திய அரசு நிதி உதவி பெறும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பலவற்றில் சேரவும் இந்த ஸ்கோர் தேவைப்படுகிறது.

ஒரு காலத்தில் REC(Regional Engineering College) என்று அழைக்கப்பட்ட புகழ்பெற்ற கல்லூரிகள்தான் NIT(National Institute of Technology) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டன. நம்ம ஏரியாவைப் பொறுத்தவரை திருச்சியில் நீண்டகாலப் பெருமை வாய்ந்த என்ஐடி கல்லூரியும், புதுவை மாநிலம் காரைக்காலில் சற்று புதிதாகத் தொடங்கப்பட்ட இன்னொரு என்ஐடி கல்லூரியும் உள்ளன.

இந்த JEE(Main) தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது. இரண்டு முறையும் எழுதி அதில் எந்தத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்திருக்கிறீர்களோ அதைப் பயன்படுத்திக்கொள்வார்கள். இந்த வருடத்தைப் பொறுத்தவரை ஏப்ரலில் ஏற்கெனவே ஒரு தேர்வு முடிந்துவிட்டது. ஜூனில் இன்னொரு தேர்வு நடக்க இருக்கிறது. முழுக்க கணினி வழியாக நடைபெறும் இந்தத் தேர்வில் பொறியியல் பட்டம் சேர முதல் தாள் மற்றும் கட்டடவியல் சார்ந்த படிப்புகளுக்கு 2A, 2B என இரண்டு தாள்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தலா மூன்று மணி நேர அளவில் உள்ள பேப்பர்கள். முதல் தாளில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய மூன்று பாடங்களுக்கும் பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ பாடத்திட்டங்களிலிருந்து கேள்விகள் இருக்கும். ஏ செக்‌ஷனில் 20 கேள்விகள் கொடுக்கப்பட்டு அனைத்துக்கும் விடை அளிக்கவேண்டும். பி செக்‌ஷனில் பத்துக் கேள்விகள் கொடுக்கப்பட்டு அதில் 5 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். சரியான விடை என்றால் 4 மதிப்பெண், தவறான விடை அளித்தால் மைனஸ் 1 மதிப்பெண், விடை அளிக்கவில்லை என்றால் எந்த பாதிப்பும் கிடையாது. இப்படியாக மொத்தம் 300 மதிப்பெண்ணுக்கு முதல் தாள் இருக்கும்.

இரண்டாம் தாளில் அந்தந்தப் படிப்புகளுக்கு ஏற்ப டிராயிங் மற்றும் பிளானிங் சார்ந்த கேள்விகள் இருக்கும். இவற்றில் இயற்பியல், வேதியியல் பாடங்கள் தவிர்க்கப்பட்டு கணிதம் மட்டுமே இருக்கும். கூடவே ஆப்டிடியூட் என்ற பகுதியும் உண்டு. இரண்டாம் தாள்கள் இரண்டும் தலா 400 மதிப்பெண் கொண்டவை. கேள்விகள் MCQ எனப்படும் மல்டிபிள் சாய்ஸ் முறைப்படி அமைந்தவை.

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 4 -  இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகள்!
metamorworks

JEE(Advanced): பொறியியல் படிப்புக்கு இந்தியாவிலேயே அதிகபட்சமாகக் கருதப்படும் நாட்டிலுள்ள 23 ஐஐடி-களில் சேர்வதற்கு நடத்தப்படுவதுதான் இந்த நுழைவுத் தேர்வு. ஏற்கெனவே JEE(Main) எழுதியவர்களில் மிக அதிக மதிப்பெண் பெற்ற 2,50,000 பேர் மட்டுமே இந்தத் தேர்வை எழுதமுடியும். இந்த எண்ணிக்கை இட ஒதுக்கீட்டையும் கணக்கில் கொண்டே முடிவு செய்யப்படும். தொடக்கநிலைத் தேர்வை NTA நடத்தினாலும் இந்தத் தேர்வை ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு ஐஐடி பொறுப்பேற்றுக் கொண்டு நடத்தும். அந்த வகையில் இந்த ஆண்டு ஐஐடி பாம்பே தேர்வை நடத்துகிறது. இதுவும் கணினிவழித் தேர்வுதான். தலா மூன்று மணி நேரம் கொண்ட இரண்டு தாள்கள் உள்ளன. இரண்டையும் கண்டிப்பாக எழுத வேண்டும். இந்தத் தேர்வில் வாங்கிய ஸ்கோர் அடிப்படையில் JoSAA என்கிற கவுன்சலிங் மூலம் 23 ஐஐடி-களில், விரும்பிய ஒன்றில் நீங்கள் சேரலாம்.

NATA: இந்தியாவில் B.Arch. எனப்படும் கட்டடவியல் படிப்பைப் படிக்க வேண்டுமென்றால் கண்டிப்பாக NATA (National Aptitude Test in Architecture) நுழைவுத் தேர்வை எழுதியிருக்க வேண்டும். கவுன்சில் ஆஃப் ஆர்க்கிடெக்சர் இந்தத் தேர்வை நடத்துகிறது. ஒரு ஆண்டில் மூன்று முறை நடத்தப்படும் NATA தேர்வு எல்லாவற்றிலுமே நீங்கள் கலந்து கொள்ளலாம். அந்த மூன்றில் எந்த மதிப்பெண் அதிகமாக இருக்கிறதோ அதை அட்மிஷனுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த ஆண்டைப் பொறுத்தவரை வருகிற ஜூன் மாதம் ஒரு தேர்வும், தொடர்ந்து ஜூலை மாதத்தில் இரண்டு தேர்வுகளும் நடைபெறுகின்றன. மூன்று மணி நேர அளவில் நடைபெறும் இந்தத் தேர்வில் மொத்தம் 125 கேள்விகள் இருக்கும். 200 மதிப்பெண் கொண்டது இந்தத் தேர்வு. மற்ற தேர்வுகளைப் போல் இல்லாமல் இங்கு வெவ்வேறு கேள்விகளுக்கு ஒன்று, இரண்டு, மூன்று என வெவ்வேறு வகையான மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. நீங்கள் +2 பொதுத் தேர்வில் வாங்கும் மொத்த மதிப்பெண் 200-ஆக மாற்றப்பட்டு அத்தோடு NATA ஸ்கோர் இணைந்து மொத்தம் 400 மதிப்பெண்ணுக்கு ஆர்க்கிடெக்சர் கவுன்சலிங் நடக்கும்.

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 4 -  இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகள்!
JIRAROJ PRADITCHAROENKUL

IMU CET : கடல்சார் படிப்புகளுக்கு இந்திய அளவில் நடத்தப்படுகிற நுழைவுத் தேர்வு இது. மத்திய அரசின் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் (Indian Maritime University) மும்பையில் 2, கொல்கத்தா, விசாகப்பட்டினம், சென்னை, கொச்சி என 6 இடங்களில் உள்ளன. தவிர இந்தப் பல்கலைக்கழகங்களால் அங்கீகரிக்கப்பட்ட 17 கல்வி நிறுவனங்கள் இந்தியா முழுவதும் உள்ளன. இவற்றில் எந்த ஒன்றில் சேர வேண்டும் என்றாலும் இந்த நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். மொத்தம் மூன்று மணி நேரம் ஆன்லைனில் நடைபெறும் இந்த நுழைவுத் தேர்வில் MCQ எனப்படும் மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் 200 இருக்கும். கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்கள் தவிர ஆங்கிலம் மற்றும் ஆப்டிடியூட் டெஸ்ட் உள்ளடங்கியது இந்தத் தேர்வு. இதை எழுதியவர்கள் நான்குவிதமான படிப்புகளில் சேரலாம். Nautical Science துறையில் ஒரு வருட டிப்ளோமா மற்றும் மூன்று வருட பி.எஸ்ஸி பட்டப்படிப்பு, BE/BTech(Marine Engineering), BTech(Naval Architecture & Ocean Engineering) ஆகிய நான்கு வருட பொறியியல் பட்டப்படிப்புகளே அவை.

இவை தவிர சட்டம், அறிவியல், விவசாயம், மொழி என ஒவ்வொரு துறை சார்ந்தும் நிறைய நுழைவுத் தேர்வுகள் உள்ளன. இதில் எந்த நுழைவுத்தேர்வுமே +2 முடிவுகளுக்காகக் காத்திருப்பதில்லை. அதனதன் போக்கில் தானாக நடந்துகொண்டிருக்கும். மற்ற சில நுழைவுத் தேர்வுகள் பற்றிய விவரங்களை வரும் வாரங்களில் பார்ப்போம்.

- படிப்பு தொடரும்...

*****

எந்த நுழைவுத் தேர்வு எப்போது?

இந்திய அளவில் பல்வேறு துறை சார்ந்த படிப்புகளுக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகள், அவை நடைபெறும் தேதிகள் மற்றும் மேலதிக தகவல்களை எந்த இணைய முகவரியில் சென்று பார்க்கலாம் என்கிற விவரம் இதோ:

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 4 -  இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகள்!

ஐஐடி படிப்புகள்!

இந்திய அளவில் மும்பை, பனாரஸ், பிலாய், புவனேஷ்வர், டெல்லி, தன்பாத், தார்வார், காந்திநகர், கோவா, கவுகாத்தி, ஹைதராபாத், இந்தூர், ஜம்மு, ஜோத்பூர், கான்பூர், கரக்பூர், சென்னை, மண்டி, பாலக்காடு, பாட்னா, ரூர்க்கி, ரோபர், திருப்பதி ஆகிய 23 நகரங்களில் உள்ள ஐஐடி-களில், பிளஸ் டூ முடித்தவர்கள் படிக்கக்கூடிய பல்வேறு விதமான படிப்புகள் இதோ:

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 4 -  இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகள்!

இந்தக் கட்டுரையை வீடியோ வடிவில் காண கீழே இருக்கும் லிங்க்கை க்ளிக் செய்யவும் அல்லது இந்த QR code-ஐ ஸ்கேன் செய்யவும் https://bit.ly/3vEihHU