மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 6 - இந்தியாவின் புகழ்பெற்ற நுழைவுத் தேர்வு!

நாளை என்ன வேலை
பிரீமியம் ஸ்டோரி
News
நாளை என்ன வேலை

கல்வியாளர் ரமேஷ் பிரபா

அகில இந்திய அளவில் நடத்தப்படும் உயர்கல்விக்கான பல்வேறு நுழைவுத்தேர்வுகளை கடந்த இரு வாரங்களில் பார்த்தோம். இந்த வாரம் இன்னும் சில நுழைவுத்தேர்வுகள் பற்றிய விவரங்கள்...

CUET(UG): நீட்டுக்கு அடுத்தபடியாகத் தமிழக அரசு கடுமையாக எதிர்த்துக்கொண்டிருக்கும் நுழைவுத்தேர்வு இது. மாணவர்கள் மத்தியில் உள்ள பாப்புலாரிட்டியிலும் இது நீட்டுக்கு அடுத்த நிலையில்தான் உள்ளது. நீட் தேர்வுக்கு சராசரியாக 16 லட்சம் விண்ணப்பங்கள் வருகிற நிலையில் இதுவரை இரண்டாம் இடத்தில் இருந்த பாப்புலர் நுழைவுத்தேர்வு JEE(Main). சுமார் 8.6 லட்சம் மாணவர்கள் இதற்கு விண்ணப்பித்துள்ளனர். இந்த வருடம் இதை ஓவர்டேக் செய்து 9.2 லட்சம் விண்ணப்பங்களைப் பெற்று இரண்டாம் நிலையை எட்டியிருக்கிறது இந்த CUET(UG) தேர்வு.

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 6 - இந்தியாவின் புகழ்பெற்ற நுழைவுத் தேர்வு!

இந்தியா முழுவதிலும் உள்ள 44 மத்தியப் பல்கலைக்கழகங்கள், 12 மாநிலப் பல்கலைக்கழகங்கள், 10 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் 19 தனியார் பல்கலைக்கழகங்கள் என ஒட்டுமொத்தமாக 85 பல்கலைக்கழகங்களில் இளநிலைப் பட்டப் படிப்பில் சேர்வதற்குத் தேவை இந்த CUET. மத்தியப் பல்கலைக்கழகங்களில் ஒன்று தமிழ்நாட்டில் திருவாரூரில் உள்ளது. முழுக்க MCQ எனப்படும் மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் அடிப்படையில் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் நடக்கக்கூடிய இந்தக் கணினி வழித் தேர்வை ஆங்கிலம், தமிழ் இரண்டில் எதில் வேண்டுமானாலும் எழுதலாம். இந்த வருடத்தைப் பொறுத்தவரை தேர்வை ஆங்கிலத்தில் எழுத மிக அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்தி இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறது. மாநில மொழிகள் வரிசையில் பெங்காலி, மலையாளம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் தேர்வு எழுத அதிகபட்ச விண்ணப்பங்கள் வந்துள்ளன. நீட், JEE போன்ற மற்ற தேர்வுகளை நடத்தும் NTA அமைப்புதான் இதையும் நடத்துகிறது. நாட்டில் உள்ள நூற்றுக்கணக்கான பட்டப்படிப்புகளைப் படிக்க நடத்தப்படும் நுழைவுத்தேர்வு என்பதால் இந்தத் தேர்வு சற்று வித்தியாசமாகவும் விரிவாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. IA, IB என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கும் முதல் பகுதியில் மொத்தம் 50 கேள்விகள் உள்ளன, அவற்றில் 40-க்கு விடையளிக்க வேண்டும். தலா 5 மதிப்பெண் வீதம் முதல் பகுதிக்கு மொத்தம் 200 மதிப்பெண். இதில் IA பிரிவில் மொத்தம் 13 மொழிப் பாடங்கள் இருக்கும். அவற்றில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும். IB பிரிவில் 20 மொழிப் பாடங்கள் இருக்கும், ஏற்கெனவே IA பிரிவில் தேர்வு செய்த மொழிப் பாடத்தைத் தவிர்த்துவிட்டு இங்கு வேறு ஒரு மொழிப் பாடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். இதன்பிறகு பகுதி இரண்டில் 27 விதமான பாடப்பிரிவுகள் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றிலிருந்து ஏதாவது ஆறு பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த இரண்டாம் பிரிவில் 50 கேள்விகள் இருக்கும். அவற்றில் 40-க்குப் பதில் தர வேண்டும். தலா 5 மதிப்பெண் வீதம் மொத்தம் 200 மதிப்பெண்கள்.

இதை இன்னொரு விதமாகவும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். முதல் பகுதியில் IA, IB பிரிவுகளையும் சேர்த்து மூன்று மொழிப் பாடங்களைத் தேர்ந்தெடுத்துவிட்டு, இரண்டாம் பகுதியில் ஐந்து பாடப்பிரிவுகளை மட்டும் எடுத்துக்கொள்ளலாம். ஆக மொத்தம் 8 வரவேண்டும். பொதுப்பிரிவு எனப்படும் மூன்றாம் பகுதியில் பொது அறிவு, நாட்டு நடப்பு, கணிதவியல், பகுத்தறியும் திறன் ஆகியவை சார்ந்து மொத்தம் 75 கேள்விகள் இருக்கும். அவற்றில் 60-க்கு விடையளிக்க வேண்டும், தலா 5 மதிப்பெண் வீதம் மூன்றாம் பகுதிக்கு மொத்தம் 300 மதிப்பெண் வழங்கப்படும். ஒட்டுமொத்தமாக இந்தத் தேர்வு 700 மதிப்பெண்ணுக்கு நடைபெறுகிறது. நீங்கள் மூன்றாம் பிரிவில் எடுத்திருக்கும் பாடங்களின் அடிப்படையில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் சேரலாம். அல்லது நீங்கள் எந்தப் பல்கலைக்கழகத்தில் எந்தப் பட்டப்படிப்பில் சேர விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்து அதற்கேற்ப மூன்றாம் பிரிவில் பாடங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 6 - இந்தியாவின் புகழ்பெற்ற நுழைவுத் தேர்வு!

ஆங்கிலம் மற்றும் அந்நிய மொழிகளில் பி.ஏ பட்டம் பெறுவதற்கெனவே ஹைதராபாத்தில் The English and Foreign Language University என்கிற சிறப்பு நிபுணத்துவம் வாய்ந்த பல்கலைக்கழகம் உள்ளது. இதில் ஆங்கிலம், அராபிக், பிரெஞ்ச், ஜெர்மன், ஜப்பான், ரஷ்யன், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் தனித்தனியாக BA(Hons) பட்டம் படிக்கலாம். இதற்கும் CUET நுழைவுத் தேர்வு மதிப்பெண்தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

CLAT: தேசிய அளவில் சட்டப் படிப்புக்குப் புகழ்பெற்ற National Law University (NLU) எனப்படும் தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் சேர CLAT நுழைவுத் தேர்வு தேவை. இந்தியாவில் மொத்தம் 22 இடங்களில் இந்த தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. அதில் ஒன்று திருச்சியில் உள்ளது. இது MCQ எனப்படும் மல்டிபிள் சாய்ஸ் முறையில் 150 கேள்விகள் கொண்ட இரண்டு மணி நேரத் தேர்வு. சரியான விடைக்கு ஒரு மதிப்பெண்ணும் தவறான விடைக்கு மைனஸ் 0.25 மதிப்பெண்ணும் வழங்கப்படும். கேள்விகள் ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி வெயிட்டேஜ் உண்டு. ஆங்கில அறிவு 20%, பொது அறிவு மற்றும் நாட்டு நடப்பு 25%, சட்டம் சார்ந்து 25%, பகுத்தறிவு சார்ந்து 20%, கணிதவியல் 10% என்கிற ரீதியில் வெயிட்டேஜ் முறை உள்ளது. கணிதம் மற்றும் சட்டம் சார்ந்த கேள்விகள் எளிமையாகவே இருக்கும்.

HSEE : ஐஐடி என்று சொன்னதும் இன்ஜினீயரிங் பட்டம்தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால், சென்னை ஐஐடியில் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறை ஒன்று இருக்கிறது என்பது பலருக்குத் தெரியாது. இந்தத் துறை சார்ந்து பிளஸ் டூ முடித்தவுடன் நேரடியாகச் சேர்ந்து படிக்கிற மாதிரி ஐந்து வருட Integrated MA படிப்புகள் இரண்டு உள்ளன. MA(Development Studies), MA(English Studies) ஆகிய இந்த இரண்டு படிப்புகளிலும் சேர்வதற்கு நடத்தப்படும் நுழைவுத்தேர்வுதான் HSEE. மூன்று மணி நேரம் நடக்கும் தேர்வின் முதல் பகுதியில் MCQ எனப்படும் மல்டிபிள் சாய்ஸ் அடிப்படையில் இரண்டரை மணி நேரம் தேர்வு நடக்கும். பகுதி இரண்டில் அரை மணி நேரத்திற்குக் கட்டுரை எழுத வேண்டும். தேர்வு ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். முதல் பகுதியில் மூன்று விதமான கேள்விகள் இருக்கும். ஆங்கில அறிவு, கணிதவியல் அறிவு மற்றும் பொதுப் பாடங்கள் ஆகியவையே அவை. பொதுப் பாடங்களில் இந்தியப் பொருளாதாரம், இந்தியச் சமூகம் மற்றும் கலை, உலக நடப்புகள், சுற்றுச்சூழல் ஆகியவை உள்ளடங்கியிருக்கும். முதல் பகுதிக்கு மட்டும் மைனஸ் மதிப்பெண் உண்டு. தலா 29 சீட்டுகள் கொண்ட இந்த இரண்டு MA படிப்புகளுமே புகழ்பெற்றவை.

கடந்த சில வாரங்களில் நிறைய அகில இந்திய நுழைவுத் தேர்வுகள் பற்றி விரிவாகவே பார்த்தோம். நுழைவுத் தேர்வுகளைப் பொறுத்தவரை அவை அறிவு சார்ந்தவை என்று சொல்வதைவிட பயிற்சி சார்ந்தவை என்றே சொல்லலாம். எல்லா நுழைவுத் தேர்வுக்குமே லட்சக்கணக்கில் செலவு செய்து கோச்சிங் சென்டரில் சேர்ந்து பயிற்சி எடுக்க வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. நீங்கள் நுழைவுத் தேர்வின் வெவ்வேறு பகுதிகளையும் ஒரு கைடு வாங்கியோ அல்லது கடந்த கால வினாத்தாள்களை வைத்தோ சொந்தமாகவே மீண்டும் மீண்டும் பயிற்சி செய்தாலே சுலபமாகக் கையாள முடியும்.

- படிப்பு தொடரும்

எதற்கு டிமாண்ட் அதிகம்?

CUET(UG) மதிப்பெண்களை வைத்துக்கொண்டு ஒரு மாணவர் ஐந்து பல்கலைக்கழகங்கள் வரை விண்ணப்பிக்கும் பழக்கம் உள்ளதால் ஒட்டுமொத்தமாக அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் சேர்த்து இதுவரை வந்துள்ள விண்ணப்பங்கள் 47.69 லட்சம் என்பது மலைக்க வைக்கும் எண்ணிக்கை. எந்த பல்கலைக்கழகங்களுக்கு அதிகபட்ச விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன? அதிகம் பேர் எந்தப் பாடத்தில் பட்டம் பெற விரும்புகிறார்கள்? புள்ளிவிவரம் இதோ:

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 6 - இந்தியாவின் புகழ்பெற்ற நுழைவுத் தேர்வு!

எந்த ஊரில் என்ன பட்டம்?

பெங்களூரு, ஹைதராபாத், போபால், கொல்கத்தா, ஜோத்பூர், ராய்ப்பூர், காந்தி நகர், லக்னோ, (பாட்டியாலா) பஞ்சாப், பாட்னா, கொச்சி, (கட்டாக்) ஒடிசா, ராஞ்சி, அசாம், விசாகப்பட்டினம், திருச்சி, மும்பை, நாக்பூர், அவுரங்காபாத், சிம்லா, ஜபல்பூர், (சோனிபட்) ஹரியானா ஆகிய 22 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களிலும் பொதுவாக உள்ள சட்டப் படிப்பு BA LLB(Hons) எனப்படும் 5 வருட பட்டப்படிப்பு.

ஜோத்பூர், காந்தி நகர், பாட்னா, ஒடிசா, சிம்லா பல்கலைக்கழகங்களில் கூடுதலாக BBA LLB(Hons) உள்ளது. காந்தி நகரில் BCom LLB(Hons), BSc LLB(Hons), BSW LLB(Hons) ஆகியவை உள்ளன. திருச்சியில் BCom LLB(Hons) உள்ளது. நாக்பூரில் BA LLB(Hons in Adjudication & Justicing) படிக்கலாம்.

என்னவெல்லாம் படிக்கலாம்?

இந்தியாவில் உள்ள எந்தப் பல்கலைக்கழகத்திலும் கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு கீழ்க்கண்ட பாடங்கள் சார்ந்து மட்டுமே அமையும். எனவேதான் CUET(UG) நுழைவுத்தேர்வில் இரண்டாம் பகுதியில் கீழே கொடுக்கப்பட்டுள்ள 27 பாடங்களில் ஏதாவது 5 அல்லது 6 படங்களைத் தேர்ந்தெடுத்துத் தேர்வு எழுத வேண்டும்

நாளை என்ன வேலை? - வாழ்க்கை வழிகாட்டல் - 6 - இந்தியாவின் புகழ்பெற்ற நுழைவுத் தேர்வு!

இந்தக் கட்டுரையை வீடியோ வடிவில் காண கீழே இருக்கும் லிங்க்கை க்ளிக் செய்யவும்

https://bit.ly/3vEihHU