சமூகம்
Published:Updated:

கலை, அறிவியல் பாடங்களுக்கு தேசிய நுழைவுத்தேர்வு...

தேசிய நுழைவுத்தேர்வு
பிரீமியம் ஸ்டோரி
News
தேசிய நுழைவுத்தேர்வு

‘‘இது சமூகநீதிக்கு எதிரான பரிந்துரை!’’

ஏழை எளிய கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை அடியோடு பொசுக்கிவிட்டது நீட் தேர்வு.

இந்த நிலையில், ‘கலை, அறிவியல் பாடங்களுக்கும் மாநில அளவிலோ அல்லது தேசிய அளவிலோ நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும்’ என்று கிராமப்புற மாணவர்களின் தலையில் அடுத்த இடியை இறக்கத் தயாராகிவருகிறது மத்திய அரசு.

கொரோனா பேரிடரால் தள்ளிவைக்கப்பட்டுள்ள தேர்வுகளை தொடங்குவது குறித்தும், அடுத்த கல்வி ஆண்டுக்கான பாடங்களை தொடங்குவது குறித்தும் ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, ஹரியானா மத்திய பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆர்.சி.குஹாத் தலைமையில் ஒரு குழுவை அமைத்திருந்தது மத்திய அரசு. அந்தக் குழுதான், ‘மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வைப்போலவே, கலை, அறிவியல் படிப்புகளுக்கும் தேசிய அளவிலோ மாநில அளவிலோ நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும்’ என்று பரிந்துரை செய்து, மாணவர்களிடையே பதற்றத்தை உருவாக்கியுள்ளது. ‘இது, சமூகநீதிக்கு எதிரான பரிந்துரை’ என்று கல்வியாளர்களும் அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கல்விச் செயற்பாட்டாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம். ‘‘கலை, அறிவியல் பாடங்களுக்கு நுழைவுத்தேர்வு என்பது, ஒருபோதும் சமமான நிலையை உருவாக்காது. கல்வி நலன் சார்ந்தோ அல்லது மாணவர்கள் நலன் சார்ந்தோ இந்தப் பரிந்துரை முன்வைக்கப்படவில்லை. முழுக்க முழுக்க சந்தை நலன் சார்ந்துதான் இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. ‘காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தேவையான கட்டமைப்புகளை உருவாக்கிக் கொடுத்துவிட்டேன்’ என்று 70 ஆண்டுகளாக மத்தியில் ஆண்ட, ஆளும் அரசுகளால் சொல்ல முடியுமா? பள்ளிக்கல்வியிலேயே சமமான நிலையை உருவாக்க முடியாத அரசால், தேசிய அளவிலான நுழைவுத் தேர்வின் மூலம் உயர் கல்வியில் சமமான நிலையை உருவாக்கிவிட முடியுமா? தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி மையங் களை ஊக்குவிப்பதற் காகத்தான் இந்த நுழைவுத்தேர்வு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது’’ என்றார் தீர்க்கமாக.

பிரின்ஸ் கஜேந்திரபாபு -  முருகையன்
பக்கிரிசாமி - அ.கருணானந்தன் - வானதி சீனிவாசன்
பிரின்ஸ் கஜேந்திரபாபு - முருகையன் பக்கிரிசாமி - அ.கருணானந்தன் - வானதி சீனிவாசன்

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற முனைவர் முருகையன் பக்கிரிசாமி, ‘‘கடந்த முறை நுழைவுத்தேர்வு கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டபோது, நாம் போராட்டம் நடத்தி கடுமையாக எதிர்த்தோம். அதனால் அமைதியாக இருந்த மத்திய அரசு, கொரோனா வைரஸ் பக்கம் மக்கள் கவனம் குவிந்திருக்கும் சூழலைப் பயன்படுத்தி நுழைவுத்தேர்வை நடைமுறைப்படுத்தப் பார்க்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களின் கல்வியை ஒழிக்க வேண்டும்; கல்வியறிவு அற்றுப்போகும் அவர்கள் தங்கள் குலத் தொழிலையோ கூலி வேலையோ செய்து வாழட்டும் என்பதுதான் இவர்களின் நோக்கம். உயர்கல்வி நிறுவனங்களை பெரிய முதலாளிகளின்வசம் ஒப்படைப்பதற்கான உள்நோக்கமும் இதில் ஒளிந்திருக்கிறது’’ என்றார் கொந்தளிப்புடன்.

பேராசிரியர் அ.கருணானந்தன், ‘‘நுழைவுத்தேர்வு என்பதே கிராமப்புற மாணவர்களின் கல்விக்கு உருவாக்கப்படும் தடைகள்தானே தவிர, வாய்ப்புகள் அல்ல. மத்தியில் பா.ஜ.க ஆட்சியில் அமர்ந்தது முதலே தனது கொள்கைகளுக்கு ஏற்ற கல்வித் திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. பா.ஜ.க அரசு கொண்டுவந்த புதிய தேசிய கல்விக்கொள்கை என்பது இன்னும் பல மாநில அரசுகளால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. நாடாளுமன்றத்திலும் இன்னும் விவாதத்தில்தான் இருக்கிறது. இந்தச் சூழலில், ஏற்றுக்கொள்ளப்படாத பல ஷரத்துகளை தங்கள் அதிகாரத்தைக்கொண்டு படிப்படியாக நடைமுறைப்படுத்தி வருகின்றனர். மாநில அரசுகள், கல்வியாளர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்புகளையும் அலட்சியப்படுத்தி சர்வாதிகாரப் போக்கை மத்திய அரசு கடைப்பிடிக்கிறது.

கலை, அறிவியல் பாடங்களுக்கு தேசிய நுழைவுத்தேர்வு...

இது பரிந்துரைதான் என இப்போது சொல்வார்கள். பிறகு பா.ஜ.க ஆட்சிசெய்யும் மாநிலங்களில் நடைமுறைப்படுத்துவார்கள். அடுத்து, அந்த மாநிலங்களைக் கைகாட்டி, ‘இதைச் செயல்படுத்துவதில் என்ன சிக்கல் உள்ளது?’ என்று மற்ற மாநிலங்களிடம் கேள்வி எழுப்பு வார்கள். முடிவில், யாரையும் பொருட்படுத்தாமல் அனைத்து மாநிலங்களிலும் திணித்துவிடுவார்கள். நீட் தேர்வும் அப்படித்தானே வந்தது. ஆகையால். ஆரம்ப நிலையிலேயே இதை அனைத்து மாநிலங்களும் எதிர்க்க வேண்டும்’’ என்றார்.

இதுகுறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகனிடம் பேசியபோது, ‘‘நமது மாநிலத்தில் உள்ள பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் சிறப்பான முறையில் தேர்வு எழுதியுள்ளனர். அதனால், நமது மாநிலத்தில் நுழைவுத்தேர்வு கிடையாது. அதை ஏற்கவும் முடியாது’’ என்றார்.

கலை, அறிவியல் பாடங்களுக்கு தேசிய நுழைவுத்தேர்வு...

இதுகுறித்து பா.ஜ.க-வின் தமிழ்நாடு மாநிலப் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், “கல்வி முறையை சரிசெய்ய வேண்டும் என்ற கவலை, மத்திய அரசுக்கு உள்ளது. அதன் அடிப்படையில் அந்தத் துறையில் உள்ள வல்லுநர்கள் குழுவை அமைத்து கருத்து கேட்டுள்ளது. அதில், கலை மற்றும் அறிவியல் பாடங்களுக்கு மாநில அளவிலோ தேசிய அளவிலோ ஒரு நுழைவுத்தேர்வை நடத்தலாம் என அந்தக் குழு பரிந்துரைதான் செய்துள்ளது. அந்தப் பரிந்துரையை மத்திய அரசு ஏற்கவும் செய்யலாம் அல்லது நிராகரிக்கவும் செய்யலாம். அதனால் நாம் இதை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியே தீரும் என்ற கோணத்தில் எடுத்துக்கொள்ள தேவையில்லை” என்றார். 

பெரும்பான்மையாக இருக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு முழுமையான பள்ளிக்கல்வி என்பதே இன்னும் கனவாக இருக்கும் தேசத்தில், கல்லூரியை எட்டிப்பிடிக்கும் கரங்களை வலுப்பெற செய்ய வேண்டிய அரசு, அதை நுழைவுத்தேர்வுகளின் வழியே வலுவிழக்கச் செய்யலாகாது. அப்படிச் செய்யும் அரசு, நிச்சயம் மக்களுக்கான அரசாக இருக்காது!