தனி மாநிலமாக மாறி 60 ஆண்டுகளுக்குப் பின்னர், நாகாலாந்து முதலாவது அரசு மருத்துவக்கல்லூரியை பெறுகிறது. இதில் 100 எம்.பி.பி.எஸ். இடங்கள் இருக்கும்.
கடந்த 1963-ம் ஆண்டு, நாகாலாந்து தனி மாநில அந்தஸ்தை பெற்றது. எனினும் அங்கு இதுவரை அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கப்படவில்லை. இந்த நிலையில், மாநிலம் உருவாகி 60 ஆண்டுகளுக்குப் பின்னர், முதல் அரசு மருத்துவக்கல்லூரிக்கான ஒப்புதல் கிடைத்திருப்பதாக, நாகாலாந்து மாநில சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் பி.பைவாங் கொன்யாக் தெரிவித்துள்ளார். ’’இந்த மருத்துவக் கல்லூரியானது, 2023-2024 கல்வியாண்டில் 100 மாணவர்களுடன் தொடங்கப்பட உள்ளது. வடகிழக்கு மாநில மக்களுக்கு இது ஒரு சிறந்த, மற்றும் வரலாற்று சிறப்புமிக்க தினம்" என்றார் அவர். மக்களும் அந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
முதல் அரசு மருத்துவக்கல்லூரி அமையவுள்ளது குறித்து செய்தியாளர் சந்திப்பில் கொன்யாக் கூறும்போது, ``100 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது’’ என்றார்.

சுகாதாரம் மற்றும் குடும்ப நல ஆணையர் மற்றும் செயலாளர் ஒய் கிகேடோ செமா, ``இந்த ஆண்டு ஜூன்- ஜூலை மாதத்துக்குள் அமர்வு தொடங்கும். நாகலாந்து முதல் மருத்துவக்கல்லூரியில் இருக்கும் 100 இடங்களில் 85 இடங்கள் நாகாலாந்து மாணவர்களுக்கும், மீதமுள்ள 15 இடங்கள் பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் ஒதுக்கப்படும்’’ என்று அவர் தெரிவித்தார்.