சேலம், கருப்பூர் பகுதியில் அமைந்திருக்கிறது பெரியார் பல்கலைக்கழகம். இங்கு முதுகலை வரலாறு இரண்டாமாண்டு படித்து முடித்த மாணவிகள் சிலருக்கு ஆறு மாத காலமாக டி.சி வழங்காமல் கல்லூரி நிர்வாகம் அலைக்கழித்து, பின்னர் டி.சி வழங்கியபோதும், அதில் நன்னடத்தைப் பிரிவில் ‘திருப்தி இல்லை’ என்று குறிப்பிட்டிருந்தது. இதைக்கண்ட மாணவிகள் அதிர்ச்சிக்குள்ளாகி கல்லூரி நிர்வாகத்தில் கேட்டபோது, அவர்கள், `முன்னாள் வரலாற்றுத்துறை பேராசிரியர் பிரேம் குமாருக்கு ஆதரவாக கலெக்டரிடம் மனு கொடுக்க தெரியுதுல... அப்போ கலெக்டரிடமே போய் டி.சி வாங்கிக்குங்க’ என்று பதில் அளித்ததாக மாணவிகள் வேதனை தெரிவித்தனர்.
இது குறித்த செய்தி தொடர்பாக நாம் சம்பந்தப்பட்ட மாணவிகளைச் சந்தித்துப் பேசியபோது, “கடந்த ஒரு வருடத்துக்கு முன் பெரியார் பல்கலைக்கழக வரலாற்று பேராசிரியர் பிரேம் மீது எங்களது துறையைச் சேர்ந்த மாணவி பாலியல் புகாரளித்திருந்தார். அப்போது நாங்கள் இது பொய்யான புகார் என்று நிர்வாகத்திடம் கூறியும், கல்லூரி நிர்வாகம் சம்பந்தப்பட்ட பேராசிரியர்மீது நடவடிக்கை எடுத்தனர். இதனால் சக மாணவர்கள் சேர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று மனு அளித்திருந்தோம். இது தொடர்பாக கல்லூரி தரப்பில், `இது போன்று நீங்கள் கல்லூரி விவகாரத்தை வெளியில் கொண்டு செல்லக் கூடாது’ என்று அப்போது எங்களிடம் எழுதி வாங்கிக்கொண்டனர்.

இப்போது அதை ஒரு காரணமாக வைத்துக்கொண்டு எங்களை பழிவாங்கும் நோக்கத்தோடு கல்லூரி நிர்வாகம் செயல்பட்டு வருகின்றனர்” என்றனர்.
இது குறித்த செய்தி சமீபத்தில் விகடன் இணையத்தில் ‘டி.சி-யில் கைவைத்துவிட்டார்கள்’ ஆட்சியரைச் சந்தித்த மாணவர்களை அலைக்கழிக்கும் பெரியார் பல்கலை? எனும் தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு இன்று காலை பல்கலைக்கழக நிர்வாகம் டி.சி-யில் நன்னடத்தையில் திருப்தி இல்லை என்பதைத் திருத்தி ‘திருப்தி’ என்று மாற்றி வழங்கியிருக்கின்றனர்.