லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

பாதுகாப்பு முதல் மனநலம் வரை... வெளிநாட்டு கல்வி - அறிந்துகொள்ள வேண்டியவை!

பாதுகாப்பு முதல் மனநலம் வரை...
பிரீமியம் ஸ்டோரி
News
பாதுகாப்பு முதல் மனநலம் வரை...

வெளிநாடுகளுக்குப் படிக்க வரும் மாணவர்களின் நலனுக்காக ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் ஒருவர் (International recruiter) பணியமர்த்தப் பட்டிருப்பார்

வெளிநாட்டில் கல்வி கற்பதும், வேலைக்குச் செல்வதும் பலரின் பெருங் கனவாகவே இருக்கிறது. திரைப் படங்களில் காட்டப்படுவது போல நிஜத்தில் வெளிநாட்டுக் கல்வியோ, வேலைகளோ அவ்வளவு ஃபேன்டஸி யாக இருப்பதில்லை. நிறப்பாகுபாடு, பொருந்தா சூழல், உறவுமுறை சிக்கல்கள் எனப் பல காரணங்களால் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டுத் தாயகம் திரும்புவோர் ஏராளம். வெளிநாட்டுக்குப் படிக்கச் செல்லும் முன் கலாசாரம் தொடங்கி, பாதுகாப்பு, உணவு, மருத்துவம் என நாம் கவனிக்க வேண்டியவற்றைப் பட்டியலிடுகிறார்கள் நிபுணர்கள்.

கல்லூரியைத் தேர்வு செய்வது முதல் சமையல் வரை...
சாயினிஷாலினி, வெளிநாட்டு கல்வி ஆலோசகர்


சர்வதேச அளவில் கல்விக்கு மிகச் சிறந்த நாடுகளாகக் கருதப்படுபவை அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய மூன்றும். அவற்றைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, ஜெர்மனி, அயர் லாந்து, நியூஸிலாந்து நாடுகளும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகளுக்குச் செல்லும் போது பாதுகாப்பு சார்ந்த பிரச்னைகள் அதிகம் இருக்காது. கல்வி நிறுவனத்தின் வளாகத்திலேயே தங்கும் வசதி உள்ளிட்ட அனைத்தும் கிடைக்கும்.

கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் நகர்ப் பகுதிகளில் இருக்குமாறு தேர்வுசெய்ய வேண்டும். அப்போதுதான் பாதுகாப்பு குறித்த பயம் இருக்காது. பார்ட் டைம் வேலை பார்த்துக் கொண்டே படிப்பதற்கும் வாய்ப்புகள் அமையும். நகருக்கு வெளியே உள்ள கல்லூரிகள் என்றால் இதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்காது. பார்ட் டைம் வேலை பார்த்துக்கொண்டே படிப்பதற் காகக் திட்டமிட்டால் கல்விக் கட்டணத்துக்கான வங்கிக்கடன்கூட குறைவாகப் பெற்றுக் கொண்டால் போதும்.

பாதுகாப்பு முதல் மனநலம் வரை...
பாதுகாப்பு முதல் மனநலம் வரை...

பிரபலமில்லாத நாடுகள்: மேற்கூறிய ஏழு நாடுகள் அல்லாத வேறு நாடுகளுக்குப் படிக்கச் செல்லும் மாணவர்கள் அந்தக் கல்வி நிறுவனத்தைப் பற்றிய முழு விவரம், கல்லூரி வளாகம் பற்றிய தகவல்கள் என அனைத்தை யும் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு கல்வி நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும் முன்பு அதன் இணையதளத்தை முழுவதுமாக அலசி ஆராய்ந்தாலே பல்வேறு தகவல்கள் கிடைக்கும்.

ஒரு Linkedin கணக்கைத் தொடங்கிவிட வேண்டும். வெளிநாடுகளில் பெரும்பாலும் இதைத்தான் பயன்படுத்துகின்றனர். அதன் மூலம் அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள், தற்போதைய மாணவர் களைத் தொடர்புகொண்டு கல்லூரி பற்றி கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

ரேங்க்கிங்: ஒரு மாணவர் இன்டஸ்ட்ரியல் இன்ஜினீயரிங் படிக்கச் செல்கிறார் என வைத்துக்கொள்வோம். தரவரிசையில் 100-க்குள் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் அந்தப் படிப்பு இருக்கிறது என்று அதில் சேர்ந்துவிடுகிறார். ஆனால் குறிப்பிட்ட படிப்புக்கான தரவரிசை குறைவாக இருந்தால் அங்கு படிப்பு சார்ந்த ஆராய்ச்சிகள், அதற்கான வசதிகள் குறைவாக இருக்கும். எனவே, பல்கலைக் கழகத்தின் ரேங்க்கிங்கை பார்க்கும்போது தாங்கள் படிக்க விரும்பும் படிப்புக்கான ரேங்க்கிங்கையும் செக் செய்ய வேண்டும்.

பாதுகாப்பு: வெளிநாடுகளுக்குப் படிக்க வரும் மாணவர்களின் நலனுக்காக ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் ஒருவர் (International recruiter) பணியமர்த்தப் பட்டிருப்பார். முதல்நாள் கல்லூரிக்கான அறிமுகத்தை வழங்குவதில் இருந்து அவர் களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அவர் செய்வார். இதுதவிர, அந்தந்த நாட்டிலிருக்கும் நமது நாட்டின் தூதரக தொடர்பு எண்களையும் அறிந்து வைத்திருக்க வேண்டும். இயற்கை சீற்றங்கள், எதிர்பாராத நிகழ்வுகளுக்கு இந்த எண்கள் உதவும்.

 சாயினிஷாலினி,  சுந்தரி ஜெகதீசன்,  ப்ரீனு
சாயினிஷாலினி, சுந்தரி ஜெகதீசன், ப்ரீனு

பொருளாதார ரீதியாக கவனிக்க வேண்டியவை...
சுந்தரி ஜெகதீசன், சொத்து மற்றும் முதலீட்டு ஆலோசகர்


வெளிநாடுகளில் படிப்பது உங்கள் விருப்பம் என்றால் சில நாடுகளில் அரசே இலவசமாக வழங்கும் படிப்பைத் தேர்ந் தெடுக்கலாம். நீங்கள் வெளிநாட்டில் உள்ள குறிப்பிட்ட துறை சார்ந்த படிப்புகளைத் தேர்வுசெய்ய விரும்பினால் கல்வி உதவித் தொகை, வங்கிக்கடன் போன்றவற்றை முதலில் பரிசீலிப்பது நல்லது. வெளிநாடுகளில் வட்டி குறைவு. அதனால் அங்கு சென்று கல்விக்கடன் எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்தால் உரிய நேரத்தில் பணம் கிடைக்காமல் திண்டாட வேண்டியிருக்கும். வெளிநாடுகளில் கல்விக்கடனுக்கான வட்டி குறைவுதான் என்றாலும், கல்விக் கடன் கிடைப்பது மிக சிரமம்.

சில ஏஜென்சிகள் கல்விக்கடன் வாங்கித் தருகிறோம் என்ற பெயரில் ஏமாற்று வேலை களில் ஈடுபடுகிறார்கள். எனவே கவனமாக இருக்க வேண்டும். கல்விக் கட்டணம் முழுவதையும் எந்த லோன் மற்றும் ஸ்காலர் ஷிப் இல்லாமல் பணமாக செலுத்தத் தயாராக இருப்பவர்கள் எனில், வருடத்துக்கு 25 முதல் 30 லட்சம் ரூபாய் வரையில் பணத்தைத் தயார் செய்ய வேண்டும். படிப்பில் இணைவதற்கு ஒரு வருடத்துக்கு முன்பே, உங்களிடம் இருக்கும் பணத்தை லிக்விட் ஃபண்டுகளிலோ அல்லது எஃப்டியிலோ செலுத்தி வைத்துக் கொண்டால் தேவைப் படும்போது எடுத்துக் கொள்ளலாம்.

இங்கிருந்து செல்லும்போது ஏதேனும் ஒரு வங்கியில் தனிக்கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். வெளிநாட்டுக்குச் சென்ற பின் நீங்கள் சேர்ந்துள்ள பல்கலைக்கழகங்களில் இருந்தே, அந்த நாட்டு வங்கியில் கணக்கு உருவாக்கச் சொல்வார்கள். எல்லா நாட்டிலும் அந்த நாட்டின் பண மதிப்புக்கு ஏற்ப செல்லுபடியாகும் மல்டி கரன்சி கார்டுகளை வாங்கி வைத்துக்கொள்ளலாம். பணத்தை டாலராக மாற்ற வங்கிகளில் ஏறி இறங்காமல் ஏ.டி.எம் போன்ற மெஷின்கள் மூலமே மாற்றி எடுத்துக்கொள்ளலாம்.

மனநலமும் பேணுங்கள்... ப்ரீனு, உளவியல் ஆலோசகர்

வெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்கு நாகரிகம், உணவு, உடை, பருவநிலை என அனைத்தும் புதிதாக இருக்கும். அதை ஏற்றுக்கொள்ள மனதுக்கும், உடலுக்கும் சில நாள்கள் தேவைப்படும். சிலருக்கு உடல் சார்ந்த பிரச்னைகள் வரலாம். தனக்கு யாரும் இல்லையோ, தனிமையில் இருக்கிறோமோ என்ற உணர்வும் தோன்றலாம். எனவே வெளிநாடுகளுக்குச் செல்லும்போது இலக்குக் காகச் செல்கிறோம், எதையும் எதிர்கொள்ள வேண்டும் என்பதை உறுதியாக மனதில் பதிய வைத்துக்கொள்வது நல்லது.

குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, வீட்டில் இருப்பவர்களுடன் அன்றாடம் தொடர்பு கொள்வதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.

நம் நாட்டில் இருந்து படிப்பதற்கு அங்கு சென்றுள்ள நண்பர்களுடன் ஒரு வாட்ஸ்அப் குரூப் தொடங்கி அவ்வப்போது ஆலோ சனைகள் கேட்டுக்கொள்ளலாம். ஏதேனும் இடங்கள் அல்லது ஊர்களை சுற்றிப் பார்க்க நினைத்தால் அந்த இடம், போக்குவரத்து வசதிகள் பற்றியெல்லாம் முழுமையாக அறிந்துகொண்டு செல்வது நல்லது.

'' சமையலும் தெரிய வேண்டும்!

இந்தியாவிலிருந்து செல்லும் மாணவர்களுக்கு குறைந்தது ஆறு மாதங்களுக்கு புதிய நாட்டின் உணவுகள் செட் ஆகாது. அங்கு நம் நாட்டு உணவகங்கள் இருந்தாலும் விலை அதிகமாக இருக்கும். அதனால் இங்கிருந்து செல்லும்போதே அடிப்படை சமையலுக்கான பாத்திரங்கள், உணவுப்பொருள்களை எடுத்துச் செல்வது நல்லது. முக்கியமாக அடிப்படை சமையல் கற்றுக்கொண்டு செல்வது நல்லது. சில நாள்களுக்கு ஒருமுறையாவது வீட்டுச் சாப்பாட்டை தயாரித்து சாப்பிடலாம்.

உடல்நிலையில் கவனம்!

வெப்பமண்டல நாடான இந்தியாவிலிருந்து குளிர்ப்பிரதேசங்களுக்கு படிக்கச் செல்லும்போது உடல்நிலையைப் பொறுத்து கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்னைகள் இருப்பவர்கள் குளிர் குறைவாக உள்ள இடங்களைத் தேர்ந்தெடுக்கலாம். உதாரணமாக, அமெரிக்கா என்றால் தெற்குப் பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கலாம். பொதுவாக வெளிநாடுகளுக்கு படிக்கச் செல்லும்போது கட்டணத்திலேயே மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என்பதால் மாணவர்களுக்கு ஏதேனும் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் சிறப்பான சிகிச்சை வசதிகள் கொடுக்கப்படும். மருத்துவக் காப்பீட்டில் பல் சிகிச்சை இடம்பெறாது, பல் பிரச்னைகளுக்கு அதிக கட்டணமும் வசூலிக்கப்படும். எனவே, பல் தொடர்பான பிரச்னைகளுக்கு இந்தியாவிலேயே சிகிச்சை எடுத்துவிட்டுச் செல்வது நல்லது.