
1997-ல் இந்த முறை அறிமுகம் செய்யப்பட்டபோது இந்த அளவுக்கு இணைய வளர்ச்சியில்லை. சாப்ட்வேர்கள் உருவாக்கப்பட வில்லை. இன்று மிகப்பெரும் வளர்ச்சியை எட்டிவிட்டோம்.
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வந்துவிட்டன. உயர்கல்விக்கான தேடலில் மாணவர்களும் பெற்றோரும் தீவிரமாகியிருக்கிறார்கள். வழக்கம்போல பெரும்பாலான மாணவர்களின் தேடல், பொறியியலாகவே இருக்கிறது. பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஜூன் 6-ம் தேதிக்குள் பதிவு செய்யப்பட வேண்டும். சமவாய்ப்பு எண்கள் ஜூன் 7-ம் தேதியும் தர வரிசைப் பட்டியல் ஜூன் 12-ம் தேதியும் வெளியிடப்படும். சேர்க்கைக் கலந்தாய்வு Online Choice Filling முறையில் ஆகஸ்ட் 2 முதல் அக்டோபர் 3 வரை நடைபெறும். மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே இணையவழியில் இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்று தங்களுக்கான கல்லூரியையும் படிப்பையும் தேர்வு செய்யலாம்.
வழக்கமாக அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ஒற்றைச்சாளரக் கலந்தாய்வில் மாணவர்கள் கல்லூரியைத் தேர்வு செய்வார்கள். எந்தக் குழப்பமும் இல்லாமல் வெளிப்படையாக அந்தக் கலந்தாய்வு நடந்தது. தற்போது நடத்தப்படும் ஆன்லைன் சாய்ஸ் ஃபில்லிங் கலந்தாய்வு மிகவும் குழப்பமாகவும் வெளிப்படைத் தன்மையற்றும் இருப்பதாக கல்வியாளர்களும் பெற்றோரும் குற்றம் சாட்டுகிறார்கள். கிராமப்புற எளிய குடும்பத்துப் பிள்ளைகளின் வாய்ப்புகள் இதனால் பறிபோவதாகவும் தனியார் கல்லூரிகளுக்கு இது சாதகமாக இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

1978-க்கு முன்பு கிண்டி பொறியியல் கல்லூரி, கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி, சேலம் அரசினர் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட 6 பொறியியல் கல்லூரிகளே இருந்தன. 1978-ல் கிண்டி பொறியியல் கல்லூரி, எம்.ஐ.டி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் அண்ட் பிளானிங் ஆகிய நிறுவனங்களை இணைத்து அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகள் வரத்தொடங்கின. அந்தக் காலகட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துக்குத் தனியாகவும் பிற பொறியியல் கல்வி நிறுவனங்களுக்குத் தனியாகவும் இரண்டு விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும். பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு உட்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு அண்ணா பல்கலைக் கழகமும் தனியார் கல்லூரிகளுக்குத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககமும் +2 மதிப்பெண் மற்றும் நேர்காணல் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவார்கள். தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்திய மாணவர் சேர்க்கையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகப் புகார் எழுந்ததால், 1984-ல் நுழைவுத்தேர்வு கொண்டு வரப்பட்டது.
நுழைவுத்தேர்வில் தேர்ச்சிபெறும் மாணவர் களுக்கு இடம் ஒதுக்குவதிலும் தொடர்ந்து பிரச்னைகள் இருந்துவந்தன. தனியார் கல்லூரிகள் தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு இடம் தராமல் தவிர்ப்பதாகப் புகார்கள் எழுந்தன. அதற்குத் தீர்வாக கருணாநிதி ஆட்சியில் முதல்வரின் தொழில்நுட்ப ஆலோசகராக இருந்த டாக்டர் எம்.அனந்த கிருஷ்ணன், 1997-ல் ஒற்றைச்சாளர மாணவர் சேர்க்கை முறையை அறிமுகப் படுத்தினார். அதன்பிறகான காலங்களில் அண்ணா பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர்களாக இருந்த பலரும் இந்தக் கலந்தாய்வு முறையை மேம்படுத்தி ஒரு வடிவத்துக்குக் கொண்டு வந்தார்கள்.
கவுன்சலிங் நடக்கும் காலங்களில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு இடங்களில் திரையில் கல்லூரி காலியிடங்கள் நிமிடத்துக்கு நிமிடம் அப்டேட் செய்யப்பட்டுக்கொண்டே இருக்கும். அதைப்பார்த்துத் தங்களுக்கான கல்லூரி மற்றும் படிப்பை மாணவர்கள் எளிதாகத் தேர்வு செய்வார்கள். அதனால் தரமான கல்லூரிகள் விரைவாக நிரம்பும். தரமற்ற கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையே இருக்காது. இது மிகவும் வெளிப்படையாக நடக்கும். இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்க வரும் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் போக்குவரத்துச் செலவை அரசே வழங்கும். எந்தக் குழப்பமும் இல்லாமல் அன்றைக்கே சேர்க்கை ஆணையை மாணவர்கள் பெற்றுச்செல்வார்கள். மேலும் பல்கலைக்கழக வளாகங்களில் வங்கிகள் ஸ்டால் போட்டு கல்விக்கடனுக்கான விண்ணப்பங்களையும் வழங்குவார்கள்.
ஒரு கட்டத்தில் தமிழகம் முழுதுமிருந்து கவுன்சிலிங்கிற்காக சென்னை வந்து செல்வது சிரமமாக இருப்பதாகப் பெற்றோர் தரப்பில் புகார் எழுந்தபோது, மதுரை, திருச்சியென பல்வேறு இடங்களில் கவுன்சிலிங் நடத்தப்பட்டது.
‘‘சூரப்பா அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த காலத்தில் அவருக்கும் உயர்கல்வித்துறை அமைச்சருக்கும் இருந்த கருத்து வேறுபாடு காரணமாக இந்த ஒற்றைச்சாளர மாணவர் சேர்க்கை முறையை நிறுத்திவிட்டார்கள். மேலும், மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்துக்கு மாற்றிவிட்டார்கள்.
கடந்த சில வருடங்களாக சாய்ஸ் ஃபில்லிங் முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த முறையில் மிகப்பெரும் குழப்பங்கள் நடக்கின்றன. சிறிதும் வெளிப்படைத்தன்மை இல்லை. குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் தாங்கள் விரும்பிய கல்லூரியைப் பெறமுடியாமல் தவிக்கிறார்கள்...’’ என்கிறார், கல்வியாளர் தா.நெடுஞ்செழியன்.
‘‘டெல்லி போக நீங்கள் ரயிலில் ஒரு டிக்கெட் புக் செய்ய வேண்டும். ஐ.ஆர்.சி.டி.சி ஆப்பில் நுழைந்தால் எந்தெந்த ரயில்கள் இருக்கின்றன, எந்தெந்த இருக்கைகள் இருக்கின்றன என்பதெல்லாம் வெளிப்படையாக இருக்கும். உங்கள் டிக்கெட்டை நீங்கள் புக் செய்து கொள்ளலாம். நேரடி ஒற்றைச்சாளர முறை இதுபோன்றதுதான். உங்கள் ரேங்குக்கு உரிய படிப்புகள், கல்லூரிகள் எல்லாம் உங்கள் பார்வையில் இருக்கும். நீங்கள் விரும்பியதை அதே இடத்தில் தேர்வு செய்யலாம்.
சாய்ஸ் ஃபில்லிங் முறைப்படி பார்த்தால், என்னென்ன ரயில்கள் இருக்கின்றன, எவ்வளவு இருக்கைகள் இருக்கின்றன என்பது எதுவும் உங்களுக்குத் தெரியாது. எந்த ரயில் வேண்டும், எந்த இருக்கை வேண்டும் என்பதை நீங்கள்தான் வரிசைப்படுத்தித் தரவேண்டும். வரிசைப்படுத்திய ரயில்களில் இருக்கை இருந்தால், எதை முதல் சாய்ஸாகக் குறிப்பிட்டிருக்கிறீர்களோ அது கிடைக்கும். நீங்கள் குறிப்பிடாத, கட்டணம் குறைவான, வேகமான ரயில் அந்த நாளில் இருந்தால்கூட அதில் உங்களுக்கு இருக்கை கிடைக்காது. ஏனென்றால், நீங்கள் அதை சாய்ஸாகத் தேர்வு செய்யவில்லை.
நீங்கள் கேட்டிருந்ததைவிட நல்ல கல்லூரியில்கூட காலியிடம் இருக்கலாம். உங்களுக்கான கவுன்சிலிங் நாள் வரும்போது அந்தக் கல்லூரியில் இடம்கூட இருக்கலாம். ஆனால் நீங்கள் அந்தக் கல்லூரியை உங்கள் பட்டியலில் வைத்திருக்காவிட்டால் உங்களுக்கு அந்த இடம் கிடைக்காது. எந்தெந்தக் கல்லூரிகளில் இடம் இருக்கிறது என்ற தகவலே தெரியாமல் கண்ணைக் கட்டிக்கொண்டு மாணவர்கள் தங்கள் சாய்ஸ்களைத் தேர்வு செய்யவேண்டிய அவலம் இருக்கிறது. அதிலும் ஒரே பெயரில் பல கல்லூரிகள் இருப்பது வேறு பெரிய குழப்பம்.

சாய்ஸ் ஃபில்லிங் முறைப்படி விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு உதவ 110 இடங்களில் TFC Centre-களை அமைத்திருக்கிறார்கள். இங்கே பணிபுரிபவர்களுக்குப் போதிய பயிற்சிகள் இல்லை. மாணவர்களுக்கு இவர்களால் சரிவர உதவமுடிவதில்லை. கம்ப்யூட்டர், இன்டர்நெட் வசதி இல்லாததால் தனியார் பிரவுசிங் சென்டர்கள் மூலம் பலர் விண்ணப்பிக்கிறார்கள். அங்கும் பல தவறுகள் நடக்கின்றன. மாணவர்களின் டேட்டாக்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு கல்விக்கட்டணத்தையும் அரசே ஏற்றுக்கொள்கிறது. பெரும்பாலான தனியார் பொறியியல் கல்லூரிகள் இந்த மாணவர்களை கையகப்படுத்திவிடுகின்றன. அவர்களை தங்கள் இடத்துக்கு அழைத்துச்சென்று, தங்கள் கல்லூரியை முதல் சாய்ஸாகப் போட்டு விண்ணப்பத்தை அனுப்பிவிடுகிறார்கள். அந்த மாணவர்களின் ரேங்குக்கு அதைவிட நல்ல கல்லூரிகளே கிடைக்க வாய்ப்பிருந்தும், முதல் சாய்ஸாக அந்தக் கல்லூரி தேர்வு செய்யப்பட்டிருப்பதால் மாணவர் நல்ல வாய்ப்பை இழக்கிறார்.
பெற்றோர்களுக்கும் சரி, மாணவர்களுக்கும் விண்ணப்பிக்கும் வழிமுறை முழுமையாகத் தெரிவதில்லை. எத்தனை சாய்ஸ் தரலாம் என்பதைக்கூட அறியாமல் இருக்கிறார்கள். குறிப்பிட்ட ரேங்க் பெற்ற ஒரு மாணவர் நான்கு கல்லூரிகளை சாய்ஸாகத் தந்திருக்கிறார் என்றால், அந்த நான்கு கல்லூரிகளிலுமே இடமில்லாத பட்சத்தில் அவர் அடுத்த கட்டக் கலந்தாய்வுக்குச் சென்றுவிடுவார். அங்கு அவரைவிட குறைவான ரேங்க் வாங்கியவரோடு அவர் போட்டிபோட வேண்டும். இது மிகப்பெரும் அநீதி. அந்த மாணவருக்கு வேறென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை அரசுதான் காட்டித் தரவேண்டும். மாணவரே அதைத் தேட வேண்டும் என்கிறார்கள். ஆனால் அவர் எங்கே தேடுவார் என்ற கேள்விக்குப் பதில் இல்லை.
விதிமுறைகள் அனைத்தையும் ஆங்கிலத்திலேயே தந்துள்ளார்கள். எந்த இடத்திலும் தமிழ் இல்லை. கிராமப்புற எளிய குடும்பத்துப் பிள்ளைகள் இந்த விதிமுறைகளை எல்லாம் எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? ஐந்தே நாள்களில் எதையும் இறுதி செய்தாக வேண்டும். இல்லாவிட்டால் ஒதுக்கப்பட்ட இடம் கேன்சலாகிவிடும் என்கிறார்கள். இதனால்தான் அரசு பொறியியல் கல்லூரிகளிலேயே இடங்கள் காலியாக இருக்கின்றன. கடந்த ஆண்டு 1,17,846 இடங்களில் 84,812 இடங்களே நிரம்பின.
இப்படியொரு குழப்பமான தேர்வுமுறையை வைத்திருக்கிற அரசு, அதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்க வேண்டும். மாணவர்களை எவ்வளவு குழப்ப முடியுமோ அவ்வளவு குழப்பி அவர்களைத் தனியார் கல்லூரிகளை, நிர்வாக இடங்களை நோக்கித் துரத்துவதுதான் இவர்களின் நோக்கம்’’ என்கிறார் நெடுஞ்செழியன்.
ஐ.ஐ.டி மாணவர் சேர்க்கைக்கு இந்த சாய்ஸ் ஃபில்லிங் முறைதான் நடைமுறையில் இருக்கிறது. ஐ.ஐ.டி-க்குப் பொருந்துவது பொறியியல் கல்லூரிகளுக்குப் பொருந்தாதா என்ற கேள்வி எழலாம். இந்தியாவில் மொத்தமே 23 ஐ.ஐ.டி-கள் தான் உள்ளன. 17,000-த்துக்கும் குறைவான இடங்கள்தான். அவற்றைத் தேர்வு செய்வதில் எந்தக் குழப்பமும் இருக்காது. தமிழகத்தில் சுமார் 450 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. ஏறக்குறைய 2,32,000 இடங்கள்... இத்தனை கல்லூரிகளில் மாணவர்கள் தங்களுக்கான கல்லூரியை உத்தேசமாகத் தேர்வு செய்வது மிகவும் சிரமம்.
‘‘இணையதளப் பயன்பாடு இன்னும் கிராமங்களை முழுமையாகச் சென்றடைய வில்லை. சமமாக எல்லாப் பகுதிகளுக்கும் இணைய வாய்ப்புகள் கிடைத்தால் மட்டுமே இதுமாதிரியான இணையவழி மாணவர் சேர்க்கைகள் சாத்தியம். கொரோனா காலத்தில் ஆன்லைன் கல்வி எந்த அளவுக்குப் `பயனளித்தது’ என்பதை எல்லோரும் அறிவோம். இப்படியொரு சூழலில் பொறியியல் கலந்தாய்வு இணையதள வாயிலாக நடத்தப்படுவது நியாயமல்ல’’ என்கிறார் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் சேர்க்கை இயக்குநர் முனைவர் ப.வே.நவநீதகிருஷ்ணன்.
‘‘ஒற்றைச்சாளரச் சேர்க்கை முறை நேரடிக் கலந்தாய்வுக்காகவே உருவாக்கப்பட்டது. நேரடிக் கலந்தாய்வு மிகவும் நம்பகமானது. விருப்பமான கல்லூரியையும் படிப்பையும் எளிதாகத் சேர்வு செய்யலாம்.
எதுவுமே தேவையில்லை என்றால் அதையும் தெரிவித்து விடலாம். இதற்கெல்லாம் இணையதளக் கலந்தாய்வில் வாய்ப்பேயில்லை. நமக்கு என்ன கிடைக்கும் என்ற நிச்சயமற்ற நிலையில்தான் மாணவர்கள் தவிக்க வேண்டியுள்ளது. ‘எனக்கு வேண்டியது கிடைக்க வில்லை, பதற்றத்தில் தவறு செய்து விட்டேன்’ என்று பல மாணவர்கள் வருத்தப்படுவதைப் பார்த்திருக்கிறேன். அதனால் இவ்வாண்டு நேரடிக் கலந்தாய்வு வழியாக மாணவர் சேர்க்கை நடத்த அரசு முன்வரவேண்டும் என்பது என் கோரிக்கை.

தொலைதூரத்தில் இருப்பவர்கள் நேர்முகக் கலந்தாய்வுக் கூடத்திற்கு வருவதில் சிரமம் இருக்கலாம். கலந்தாய்வை சென்னை போன்ற ஒரே நகரத்தில் நடத்தாமல், கோவை, திருச்சி, மதுரை, சேலம், நெல்லை முதலிய பல நகரங்களிலும் நடத்தலாம். பல ஆண்டுகளுக்கு முன் அப்படி நடத்தியிருக்கிறோம். மென்பொருள் துறையில் பெரிதும் முன்னேற்றம் கண்டுள்ள இன்னாளில் இதைத் தவறில்லாமல் செய்யமுடியும்’’ என்கிறார் நவநீதகிருஷ்ணன்.
சாய்ஸ் ஃபில்லிங் முறையில் கடந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண்களை வைத்தே மாணவர்கள் தங்கள் கல்லூரி விருப்பங்களை முடிவு செய்யவேண்டியிருக்கிறது. ஆனால் கட்-ஆப் என்பது மாணவர்களின் எண்ணிக்கை, தேர்ச்சி விகிதம் போன்ற பல காரணிகளை வைத்து ஆண்டுக்காண்டு மாறுபடும். கடந்த ஆண்டு கட்-ஆப் இந்த ஆண்டுக்குப் பொருந்தாது. அதனால் மாணவர்கள் தவறான முடிவுகளை எடுக்க நேரிடுகிறது.
பொறியியல் கல்லூரி நடத்தும் கல்வித்தந்தைகள் பலரும் அரசியல் பலம் பொருந்தியவர்களாக இருக்கிறார்கள். அரசு அவர்களின் திட்டத்துக்கு இரையாகக்கூடாது. கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் மாணவர்களின் வாழ்க்கை. அரசு மாணவர்களின் பக்கமே நிற்கவேண்டும்.
1997-ல் இந்த முறை அறிமுகம் செய்யப்பட்டபோது இந்த அளவுக்கு இணைய வளர்ச்சியில்லை. சாப்ட்வேர்கள் உருவாக்கப்பட வில்லை. இன்று மிகப்பெரும் வளர்ச்சியை எட்டிவிட்டோம். இன்று நினைத்தால்கூட இரண்டே நாள்களில் அண்ணா பல்கலைக்கழகம் உடனடியாக கவுன்சிலிங்குக்குத் தயாராகிவிட முடியும். அந்த அளவுக்கு அனுபவமும் தொழில்நுட்பமும் இருக்கிறது. நல்ல முடிவை எடுக்க வேண்டும் அரசு!